Published:Updated:

சிறுதானிய சமையல்

தீபா பாலச்சந்தர் படங்கள்: எம். உசேன்

சமையல்

##~##

ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ... சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அரிசி சாப்பிடுவதுதான் கௌரவம் என்கிற நினைப்பில், ஏழைகள்கூட சிறுதானியங்களை மறக்க ஆரம்பித்ததுதான்... இன்றைக்கு ஏழை, பணக்காரர் என்று அனைவருக்குமே பலவித நோய்களுக்கு முக்கிய காரணியாக மாறிவிட்டிருக்கிறது. இத்தகையச் சூழலில், சிறுதானியங்களை, நவீனச் சூழலுக்கு ஏற்ப நாவுக்கு ருசியாக சமைத்துச் சாப்பிடுவதற்கு வழிகாட்ட வருகிறது... இந்த சமையல் பகுதி!

இந்த இதழில் பரிமாறுபவர்... தீபா பாலச்சந்தர்

தினைப் பாயசம்

தேவையானவை:

தினை அரிசி - 1 கப்

பனை வெல்லம் - 3/4   கப்  

பால் - 1 கப்

சிறுதானிய சமையல்

முந்திரிப் பருப்பு - 5

ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

உலர்ந்த திராட்சை - 5

நெய் - 2 தேக்கரண்டி

 செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர்விட்டு அதில் தினையைச்  சேர்த்து நன்றாக வேக வைக்கவும். அரிசி நன்றாக வெந்த பின், வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 10 நிமிடம் அதை வேகவிட்டு, பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, அதில் சேர்க்கவும். கடைசியாக, ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது,  ஏலக்காய்த் தூள் போட்டு இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

கலவை தானியக் கூழ்

தேவையானவை:

கம்பு - 1 கப்

கேழ்வரகு - 1 கப்

மோர் - 2 கப்

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

சிறுதானிய சமையல்

செய்முறை:

கம்பு, கேழ்வரகை தனித்தனியாக வறுத்து, ஒன்றாகச் சேர்த்து மாவாக அரைக்கவும். மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு கரண்டி மாவை தண்ணீர்விட்டு கரைத்து, கொதிக்க வைக்கவும், நன்கு வெந்த பின் இறக்கி, ஆற விடவும். மோர், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கலக்கி, கூழ் ஆக பரிமாறவும்.

 பெண்கள் பிரச்னைக்கு நல்ல தீர்வு!

சிறுதானிய சமையல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம் முத்துக்கொட்டாயைச் சேர்ந்த சிலுக்கம்மாள், சிறுதானியம் குறித்து பகிர்ந்து கொண்ட தகவல்கள்...

''கம்பு, சோளம் இதையெல்லாம் ஆறு மாசத்துக்கு சேமிச்சு வெச்சு சாப்பிடுவோம். கம்பு, சோளத்தை ஊறவெச்சு, கல்லு உரல்ல இடிச்சு, புடைச்சு வர்ற மாவை களிக்குப் போடுவோம். கம்பு, சோளத்த இடிக்கும்போது சலிச்சது போக, ஒண்ணு... அரையா இருக்குற தானியத்தோட புளி, மிளகாய், பூண்டு, வெங்காயத்த சேர்த்து தாளிச்சு, வெறுஞ்சாறு (குழம்பு) செஞ்சு சாப்பிடுவோம்.

சாமை அரிசியைக் கழுவுன தண்ணியில ரசம் வெச்சு, சாமை சோத்துக்கு ஊத்தி சாப்பிடுவோம். அதுவும் அவ்வளவு ருசியா இருக்கும்.

களியிலயும், குழம்புலயும் சிறுதானியம் முழுசா இருக்கும். வயிறு நிறைய சாப்பிட்டாலும், ஜீரண பிரச்னை வந்ததில்ல.

சிறுதானியங்கள் கொடுக்கற தெம்புலதான் பொழுதுக்கும் எங்களால வேலை செய்ய முடியுது. இதுவரைக்கும் இடுப்பு வலி, கை கால் வலினு  எதுவும் வந்ததில்ல. கிராமத்து பொம்பளைங்க

10 புள்ளைங்கள சாதாரணமா பெத்துக்க முடிஞ்சதுக்கு காரணமே... சிறுதானியங்கள்தான்.

மாதவிலக்கு பிரச்னையில இந்தக் காலத்து பொம்பளைங்க இன்னிக்கு எவ்வளவு அவஸ்தை படறாங்க. ஆனா, எந்தப் பிரச்னையும் இல்லாம, நாங்க அத கடந்து வந்திருக்கோம். இன்னிக்கும் ஒருவேளை கேழ்வரகு, கம்பு களினு சாப்பிடறதாலதான் 75 வயசுலயும் தெம்பா வேலை செய்ய முடியுது. சக்கரை வியாதி எட்டி பார்க்கல.

குழந்தைங்க சாப்பிடாதுனு இப்பல்லாம் சிலர் சொல்லிக்கறாங்க. ஆனா, என் பேரப் பிள்ளைங்களுக்கு கேழ்வரகுக் களி, கம்பு ரொட்டி எல்லாம் கொடுக்கிறேன். நல்லாவே சாப்பிடுதுங்க' என்று சொன்னார்.