Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியம்: ஸ்யாம்

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
##~##

'தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ சிறுகதைத் தொகுப்பைப் படித்துவிட்டு, என் ஒரு காலையை அவ்வளவு அழகாகத் துவக்கினார் ரா.கண்ணன் சார். இனி வரும் என் எல்லாக் காலை களையும் அழகாக்க விரும்பிய குரல் அது. எங்கேயோ வாழைக் காடுகளில் பதுங்கிப் பதுங்கிக் கேட்ட என் குரலை விகடனில் 'மறக்கவே நினைக்கிறேன்’ என்று உடனே பதிவுசெய்ய விரும்பினார். சிறுவயதில் பார்த்துப் பார்த்து பிரமித்து வியந்த விகடன் தாத்தாவின் அந்தக் கூர்மையான கொம்பின் உச்சத்துக்கு ஆயிரமாயிரம் நன்றிகளை ஆசை ஆசையாகக் கொண்டுபோய்ச் சேர்த்த பிறகே, 'மறக்கவே நினைக்கிறேன்’ தொடரின் இறுதி அத்தியாயத்தை என் இதயத்திலிருந்து தொடங்குகிறேன்...

''ஏடே எப்பா மாரி, நீ அங்க மெட்றாஸ்ல ஏதும் கல்யாணம் கில்யாணம் முடிச்சிட்டியோ?''

''ஐயையோ அப்பா, அப்பிடிலாம் எதுவுமில்லே...''

'' உனக்குக் கல்யாணம் முடிக்கணும்னு ஆசையா இருந்துச்சுன்னா, முதல்ல என்னோட ரெண்டு கண்ணையும் நல்லா உரிச்சிப்பிட்டு, அப்புறம் நீ கல்யாணம் கட்டிக்கோ. ஆமாப்பா... என் ரெண்டு கண்ணும் ரொம்பப் பழசாப் போயிடுச்சு. ஒவ்வொருத்தன்கிட்டயும் அழுது அழுது பூத்து புழுதி அடைஞ்சு போச்சு.

இந்த ரெண்டு கண்ணையும் உரிச்சி மாத்திவிட்ரு. புதுக் கண்ணோடதான் உன் புள்ளகுட்டிகள, என் பேரக்குழந்தைகள நான் பாக்கணும். அதான்யா...'' என்று நீண்ட நெடுநாட்களாக புதுக் கண்களுக்கும் புது உலகத்துக்குமாகக் காத்திருக்கும் ஏழை விவாசாயி அப்பனின் மகனான என்னால்...

மறக்கவே நினைக்கிறேன்

''நான் பெத்த புள்ளைங்க எல்லாம் நல்லாத்தான் இருக்கீய... அதுல பிரச்னை இல்லை. ஒருத்தன் மோட்டார் சைக்கிள்லயே அலையிறான், ஒருத்தன் ஊருக்குப் போறேன்னு ஏறுன பஸ்ஸைவிட்டு இன்னும் இறங்கல. நீ என்னடான்னா... 'உன் வம்சத்துலயே முத உசுரா, ஏரோபிளேன்ல ஏறி வானத்துல பறக்கிறனா இல்லையானு பாரு’னு சத்தியம் பண்ணிட்டுத் திரியிற. எங்க போனாலும் எதுல போனாலும் பெத்த புள்ளைங்க வீடு திரும்புறவரைக்கும் அம்ம நான் சாமிகிட்ட துணை கேட்காம யார்கிட்ட கேட்க முடியும் சொல்லு..?’ என்று இன்னும் குலசேகரப்பட்டினம் திருவிழாவில் வேஷம் போட்டுக்கொண்டு பிள்ளைகளுக்காகப் பிச்சை எடுத்துத் திரியும் அம்மைக்கு வாய்த்த கடைசிப் பையனான என்னால்...

''நாங்க என்ன அவன வேணும்னா அடிக்கிறோம்? அவன் ஊர் சுத்துறான், உலகம் சுத்துறான்னு அடிக்கல, கன்னுகுட்டி வயசுலயே காதலிக்கிறான், கவிதை எழுதுறான்னு அடிக்கல. நினைச்ச நேரத்துல நினைச்சதுக்கும் பொய் பேசுறானேனுதான் அடிக்கிறோம். பொய்ங்கிறது நடுவூட்டுக்குள்ள முளைச்ச மரம் மாதிரி. முதல்ல அது நம்ம கூரையப் பிரிக்கும். அப்புறம் குடியப் பிரிக்கும். பெறவு குலத்தையே நாசமாக்கிடும். அதான் அவனை அடிக்கிறோம்'' என்று தீராப் பிரியத்துடன் என் தவறுகளுக்கு இன்னும் முதல் சாட்டைகளைச் சுழற்றிக்கொண்டே இருக்கும் இரண்டு அண்ணன்களின் தம்பியான என்னால்...

'இவ்வளவு குளிரா இருக்கிற கடைக்குள்ள நீ கூட்டிட்டு வரும்போதே எனக்குத் தெரியும் மாரி, எங்கேயோ நீ வசமா சூடுபட்டு வந்திருக்கனு! சொன்ன சொல்லு கேட்காம, அப்படியும் இப்படியுமா ஓடி கை, காலை ஒடிச்சிட்ட. இனி உன்னால எங்கேயும் ஓட முடியாது. அதனால பறந்து போறதுக்கு என்கிட்ட றெக்கைக் கேட்டுத்தான வந்திருக்க? என் கையில இப்போதைக்கு ஒண்ணுமில்ல... ஒரு பைபிள் இருக்கு. ஆனா, உன் கண்ணும் உன் மனசும் என் கழுத்துல தொங்குற இந்தச் செயின் மேலதான் இருக்குனு எனக்குத் தெரியும். இந்தா இத வெச்சுக்கோ... கர்த்தர உன்கூட அனுப்புறேன். பயப்படாத... அவர் உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டார். நீயும் அவரைத் தொந்தரவு பண்ணாத. நீ எப்படி கர்த்தரை வேடிக்கை பார்க்கிறியோ, அதே மாதிரி அவரும் உன்னை வேடிக்கை பார்க்க மட்டும் அனுமதி. அது போதும் எனக்கு. நீ கடைசியா வாங்கிக் கொடுத்த ஆப்பிள் ஜூஸுக்கு ஒரு அல்லேலுயா'' என்று தானே படித்து, தானே வேலைக்குச் சென்று, தானே சம்பாதித்து, 30 வயதில் ஆசைப்பட்டு வாங்கிய முதல் ஒற்றை தங்கச்சங்கிலியைக் கழற்றிக் கொடுத்து, மொட்டைக் கழுத்தோடு கிருபையின் நிழலில் ஒதுங்கிய அக்காவைப் பெற்ற சாத்தானான என்னால்...

''என்ன மாரி... மெட்ராஸுக்குப் போய்ச் சேர்ந்திட்டியா? போரூர் சிக்னலைக் கண்டுபிடிச்சுப் போ. அங்க விசாலினி காம்ப்ளெக்ஸுக்குப் பக்கத்துல இருக்குற ஒரு எஸ்.டீ.டி. பூத்ல தேவினு ஒரு பொண்ணு இருக்கும். அவகிட்ட போய் மாரினு சொல்லு, 500 ரூபா குடுப்பா. அப்புறம் காலேஜ்ல ஸ்காலர்ஷிப் வந்ததும், பசங்க எல்லார்கிட்டயும் பேசி ஒரு பெரிய அமவுன்ட் கரெக்ட் பண்ணிப் போட்டுவுடுறேன். அதுவரைக்கும் எப்படியாச்சும் சமாளிச்சுக்கோடா. படிப்ப விட்டுட்டுப் போயிருக்க... இனி உசுர விட்டாத்தான் திரும்பி வரணும். ஜாக்கிரதை!’ - கண்ணை மூடிக்கொண்டு நான் நடக்கும்போது, எதிரில் முட்டும் சுவர்களில் உடனே நட்பினால் சிறு துளையிட்டு தும்பிபோல என்னைப் பறக்கவைத்த ஆனந்த் என்கிற நண்பனின் தீரா நட்பைப் பெற்ற நண்பனான என்னால்...

மறக்கவே நினைக்கிறேன்

''ஐயோ சார்... சார்... யானை சார்... யானை...''

''பதறாத மாரி... சத்தம் போடாத. அப்படியே என் கையைப் பிடிச்சுக்கிட்டு புல்லுக்குள்ள படு. உடம்ப சிலுப்பாத. சின்ன சத்தம்கூட போடாத. வானத்துல தெரியிற நட்சத்திரத்தையே பாரு. மலை உச்சியில, நல்ல பனி ராத்திரியில நட்சத்திரங்களைப் பார்த்துக்கிட்டு யானை மிதிச்சு சாகுற பாக்யம் எவனுக்குடா கிடைக்கும்? நமக்குக் கிடைச்சிருக்கு. அதனால... கண்ண மூடாத அப்படியே வானத்தப் பாரு. எவ்வளவு நட்சத்திரம்... பயப்படாத மாரி...’ - நட்சத்திரம் கொழுத்த ஆகாயமாக சினிமாவைக் காட்டி கங்காரு குட்டியாட்டம் இன்னும் நெஞ்சில் என்னைத் தாய்மையோடு சுமந்துகொண்டு திரியும் இயக்குநர் ராம் அவர்களை ஆசானாகக்கொண்ட சீடனான என்னால்...

''மாரி, நான் வேணும்னா இப்போ போய் திருநெல்வேலி லா காலேஜ் சேரட்டுமா?''

''எதுக்கு?''

''இல்ல... உன் கதைகள்ல வர்ற, உன் பால்யத்துல உனக்குக் கிடைச்ச அந்த ஜோ மாதிரி, புஷ்பலதா மாதிரி, ராஜி மாதிரி, செல்வலெட்சுமி மாதிரி, பூங்குழலி மாதிரி, மணிமேகலை மாதிரி இன்னும் நீ பொறந்ததுல இருந்து உன்ன யாரெல்லாம் நேசிச்சாங்களோ அவங்க எல்லாருமா மாதிரி அப்படியே அசலா மாறி உன்னை அவ்வளவு நேசிக்கணும்னு ஆசையா இருக்கு!'' என்று சொல்லி என் வாழ்க்கையின் முதல் புள்ளியில் இருந்து தொடங்கும் இணைப்புள்ளியாக மாற எந்த நேரமும் பிரார்த்தனை செய்வதோடு, சமகாலத்தில் ஊருக்குள் குடிசை எதற்கு எரிகிறது? காதலிக்கும் பெண் குழந்தைகளைப் பெற்ற அப்பாக்கள் ஏன் காரணம் சொல்லாமல் மரித்துப்போகிறார்கள்? அரசியல் தலைவர்கள் இப்போதெல்லாம் யாரைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள்?.. என்று தன் வீட்டுப் பக்கத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அருவருப்பான எல்லா உண்மைகளையும் தெரிந்த திவ்யா வால் அத்தனை காத்திரமாகக் காதலிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்னுமோர் இளவரசனான என்னால்...

'மறக்கவே நினைக்கிறேன்’ என்று எல்லாவற்றையும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா என்ன!?

ந்த 31 வாரங்களாக நீங்கள் காட்டிய தொடர் பிரியம்தான் எத்தனை சிலிர்ப்பானது. முதல் வாரத்திலிருந்து எத்தனை ஆசீர்வாதங்கள், எத்தனை அரவணைப்புகள், எத்தனை முத்தங்கள், எத்தனை மன்னிப்புகள், எத்தனை விசாரிப்புகள், எத்தனை ஆறுதல்கள், எத்தனை கண்ணீர்கள், எத்தனை நம்பிக்கைகள், எத்தனை குடும்பங்கள், இவை எல்லாவற்றையும் தாண்டி எவ்வளவு காதல்கள் என அத்தனையையும், இந்தத் தொடர் உங்களால் எனக்குச் சாத்தியப்படுத்தியது!

அணில் குஞ்சு போல அங்கிட்டும் இங்கிட்டுமாக மனக்கிளைகளில் தாவிக்கொண்டு இருந்தவனை, ஒரு மணிப்புறாவைப் போல மனம் எழுப்பி அகலமாக விரிந்த ஆகாயத்தில் அப்படியே பறக்கவைத்தது விகடனில் கிடைத்த 'மறக்கவே நினைக்கிறேன்’ தொடர்தான் என்று சொல்வதில், உடனே வந்து கசிகிற என் கண்ணீர்த் துளி யாருக்கானது? அது யாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டியது?

தாமிரபரணியில் அடித்துக் கொல்லப்பட்ட குமாரின் அண்ணனிடம் ஒப்படைக்கலாமா?, கன்னி வைத்துப் பிடிக்கப்பட்ட பறவைகளின் சிறகுகளிடம் உயிரைக் கொடுத்த ஸ்டீஃபன் வாத்தியாரின் மனைவியிடம் கொடுக்கலாமா?, இன்னும் திருநெல்வேலி ஜங்ஷனில் நரைத்த கிழவியாக அலையும் சொட்டு அக்காவின் கண் தெரியாத மகனிடம் கொடுக்கலாமா?, பொம்மையோடு பொம்மையாக, சினிமா சுருளோடு சுருளாகத் தொலைந்துபோன அந்தக் கிழவர்களிடம் கொடுக்கலாமா?, சபலமா, மனப்பிறழ்வா, உயிர் உளைச்சலா என்னவென்று சொல்லாமலே காணாமல்போன சின்னக்குப்பை மாமாவிடம் கொடுக்கலாமா... யாரிடம் கொடுக்கலாம்?

எவ்வளவு பேர் இங்கு தைரியமாக இருக்கிறார்கள் அந்த ஒற்றைத் துளியை அதே கனத்தோடு அப்படியே வாங்கிக்கொள்ள? சந்தியா இருக்கிறாள்! ''அந்தத் தாத்தா, அந்தப் பையன், அந்த அம்மா, அந்தப் பொண்ணு, அந்த மாமா, அந்தக் கிளி... எல்லோரும் பாவம். அப்புறம் நீங்க ரொம்ப ரொம்பப் பாவம்'' என்று ஒவ்வொரு வாரமும் எனக்காக வருத்தப்பட்ட குட்டி சந்தியாவின் குட்டிக் கைகள் கண்டிப்பாக அதை வாங்கிக்கொள்ளும் என்று நம்புகிறேன்.

அப்படி ஒப்படைப்பதற்கு முன்பாக பிரியமான உங்களிடம் ஓர் உண்மையைச் சொல்லிவிட்டு விடைபெறலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில், என்னளவில் 'நான்’ என்பது கண்டிப்பாக நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது அல்லவே. ஆனாலும், நீங்கள் இத்தனை நாளாக செவிமடுத்த உங்களுக்குப் பிரியமான குரலை நீங்கள் பத்திரப்படுத்திக்கொள்ளவே, அதே குரலில் சத்தம் போட்டுச் சொல்கிறேன்...

'சிலுவையில் அறையப்பட்டவன் என்பதற்காக

என்னைக் கர்த்தராக நினைத்து
நீங்கள் காதலித்திருந்தால்,
கவிதை எழுதியிருந்தால்,
கண்ணீர் வடித்திருந்தால்,
மூன்றாம் நாள்
உயிர்த்தெழுவானென்று
காத்திருந்தால்...
எதற்கும்
நான் பொறுப்பில்லை!
ஏனெனில், அந்தக்
கர்த்தருக்குப் பக்கத்தில்
எந்தப் பிரார்த்தனையுமின்றி
அறையப்பட்ட
இரண்டு திருடர்களில் ஒருவனாகக்கூட
நானிருக்கலாம்!’

*****