என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : கே.வி.ஆனந்த்நா.கதிர்வேலன்,படங்கள் : கே.ராஜசேகரன்

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை,  நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

''சின்ன வயசுல தாத்தா பாட்டியோடுதான் தங்கிப் படிச்சேன். மாடி யில், அத்தை - மாமா குடும்பம். வெள்ளிக் கிழமை விகடன் வந்ததும் மாடிக்குத்தான் முதல்ல போகும். விகடனை யார் முதல்ல படிக்கிறதுன்னு அத்தைப் பெண்களுக்குள் பெரும்  சண்டையே நடக்கும். சமையலறை வாசம், சோப்பு மணம், கண்மை, குங்குமத் தீற்றல்னு எல்லாப் பெண்மை அடையா ளங்களோடும்தான் விகடன் என்னிடம் வரும். எனக்கு எட்டு வயசு  இருக்கும் போதுதான் விகடன் தாத்தா பளிச்னு அறிமுகம் ஆனார். பார்த்த முதல் நொடி யிலேயே ரொம்பப் பிடிச்சுப்போச்சு. தலை யில் கொம்பு முளைச்சு இருந்தாலும், அந்த சிரிச்ச முகம் அழகு!

விகடனில் என் முதல் வாசிப்பு அனுபவம் மணியன் எழுதிய 'இதயம் பேசுகிறது’ தொடர். வாராவாரம் உலகத் தையே சுத்தி வர்ற மாதிரி இருக்கும்.  ஒரு சின்னப் பையன் புரிஞ்சு ரசிக்கிற அளவுக்குக்கூட எழுத முடியுமானு இப்போ நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கு. அலாஸ்காவில் இட்லி, காபிப் பொடி, சாம்பார், அரிசி எதுவும் கிடையாது என்ற தகவல் இருக்கும். விமானத்தில் ஊறுகாய் ஜாடி  கொண்டுபோனால்கூடச் சந்தேகப்படுவாங்கனு படிக்கும்போது திக்குனு இருக்கும். தாத்தா வாசித்துச் சொல்வதையும் நாங்கள் எழுத்துக் கூட்டிப் படிப்பதையும் அதில்தான் ஆரம்பிச்சதா நினைவு.

நானும் விகடனும்!

அப்புறம் படிச்சது, ரசிச்சது... இப்போ வரைக்கும் ரசிக்கிறது ஜோக்ஸ்தான். எப்போ படிச்சாலும் மனசுவிட்டுச் சிரிக்கலாம் விகடன் ஜோக்ஸுக்கு. 14 வயசுல சிவசங்கரி யின் 'ஒரு மனிதனின் கதை’, இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்’, வாசந்தியின் 'நிஜம்’, அனுராதா ரமணனின் 'சாதாரண மனிதர்கள்’னு விதவிதமான ஆளுமைகள் என் வாசிப்பு ரசனையை வளர்த்தனர்.  இன்னைய தேதிக்கும் அசல் இளமைத் தொடர் கதைனு சொல்லக்கூடிய சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்’ படிப்பதற்காக ஒவ்வொரு வாரமும் பழியாக் காத்துக்கிடப்பேன்.

ஆசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு பி.ஹெச்.பாண்டியன் அளித்த தண்டனைக்கு மக்கள் மன்றமும் நீதிமன்றமும் எதிர்ப்புக் குரல் எழுப்பியது வரலாறு!

சுஜாதா விகடனில் விஞ்ஞானத்தையும் புதுத் தமிழையும் உரசிப் பார்த்து அழகு சேர்த்த, விஞ்ஞான எழுத்தின் மீது பாமரரையும் காதல்கொள்ளவைத்த தருணங்களை மறக்க முடியுமா? இப்போ லூஸுப் பையனும் பொக்கிஷமும் என் முதல் சாய்ஸ். சமீபத்தில் பொக்கிஷ ஆல்பத்தில் பிரபாகரனும் வைகோவும் உணவு அருந்தும் புகைப்படம் வெளியாகி இருந்தது. தமிழீழ சகோதரர்களின் போராட்டக் கணங்கள் அத்தனையும் என் கண் முன் ஒரு கணம் நிழலாடின.

1984-ல் பி.எஸ்சி. முதல் ஆண்டு படிச் சுட்டு இருந்த நேரம். விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் அறிவிப்பு வருகிறது. என் கேமராவில் சிக்கிய பூனை, நாய், இலை, செடி, கொடி எல்லாவற்றையுமே அனுப்பினேன். ஆனால், விகடனில் இருந்து அழைப்பு எதுவும் எனக்கு வரவில்லை. அப்போது வரிசையாகத் தேர்வான சௌபா, பாலகிருஷ்ணன், அசோகன், சுபா, ரமேஷ்பிரபா, உதயகுமார் மீது இப்போதும் பொறாமையில் கொஞ்சம் பொசுங்குவேன். அன்றைக்குப் பெரிய எதிரிகளாக அவர்களை நினைத்துப்  பார்த்தேன். என் இடத்துக்கு இவர்கள் வந்துவிட்டார்கள் என்ற ஏக்கம். ஆனால், அதே மாணவர் திட்டத்தின் பயிற்சி முகாமுக்கு ஒருமுறை விருந்தினராக என்னை  அழைத்திருந்தார்கள். 'யாருக்கும் கிடைக்காத - நான் தவம் இருந்தும் கிடைக்காத வரம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ எனப் பேசும்போது கூறினேன். எனக்குப் பிறகு பேசிய நிர்வாக இயக்குநர் சீனிவாசன் 'ஆஹா... மிஸ் பண்ணிட்டோமே!’ என்றார். 20 வருடங்களுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த ஒத்தடம் அது. விகடன் மீது எனக்கு அவ்வளவு காதல் என்பதால், நான் இதை இவ்வளவு பெருமையாகச் சொல்கிறேன்!

நானும் விகடனும்!

'கல்கி’க்காக 1,000 படங்களுக்கு மேல் எடுத்திருக்கிறேன். அதில் 120 அட்டைப் படங்கள். இருந்தும் என்னை புகைப்படக்காரனாக முதலில் அங்கீகரித்தது விகடன்தான். என்னால் மறக்க முடியாதது, புதிதாக வந்த மாணவ நிருபர்கள் செய்த குறும்பு டீம் குசும்புகள். யாரையும் புண்படுத்தாத, ஆனால் சிரிக்க வைக்கிற நகைச்சுவை. எத்தனை பேரின் மூளைகள் இணைந்து செய்த வேலை அது. பி.சி. ஸ்ரீராமிடம் இருந்து பாடம் பயின்று, முதல்முறையாக 'தேன்மாவின் கொம்பத்து’ படத்தில் பணிபுரிகிறேன். முதல் படத்திலேயே ஒளிப்பதிவுக்குத் தேசிய விருது. நம்ப முடியாமல் தவித்தபோது, உடனே வந்துவிட்டது விகடன் குழு. புதிதாக என்னோடு இல்லறத்தில் இணைந்த என் மனைவி யையும் சேர்த்து எடுத்த என் முதல் பேட்டி வந்ததும் விகடனில் தான். கூடவே பி.சி. சாரிடம் கருத்துக் கேட்டு எழுதி இருந்தார் கள். 'என் பாதிப்பு இல்லாமல், ஆனந்த் எடுக்கிறார்’ என பெரிய மனதோடு ஆசீர்வதித்தார் சார். எல்லாமே அடுத்தடுத்த நாட்கள். தகுதி இருந்தால், கொண்டாடுகிற அழகு விகடனைப்போல யாருக்கு வரும்?

'முதல்வன்’, சில இந்திப் படங்கள், 'காதல் தேசம்’ என அடுத்தடுத்துச் செல்கிறேன். நாலு வரியாவது விமர் சனத்தில் கௌரவிக்கிறார்கள். முதன் முதலாக 'கனாக் கண்டேன்’ திரைப்படம் இயக்குகிறேன். படத்தைப்பற்றி வராத பயம்... விகடன் விமர்சனம் எப்படி வருமோ என்பதில் வருகிறது. நிலை கொள்ளாமல் தவிக்கிறேன். சில குறை களைச் சுட்டிக்காட்டுகிறார்கள். நல்ல சினிமாவுக்குத் தனி காமெடி எதுக்கு என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். இன்று வரை கதையோடு ஒட்டித்தான் காமெடி அமைக்கிறேன். 'அயன்’ விமர் சனத்தில் 'ஓவர் லாஜிக் பார்த்து இருக்க வேண்டுமா?’ என்கிறார்கள். லாஜிக்கே இல்லாமல் சினிமா வரும்போது, ஓவர் லாஜிக்கா எனக் கேட்கிறார்கள். எனக்குப் பெருமையாக இருக்கிறது.

விமர்சனத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு மன வருத்தம் இருக்கிறது. எனது நண்பர் ஷங்கர் எடுத்த 'பாய்ஸ்’க்கு 'ச்சீ’ என ஒற்றை வரியில் எழுதிய விமர்சனம். சில காட்சிகள் எல்லை மீறி இருக்கலாம். யதார்த்தத்தை வெளிப்படையாக்கி இருக் கலாம். ஆனாலும், அந்த வார்த்தை ஒரு கலைஞனின் மனதை ரணமாக்கி இருக் காதா? ஆனால், அதன் பிறகும் இருவரும் அதே நட்புடன் தொடர்வது, ஓர் ஆறுதல்!

அரசியலில் சில சமயம் எது சரி, தவறு என நான் குழம்பும்போது, விகடன் சொல்கிற தீர்வு சரியாக இருக்கும். ஆளும்  கட்சி எவ்வளவு பலத்தோடு இருந்தாலும், தவறு செய்தால் எதிர்த்து எழுதுகிற

நானும் விகடனும்!

நேர்மை, துணிச்சல், தைரியம்... விகடன் ஸ்பெஷல். நிச்சயமாக விகடனை எப்போதும் நம்பலாம். புதிதாக வரும்போது பாராட்டி எழுதுவார்கள். ஆனால், தவறுகள் துளிர்விடும்போது கண்டிப்பு கூடிக்கொண்டே போகும். தவறுகள் தொடர்ந்தால், விகடன் தருகிற கருத்து மக்களின் கருத்தாக மாறும்!

விகடன் எப்போதும் மக்களின் பக்கம் தான் நிற்கும். அதற்கு வேறு எந்தச் சார்பும் கிடையாது என்பது உண்மை. விகடன் ஒன்றுதான் பழமையையும் புதுமையையும் ஏந்திச் செல்கிறது. அது இன்னும் இன்னும் பெரிய விருட்சமாகும். எல்லோரும் அதனால் நலம் பெறுவார்கள் என நம்பு கிறவர்களில் நானும் ஒருவன்!''