சினிமா
Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 3

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

##~##

 நட்சத்திரங்களின் தேசம்

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!’

- கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்

ம்மா இறந்த பிறகு, இவன் அப்பாவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான். இந்த உலகை பகலில் சூரியன் வழிநடத்துகிறது; இரவில் சந்திரன் வழிநடத்துகிறது; பகலிலும் இரவிலும் வழிநடத்துவது தகப்பனின் கைவிரல்களே என்பதை இவன் அறிந்துகொண்ட காலம் அது. இவன் தந்தையின் விரல்கள், இவனை பல்வேறு திசைகளுக்கு அழைத்துச் சென்றன. இந்த உலகம் இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது; அதிசயமாக இருந்தது; அதிர்ச்சியாக இருந்தது; அச்சமாக இருந்தது; தன் தந்தையின் கைவிரல்களைப் பற்றியிருந்ததால், எல்லாமே அனுபவமாக இருந்தது.

10-ம் வகுப்பு வரை இவன் வாழ்ந்தது ஒரு குடிசை வீட்டில். தென்னங்கீற்று வேயப்பட்ட அந்தக் குடிசை வீட்டின் முன்புறம், சாணி மெழுகிய இரண்டு மண் திண்ணைகள் இருக்கும். அதற்கு முன்புறம் ஒரு முருங்கைமரம். முருங்கை மரத்தைப் பற்றிப் படர்ந்து பூசணிக்கொடி ஒன்று குடிசை யின் மேல் மஞ்சள் பூக்களை விரித்திருக்கும். அப்பாவின் சைக்கிளை நிறுத்திய பிறகு, இரண்டு ஆட்கள் நடந்துபோகும் அளவுக்கு ஒரு ஹால். இடது பக்கம் ஒரு சமையலறை. ஈர விறகுகள் புகையும் கொடி அடுப்பும், அதனால் எழுந்த கரி படர்ந்த சுவரும் அதன் மிச்சங்கள். அந்தக் கரிச் சுவற்றில் பால் கணக்கு, தயிர் கணக்கு, சலவைக் கணக்கு என்று சாக்பீஸால் கிறுக்கப்பட்டிருக்கும். வலது பக்கம் படுக்கையறை. படுக்கையறை என்பது, பேருக்குத்தான். அந்த அறை முழுக்க மூட்டை மூட்டையாகப் புத்தகங்களை இவன் அப்பா குவித்துவைத்திருந்தார். கட்டிலிலும், கட்டிலுக்கு அடியிலும், அலமாரியிலும், பரணிலும்... என கிட்டத்தட்ட ஒரு லட்சம் புத்தகங்கள்.

வேடிக்கை பார்ப்பவன் - 3

அந்த வீட்டுக்குக் கதவு உண்டு; தாழ்ப்பாள் கிடையாது. இரவானதும் மாவு அரைக்கும் ஆட்டுரலை தன் பலம்கொண்டு நகர்த்தி, கதவுக்குத் துணையாக இவன் அப்பா முட்டுக்கொடுப்பார். அதுதான் அந்த இரவுக்குக் காவல். புத்தகங்களைத் திருட யாரும் வர மாட்டார்கள் என்று அப்போதே இவன் அப்பாவுக்கு அபார நம்பிக்கை.

இவன் வீட்டுக்கு, நிறைய சிறு பத்திரிகைகள் வரும். எல்லாவற்றுக்கும் இவன் அப்பா சந்தா கட்டி வரவழைத்துக்கொண்டிருந்தார். கணையாழி, கொல்லிப்பாவை, அஃக், கசடதபற, ஞானரதம், ழ, பிரக்ஞை, இனி, புதிய நம்பிக்கை, மன ஓசை, புதிய கலாச்சாரம், தீபம், சதங்கை, முன்றில், சுட்டி, சோவியத் நாடு, யுனெஸ்கோ கூரியர், கலைமகள், அமுதசுரபி, ஓம் சக்தி, செம்மலர், தாமரை... என பல்வேறு வண்ணங்கள், பல்வேறு விவாதங்களைச் சுமந்துவரும் அந்த இதழ்களை இவன் புரிந்தும் புரியாமலும் படித்துக்கொண்டிருந்தான்.

அந்தக் காலம் குழந்தைகள் இலக்கியத்துக்கான பொற்காலம். அம்புலி மாமா, ரத்னபாலா, கோகுலம், பூந்தளிர், பாலமித்ரா, லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என குழந்தைகளுக்காக எத்தனை எத்தனை இதழ்கள். இவன் தனிமையின் வெற்றிடத்தை புத்தகங்கள் நிரப்பின.

இப்படித்தான் மெள்ள மெள்ள தன் தாயின் வாசனையை மறந்து, இவன் புத்தகங்களின் வாசனைக்குள் நுழைந்தான். இவன் அப்பா இரவு முழுவதும் வாசித்துக்கொண்டிருப்பார். நாளிதழ், வார இதழ், மாத இதழ், சிற்றிதழ் என அனைத்து இதழ்களிலும் வந்திருந்த அரிய செய்திகளைக் கத்தரித்து, ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் தேதி குறிப்பிட்டு ஒட்டிவைப்பார். அதற்குத் தேவையான பசையுடனோ அல்லது பழைய சோற்றுடனோ அருகில் இருந்து இவன் உதவி செய்வான். 'இரட்டைத் தலையுடன் பிறந்த குழந்தை’, 'எட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி’ போன்ற அந்தச் செய்திகள், அன்று அவர்களுக்குப் பொக்கிஷமாகத் தெரிந்தன. பின்நாட்களில் வரப்போகும் இணையத்திலும், அவற்றின் தேடுதளங்களிலும் இந்தச் செய்திகள் உடனுக்குடன் புகைப்படத்துடன் கிடைக்கப்போகும் சாஸ்வதங்களை அவர்கள் அறிந்தார்களில்லை. ஒற்றையடிப் பாதைகளை, தேசிய நெடுஞ்சாலைகள் தனக்குள் உள்வாங்கிக்கொண்டதைப் போல்தான், இவற்றை இவன் நினைத்துப் பார்க்கிறான்.

வேடிக்கை பார்ப்பவன் - 3

ஒரு கோடை விடுமுறையில், இவன் தன் நண்பர்களுடன் கில்லி, கோலிகுண்டு, பம்பரம் என்று விளையாடிக்கொண்டிருக்கையில், இவன் அப்பா அழைத்து, இவன் வாழ்வின் மிகப் பெரும் ஜன்னல் ஒன்றைத் திறந்துவைத்தார். அன்று அவர், இவன் கையில் கொடுத்தது... அந்த விடுமுறையில் அவசியம் படிக்கவேண்டிய

10 புத்தகங்களுக்கான பட்டியல். தன் நினைவில் இருந்து இன்று இவன் அதை வரிசை மாற்றி எழுதுகிறான். அந்தப் புத்தகங்கள்...

1. உ.வே.சா. எழுதிய 'என் சரித்திரம்’

2. பகத்சிங் எழுதிய 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’

3. மகாத்மா காந்தியின் 'சத்திய சோதனை’

4. லியோ டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்’

5. தஸ்தாவஸ்கியின் 'குற்றமும் தண்டணையும்’

6. 'உலகம் சுற்றிய தமிழர்’ ஏ.கே. செட்டியாரின் 'பயணக்  கட்டுரைகள்’

7. ஜான் ரீட் எழுதிய 'உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’

8. சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்த 'ஏழை படும் பாடு’

9. ராபின்சன் குருசோவின் 'தன் வரலாறு’

10. ஹெமிங்வேயின் 'கடலும் கிழவனும்’

வேடிக்கை பார்ப்பவன் - 3

பட்டியலோடு புத்தகங்களையும் அப்பா கொடுத்த பின், இவன் முதலில் ராபின்சன் குருசோவைப் பிரித்தான். அன்றிலிருந்து கப்பல் மூழ்கி ஆளில்லா தனித் தீவில் ராபின்சன் குருசோ கரை ஒதுங்கியதுபோல், இவனும் புத்தகங்களின் தீவுக்குள் மூழ்கிப்போனான். இன்றுவரை குறைந்தபட்சம் நான்கு மணி நேரமாவது படிக்காமல் இவனுக்குத் தூக்கம் வருவது இல்லை. திடீரென்று நள்ளிரவில் விளக்கின் வெளிச்சத்தால் இவன் மனைவி எழுந்து, 'என்னங்க... மூணு மணியாச்சுங்க. காலையில படிக்கலாம் தூங்குங்க’ என்று செல்லமாக அதட்டிய பின்பும், இவன் ஹாலுக்குச் சென்று தூக்கக் கலக்கத்துடன் படித்துக்கொண்டிருப்பான். அப்போதெல்லாம், இறந்துபோன இவன் அப்பாவின் நிழல் பின்தொடர்ந்துகொண்டிருப்பதாக உணர்வான்.

என்ன படித்தாலும் இவனும் சிறுவன்தானே! இவன் வயதொத்த இவனுடன் பள்ளியில் படித்த இவன் நண்பர்களின் தந்தைகளும், இவன் தந்தையைப் போலவே அரசாங்க வேலையில்தான் இருந்தார்கள். அவர்கள், வந்த சம்பளத்தைச் சேமித்தார்கள்; வட்டிக்கு விட்டார்கள்; வசதியாக வாழ்ந்தார்கள். நண்பர்களின் அழைப்பின் பேரில் ஞாயிற்றுக்கிழமைகளில், அவர்களது வீடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், இவன் தன் தந்தையைப் பற்றி நினைத்துக்கொள்வான். தன் தந்தை, தான் வாங்கும் சம்பளத்தில் எல்லாம் புத்தகங்கள் வாங்கி, அந்தக் கடனின் வட்டியை அடைக்க மேலும் கடன் வாங்கியதால்தானே நாம் இன்னும் குடிசை வீட்டிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று இவனுக்கு வருத்தமாக இருக்கும்.

ஒருநாள், தூங்கும்போது தயங்கித் தயங்கி அப்பாவிடம் தன் வருத்தத்தைத் தெரிவித்தான். 'என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நம்ம வீட்டுக்கு வர்றேனு சொல்றாங்கப்பா... ஆனா, இந்த ஓலை வீட்டுக்குக் கூட்டிட்டு வர எனக்குக் கூச்சமா இருக்குப்பா...’

அந்த இருட்டிலும் இவன் கண்களை உற்றுப் பார்த்தபடி அப்பா சொன்னார். 'மேலே நிமிர்ந்து பாரு’. இவனும் பார்த்தான். கூரையின் விரிசல் வழியே நட்சத்திரங்கள் தெரிந்தன.

இவன் அறியாமையின் கண்கள் திறக்கும்படி இவன் தகப்பன் இவன் கண்களைப் பார்த்தபடி சொன்னார். 'உன் ஃப்ரெண்ட்ஸைக் கூட்டிட்டு வர்றதா இருந்தா, நைட்ல கூட்டிட்டு வா. இப்பிடி வீட்ல படுத்துக்கிட்டே நட்சத்திரங்களை அவங்களால பார்க்க முடியுமா?’

இந்தச் சம்பவம் நடந்து 30 வருடங்கள் முடிந்திருக்கும்.

சமீபத்தில் இவன் மகனிடம் இவன் உரையாடிக்கொண்டிருந்தான்.

வேடிக்கை பார்ப்பவன் - 3

'தாத்தா நெறைய கடன் வாங்குனார்டா. அதெல்லாம் அப்பாதான் அடைச்சேன்.’

மகன் கேட்டான்.

'தாத்தா எதுக்குப்பா கடன் வாங்குனாரு?’

'தாத்தா நெறைய புக்ஸ் படிப்பார்டா. அத வாங்கத்தான் கடன் வாங்குனாரு...’

'நல்ல விஷயம்தானப்பா... நீங்களும் நெறைய புக்ஸ் படிங்க. உங்க கடனை எல்லாம் நான் அடைக்கிறேன்!’

இவன் சட்டென தன் மகனின் கண்களைப் பார்த்தான். அந்தக் கண்களில் நட்சத்திரங்கள் தெரிந்தன!

- வேடிக்கை பார்க்கலாம்...