##~##

ந்த பூமியில் எனக்கு யாரோடும் விரோதம் இல்லை’ என்று சொல்லும் 35 வயது நண்பன், பொய் சொல்கிறான் என்றுதான் என் மனதுக்குப் படுகிறது. 'அது எப்படி... யாரோடும் விரோதம் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ முடியும்?’ என்று எனக்குத் தோன்றியது. 'அப்படி எப்படிடா இருக்க முடியும்?’ என்று கேட்டால், நண்பன் சிரிக்கிறான். 'அடுத்தவங்க உன்னை விரோதியா நினைக்கிறதைப் பத்தி நீ ஏன் கவலைப்படுற? நான் யாரையும் விரோதியா நினைக்கிறதில்லை!’ என்றான் சிம்பிளாக.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நம் சிந்தனைகள் எந்தளவுக்கு சிக்குப் பிடித்ததாக இருக்கிறது என்று ஆச்சர்யமாக இருக்கிறது. கெட்டவர்களும் பொய்சொல்லிகளும் நிரம்பியது மட்டுமே இந்த உலகம் என்று நம்புகிறோம். ஆனால், அவர்களைவிட ஏகமாக நல்லவர்கள்தான் இங்கு நிரம்பியிருக்கிறார்கள் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.

எப்படி நல்லவர்கள் மட்டுமே இந்த உலகில் இல்லை என்று நம்புகிறோமோ, அதேபோல கெட்டவர்கள் மட்டுமே இந்த உலகில் இல்லை. அன்பானவர்களும் உண்மையானவர்களும் நிறைந்ததுதான் இந்த உலகம் என்ற நம்பிக்கை தரும், ஆனந்தமும் பரவசமும்தான் ஒவ்வொரு நாளையும் மூச்சுத்திணறல் இல்லாமல் நகர்த்துகின்றன. மனதளவில் இங்கு நல்லவர்களும் இருக்கிறார்கள் என்ற திருப்தியும் உணர்வும் மனதுக்கு நிம்மதி அளிக்கின்றன.

பாஸ்வேர்டு்

சின்னச் சின்ன சிராய்ப்புகளைச் சரிசெய்துகொண்டு, உறவுகளில் பிளவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வாய்ப்பு இருந்தும் அதை நடக்கவிடாமல் செய்வது, 'அவன் கெட்டவன்’ என்ற முன்தீர்மான நினைப்புதான். ஊன்றிக் கவனித்தால், இந்த உலகத்தில் பிரச்னைகளைச் சரிசெய்வதற்குத் தேவைப்படும் திறந்த, தெளிந்த மனது இல்லாததே, ஒரு பிரச்னையை மேலும் சிக்கலாக்குகிறது. ஈகோவில் இருந்து ஒரே ஒரு படி இறங்கி வருவதன் மூலம் வாழ்வில் பல படிகளை அதிவேகமாகக் கடந்துவிட முடியும். 'எல்லோரும் நல்லவர்கள்தான்... ஏதோ ஒரு சூழ்நிலை அவர்களை நமக்கு எதிராகச் செயல்பட வைத்துவிட்டது’ என்று நம்ப முயற்சிப்பதன் மூலமே ஈகோவில் இருந்து இறங்கிவருவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.

தோ சின்னப் பிரச்னையால் பேச்சுவார்த்தை இல்லாமல்போன அறைத்தோழன், ஒரு திங்கட்கிழமை 'பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று மெசேஜ் அனுப்பினான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனிடம் இருந்து வந்த தகவல்தொடர்பு அது. எனக்கும் அவனுக்கும் என்ன சண்டை? எதனால் பேசாமல் போனோம்? எப்படி இந்த இடைவெளி விழுந்தது? என்றெல்லாம் இப்போது ஞாபகம் இல்லை.

'என் பிறந்த நாள் இன்று இல்லை’ என்று பதில் அனுப்பினேன். 'தெரியும்’ என்றது அடுத்த எஸ்.எம்.எஸ். நான் அவனை அழைத்தேன். ''பேசி ரொம்ப நாள் ஆச்சு... எதுக்குப் பேசாம இருக்கோம்னு தெரியலை. எதையாவது சொல்லி ஆரம்பிக்கணுமே... அதான் ஹேப்பி பர்த்டேனு சொன்னேன்'' என்றான். எதற்காக அடித்துக் கொண்டோம் என்ற விசாரணைகள் இல்லாமல், இருவரும் இழந்த சிநேகிதத்தை அப்போது மீட்டெடுத்தோம். முன்னைவிட அவன் மீது எனக்கு இப்போது மரியாதை அதிகமாகி இருக்கிறது. எனக்குக் கழற்றி எறியத் தெரியாத ஈகோவை அவனால் வீசி எறிய முடிந்திருக்கிறது.

திட்டமிட்டுக் கெடுதல் செய்கிறவர்கள், அடுத்தவரை ஏமாற்றிப் பிழைப்பதையே வேலையாக வைத்திருப்பவர்கள், யாருக்கு என்ன நடந்தாலும் நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று சுயநலமாக சிந்திக்கிறவர்கள், வஞ்சத்தை ஒளித்துக்கொண்டு பொய்முகம் காட்டிப் புன்னகைக்கிறவர்கள், ஆதாயத்துக்காக மட்டும் நட்பையும் உறவையும் பயன்படுத்திக்கொள்கிறவர்கள், இயலாதவர்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாதவர்கள்... இன்னும் இப்படியான மனிதர்களின் எண்ணிக்கையைவிட, நல்ல மனிதர்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது!

பாஸ்வேர்டு்

சூழ்நிலைக் கைதிகளாக சில தவறுகளைச் செய்கிறவர்களையும் கெட்டவர்கள் பட்டியலில் சேர்த்துவிட்டு, இந்த உலகமே மோசமாகிவிட்டது என்ற வெறுப்போடும் அவநம்பிக்கையோடும் எல்லாவற்றையும் அணுகும் மனநிலைதான் ஆபத்து. 'தவறு செய்வது தப்பில்லை. இந்த உலகமே அப்படித்தான் இருக்கிறது’ என்று நம்மையும் சமரசம் செய்துகொள்ளத் தூண்டுகிறது.

'நல்லாப் படிக்கிற பையன் சார்... பாவம், அப்பா இல்லை. ஏதாவது உதவ முடியுமா?’ என்று யாரோ பெற்ற பிள்ளைகளுக்காக தனக்குத் தெரிந்தவர்களிடம் உதவிகேட்கும் ஆசிரியர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள்.

'யாருக்கு எப்ப ரத்தம் வேணும்னாலும் இந்த நம்பர்ல கூப்பிடுங்க... உடனே வருவோம்’ என்று கார்டு கொடுத்துவிட்டுப் போகிறார்கள் எந்த விளம்பர வெளிச்சமும் தேடாத சிலர்.

'என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா?’ என்று உரிமையுடன் திட்டிவிட்டு கடன்காரர்களுக்கு பைசல் பண்ணுகிற சில உறவுகள் இன்றும் நம்மோடுதான் இருக்கிறார்கள். நண்பனின் தந்தை மருத்துவமனையில் கிடக்கும்போது காதில், கழுத்தில் இருக்கும் நகைகளைக் கழட்டி கர்சீஃப்பில் மடித்து 'இந்தாடா’ என்று கொடுக்கிற தோழிகளும், நண்பனின் சகோதரி திருமணத்துக்காக காசு சேர்த்துக்கொடுக்கிற சகோதர நண்பர்களும் அக்கம்பக்கத்திலும் கொஞ்ச தூரத்திலும்தான் இருக்கிறார்கள்.

'அட, இதெல்லாம் பேச, எழுத நல்லா இருக்கும். சினிமாலதான் இப்படி நடக்கும். ஆனா, நிஜத்துல அப்படி யாருக்கும் யாரும் தேடி வந்து நல்லது பண்ண மாட்டாங்க’ என்று நீங்கள் நினைக்கக்கூடும். நமக்குக் கெட்டது மட்டுமே நடக்கும் என்று நம்புவதற்குப் பதிலாக, பாசிட்டிவ் சங்கதிகளை மனதில் இருத்திக்கொள்வது, பாதுகாப்பான ஒரு சூழலில் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை நமக்குள் விதைக்கும்!

டந்த 30 வாரங்களாக 'பாஸ்வேர்டு’ கட்டுரைகள் மூலம் சமூகத்தின் மீதான அவநம்பிகையில் இருந்து வெளியே வரவேண்டும் என்பதைத்தான் வெவ்வேறு வடிவங்களில் சொல்லிவந்தேன். இந்த உலகம் முற்றிலும் கறைபடிந்து கிடக்கிறது என்ற பொதுப்புத்தியில் இருந்து, நல்ல மனிதர்களும் நம்பிக்கை உள்ளங்களும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதைச் சொல்லவே விரும்பினேன். பலரின் வஞ்சனைக்கும் சுயநலத்துக்கும் நானும் பலியான பல தருணங்கள் உண்டு. ஆனால், அந்த வன்மங்களைவிட, யாரென்றே தெரியாமல் என் மீது அன்புகாட்டிய, அனுசரனையாக இருந்த மனிதர்களை ஞாபகம் வைத்துக்கொள்ளவே முயல்கிறேன்.

இந்த பாஸ்வேர்டு, நிறைய மனிதர்களை நண்பர்களாக்கியது; பாராட்டுகள், விமர்சனங்கள், எதிர்பார்ப்புகள் எனப் பல்வேறு உணர்வுகளின் கலவையில் பயணிக்கவைத்தது. 'அடுத்த வாரம் என்ன எழுதுவீங்க?’ என்று ஆர்வமாகக் கேட்டவர்களில் இருந்தும், 'என்ன எழுதுறீங்க நீங்க?’ என்று அலுத்துக்கொண்டவர்கள் வரையிலான அனைவரின் உரிமை கலந்த அன்பை என் மேல் படரச்செய்தது.

வாய்ப்பு வரும்போது, மீண்டும்  சந்திக்கிறேன். அதுவரை அனைவருக்கும் கோபிநாத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள்.