Published:Updated:

'அப்ப நாங்க மட்டும் யாரு?' - வி.ஐ.பிகளின் ட்விட்டர் பஞ்சாயத்து

'அப்ப நாங்க மட்டும் யாரு?' - வி.ஐ.பிகளின் ட்விட்டர் பஞ்சாயத்து
'அப்ப நாங்க மட்டும் யாரு?' - வி.ஐ.பிகளின் ட்விட்டர் பஞ்சாயத்து

'அப்ப நாங்க மட்டும் யாரு?' - வி.ஐ.பிகளின் ட்விட்டர் பஞ்சாயத்து

ட்விட்டரில் அடிக்கடி செலிபிரிட்டிகளை வம்பிழுப்பது, அவர்களின் ரசிகர்களோடு மல்லுகட்டுவது என ஹிட் படங்கள் எடுத்த காலத்தைவிட இப்போது படுபயங்கர பிஸியாக இருக்கிறார் ராம்கோபால் வர்மா. 'நீங்க பழையபடி படம் எடுக்கவே போயிடுங்க சிவாஜி' என வெல்விஷர்கள் சொல்ல, 'அவர் படம் ரிலீஸாகுதுல, அதான் பப்ளிசிடி தேடுறாரு' என மறுபக்கம் திட்ட, அசரவே இல்லை ஆர்.ஜி.வி. போனஸாக பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் வேறு, 'அவர்தான் ட்விட்டரின் ராக்ஸ்டார்' என சொல்லியிருக்கிறார். 'ஆஹாங்.. அப்ப நாங்கனாப்ல யாரு?' என அவரைப் போலவே ட்விட்டர் பஞ்சாயத்து பண்ணும் சில வி.ஐ.பிகளின் லிஸ்ட்தான் இது.

மோடி:

முதலிடத்தில் இருப்பது 'மித்ரோன்' புகழ் மோடிதான். பொறுப்பான பதவி என்பதால் சர்ச்சை ட்வீட் எதுவும் போடுவதில்லை. ஆனால், மத்திய அரசின் ஒவ்வொரு அறிவிப்பு வெளியாகும்போதும் இவரது டைம்லைனை பிஸியாகவே வைத்துக்கொள்கிறார்கள் நெட்டிசன்கள். அவர்களுக்கு கன்டென்ட் தருவது போலவே தமிழில் ட்வீட்டுவது, தெலுங்கில் மாட்லாடுவது என தெறிக்கவிடுகிறது மோடியின் பதினொரு பேர் கொண்ட குழு. 

சேவாக்:

களத்தில் கம்பு சுற்றிய சேவாக் எல்லாம் காணாமல் போய் இரண்டு உலகக் கோப்பைகள் ஆகின்றன. இப்போது இவர் சிலம்பு சுற்றுவது எல்லாமே ட்விட்டரில்தான். குல்மேஹர் கவுர் என்ற பெண்ணை நக்கலடித்து வாங்கிக் கட்டியது, கணவர்களையும் ஏர் கண்டிஷனர்களையும் ஒப்பிட்டு கிச்சுகிச்சு மூட்டுவது என விரல் வித்தை காட்டுகிறார். லேட்டஸ்ட்டாக கிங்ஸ் லெவன் அணிக்கு ஆதரவாய் சில மீடியாக்களை கலாய்த்திருக்கிறார். 

சுப்ரமணியன் சுவாமி:

ட்விட்டர் தாதா. இவர் மொத்தமாய் பேசிய பொதுக்கூட்ட பேச்சை விட ட்வீட்டுகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். போதாக்குறைக்கு எதிர்த்து வாதிடுபவர்களை பொறுக்கி, பயந்தாங்கொள்ளி என்றெல்லாம் பெயர் வைத்து சக்கரைத்தண்ணி ஊற்றுகிறார். 'என்னா பாஸ், இன்னிக்கு யாரையுமே திட்டாம இருக்கீங்க?' என வம்பிழுத்து வம்பிழுத்தே அவரை டயர்டாக்குகிறார்கள். அவரோ, 'நான் உலகத்துக்கு கருத்து சொல்லியே ஆகணும்' என கால் வராத போனில் ஹலோ சொல்லிக்கொண்டிருக்கிறார்.

கமல்:

'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்' என்ற ரஜினி பன்ச் ட்விட்டரில் கமலுக்குத்தான் பொருந்தும். ஆறேழு மாதங்களுக்கு முன்புவரை சத்தம் காட்டாமல் இருந்தவர் டிசம்பருக்கு பின் தசாவதாரம் எடுத்தார். சின்னம்மாவை சதாய்ப்பது, எடப்பாடியை எகத்தாளம் செய்வது, சுப்ரமணியன் சுவாமியின் பவுன்சர்களை சிக்ஸருக்கு விரட்டுவது என ஆல்டைம் பிஸி. என்ன, டிவீட்டுக்கு எல்லாம் சப்டைட்டில் போடவேண்டியது இருப்பதுதான் பிரச்னை.

ஜி.வி பிரகாஷ்:

இசையமைப்பாளராக இருந்தவரை ஜி.வி சமத்துப்பிள்ளைதான். ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவுடன் கூடிதலாக 'ட்விட்டர் போராளி' பட்டத்தையும் தத்தெடுத்துக்கொண்டார். தளபதி ரசிகர்களுக்கு ஆதரவாக ட்வீட் போடுவது, எதிர்த்து பேசும் தல ரசிகர்களை செந்தமிழில் திட்டுவது என உக்கிரமாய் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். இப்போது கொஞ்சம் சாந்தசொரூபியாகி இருக்கிறார். அனேகமாய் அடுத்த விஜய் படம் வரும்போது மீண்டும் பஞ்சாயத்து தொடங்கும்.

அடுத்த கட்டுரைக்கு