Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 4

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 4

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
##~##

 பசி என்னும் பெருந்தீ

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கார்ந்தாலும் பசித்தது!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வெயிலோடு போய்’ சிறுகதைத் தொகுப்பில்...

- ச.தமிழ்ச்செல்வன்

வன் ஊரில் எல்லோரும் பட்டுத்தறி நெய்பவர்கள். இவன் அப்பாவும், இன்னொரு போலீஸ்காரரும் மட்டுமே அரசாங்க வேலைக்குச் செல்பவர்கள். இவனது தந்தை தமிழாசிரியராக இருந்தபோதிலும், மூன்று மைல் தள்ளி இருந்த அய்யன்பேட்டை என்ற குறுநகரத்தில் அப்போதுதான் ஆரம்பித்திருந்த ஆங்கிலப் பள்ளியில் இவனைக் கொண்டுபோய் சேர்த்தார். இந்த முரணை, இவனால் இன்று வரை விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை, திருமணத்துக்கு முன்பு சென்னையில் நர்சரிப் பள்ளி ஒன்றில் டீச்சராக இருந்த இவன் அம்மாவின் வற்புறுத்தலில் சேர்த்திருப்பாரோ?

எழுபதுகளின் இறுதியில் காஞ்சிபுரத்தைச் சுற்றியிருந்த கிராமங்களின் பெற்றோர்களுக்கு, ஆங்கிலப் பள்ளி என்பது பெருங்கனவு. இவன் தந்தையும் தாயும் இவனுக்காக அந்தக் கனவைக் கண்டார்கள்.

அதை, 'பள்ளி’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கிவிட முடியாது. தாகூரின் 'சாந்தி நிகேதன்’போல அது ஒரு திறந்தவெளி சொர்க்கம். அந்தப் பள்ளியின் சுவற்றில், விவேகானந்தரும் கார்ல் மார்க்ஸும் அருகருகே புகைப்படமாகிப் புன்னகைப்பார்கள்.

அந்தப் பள்ளியை, நடராஜ் மாஸ்டர் நடத்தி வந்தார். இசை, ஓவியம், கலை, கலாசாரம், கவிதை, இலக்கியம் என, வகுப்பறையில் ஒவ்வொரு ஜன்னலாக அவர் திறந்து வைத்துக்கொண்டிருக்க, அந்தச் சின்னஞ்சிறிய ஜன்னல்களில் இவன் பென்னாம்பெரிய வானத்தைப் பார்த்தான். எல்லாவற்றுக்கும் மேல், இவனுக்கு மிகவும் பிடித்தமான காதோரத்துக் கருங்குழலில் ஒற்றை மஞ்சள் ரோஜா வைத்திருக்கும் திலகவதி மிஸ்தான் இவன் வகுப்பாசிரியை.

வேடிக்கை பார்ப்பவன் - 4

மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே இவன் கவிதை என்ற பெயரில் கிறுக்கத் தொடங்கியிருந்தான். அருவி, ஆட்காட்டிக் குருவி, ஆரஞ்சு மேகம் என இவன் எழுதிய கிறுக்கல்களை வகுப்பறையில் வாசித்துக்காட்டி, திலகவதி மிஸ் இவனை, இவன் தகுதிக்கு மீறி உற்சாகப்படுத்துவார்கள்.

நிலவிலும் கறை உண்டுதானே! அப்படி அந்தப் பள்ளியில் இவனுக்குப் பிடிக்காத விஷயம் ஒன்று இருந்தது. இவன் தினமும் மாட்டுவண்டியில்தான் பள்ளிக்குச் செல்வான். அது பள்ளிக்குச் சொந்தமான மாட்டுவண்டி. காலை எட்டு மணிக்கே, இவன் கிராமத்துக்கு வந்து இவனை ஏற்றிக்கொண்டு, சுற்றியுள்ள நத்தப்பேட்டை, வையாவூர் முத்தியால்பேட்டை... என வெவ்வேறு கிராமங்களில் படிக்கும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு, இவன் பள்ளி இருக்கும் அய்யம்பேட்டையை அந்த வண்டி அடையும்போது மணி 10 ஆகிவிடும்.

வழக்கமாக, அந்த வண்டியை வயசான ஒரு தாத்தா ஓட்டிவருவார். அன்று, அவருக்குப் பதிலாக 25 வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞர் ஓட்டிக்கொண்டு வந்தார். இவன் வண்டியில் ஏறியதுமே, 'தாத்தா வரலியா... நீங்க வந்திருக்கீங்க?’ என்று கேட்டான். 'அவரு வேலையை விட்டு நின்னுட்டாரு. இனிமே இந்த காருக்கு நான்தான் டிரைவர். கார்ல டயரு கிடையாது. வாலுதான் டயரு’ என்று மாட்டின் வாலைத் தூக்கிக் காட்டினார். மாடும் ஆமோதித்து இளம்பச்சை நிறத்தில் சாணி போட்டது. முதல் பார்வையிலேயே அவரை இவனுக்குப் பிடித்துப்போனது.

ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்பதால், அவருக்குத் தெரிந்த பட்லர் இங்கிலீஷில்தான் மாணவர்களுடன் உரையாடுவார்.

'வாட் இஸ் யுவர் நேம்?’

'என்.முத்துக்குமரன்’

'மை நேம் சேகர். கூப்புடு சேகர் அண்ணா.’

'ஓ.கே. சேகரண்ணா.’

முதல் நாள் அவருடன் மாட்டுவண்டியில் பயணித்தது இனிமையாக இருந்தது, பள்ளிக்கூடத்துக்கு வந்துசேரும் முன்பு வரை. அந்தப் பயணம் இப்போதும் இவனுக்கு ஞாபகம் இருக்கிறது.

வழி நெடுகக் கிராமங்கள். காலைக் கதிரொளியில், பச்சை வயல்வெளிகளில் நாற்று நடும் பெண்களின் முகங்கள். தூரத்துப் பனைமரத்தில் தச்சுவேலை செய்யும் மரங்கொத்திப் பறவைகள். கிளிகள் பறக்கும் பெருமாள் கோயில் கோபுரத்தின் பின்னணியில், புழுதிபடர்ந்த வீதிகளில், வண்ண வண்ண பட்டு நூல்களை மூங்கில் கழைகளில் நீட்டிக்கட்டி சாயம்போடும் சாதாரண, எளிய கிராமத்து மனிதர்கள். வழிதோறும் இவன் ரசித்துக்கொண்டே வந்தான்.

ஒவ்வொரு கிராமத்திலும், இவன் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஏற்றியபடி வண்டி விரைந்தது. சேகரண்ணன், ஒவ்வொருவரிடமும் தன் பழைய பட்லர் இங்கிலீஷை புதிய தொனியில் கேட்டார்.

'வாட் இஸ் யுவர் நேம்?’

'கே.என்.ராமசாமி.’

'மை நேம் சேகர். டெல் சேகரண்ணா.’

'ஓ.கே. சேகரண்ணா.’

இவன் பள்ளிக்குச் சற்று முன்பு, பெரிய ஏரி ஒன்று இருந்தது. அதன் கரையெங்கும் கருவேல மரங்கள். இதன் கிளைகளெங்கும் கரிச்சான் குருவிக் கூடுகள். அந்த இடத்தில் வண்டி நின்றது.

சேகரண்ணா இவர்களைப் பார்த்துக் கேட்டார். 'சேகரண்ணாவுக்குப் பசிக்கும்ல. டேஸ்ட்டு பாக்க உங்க டிபன் பாக்ஸைக் குடுங்க.’

இவர்கள் தயங்கியபடியே அதிர்ச்சியுடன் அவரவர் டிபன் பாக்ஸ்களை எடுத்து நீட்டினார்கள்.

'இட்லி குடுத்திருக்காங்களா? ரெண்டு எடுத்துக்கிறேன்டா. பூரி கொண்டுவந்திருக்கியா? அண்ணனுக்கு ரொம்பப் புடிக்கும்டா! தயிர் சாதமா? நாளைலேர்ந்து உங்க அம்மாகிட்ட சாம்பார் சாதம் குடுக்கச் சொல்லு. அண்டர்ஸ்டாண்டு?’ என்றபடி சேகரண்ணன் இவர்களது டிபன்பாக்ஸில் இருந்து தனக்கான உணவை எடுத்துச் சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்து கருவேலங்காட்டில் சிறுநீர் கழித்துவிட்டு, பீடி நாற்றத்துடன் கரிய மீசையை முறுக்கிவிட்டபடி, 'இந்த விஷயத்தை யார்கிட்டயாவது சொன்னீங்க... அவ்வளவுதான். ஐ கில் யூ. அண்டர்ஸ்டாண்டு?’

அவர் மீசையை முறுக்கிய விதத்தைப் பார்த்ததுமே இவர்களுக்கு 'அண்டர்ஸ்டாண்டு’ ஆனது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இது தொடர்ந்தது. இவர்கள் டிபன் பாக்ஸில் இருந்த ஐந்து இட்லிகளில் இரண்டு இட்லிகள் யாரிடமும் சொல்லாமல் அவருக்குப் படையல் ஆனது.

வேடிக்கை பார்ப்பவன் - 4

ருநாள் காலையில் இவன் ஆயா, உப்புமா கிளறிக்கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டு மாமி வந்து, 'ஏரில மீன் ஏலம் எடுத்திருக்கோம். இன்னிக்கு ஒரு நாளு புள்ள மீன் குழம்பு எடுத்துட்டுப் போகட்டும்மா!’ என்று டிபன்பாக்ஸை இவன் கையில் கொடுக்க, இவன் அதை எச்சில் ஊறப் புத்தகப் பையில் வைத்துக்கொண்டான். இவனுடைய ஆயா சைவம் என்பதால், இவன் வீட்டில் அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சமைக்கப்படும் அசைவமே, ஒரு முட்டைதான். அதுவும் ஆயா வெளியூர் போயிருக்கும் அபூர்வத் தருணங்களில் மட்டுமே அந்த வரம் இவனுக்கு கிடைக்கும். மீன் என்று காகிதத்தில் எழுதிக்கொடுத்தாலே சாப்பிட்டுவிடும் ஆசைகொண்ட இவன், பள்ளி வண்டிக்காகக் காத்திருந்த நேரத்தில் ஆவலுடன் டிபன்பாக்ஸை பிரித்துப் பார்த்தான். மீன் குழம்புச் சோற்றுடன், வறுத்த மீன் துண்டுகள் நான்கு இருந்தன.

சேகரண்ணன் இரண்டு துண்டுகளை எடுத்துச் சாப்பிட்டாலும், மீதி இரண்டு துண்டுகள் இவனுக்கு மிஞ்சும் என்ற அபார நம்பிக்கையோடு வண்டியில் ஏறினான். அதே ஏரிக்கரை. அதே கருவேலங்காடு. அதே கரிச்சான் குருவிக் கூடுகள். சேகரண்ணன், வழக்கம்போலவே முதலில் இவன் டிபன்பாக்ஸைக் கேட்டார்.

'டேஸ்ட்டு குட்ரா குமாரு!’

இவன், கைகள் நடுங்கியபடியே தன் டிபன் பாக்ஸை நீட்டினான்.

'அடடே.. மீன் குழம்பாடா.. அண்ணனுக்கு ரொம்ப ரொம்பப் புடிக்கும்டா.’

இவன் கண்கள் பார்க்கப் பார்க்க, அந்த டிபன் பாக்ஸ் காலியாகும் வரை அவர் கபளீகரம் பண்ணிக்கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்து, தண்ணீர் குடித்து, மற்ற பிள்ளைகளைப் பார்த்து 'இன்னிக்கு இந்த டேஸ்ட்டே போதும். அவனுக்கும் பசிக்கும்ல. லஞ்ச் டயம்ல எல்லாரும் ஷேரு பண்ணிச் சாப்பிடுங்க’ என்றபடி மாட்டின் வாலை முறுக்கினார். வண்டி வேகமாக ஓடத் தொடங்கியது.

முதல் பீரியடில் இருந்தே, இவனை அந்த மீனின் முள் துரத்தத் தொடங்கியது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, இன்டர்வெல் கேப்பில், ஹெட்மாஸ்டர் அறை முன் நின்றான். நடராஜ் மாஸ்டர் இவனைப் பார்த்துக் கேட்டார்.

'என்னப்பா.. என்ன விஷயம்?’

இவன் அழத் தொடங்கினான்.

'சார்... இத நான் சொன்னேன்னு சொல்லக் கூடாது.’

'மொதல்ல விஷயத்தைச் சொல்லுப்பா.’

முதலில் இருந்து இவன் விஷயத்தைச் சொல்லத் தொடங்கினான்.

அடுத்த நாள் காலையில் அந்த மாட்டு வண்டியில் சேகரண்ணன் இல்லை. வேறு ஏதோ ஓர் அண்ணன். அன்று பார்த்து இவன் டிபன்பாக்ஸில் பழைய சோறும் நார்த்தங்காய் ஊறுகாயும்.

வேடிக்கை பார்ப்பவன் - 4

த்து வருடங்கள் கழித்து இவன் வாலிபன் ஆனான். இவன் முகத்திலும் மீசையும் முகப்பருக்களும் முளைத்தன. கல்லூரி படிக்கையில் வகுப்பை கட் அடித்துவிட்டு இவனுக்குப் பிடித்த நடிகரின் படத்துக்கு நண்பர்களுடன் முதல் நாள் முதல் ஷோ, கியூ வரிசையில் நின்றுகொண்டிருந்தான். இவன் வரிசையில் ஏழெட்டு பேர்களுக்கு முன் நின்றுகொண்டிருப்பவர் சேகரண்ணன்தானா? ஆம். அதே மீசை, அதே அம்மை தழும்பு முகம். டைட்டில் போட்டு நண்பர்களின் விசில் சத்தங்களுடன் படத்தின் காட்சிகள் தொடர்ந்தபோதும் சேகரண்ணனே இவன் ஞாபகத்துக்கு வந்துகொண்டிருந்தார்.

இடைவேளையில் சிறுநீர் கழித்துவிட்டு நிமிர்ந்து பார்க்கையில் தூரத்தில் பீடி குடித்தபடி சேகரண்ணன். இவன் அவர் அருகில் சென்று, 'வணக்கம்ணே.. எப்பிடியிருக்கீங்க?’ என்றான்.

அவருக்கு, இவனை அடையாளம் தெரியவில்லை.

'நல்லாயிருக்கேன். தம்பி யாருன்னு தெரியலயே...’

'நான்தானே முத்துக்குமரன். கன்னிகாபுரம். உங்க வண்டியிலதானே தினமும் ஸ்கூலுக்கு போவோம்...’

அவர் இவன் முகத்தை ஒருமுறை கூர்ந்து பார்த்துவிட்டு, கண்களைத் தாழ்த்திக் கொண்டார். மௌனம் ஒரு காற்றைப் போல, இவர்களிடையே வீசிக்கொண்டிருந்தது.

இவன் வார்த்தைகளைக் கோத்துக் கோத்து பேசத் தொடங்கினான்.

'என்னை மன்னிச்சிருங்கண்ணே... என்னாலதான் உங்க வேலை போச்சு. ஏதோ ஒரு ஆத்திரத்துல ஹெட் மாஸ்டர்கிட்ட சொல்லிட்டேன்..

'அய்யோ... நீதான் தம்பி என்னை மன்னிக்கணும். படிக்கிற புள்ளைங்க சோத்த புடுங்கித் திங்கறது ரொம்பப் பெரிய பாவம். ஏதோ என் பசிக்குச் செஞ்சிட்டேன். சம்பளம் கம்மி. என்னை நம்பி வீட்லயும் ஆறு உசிரு இருந்திச்சு. உங்களுக்குத் தெரியாது தம்பி, அந்த ஒருவேளைதான் எனக்கு சாப்பாடு. அதுக்கு அப்புறம் நைட்ல தண்ணி குடிச்சிட்டுப் படுத்துடுவேன். வேலை போனப்புறம் கொளுத்து வேலை, ரோடு போடறதுனு சமாளிச்சிட்டேன். இப்ப ஒரு ஷூ கம்பெனில வாட்ச்மேன் வேலை. பசி இல்லை; கஷ்டம் இல்லை. ஆனா, உங்களுக்கு செஞ்ச பாவம் என்னைத் துரத்திட்டே இருக்கு. இப்ப ரோட்ல எங்கேயாவது, ஸ்கூல் படிக்கிற பசங்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு குச்சி ஐஸோ, சாக்லேட்டோ வாங்கிக் குடுத்துத்தான் என் பாவத்துக்குப் பிராயச்சித்தம் பண்ணிட்டு இருக்கேன்...’

'மச்சான், படம் போட்டுட்டான்டா...’ - நண்பர்கள் அழைக்க, இவன் அவரிடமிருந்து விடைபெற்றான்.

திரையரங்கின் இருட்டில் இவன் அமர்ந்திருந்த நாற்காலியைத் தேடிக் கண்டுபிடித்த சேகரண்ணன், இவன் முன்பு வந்து நின்றார். அவரது கைகளில் ஒரு கோன் ஐஸும் பாப்கார்ன் பாக்கெட்டும்.

'அய்யோ இதெல்லாம் எதுக்குண்ணே?’

'என் திருப்திக்காக வாங்கிக்குங்க தம்பி.’

இவன் நண்பர்களிடம் பாப்கார்ன் பாக்கெட்டை கொடுத்துவிட்டு, கோன் ஐஸை டேஸ்ட்டு பார்த்தான். அதில் மீன் குழம்பு வாசம் அடித்தது!

- வேடிக்கை பார்க்கலாம்...