பிரீமியம் ஸ்டோரி
##~##

''ஹாய் ஜீபா... 'ஒயிட் காலர் ஜாப்’ என்று பெருமையாகச் சொல்கிறார்களே, அப்படியென்றால் என்ன?''

   - வி.புவனேஷ், வேலூர்.

''20-ம் நூற்றாண்டில் மனிதர்கள் செய்யும் தொழில்களை ஐந்து பொது வகைகளாகப் பிரித்தார்கள். இயற்கையுடன் நேரடியாக இணைந்து செய்யும் விவசாயம், மீன் பிடித்தல் உள்ளிட்டவை 'முதன்மைத் தொழில்கள்’ என்றும் அதில் ஈடுபடுவோரை 'சிவப்புக் கழுத்துப்பட்டை பணியாளர்கள்’ (Red collar workers)என்றும் அழைக்கிறோம். கட்டுமானம், பொருட்களை உருவாக்குவது போன்றவை இரண்டாம் நிலைத் தொழில்கள். இந்தப் பணியில் இருப்பவர்கள், Blue collar workersஎனப்படுகிறார்கள். வணிகம், போக்குவரத்து போன்ற  மூன்றாம் நிலைத் தொழிலில் இருப்பவர்கள், pink collar workrs. மருத்துவம், கல்வி, சட்டம் போன்ற வேலைகளைச் செய்பவர்கள், நான்காம் நிலைத் தொழிலாளர்கள். இந்த வேலையைத்தான் 'ஒயிட் காலர் ஜாப்’ என்கிறார்கள். உடல் உழைப்பு அதிகம் இல்லாத, அதே சமயம் வருமானமும் சமுதாயத்தில் மதிப்பும் உள்ள வேலை என்பதால், இப்படிப் பெருமையாகச் சொல்வார்கள். இவர்களுக்கு மேலேயும் ஒன்று உண்டு. நீதிபதி போன்ற உயர் பதவியில் இருப்பவர்களும், நிறுவனங்களுக்கு பொருளாதார ஆலோசனை வழங்குவோரும் ஐந்தாம் நிலைத் தொழிலாளர்கள். இவர்களை Gold collar workers என்பார்கள்.''

மை டியர் ஜீபா !

''ஹலோ ஜீபா... தஞ்சைப் பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாதாமே... எப்படி?''

   - எஸ்.பாலசுப்பிரமணி, குரும்பபாளையம்

'' 'சோழர்களின் பொற்காலம்’ என்று சொல்லப்பட்ட 10-ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது, 'தஞ்சைப் பெருவுடையார் கோயில்’ எனப்படும் தஞ்சைப் பெரிய கோயில். உலகின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக 1,000 ஆண்டுகளைக் கடந்து தமிழர்களின் பெருமையைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. எகிப்து பிரமிடு போல கூர்மையான அமைப்பில் இருக்கும் இந்தக் கோபுரத்தின் உயரம் 190 அடிகள். அற்புதமான சிற்பங்கள், பிரமாண்டமான சிவலிங்கம் மற்றும் நந்தி என இந்தக் கோயிலின் சிறப்புகளைச் சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. ஆனாலும், 'கோயில் கோபுரத்தின் நிழல், தரையில் விழாது’ என்ற கருத்து தவறானது. நிழல் தரையில் விழுவதைப் புகைப்படங்களுடன் நிரூபித்த பிறகும், பல ஆண்டுகளாக இந்தத் தவறான கருத்து, பேச்சு வழக்கில் உலவுகிறது.''

மை டியர் ஜீபா !

''டியர் ஜீபா... காற்றாலையைக் கண்டுபிடித்தவர் யார்?''

   - த.சூரியகுமார், சென்னை.

''காற்றாலையின் அடிப்படை கி.மு.-விலேயே தொடங்கிவிட்டது. கிரேக்க ஞானி, 'ஹீரோ ஆஃப் அலெக்ஸாண்ட்ரியா’ (Hero of Alexandria) என்பவர் உருவாக்கிய இசைக்கருவி, காற்றில் சுழலும் சக்கரத்தின் அடிப்படையில் இருந்தது. இதை, 'முதல் காற்றாலைக் கருவி’ என்றே சொல்லலாம். பிறகு உருவாக்கப்பட்ட காற்றாலைகள், பூமிக்கு கீழே இருக்கும் நீரை தானியங்கியாக இறைத்து வெளியே எடுக்கவும், தானியங்களை அரைக்கவும் வேறு பல விஷயங்களுக்கும் பயன்பட்டன. 1887-ல் ஜேம்ஸ் ப்ளித் (James Blyth) என்பவர், ஸ்காட்லாண்டின் 'மேரிக்ரிக்’ என்ற கிராமத்தில் உள்ள தனது விடுமுறை வீட்டில் ஒரு காற்றாலையை அமைத்தார். அதன் மூலம் தனது வீட்டு விளக்குக்கான மின்சாரத்தைத் தயாரித்தார். அதுதான் முதல் காற்றாலை மின்சாரம். தற்சமயம் காற்றாலைகள் மின்சாரம் உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.''

மை டியர் ஜீபா !

''ஹலோ ஜீபா... காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் வயர்லெஸில் பேசும்போது ஏன் ‘OVER’ என்று சொல்கிறார்கள்?''

   - ர.மதுமிதா, உடுமலை.

'' 'ஓவர்’ என்ற சொல்லுக்கு 'மேலே’ என்ற அர்த்தம் உண்டு. 'முடிந்தது’ என்றும் சொல்லலாம்.இரண்டு பேர் தங்களுக்குள் தகவலைப் பரிமாறிக்கொள்ளும்போது, 'நான் பேசி முடித்துவிட்டேன். மேலே நீ சொல்’ என்பதைக் குறிப்பிட இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.''

''டியர் ஜீபா... அதிகம் தூங்கினால் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்பது உண்மையா?''

   - வி.பரத்குமார், மீன்கிணறு.

''தூக்கத்துக்கும் ஆயுளுக்கும் சம்பந்தம் உண்டு பரத். ஆனால், நீ சொல்வதுபோல கிடையாது. தூக்கம் என்பது உயிரினங்கள் தங்கள் உடலைப் புத்துணர்ச்சி செய்யவும், சக்தியைச் சேகரிக்கவும் எடுக்கும் ஓய்வு. உலகில் அதிகமாக உறங்கும் உயிரினங்களில் கோலா கரடியும் ஒன்று. இது ஒரு நாளில் 20 மணி நேரத்துக்கும் மேலாக உறங்கும். ஆனால் இதன் ஆயுள், 18 ஆண்டுகள்தான். மனிதர்களில் பிறந்த குழந்தை 16 மணி நேரம் தூங்கலாம். அதுவே, முழு மனிதனாக வளர்ந்த பிறகு, 8 மணி நேரம் தூங்கினாலே போதும். முறையற்ற தூக்கமும் சரி, தூக்கமின்மையும் சரி, உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து ஆயுளைத்தான் குறைக்கும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு