Published:Updated:

ஆறாம் திணை

மருத்துவர் கு.சிவராமன், படம்: பொன்.காசிராஜன்

ஆறாம் திணை

மருத்துவர் கு.சிவராமன், படம்: பொன்.காசிராஜன்

Published:Updated:
##~##

 நாகரிகம், நம் பாரம்பரியப் புரிதலையும் வாழ்வியல் கூறுகளையும் சிதைக்கும் வேகம் மிகப் பயங்கரம். அதிஅவசரங்களில் மூழ்கிய நம் காலைப் பொழுதுகளுக்கு நாம் காவு கொடுத்தது, காலை உணவை!

பொறியியல் பொறியில் அதிகாலையிலேயே சிக்கிக்கொள்ளும் இளைஞன், கார்ப்பரேட் கண்ணி இறுக்கும் நவயுவதி, 'ஓட்ஸ் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும்’ என அமெரிக்காவிலிருந்து மகனின் வழிகாட்டலில் வாழும் உள்ளூர் அப்பா, 'இவங்களை எல்லாம் கிளப்பி அனுப்பவே நேரம் சரியா இருக்கு’ எனும் 'ஐயோ பாவம்’ அம்மாக்கள்... இவர்கள் எல்லோருமே காலை உணவைத் தொலைத்து பல யுகங்கள் ஆயிற்று!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரவில் எட்டு மணி நேரம் அமில ஊறலில் இருக்கும் இரைப்பை, காலை உணவைச் சாப்பிடாவிட்டால் அமிலத்தால் சிதையத் தொடங்கும் என்பது ஏன் பலருக்கும் புரிவது இல்லை. காலை உணவின் மூலம் இரைப்பையை நிரப்பாமல் இருந்தால், இரவில் உடலில் இயல்பாக ஏறிய பித்தம் மெதுவாகத் தலைக்கு ஏறும். அது வயிற்றுப் புண், வயிறு உப்புசம், தீவிர வயிற்று வலி, வாந்தி, பசியின்மை, அதிக ரத்தக்கொதிப்பு, மன அழுத்தம் வரை பல நோய்களைக்

ஆறாம் திணை

கொண்டுவந்து சேர்க்கும். காலை 9 மணிக்குள் சாப்பிடாமல், 11 மணிக்கு எழும் அகோரப் பசியில் பர்கர், பீட்சா அல்லது வென்னிலா மில்க்ஷேக் என சாப்பிடுவதில் எக்குத்தப்பாக எகிறும் டிரான்ஸ்ஃபேட் கொழுப்பும் கலோரியும் அடிவயிற்றில் படிந்து பெருகும்.

காலையில்தான் மிகச் சிறப்பான தேர்ந்தெடுத்த உணவு மிக அவசியம். தினையரிசிப் பொங்கல், வளரும் குழந்தை உள்ள வீட்டுக்கும்; வரகரிசி உப்புமா, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஊக்கமாக வேலைசெய்ய விரும்புவோருக்குமான மினி டிஃபன். 'அதெல்லாம் எப்படிச் செய்வது?’ எனப் பதற வேண்டாம். பொங்கல், உப்புமா செய்யத் தெரிந்தவர்களுக்கு இதுவும் சாத்தியமே!

அரிசிக்குப் பதில் தினை. ரவைக்குப் பதில் வரகரிசி.

'விடிஞ்சும் விடியாத அதிகாலைல அவசர அவசரமா ஓடுற நாங்க என்ன பண்றது?’ என கேட்பவர்களுக்கு, இருக்கவே இருக்கிறது மாப்பிள்ளைச் சம்பா அவல் பிரட்டல். அடுப்படிக்குப் போகாமலே இதனைச் செய்ய முடியும். அதிலும் சர்க்கரை எட்டிப்பார்க்காத பாக்கியவான்கள் ஆர்கானிக் வெல்லமிட்டு இதைச் சாப்பிட்டால் அமிர்தம்!

காலையில் புத்திசாலித்தனமாக மூளை வேலைசெய்யவும், நோய் எதிர்ப்பாற்றல் நிறைந்திருக்கவும் பப்பாளிப் பழத் துண்டுகள், மாதுளைமுத்துகள், மலை வாழைப்பழம், நிலக்கடலை, காய்ந்த திராட்சை... என ஏதேனும் இருக்க வேண்டும். கேழ்வரகு இட்லி, பலதானியத் தோசை என எதுவுமே காலையில் நல்லதுதான்.

ஆறாம் திணை

ர்க்கரை வியாதியினர் கஞ்சியைத் தவிர்க்கவும். கஞ்சி ஹைகிளைசிமிக் தன்மை உடையது. சிறுதானியமாக இருந்தாலும் அடையாகவோ, தோசையாகவோ, உப்புமாவாகவோ பிற காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவதுதான் சர்க்கரை ரத்தத்தில் சேர்வதை மெதுவாக்கும். பல கீரைகளில், 'ஆல்ஃபா அமைலோஸ் இன்ஹிபிட்டர்’ எனும் தாவரச் சத்து இருக்கிறது. இது, ரத்தத்தில் வேகமாக சர்க்கரை கலப்பதைத் தடுக்கும் தன்மைகொண்டது. கீரையுடன் சேர்த்து எந்தத் தானிய உணவைச் சாப்பிட்டாலும் இந்தப் பயனைப் பெறலாம். உயிர் போகும் காரணமாகவே இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது!

சத்துமாவுக் கஞ்சி, தமிழர்களை பல தலைமுறைகளுக்கு ஊக்கப்படுத்திய ஊட்ட உணவு. கர்ப்பிணிப் பெண், பாலூட்டும் பெண், கைக் குழந்தை, வளரும் குழந்தை என அனைவருக்குமான காலை உணவில் இந்தக் கஞ்சிக்குத்தான் முதல் இடம். சிவப்புச் சம்பா அரிசி (கிடைத்தால் மாப்பிள்ளை சம்பா), முளைகட்டி உலரவைத்த பாசிப்பயறு, சிவப்புக் கொண்டைக்கடலை, நன்கு வறுத்த தொலிஉளுந்து, நிலக்கடலை, பொட்டுக்கடலை, பார்லி அரிசி, சம்பா கோதுமை, தினையரிசி, கேழ்வரகு, வரகரிசி, குதிரைவாலி அரிசி... இவையெல்லாம் வகைக்கு 250 கிராம், முந்திரிப் பருப்பு 100 கிராம், தோல் சீவிய சுக்கு 50 கிராம் எடுத்து, எல்லாவற்றையும் வறுத்து மாவாகப் பொடி செய்துகொண்டால், அதுதான் சத்துமாவு. இதனைத் தேவைப்படும் அளவுக்கு 3-4 ஸ்பூன் (30 கிராம்) அளவில் எடுத்து கஞ்சியாகக் காய்ச்சி, விருப்பப்பட்டால் பாலும் வெல்லமும் கலந்து சாப்பிடலாம். இதே மாவை காரம் சேர்த்து கொழுக்கட்டையாகவும், வெல்லம் சேர்த்து மாலாடு உருண்டையாகவும் பிடிக்கலாம். மிக அத்தியாவசியமான புரதம், கால்சியம் மற்றும் நுண் கனிமங்களுடன் உங்கள் ஆயுளின் அத்தனை காலைகளையும் உற்சாகமாக்கும் வல்லமைகொண்டது, இந்தச் சத்துமாவு!

- பரிமாறுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism