Published:Updated:

“வீடியோகிராஃபருக்கு குஷன் நாற்காலி கேட்குதா?” - ‘ஸ்ருதி டிவி’ கபிலனின் அனுபவம்

“வீடியோகிராஃபருக்கு குஷன் நாற்காலி கேட்குதா?” - ‘ஸ்ருதி டிவி’ கபிலனின் அனுபவம்
“வீடியோகிராஃபருக்கு குஷன் நாற்காலி கேட்குதா?” - ‘ஸ்ருதி டிவி’ கபிலனின் அனுபவம்

உரையாடல் 1: அவர், ஐ.டி-யில் பணிபுரியும் இளைஞர்; தேர்ந்த இலக்கிய வாசகர். எழுத்தாளர் அசோகமித்திரன் எழுத்தின் தீவிர விசிறி. ஒருநாள் போன் போட்டு ``அசோகமித்திரனின் கடைசிப் பேச்சைக் கேட்கணும்போல இருக்கு. யார்கிட்ட கேட்டா கிடைக்கும்?’’ என்றார். 

உரையாடல்  2: அது, எழுத்தாளர் க.சீ.சிவகுமார் தன் வீட்டு மொட்டைமாடியிலிருந்து தவறி  கீழே விழுந்து, பின்னந்தலையில் அடிப்பட்டு இறந்த பத்தாவது நாள். அவரது நண்பர் ஒருவர் போன் செய்து, ``சிவகுமாரோட சிரிப்பைப் பார்க்கணும்போல இருக்கு. என்ன பண்றது?’’ என்றார். இருவருக்குமே நான் சொன்ன பதில், ``ஸ்ருதி டிவி கபிலன்கிட்ட கேட்டுப்பாருங்க. நிச்சயம் அவர் வீடியோ பண்ணிருப்பார்.’’

நான் மட்டுமல்ல, இலக்கிய ஆர்வமுள்ள எவருமே இதைத்தான் சொல்லியிருப்பர். அந்த நண்பர்களிடம் இருந்து கால்... `` `Shruti TV’ யூடியூப் சேனல்ல தேடி எடுத்துட்டேன். வீடியோ செம தெளிவு. ஸ்ருதி டிவி கபிலனுக்கு நன்றி.’’

யூடியூப்பில் `Shruti TV’-யின் ஆன்லைன் சேனலைத் திறந்தால் சினிமா, இலக்கியம், இசை வெளியீட்டு விழா, கர்னாடக சங்கீத நிகழ்ச்சிகள் என அடுக்கடுக்காக அத்தனை நேர்த்தியோடு விரிகின்றன வீடியோக்கள்.

``கிட்டத்தட்ட 1,600-க்கும் மேற்பட்ட வீடியோ ஃபுட்டேஜஸ் எங்ககிட்ட இருக்கும். இதுல 1,350 மேல் இலக்கியம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள்தான். எனக்குத் தெரிஞ்சு வேற யாரிடம் இவ்வளவு இலக்கிய வீடியோக்கள் இருக்காது. `இந்த வீடியோக்களை எல்லாம் யூடியூப்ல அப்லோடு பண்ணி நிறைய காசு பார்க்கிறோம்'னு சிலர் நினைக்கலாம். ஆனா, இதன்மூலம் மாசம் மூவாயிரம் ரூபாய் கிடைச்சாலே ஆச்சர்யம்’’ என்கிறார் ஸ்ருதி டிவி கபிலன். ஆனால், இவர் ஆவணமாக்கி வைத்திருக்கும் அத்தனை வீடியோக்களும் காலத்துக்கும் பொக்கிஷமானவை.

ஷங்கர், அட்ரி, கௌதம்... என தன் நண்பர்களோடு சேர்ந்து கபிலன் 2012-ம் ஆண்டு `Shruti TV’ இணையதளத்தை ஆரம்பித்தார். ``காலேஜ்ஜில் இருக்கும் பேண்ட் நிகழ்ச்சிகளை கவரேஜ் செய்து அப்லோடுவதுதான் எங்கள் திட்டம். சில காரணங்களால் அதைத் தொடர்ந்து செய்ய  முடியவில்லை. பிறகு, 2014-ம் ஆண்டு அதை யூடியூப் சேனலாக்கினோம்’’ என்ற கபிலனுக்கு, தொடர்ந்து வேலைசெய்யும் அளவுக்கு உறுதியும் அர்ப்பணிப்பும் வந்தது 2015-ம் ஆண்டு டிசம்பருக்குப் பிறகுதான்.

ஷங்கர், அட்ரி இருவரும் சினிமா நிகழ்ச்சிகளைக் கவர்செய்ய, இலக்கியம்தான் கபிலனுக்கும் கௌதமுக்குமான ஏரியா. இதற்காகவே, தனியார் நிறுவனத்தில் முழு நேரமாகப் பார்த்துக்கொண்டிருந்த தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் வேலையை ஒதுக்கிவிட்டு, தற்போது ஃப்ரிலான்ஸராகப் பணிபுரிகிறார் கபிலன்.

ஆம்... சன் டிவி ஆரம்பித்தபோது தமிழகத் தாய்மார்களின் ஏகோபித்த ஆதரவை அள்ளிய `அகல்யா’, `பந்தம்’, `உறவுகள்’, `பொம்மலாட்டம்’... போன்ற சீரியல்களின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் இவர்தான்.

``சுஜாதாவின் அதிதீவிர விசிறி நான். எடிட்டரா வேலை பார்த்துக்கிட்டிருக்கும்போது, `ஒரு எடிட்டருக்கு புத்தக வாசிப்புங்கிறது ரொம்ப அவசியம்’னு சொல்லி என்னை இலக்கிய வாசகனாக்கியது எடிட்டர் திருநாவுக்கரசுதான். அவர் ஆரம்பிச்சுவெச்சது இன்னிக்கு எஸ்.ரா., சாரு, ஜெயமோகன், மனுஷ்ய புத்திரன் எழுத்துகளோட தீவிர வாசகனா மாத்திருச்சு. இவங்களோட இலக்கிய நிகழ்வு எங்கே நடந்தாலும் நான்தான் முதல் ஆளா இருப்பேன். ஆரம்பத்துல இலக்கிய நிகழ்வுகளை வீடியோ பண்ணும்போது `அனுமதி இருக்கா... இல்லைன்னா வெளியில போயிடு’ன்னுலாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்வாங்க. இப்போ கைகொடுத்து சிநேகமா சிரிக்கிறாங்க. இந்த நிமிஷம் உலக நாடுகள்ல யாராவது ஒருத்தர் எங்க ஸ்ருதி டிவி பேஜ்ஜைப் பார்த்துக்கிட்டிருக்காங்க. இது எங்க உழைப்புக்குக் கிடைச்ச மரியாதை. இதுதான் நாங்க சம்பாதிச்சது. ``ஸ்ருதி டிவி-யில் உங்க பேச்சைக் கேட்டோம்’னு எங்கிருந்தெல்லாமோ சொல்றாங்க. உலகத்துல தமிழர்கள் வாழும் நாடுகள் முழுக்க என் இலக்கியப் பேச்சுக்களைக் கொண்டுபோய் சேர்த்துட்டீங்க கபிலன்' என்று நெகிழ்ந்தார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்’’ என்கிற கபிலன், விழாக்களின் வீடியோ எடுக்கும்போது நடக்கும் சங்கடங்களைச் சிரித்துக்கொண்டே சொல்கிறார். அத்துணையும் வலி தரும் அனுபவங்கள்.

‘`ஒருமுறை லயன்ஸ் க்ளப் மீட்டிங்கில் பேசிக்கொண்டிருந்த சாரு நிவேதிதாவை வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தேன். அதிக நேரம் நின்றதால் கால் வலித்தது. பக்கத்திலிருந்த குஷன் நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்தேன். இதைப் பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர், `வீடியோகிராஃபருக்கு குஷன் நாற்காலி கேட்குதா... வீடியோகிராஃபர்னா நிக்கிறதுதான் வேலை'ன்னு எழுப்பிவிட்டுட்டார்.

சேலம் `பாலம் புத்தகம் நிலையம்’ சார்பில் ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி எஸ்.ரா-வின் இலக்கியப் பேருரை. அன்று எனக்கு உடல் நலமில்லை. ஆனாலும் ஆர்வத்தில் சென்னையிலிருந்து கிளம்பிச் சென்றேன். நிகழ்ச்சியின் நடுவில் எனக்கு மயக்கம் அதிகமாகிவிட்டது. பக்கத்திலிருந்த பையனிடம் `இந்த கேமராவை விழாமல் மட்டும் பார்த்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டு ரிசப்ஷனில் வந்து படுத்துவிட்டேன். நிகழ்ச்சி முடிந்ததும் எஸ்.ரா. என்னை மேடைக்கு அழைத்து, என் வேலைகளைப் பற்றி பாராட்டினார். மயக்கத்தில் இருந்ததால் அவர் என்ன சொன்னார் என இன்று வரை தெரியாது. ஆனால், தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய எஸ்.ரா-வின் பேருரை ஸ்ருதி டிவி யூடியூப் சேனலில் இன்றும் படுபிரபலம்’’ என்கிற கபிலன் ``நிகழ்ச்சி முடிந்ததும் பசியோடு இல்லம் திரும்பிய அனுபவமும் உண்டு’’ என்கிறார்.

`` `How to capture the conference?'னு ஒரு மெனிஃபெஸ்டோ இருக்கு. நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி அரங்கத்துக்குப் போயிடணும். நிகழ்ச்சிகளை வீடியோ பண்றதுக்கு முன்னாடி அனுமதி வாங்கணும், பார்வையாளர்களை வீடியோ மறைக்கக் கூடாதுன்னு... பல விதிகள் இருக்கு. அந்த விதிகள்படி எடுக்கப்பட்டவைதான் ஸ்ருதி டிவி வீடியோக்கள். 90 சதவிகிதம் மொபைல் வியூலதான் இருக்கும். 10 சதவிதம்தான் டெஸ்ட்டாப் வியூல இருக்கும்’’ என்கிறார் கபிலன்.

திருத்துறைப்பூண்டியைப் பூர்வீகமாகக்கொண்ட கபிலன், போட்டோஷாப் வேலைக்காக சென்னை வந்தவர். பிறகு எடிட்டிங் கற்று தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக உயர்ந்தது எல்லாம் உழைப்பின் மீது கபிலன்கொண்ட காதல். சென்னை வந்து 17 வருடங்கள் ஆகும் கபிலனுக்கு, பிந்து என்கிற மனைவியும் அகல்யா என்கிற மூன்றாம் வகுப்பு படிக்கும் மகளும் உண்டு. தான் முதலில் பணிபுரிந்த `அகல்யா' சீரியலின் நினைவாக தன் மகளுக்கு இந்தப் பெயர் வைத்திருக்கிறார். தன் இலக்கிய ஆர்வத்தை மனைவிக்கும் செலுத்தி, எடிட்டிங் வேலைகளில் அவரை சாமர்த்தியமாகப் புகுத்திவிட்டார். இப்போது ஸ்ருதி டிவி வீடியோக்களின் ஹைலைட்கள், ட்ரெய்லர் அனைத்தையும் எடிட் செய்வது இவரது மனைவி பிந்துதான். ஸ்ருதி டிவி-க்கு கேமரா வாங்க கபிலன் கைபிசைந்துகொண்டு நின்றபோது, தன் நகைகளைக் கழற்றிக்கொடுத்து ஆதரவளித்தவர் பிந்து.

``ஆனா, இன்னும் அந்த நகைகளை என்னால் திருப்பித் தர முடியலை தலைவரே’’ எனச் சிரிக்கும் கபிலனுக்கு ஓர் ஆசை. அது... நிகழ்ச்சிகளை உடனுக்குடன் ஒளிப்பரப்பும் அளவுக்கு உயரணும். அதுக்கு முதல்ல கார் வாங்கணும்’’ என்று சொல்லிவிட்டு சிரிப்பைத் தொடர்கிறார்.

படங்கள்: பிரபு காளிதாஸ்

அடுத்த கட்டுரைக்கு