Published:Updated:

துளித் துளியாய்....

தண்மதி திருவேங்கடம் படங்கள் : ஆ.முத்துக்குமார்

பிரீமியம் ஸ்டோரி
##~##

பணக்காரன் ஆவதற்கு ஃபார்முலா ஏதாவது உண்டா?

உண்மையைச் சொல்லப்போனால், பணக்காரனாக பெரிதாகத் திறமை எதுவும் தேவை இல்லை. ரொம்ப சிம்பிள்! உங்கள் வருமானத்துக்குள் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். வீண் செலவைக் குறைத்து, மாதம்தோறும் ஒரு தொகையைச் சேமியுங்கள். இதன் முக்கியத்துவத்துக்கு ஓர் உதாரணம்...

கார்த்திக், ரமேஷ் இருவரும் புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள்.  கார்த்திக்  தனது 25 வயதில் இருந்து மாதத்துக்கு ரூ. 5,000 வரை, 10% வட்டி விகிதத்தில்  10 வருடங்கள் தொடர்ந்து வங்கியில் சேமித்து வந்தான்.

அவனுக்கு 35 வயது ஆனபோது, கல்யாணம், குழந்தைக்கான செலவு என சேமிக்கவே முடியவில்லை.  ஆனால், கடந்த 10 வருடங்களில் அவன் வங்கியில் சேமித்தது அசலும் வட்டியுமாக ரூ.8.77 லட்சம் இருந்தது. எவ்வளவு செலவு வந்தபோதும், இதைத் தொடாமல் அப்படியே விட்டுவைத்தான்.

துளித் துளியாய்....

ரமேஷ் இவனுக்கு நேர் எதிர். வேலைக்குச் சேர்ந்ததும் புது பைக், மொபைல்போன், கார் என்று ஜாலியாக இருந்தான். அவனுக்கு 35 வயது ஆகும்போதுதான் எதிர்காலத்துக்காக சேமிக்க வேண்டியது கட்டாயம் என்பதை உணர்ந்தான்.             35 வயதிலிருந்து வங்கியில் வருடத்துக்கு ரூ.50,000 சேமிக்க ஆரம்பித்தான். அதே 10% வட்டி. தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு அதாவது, 60 வயது வரை சேமித்தான்.

கார்த்திக் 25 வயதில் ஆரம்பித்து, 10 வருடங்கள் மட்டுமே சேமித்தான். ரமேஷ் 35-ல் ஆரம்பித்து, 25 வருடங்கள் சேமித்தான். இருவரின் 60-வது வயதில் கார்த்திக் கணக்கில் ரூ.95 லட்சமும் ரமேஷ் கணக்கில் ரூ.54.10 லட்சமும் சேர்ந்திருந்தது. எப்படி?

இது, கூட்டு வட்டியின் மாயாஜாலம்.

கார்த்திக்கின் பணம் அதிகமான காலம் வங்கியில்  (35 வருடங்கள்) இருந்ததால், பல மடங்கு பெருகியது. தாமதமாக  சேமிக்க ஆரம்பித்த ரமேஷ், இழந்தது ரூ.41 லட்சம்.   இத்தனைக்கும் அவன் போட்ட முதல் அதிகம். (சுமார் 12.5 லட்சம்). ரமேஷ் செய்த தப்பை நீங்களும் செய்யாதீர்கள். எவ்வளவு சிறிய வயதில் சேமிக்க ஆரம்பிக்கிறீர்களோ, அவ்வளவும் நல்லது.

உங்களால் எவ்வளவு முடிகிறதோ சேமியுங்கள்.  பொங்கலுக்கு, பிறந்தநாளுக்கு என்று எப்போது பணம் கிடைத்தாலும்,  வங்கியில் போட்டு வையுங்கள். முடிந்தவரை சேமித்த பணத்தைத் தொடாதீர்கள்.

இதுவரை, பணத்தைச் சேமிப்பதால், எப்படியெல்லாம் பெரிய உயரங்க‌ளை அடையலாம் என்பதைத் தெரிந்துகொண்டீர்கள். படித்த விஷயங்களைக் செயல்படுத்திப் பாருங்கள். அப்போதுதான் அதன் நடைமுறைச் சிக்கல்கள் புரியும்; தடைகளைத் தாண்டிப் போக பழகுவீர்கள். பழகப் பழக உங்கள் வாழ்க்கை வசதி மேம்படும். உங்களுக்கும் தன்னம்பிக்கைக் கூடும்!

நீங்கள் பெரியவர்களாகும்போது என்னவாக‌ ஆக விரும்புகிறீர்கள்? எதுவாக இருந்தாலும் அதற்குப் பணம் ஒரு பிரச்னையாக இருக்கக் கூடாது.

துளித் துளியாய்....

ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கம் பெற்றவர், அபினவ் பிந்த்ரா. அவர், வசதியான வீட்டுப் பிள்ளை. முழுநேரமும்  பயிற்சி செய்து (ஒரு நாளைக்கு 8 மணி நேரம்) த‌ங்கம் வாங்கினார். அவருக்கே வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் இருந்தது என்றால், இந்தப் பெருமை கிடைத்திருக்குமா?

அதனால், பணத்தைப் பற்றியும், அதை சேமிப்பது பற்றியும் நிறையத் தெரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் வாழ்க்கையை வளமானதாக மாற்றிக்கொள்ள முடியும். இதுவரை தெரிந்துகொண்டது வெறும் சேமிப்பைப் பற்றி மட்டும்தான்.

பணத்தை முதலீடு செய்து பெருக்க... ஃபிக்சட் டெபாசிட்கள், பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம், ரியல் எஸ்டேட் என்று பல வழிகள் உள்ளன. நீங்கள் வளர வளர அதைப் பற்றி எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். படிக்கும் காலத்திலேயே இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்துக்கொண்டால், சம்பாதிக்க ஆரம்பிக்கும் முதல் மாதத்திலிருந்தே பலன் அடையலாம்.

வாழ்க வளமுடன்!

 தண்மதி திருவேங்கடம், 'யங்ஃபுல்ஸ் எஜுகேஷன்’ என்ற நிறுவனத்தின் இயக்குநர். மும்பையிலிருந்து இயங்கும் இந்த நிறுவனம், நிதி நிர்வாகம் பற்றிய அடிப்படைக் கல்வியை பள்ளிகள் மூலமாக வழங்கி வருகிறது.

துளித் துளியாய்....

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இடையே நிதி நிர்வாகம் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்த,  பயிற்சி முகாம்கள், போட்டிகள்,  ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்குப் பயிற்சிகள் நடத்துகிறது இந்த நிறுவனம்.

''இந்தியா, விவசாய நாடு. நம் முன்னோர்களின் வருமானம் என்பது விவசாயம் மூலம்தான். இதில், வருமானம் தொடர்ந்து இருக்கும். ரிட்டையர்மென்ட் இல்லை. ஆனால், தொழில் துறை, கணினி என்று நாடு முன்னேற ஆரம்பித்ததும் விவசாய நிலத்தை விற்று, உயர்கல்வி வேலைகளை நோக்கி நகர்கிறோம். கடன் மூலம் கார், பைக், மொபைல்போன் வாங்கி தவணை கட்டுவது அதிகரித்துவிட்டது. இதனால் திடீர் வேலை இழப்பு, மருத்துவச் செலவு, ரிட்டையர்மென்ட் போன்ற நெருக்கடிகளில் தடுமாறுகிறோம். அதனால், நம் முன்னோர் சொன்ன சிக்கனம், சேமிப்புப் பழக்கங்கள் அவசியமாகிவிட்டன.

கூட்டுக் குடும்பத்தில் இருந்தபோது இளையோருக்கு நல்லதுகெட்டது எடுத்துச் சொல்ல பெரியவர்கள் இருந்தார்கள். இப்போது அதுவும் இல்லை. பள்ளிகளில் இன்று நீச்சல், ஸ்கேட்டிங், ஓரிகாமி, குதிரையேற்றம் என, நிறையச் சொல்லிக்கொடுக்கிறார்கள். எல்லாவற்றிலும் முக்கியமானது பண நிர்வாகம் பற்றிய கல்வி. இது உங்களுக்கு அனுதினமும் பயன்படும். பதின்பருவத்தில்  நல்ல பழக்கங்கள் சிலவற்றை விதைத்தால்,  வாழ்வு சிறப்பாக இருக்கும்'' என்கிறார் தண்மதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு