Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

##~##

காணாமல்போனவர்களைப் பற்றிய அறிவிப்பு இது. 'இதோ இந்தப் புகைப்படத்தில் இருப்பவரின் பெயர் கு.சின்னக்குப்பை. வயது 50 இருக்கும். மாநிறம். ஒல்லியான உடல்வாகு. நல்ல உயரம். வலது கையில் இரட்டை இலை சின்னத்தோடு 'புரட்சித் தலைவர்’ என்று பச்சைக் குத்தியிருப்பார். முடியும் தாடியும் முழுவதுமாக நரைத்திருக்கும். நீங்கள் 'சின்னக்குப்பை...’ என்று அவர் பெயர் சொல்லி அழைத்தாலோ, எதிரில் தென்படும் அவரின் முகத்தை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தாலோ, உங்களிடம் இரண்டு ரூபாய் நிச்சயம் கடன் கேட்பார். கேட்டவுடன் நீங்கள் அந்த இரண்டு ரூபாயைக் கொடுத்துவிட்டால், 'கர்ணனின் கவசகுண்டலம் உனக்கே’ என்று உங்களை ஆசீர்வதிப்பார். அப்படி இல்லாமல், 'சில்லறை இல்ல... போ அங்கிட்டு’ என்று நீங்கள் அவரை உதாசீனப்படுத்தினாலோ, 'கையும் காலும் நல்லாத்தானே இருக்கு... அப்புறமென்ன’ என்று அவமானப்படுத்தினாலோ, 'கர்ணன் செத்தான்... கண்ணன் கொன்றான்’ என்று சொல்லிக்கொண்டே, நீங்கள் கடலுக்குள் போனாலும் அங்கேயும் உங்களைப் பின்தொடர்ந்து வருவார்... ஜாக்கிரதை! கொஞ்சம் மனநிலை பிறழ்ந்தவர். ஆறு வாரங்களாகக் காணவில்லை. எங்கேயாவது இந்தப் பெரியவரைப் பார்த்தால், கீழ்க்கண்ட முகவரிக்குத் தெரியப்படுத்தவும். கண்டிப்பாக சன்மானம் உண்டு; பிரிந்து தவிக்கும் எங்கள் பிரியமும் உண்டு’ - இப்படியரு போஸ்டரை ஊர் முழுவதும் நானும் நண்பன் குச்சிகணேசனும் ஒட்டி, வருடம் ஒன்பது தாண்டிவிட்டது. ஆனால், எந்தத் திசையில் இருந்தும் இன்னும் வீடு வந்து சேரவில்லை கு.சின்னக்குப்பை மாமா.

கு.சின்னக்குப்பை மாமாவை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. வேண்டுமானால் ஒரு கதையாக்கி அப்பாவியான அவரை, காற்றில் பறக்கவிடலாம் அல்லது பரவவிடலாம். பெயர் தெரியாத ஏதோ ஒரு செடியில், ஏதோ ஓர் இலையின் ஏதோ ஒரு நுனியில், பசையாக பச்சையின் ஈரமாக அப்பிக்கொண்டு அப்படியே இருந்துவிட்டுப் போகும் அவரின் மீதி ஆயுள் என்பது என் அதிகபட்சப் பிரார்த்தனை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மறக்கவே நினைக்கிறேன்

கு.சின்னக்குப்பை மாமா வேறு யாரும் இல்லை. என் நண்பன் குச்சிகணேசனின் அப்பாதான். ஆனால், அது அவருடைய அடையாளம் இல்லை. ஊர் சுடலைமாட சாமி கோயில் பூசாரி என்பதும், 'இரண்டு ரூபாய் குப்பை’ என்பதும்தான் அவர் அடையாளம். முன்னாடி மாமா எப்படி இருந்தார் என்று கேட்டால், ஊரே ஓடி வந்து அவ்வளவு மரியாதையுடன் மாமாவைப் பற்றி ஆயிரம் கதைகள் சொல்வார்கள். 'மனுசன் எப்படி இருந்தாரு தெரியுமா? வேட்டியும், டவுசரும், மீசையும், திருநீறுமா தெருவுக்குள்ள நெசமான சுடலைமாட சாமி மாதிரிலா வருவாரு. தென்னாட்டு சாமிமாரெல்லாம் விரட்ட முடியாத பனங்காட்டு முனிய, பல்லால கடிச்சி ஓடவெச்ச சூரன்லா மனுசன். அது மட்டுமா..? நெசமான சுடலை வந்து வேட்டைக்குப் போனாக்கூட அப்படித் துள்ளாட்டமா போவ மாட்டா. சின்னக்குப்பை எப்படிப் போவான் தெரியுமா? ரெண்டு கால்லயும் றெக்கையைக் கட்டிக்கிட்டு தீப்பந்தத்தோட அவன் பறந்து போவான் பாரு... ஐயோ அப்படியே தீயைக் கக்கிக்கிட்டு வானத்துல திடீர்னு காக்கா ஒண்ணு உசரமாப் பறந்த மாதிரி இருக்கும். மாராசன் நடையென்ன... அவன் குரலென்ன... அவன் பழக்கம் என்ன... சின்னப் புள்ளைங்ககிட்டகூட அப்படிலா பழகுவான். இன்னைக்குப் பாரு, என்ன ஆச்சோ, என்ன நடந்துச்சோ தெரியலை... ஐயோ பாவம். திசை தெரியாம கிழமை தெரியாம பிசாசு மாதிரி இப்படி அலையிறான்!’ என்று சொல்லி 'உச்’ கொட்டுபவர்களிடம் கொஞ்ச நேரம் கழித்து, 'இப்போ சின்னக்குப்பை மாமா அப்படி என்னதான் செய்றார்?’னு கேட்டாப் போதும்... அவ்வளவு ஆவேசமா அப்படிப் பொங்குவார்கள்!

'நல்லாக் கேட்டியளே... மனுசன் என்ன செய்வார்னு! கொஞ்சப் பாடாப்படுத்துறாரு. எங்கேயவது ஒரு நல்லது கெட்டதுக்குப் போக முடியாது. திடீர்னு எதிர்ல வந்து நின்னு, ரெண்டு ரூபாய் கேக்கிறது, இல்லனு சொன்னா சாபமிட்டு பின்னாடியே வாரது, அர்த்தராத்திரில வந்து கதவைத் தட்டி, 'கர்ணன் செத்துட்டான் காசு குடு’னு கேக்கிறது. ஜன்னல் வழியா சின்னப்பிள்ள மாதிரி எட்டிப்பார்க்கிறது. இதெல்லாம்கூட பொறுத்துக்கலாம். ஆனா, சில நாள் வைக்கப்போரெல்லாம் தீயைக் கொளுத்தி விட்டுட்டு அந்த மனுசன் ஓகோனு ஆட்டம் போடும்போதுதான் பார்க்க அவ்வளவு பயமா இருக்கும். சுடலையா சுடுகாட்டுக்கு வேட்டைக்குப் போனவருல்லா... இப்படி திடீர்னு காரணம் தெரியாமப் பைத்தியமாகிட்டா, பயமாத்தான் இருக்கு. பேசாமப் புடிச்சி அடைச்சுப்போடுறது அல்லது கட்டிப் போடுறதுதான் ஊருக்கு நல்லது. இதச் சொன்னா, அவங்க வீட்ல யாரு கேட்கிறா?’ என்று பொருமிக்கொண்டு போவார்கள்.

மறக்கவே நினைக்கிறேன்

அவர்கள் சொல்வது அத்தனையும் நிஜம்தான். மாமா அப்படித்தான் நடந்து கொள்வார். முழு இரவும் தூங்காமல் ஊரை சுற்றிச் சுற்றி வருவார். பகலில் எங்கு போகிறார் என்ன ஆகிறார் என்று தெரியாத அளவுக்கு காணாமல் போய்விடுவார். 'ரொம்ப அவமானமா இருக்கு மச்சான். இவரால அக்காவுக்கு கல்யாணம் பண்ண முடியல’ என்று நண்பன் குச்சிகணேசன் வருத்தப்படாத நாள் இல்லை. அதுபோல அவரைத் தேடி அவன் அலையாத நாளும் இல்லை. ஆனால், ஒரே ஒரு நாள் மட்டும் அப்படி சாதாரணமாக வாய்க்கவில்லை. அந்த நாள் நானும் அவனும் என்றும் கடந்து போக முடியாதபடி வாய்த்ததுதான் காலத்தின் அப்பட்டமான துயரம்.

ன்று நானும் குச்சிகணேசனும் திருநெல்வேலி சிவசக்தி தியேட்டருக்குள் இருந்தோம். என்ன படம் பார்க்க வந்தோம் என்று வெளியில் போய், எப்போதுமே சொல்ல முடியாத படங்கள் ஓடும் திரையரங்கம்தான் சிவசக்தி தியேட்டர். நாங்கள் அங்கு போயிருப்பது முதல்முறை என்று, எங்களுக்கு டிக்கெட் கிழித்துக் கொடுத்த ஊனமுற்ற பெரியவர் நிச்சயம் கண்டுபிடித்திருப்பார். இரண்டு டிக்கெட்களை வாங்க எங்கள் நான்கு கைகள் நடுங்கிய நடுக்கம் அப்படி. மூன்று நாட்களுக்கு முன் இறந்தவனின் உடலுக்குள் அவசரமாக நுழைந்துவிட்ட மாதிரி வீச்சமும் கூச்சமுமாக இருக்கும் இருக்கைகளைத் தேடிப்பிடித்து உட்காந்தோம். இந்த மாதிரிப் படங்கள் பார்க்கும்போது என்ன பேசிக்கொள்ள வேண்டும் என்பது அப்போது எங்களுக்குத் தெரியாது என்பதால், இடைவேளை வரை நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், அந்த இடைவேளை அவ்வளவு மோசமானதாக இருக்குமென்று அப்போது எங்களுக்குத் தெரியாது.

நான்தான் முதலில் குனிந்துகொண்டு வெளியே வந்தேன். பாத்ரூம் போகிற வழியில் குத்தவைச்சு உட்கார்ந்து பீடி குடித்தபடி இருந்த பெரியவர் அப்படியே கு.சின்னக்குப்பை மாமா சாயலில் இருப்பதாகத்தான் நான் நினைத்தேன். ஆனால், என் கைகளைப் பிடித்து வேகமாக குச்சிகணேசன் இழுத்து பதறும்போதுதான் தெரிந்தது, அது கு.சின்னக்குப்பை மாமாவேதான் என்று. என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு தூணுக்குப் பின்பக்கம் போய் நின்று பார்த்தோம். அங்கு நடந்தவை எல்லாம் மாமா நிறைய தினங்கள் அந்த தியேட்டருக்கு வந்ததற்கான தடயங்களாகவே இருந்தன. கொஞ்சப் பேர் மாமாவிடம் நெருப்பு கடன் வாங்கினார்கள்; கொஞ்சப் பேர் மாமாவுக்கு காசு கொடுத்தார்கள்; இவை எல்லாவற்றையும் எதுவும் சொல்லாமல் வேடிக்கை பார்த்த குச்சிகணேசன், கொஞ்சப் பேர் மாமாவின் தலையில் ஒரு கொட்டு கொட்டிவிட்டுப் போனதை பார்த்தபோதுதான் பொறுத்துக்கொள்ள முடியாமல் அழுதபடி வெளியே ஓடிவிட்டான். வெளியே ஒருத்தர் முகம் ஒருத்தர் பார்க்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அவனே பேசினான், 'மச்சான் நீ ஊருக்குப் போ. நான் இருந்து அவரைக் கூட்டிட்டு வாரேன். ஊர்ல யார்கிட்டயும் இதச் சொல்லிடாத ப்ளீஸ் மச்சான்’ என்றவனின் விரல்களை அழுத்தமாகப் பிடித்து, எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி வந்தேன். ஆனால், நான் அப்படி கிளம்பி வந்திருக்கக் கூடாது.

அன்றிலிருந்து இரண்டு நாட்கள் கழித்துதான் குச்சிகணேசன் அழுது வீங்கிய முகமாக என்னைப் பார்க்க வந்தான். என் முகத்தைப் பார்க்காமல், கன்னிக்குள் சரியாக அகப்பட்டுவிட்ட தலை பெருத்த ஓர் ஓணானின் முகபாவனையோடு வேகவேகமாகப் பேசினான். 'மச்சான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன். அன்னைக்கு அப்பாவை அங்க பார்த்தவுடனே என் மூக்கு முகர எல்லாம் தீப்பிடிச்ச மாதிரி ஆகிடுச்சி. ஊர்ல எவனுக்காவது இது தெரிஞ்சா என்னாகுங்கிற பயம் வேற. ஏற்கெனவே அப்பனுக்கு லூஸு, ஊரெல்லாம் பிச்சை எடுக்குறான்னு ஒரு பய பொண்ணு கேட்டு வாசப் பக்கம் வரல. அதோடு அப்பனுக்கு இப்படியரு கோட்டி இருக்குனு தெரிஞ்சுச்சுனு வெச்சுக்கோ... நாங்க நாலு பேரும் நாண்டுக்கிட்டுத்தான் சாகணும். இதுக்கு அப்புறம் எப்படி மச்சான் அவரை நான் வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போக முடியும். அதான் மதுரை பஸ்ல கூட்டிக்கிட்டுப் போய்ட்டேன். அங்க போயும் என்ன பண்றதுனு தெரியல. விருதுநகர் தாண்டி பஸ் போகும்போது அப்பா நல்லாத் தூங்கிட்டு இருந்தார். ரொம்ப நாள் கழிச்சு அவர் அப்படித் தூங்குறதை அப்போதான் பார்த்தேன். அப்படியே அவர்கிட்ட சொல்லிக்காம அங்கேயே இறங்கி வேற பஸ் பிடிச்சு ஊருக்குத் திரும்பி வந்துட்டேன். எப்படியும் சாகுறவரைக்கும் பிச்சக்காரனாத்தான் அலையப்போறார். அது ஏன் நம்ம ஊருக்குள்ள அலைஞ்சு நம்ம குடும்பத்த அவமானப் படுத்தணும்னுதான் விட்டுட்டு வந்தேன்.

மறக்கவே நினைக்கிறேன்

வீட்ல அவரைக் காணலனா பிரச்னையே இருக்காதுனு அப்போ நினைச்சேன். இங்கே வந்தா எல்லாமே தலைகீழா இருக்கு. 'அப்பாவை ரெண்டு நாளாப் பாக்காம அம்மா அப்படிக் கிடந்து கதறுறா. அக்கா சாப்பிட மாட்டேன்னு அவ்வளவு அடம்பிடிக்கிறா. 'போ போய்த் தேடு. எப்பிடியாச்சும் தேடிப்பிடிச்சுக் கூட்டிட்டு வா. பிச்சைக்காரனா இருந்தாலும் அவர் முகம் எனக்கு வேணும்டா’னு கூப்பாடு போடுறாங்கடா. எனக்கு என்ன செய்றதுனு தெரியலை. நான் உண்மையைச் சொன்னேன்... அவ்வளவுதான். எனக்கு சோத்துல விஷம் வெச்சுக் கொன்னாலும் கொன்னுடும்டா எங்க அம்மா. என்னை நம்பி அப்படித் தூங்குன அப்பனை அம்போனு விட்டுட்டு வந்துட்டேனே!’ என்று சொல்லிக் கதறி அழுதவனை அந்த நேரத்தில் எதுவும் செய்ய முடியாமல், உடனடியாக கு.சின்னக்குப்பை மாமா புகைப்படம் போட்டு, 'காணவில்லை’ போஸ்டர் அடித்து கையோடு எடுத்துக்கொண்டு மதுரைக்குக் கிளம்பிப் போனோம்.

'மதுரை’னு சொன்னதும் திருநெல்வேலி மாதிரி அது ஓர் ஊர். கட்டாயம் கண்டுபிடித்துவிடலாம் என்றுதான் தேடப் போனோம். ஆனால், அங்கே போய் முதல்முறையாகப் பார்க்கும்போதுதான் தெரிந்தது, அது அத்தனை மனிதர்கள் பேயாக, பிசாசாக, சாமியாக, சாத்தானாக அலைந்து திரிந்து படுத்துறங்கும் அவ்வளவு பெரிய கடல் என்று. பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, மீனாட்சி அம்மன் கோயில், ரயில்வே ஸ்டேஷன், அத்தனை ஆற்றுப்பாலங்கள், அவ்வளவு பிச்சைக்காரர்கள் அவ்வளவு தெருக்கள் என முடிந்தவரை போஸ்டர் ஒட்டிவிட்டோம். கால் வலிக்க நடந்து பார்த்துவிட்டோம். அழுக்கு அப்பிய சில முடிகளைப் பிடித்து இழுத்து முகத்தை உற்றுப் பார்த்துவிட்டோம். கு.சின்னக்குப்பை மாமாவின் முகச் சாயல் ஒருத்தருக்கும் இல்லை அந்த ஊரில்.

வயிற்றைத் திருகிய பசியோடும், ஆத்திரத்தில் அவசரத்தில் தொலைத்துவிட்ட அப்பாவி அப்பாவைத் தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற ஏக்கத்தோடும், கடைசியாக வேறு வழியில்லாமல்தான் ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்தில் இருக்கும் அந்த மாதிரி படம் ஓட்டப்படும் தங்கரீகல் தியேட்டருக்குள் நுழைந்தோம். பார்ப்பவர்கள் எல்லாம் மாமாவின் வயதுடையவர்களாகவும், மாமாவின் நரைத்த தலையுடையவர்களாகவும்தான் இருந்தார்கள். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களைப் போல அந்தப் படத்தை அப்படி பார்த்துக்கொண்டிருப்பவர்களின் பக்கத்தில் போய் அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் அருகே அமர்ந்து அமர்ந்து கு.சின்னக்குப்பை மாமாவை, அவர்கள் முகத்தில் தேடியது எனக்கு அருவருப்பு என்றால், நண்பன் குச்சிகணேசனுக்கு அது அவ்வளவு அழுகையாகிவிட்டது. தலை நரைத்த ஒரு முழுக் கிழவன் ஏதோ ஒரு சந்தேகத்தில், காரித் துப்பி அடித்து விரட்ட, நான் திரையரங்கிலிருந்து வேகமாக வெளியேறிவிட்டேன். ஆனால், நண்பன் குச்சி கணேசன் தான் இன்னும் போகிற ஊரெல்லாம் அப்படியான தியேட்டர்களைக் கண்டுபிடித்து போய், ஈன்ற அத்தனை குட்டிகளையும் தொலைத்த பூனை போல எரியும் கண்களோடு தன் அப்பாவி அப்பனைத் தேடியபடியே இருக்கிறான்.

இன்னும் கிடைத்தப்பாடில்லை அந்த சுடலைப் பூசாரி கு.சின்னக்குப்பை மாமா!

- இன்னும் மறக்கலாம்...