Published:Updated:

“எழுத்தாளர்கள் சமூகத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்களா?”

விகடன் மேடை - பிரபஞ்சன் பதில்கள்வாசகர் கேள்விகள்... படம்: உசேன்

##~##

சங்கர், சத்துவாச்சேரி.

 ''இப்போதைய இளம் எழுத்தாளர்கள் நீங்கள் பொறாமைப்படும் அளவுக்கு எழுதுகிறார்களா?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 ''நான் யாரைப் பார்த்தும் பொறாமைப்பட்டது இல்லை. இல்லாதவன்தான் இருப்பவரைப் பார்த்துப் பொறாமைப்படுவான். நான் எல்லாம் உள்ளவன். (பணம் இல்லாதது என் குறை அல்ல!) புதிய எழுத்தாளர்களைப் படித்து நான் பெருமிதம் அடைகிறேன். நாங்கள் இரண்டாம், மூன்றாம் தொகுதிகளில் அடைந்த முதிர்ச்சியை, இன்று வரும் எழுத்தாளர்கள் தங்களின் முதல் தொகுப்பிலேயே அடைகிறார்கள். உண்மையில் 1970, 80-களுக்குப் பிறகான தமிழ் இலக்கியப் பரப்பில் இருந்த படைப்பு உக்கிரம் இன்றுதான் ஏற்பட்டிருக்கிறது என்பது என் கணிப்பு. இசை, கே.என்.செந்தில், மனோமோகன், மாரி செல்வராஜ், அசோகன் நாகமுத்து, சுதாகர் கத்தக் என்று எத்தனை மேன்மையான கலைஞர்கள். நான் பொறாமைப்பட்டால் கூடத் தப்பே இல்லை!''

புவனேஷ்வரி, திருச்சி.

''உங்கள் படைப்புகள்... திருமணம், குடும்பம் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவே இருக்கின்றன. ஆனால், நமது வாழ்க்கையில் நவீன மாற்றங்கள் எவ்வளவோ வந்தபோதும் குடும்ப அமைப்பு மாறாமல் இருக்கிறதே... இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?''

''என் கதைகள் வீட்டுக்கு வெளியே தொடங்குகின்றன. வீட்டில் நுழையும் முன் முடிகின்றன. குடும்பம், மனிதர்களின் சிறகுகளை வெட்டுகின்றன. இரண்டாயிரம் வருஷத்துக் குடும்ப அமைப்பு பற்றி பரிசீலிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த இரண்டாயிரம் வருஷத்தில் மனித இன நகர்வுக்கு, அடுத்தப் பாய்ச்சலுக்கு குடும்பம் என்ன செய்திருக்கிறது என்பதை ஆராய வேண்டியவர்களாக இருக்கிறோம். சகோதரி நிவேதிதா, 'உங்கள் மனைவி எங்கே?’ என்று பாரதியிடம் கேட்டதற்கு, 'நாங்கள் அரசியல்போன்ற பொது விவகாரங்களில் பெண்களைக் கலப்பது இல்லை’ என்றார். இது, 1907-1910ம் ஆண்டுகளின் நிலை. பாரதியே இப்படி. பெண்கள் தாங்களாகவே தங்கள் இயக்கத்தைத் தீர்மானித்து இயங்கவேண்டிய காலம் இது. இதில் ஆண்கள் சக போராளியாக மட்டுமே இருக்க முடியும்; ஆதிக்கம் செலுத்த முடியாது. மனைவி பெறுகிற பணத்துக்கு புருஷன் கையெழுத்துப் போடக் கூடாது. பொருளாதாரம், பெண்ணைச் சார்ந்து இருக்க வேண்டும். நண்பர்களாக, தோழர்களாக இருக்க, ஒரு கூரை தேவை இல்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்துகொண்டு, விரும்பும்போது சந்திக்கிற வாழ்க்கைமுறையையே நான் விரும்புகிறேன். ஆண்கள், பெண்களுக்குத் தோழர்களாகவே இருக்க முடியும்; தலைவர்களாக இருக்க முடியாது. குழந்தை..? இது ஒரு பிரச்னையே இல்லை. குழந்தை ஒரு பேறு அல்ல; அது ஒரு நிகழ்வு. குழந்தை இல்லாதவர்கள் புராணம் சொல்லும் 'புத்’ என்கிற நரகத்துக்கே போகவேண்டி இருக்காது. அந்த நரகம், குடும்பத்துக்குள் கொண்டு வரப்படக்கூடாது!''

“எழுத்தாளர்கள் சமூகத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்களா?”

மாதேஷ், சென்னை.

''பிரெஞ்சுக் கலாசாரத்தின் தாக்கம் அதிகம் உள்ள புதுச்சேரி மண்ணில் பிறந்தவர் நீங்கள். அந்தக் கலாசாரப் பின்னணியில் இருந்து தமிழ்நாட்டுக் கலாசார வாழ்க்கை குறித்து என்ன கருதுகிறீர்கள்?''

''சோழர்கள், பல்லவர்கள், விஜய நகர அரசர்கள் முதலான தமிழக மன்னர்கள் தமிழகத்தை ஆண்டதுபோலவே, எங்கள் புதுச்சேரியையும் ஆண்டார்கள். ராஜராஜன், தஞ்சைப் பெரிய கோயிலைப் போலவே எங்கள் ஊரிலும் (திருக்குந்தன்குடி மகாதேவர் கோயில், மதகடிப்பட்டு) ஒரு கோயில் கட்டியிருக்கிறான். பின்னர், பிரெஞ்சுக்காரர்கள் என்கிற வியாபாரிகள், எங்களை சுமார் 260 ஆண்டுகள் ஆண்டார்கள். சாதி, மதப் பிரச்னைகள் எங்கள் பிரதேசத்தில், ஒப்புநோக்கு அளவில் குறைவு. காரணம், பிரெஞ்சுக் காரர்களுக்கு சாதி தெரியாது. ஒரு பிரெஞ்சு கவர்னரின் வீட்டில் தலித் ஒருவர், சமையல்காரராக வேலை பார்ப்பார். ஒரு பிரெஞ்சு அதிகாரி, தன் காரை விட்டுக் கீழிறங்கி, ஓட்டுநருக்குக் கைகொடுத்து நன்றி சொல்வார். தமிழகத்துக்கு முன்பே, எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. 'பெண் கல்வி’ அமலுக்கு வந்துவிட்டது. பிரெஞ்சுக்காரர்கள், நீதிமன்றம் நிறுவி 'சாதிக்கொரு நீதி’ என்ற தீமையை ஒழித்தார்கள். பிரெஞ்சு ஆசிரியர்கள் பெற்ற சம்பளத்தை, தமிழ் ஆசிரியர்களும் பல சமயங்களில் பெற்றார்கள்.

எங்கள் ஊரில் இந்திய தமிழ்க் கணவரும் பிரெஞ்சு தமிழ் மனைவியும் ஒரு கூரையின் கீழ் இயல்பாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள். தமிழனாகப் பிறந்து பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற பல ஆயிரம் பேர் எங்கள் ஊரில் வாழ்கிறார்கள். மொழியால் தமிழர்கள்; தேசத்தால் பிரெஞ்சுக்காரர்கள்.

தினப்படி வாழ்வுமுறையில் பல பிரெஞ்சுப் பழக்கவழக்கங்கள் எங்கள் மேல் படிந்திருக்கின்றன. 1970-க்குப் பிறகான, தமிழகத் தமிழர்கள், தமிழ்நாட்டுக்காரர்கள், எங்கள் ஊரில் குடியேறி, எங்கள் தனித்தன்மையை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற பேச்சு, எங்கள் மாநிலத்தில் உண்டு. தவிர, நான் தமிழ்நாட்டுக்காரன் இல்லை; புதுச்சேரிக்காரன்!''

சண்முகம், காஞ்சிபுரம்.

“எழுத்தாளர்கள் சமூகத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்களா?”

''புலமைக் காய்ச்சல் தமிழ் இலக்கியத்தின் சாபக்கேடு அல்லவா?''

''தர்மசங்கடம் என்பது அயோக்கியர்களுக்கு வராது. தர்மவான்களுக்கே அந்தச் சங்கடம். புலமை உள்ளவர்களுக்குக் காய்ச்சல் வராது. 'பிறருக்கான நாற்காலியில் நாம் உட்கார முடியாது’ என்ற ஞானம் பிறக்காத மூடர்களுக்கே காய்ச்சல், சளி, இருமல் எல்லாம் வரும். உலகம் முழுக்க இந்தப் புலமைக் காய்ச்சல் இருக்கிறது. ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் பணம் இவற்றைச் சார்ந்து வாழும் எழுத்தாளர்கள், அவற்றைச் சாராதவர்களை ஒடுக்குவார்கள்!''

 ராஜமாணிக்கம், கோனேரிராஜபுரம்.

''ஈழத் தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?''

''ஈழ மக்கள், இவ்வளவு துயரங்களுக்குப் பிறகு சிங்களர்களோடு இணைந்து வாழ முடியாது. அவர்களுக்கென அதிகாரமிக்க தனி ஈழமே சரியான தீர்வு. தன் மக்களையே இரண்டாம்பட்சமாகப் பார்க்கும் அரசில் தமிழர்கள் எப்படி வாழ முடியும்? தமிழகத்தில் இயங்கும் கட்சிகள், இங்கு இருக்கும் அகதிகளுக்கு உரிய உரிமை சென்றுசேரப் பாடுபட வேண்டும். பிறகு, ஈழத் தமிழர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அரசியலை நகர்த்த அழுத்தம் தர வேண்டும்!''

கோபாலகிருஷ்ணன், தஞ்சாவூர்.

“எழுத்தாளர்கள் சமூகத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்களா?”

''நூலகங்களுக்கு தமிழ் நூல்கள் வாங்கப்படுவது இல்லை என்று பதிப்பகங்கள் சார்பில் அறிக்கைகள் வருகின்றன. நூலகங்களை நம்பித்தான் பதிப்பகங்கள் செயல்பட வேண்டுமா? வேறு வழி இல்லையா?''

''அரசு நூலகங்களை நம்பியே பதிப்பகங்கள் வாழ்வது ஓர் அவலம். இங்கு மக்கள் இன்னும் புத்தகங்களோடு சேர்ந்து வாழும் நிலை உருவாகவில்லை. புத்தகத்தின் வெகுமதி உணரப்படவில்லை. இது ஒரு பக்கம். தமக்குரிய நூல்களைத் தேர்ந்து வாசிக்கும் பயிற்சி, வாசகர்களுக்குப் போதவில்லை. சமையல், வாஸ்து, அழகுக் குறிப்புகள், ஆண்மை விருத்தி, பத்து நாட்களில் பணக்காரர் ஆகும் வழி முதலானவைகூட இங்கு புத்தகம் என்றே அழைக்கப்படுகின்றன. வங்க நாவலாசிரியர் விபூதி பூஷண் (பதேர் பாஞ்சாலி நாவல் ஆசிரியர்) எழுதிய வங்க நாவல் 'வனவாசி’யை சாகித்ய அகாதமி முன்னர் தமிழில் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற, நேர்மை மிகுந்த டி.என்.குமார சாமி-டி.என்.சேனாபதி சகோதரர்கள் வங்க மொழி பயின்று வங்க மொழியிலிருந்து மொழியாக்கம் செய்த சில அரிய படைப்புகளில் ஒன்று 'வனவாசி’. இது 'ஆரண்யம்’ என்ற பெயரில் மொழிபெயர்ப்பாளர் பெயர் இல்லாமல், அநாதையாக இப்போது வெளியாகி இருக்கிறது. இதையும் காசு கொடுத்து, நூலகத் துறை வாங்கும்.

பதிப்பாளர்கள் சிலர், எழுத்தாளர்களுக்கு ராயல்ட்டி கொடுக்காமல் பட்டினி போட்டுச் சாகடிக்கிற தமிழ்த் தொண்டு செய்கிறார்கள். என்றாலும், பதிப்பாளர்களுக்கு அரசியல், கட்சி முதலான காரணங்களால் அவர்கள் உரிமை பறிக்கப்படும்போது நாம் அவர்கள் பக்கமே நிற்க வேண்டும். அதே சமயம், பாதிக்கப்படுகிற எழுத்தாளர் பக்கமும்தான்!''

பாக்கியலட்சுமி, சோழவரம்.

'' 'சமூகம், எழுத்தாளர்களைக் கொண்டாட மறுக்கிறது’ என்ற கவலையை, சில எழுத்தாளர்கள் பகிந்துகொள்கிறார்களே?''

''சமூகம், எழுத்தாளர்களைக் கொண்டாடுவது இருக்கட்டும். எழுத்தாளர்கள் எத்தனை பேர் சமூகத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் அரசியல் சார்ந்த பிரக்ஞையோடு இருக்கிறார்கள்? மையம் குலைத்து, விளிம்பைக்கொண்டாடுகிறார்கள்? ஜப்பானிய எரிமலைகள் போல அவ்வப்போது மேலெழும் சாதி மதக் கலவரங்கள், காதல் கொலைகள், பாலியல் வன்முறைகள் முதலான விஷயங்களில் குறைந்தபட்ச அக்கறை, புரிதல் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? எனக்கு முன்னால், ஒடுக்குகிற சக்தி, ஒடுக்கப்படுகிற சக்தி என்று இரண்டு இருக்கிறது. சிந்தனையாலும், எனக்குள்ள யோக்ய உணர்வாலும், என் செயல்பாட்டிலும், நான் ஒடுக்கப்படுகிற சக்தியோடுதான் இணைய முடியும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மக்கள், அவர்களை நேசிப்பவர்களைக் கொண்டாடுபவர்களாகவே இருக்கிறார்கள்!''

 - அடுத்த வாரம்...

• ''உங்கள் கனவில் வரும் நடிகை யார்?''

•  ''இலக்கியவாதிகளின் சண்டைகள், விவாதங்கள், குழு அரசியல் ஆகியவற்றில் இருந்து நீங்கள் விலகியே நிற்பது ஏன்?''

•  ''சமூகத்தில் பாராட்டுகளைக் குவிக்கும் கலைஞர்கள், ஒருவரை ஒருவர் விமர்சிக்கும்போது தரக்குறைவான விமர்சனங்களிலும் வன்மம் கொட்டும் வார்த்தைகளிலும் வசவுபாடுவது ஏன்?''

- பகிர்ந்துகொள்வோம்...

“எழுத்தாளர்கள் சமூகத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்களா?”

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

பிரபஞ்சனிடம் கேட்பதற்கான உங்கள் கேள்விகளை உடனடியாக அனுப்ப வேண்டிய முகவரி:   'விகடன் மேடை- பிரபஞ்சன்’, ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை, சென்னை-600002. இ-மெயில்: av@vikatan.com கேள்விகளுடன் மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணையும் அவசியம் குறிப்பிடவும்.