Published:Updated:

CALVIN AND HOBBES

CALVIN AND HOBBES

##~##

உலக அளவில், மெகா ஹிட்டான தினசரி கார்ட்டூன் படக்கதைகளில் ஒன்று, 'கால்வின் அண்ட் ஹாப்ஸ்’. இதுவரை உலகம் முழுவதும் 50 நாடுகளில்... 2,400 நாளிதழ்களில் இந்தப் படக்கதை வெளியாகி இருக்கிறது.

இதில் அப்படி என்னப்பா ஸ்பெஷல்?

புத்திசாலித்தனம், கற்பனைத்திறன், குறும்புத்தனம் நிறைந்த ஆறு வயதுச் சிறுவன், கால்வின். அவனிடம் இருக்கும் ஒரு பொம்மைப் புலி, ஹாப்ஸ். இவர்கள் செய்யும் குறும்புத்தனம், குபீர் சிரிப்பை வரவைக்கும்.

அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பில் வாட்டர்சன், 'யுனைடெட் பிரஸ் சிண்டிகேட்’ என்ற நிறுவனத்துக்கு பல கேலிச் சித்திரங்களை வரைந்து கொடுத்தார். அதில், 'லிட்டில் பிரதர்’ என்ற கதாபாத்திரத்தில் ஒரு பொடியனும் புலி பொம்மையும் இடம்பெற்றனர். 'அவர்களைத் தனியாக வரையுங்கள்’ என்று கேட்டதால் உருவானவர்கள்தான், கால்வின் அண்ட் ஹாப்ஸ்.

CALVIN AND HOBBES

 1985 நவம்பர் 18ல் முதல்முறையாக நாளிதழில் கால்வின் அண்ட் ஹாப்ஸ் இடம்பெற்றார்கள்.

ஒரே வருடத்தில் 250 நாளிதழ்களில் வலம் வர ஆரம்பித்தார்கள்.

1995 டிசம்பர் 31ம் தேதியுடன் கால்வின் அண்ட் ஹாப்ஸ் கதாபாத்திரத்துக்கு குட் பை சொல்லிவிட்டார் வாட்டர்சன். ஆனால், இன்றும் பல நாடுகளில்... பல நாளிதழ்களில் மறுபதிப்புகளாக இவர்கள் உலா வருகிறார்கள்.

CALVIN AND HOBBES

 கால்வினின் பள்ளித் தோழி, சூகி. இவளிடம் 'பன்’ என்கிற ஒரு முயல் பொம்மை இருக்கும். சூகியை மட்டம் தட்டி வெறுப்பேற்ற, பெரிய பெரிய திட்டங்களை கால்வினும் ஹாப்ஸ¨ம் போடுவார்கள். இதற்காக ஒரு சங்கத்தையே உருவாக்கி இருக்கிறார்கள்.

CALVIN AND HOBBES

'கால்வின் பந்து’ என்ற கால்பந்து, அட்டைப் பெட்டி, பனிச்சிற்பம், சறுக்கு வண்டி, பார வண்டி போன்றவையும் கால்வின் கதைகளில் அடிக்கடி வரும். இவை இடம்பெறும் கதைகள் எல்லாவற்றிலும் எக்ஸ்ட்ரா சிரிப்பு நிச்சயம்!  

கால்வின் தன்னை யானை, டைனோசர், விண்வெளி வீரன் எனப் பல உருவங்களில் கற்பனை செய்வான். அப்போது, அங்கே அவனது வில்லியாக வருபவர் வகுப்பு ஆசிரியை, 'மிஸ் வார்ம்வுட்’.

அமெரிக்காவில் வழங்கப்படும் சிறந்த கேலிச்சித்திரக் கலைஞருக்கான ரூபன் விருது 1986 மற்றும் 1988 ல் வாட்டர்சன் பெற்றார். இன்னும் பல விருதுகளையும் 'கால்வின் அண்ட் ஹாப்ஸ்’ பெற்றுள்ளது.

கால்வின் அண்ட் ஹாப்ஸ் கதைகள் அவ்வப்போது தொகுக்கப்பட்டு, எட்டு புத்தகங்கள் வெளியாகி, ஐந்து கோடிப் பிரதிகள் விற்றுள்ளன. 2005ல் அனைத்துக் கதைகளும் தொகுக்கப்பட்டு, 1,440 பக்கங்களில்... 'தி கம்ப்ளீட் கால்வின் அண்ட் ஹாப்ஸ்’ என்ற புத்தகம் வெளியானது.

 
அஞ்சாத சிங்கம் கால்வின், இரண்டு பேருக்கு மட்டுமே பயப்படுவான். அது, கால்வினைப் பார்த்துக்கொள்ள பெற்றோரால் நியமிக்கப்பட்ட ரோசலின்.  இன்னொரு நபர், 'மோ’ என்ற முரட்டுச் சிறுவன்.

ஒரு கதாபாத்திரம் வெற்றிபெற்றால், அதைப் பல நிறுவனங்கள், பல கோடிகளை அளித்து வாங்கும். தங்களது விற்பனைப் பொருளில் பிரசுரித்து, மக்களைக் கவரும். ஆனால் வாட்டர்சன், 'எனது கால்வினை கலைவடிவில் மட்டுமே பார்க்க விரும்புகிறேன்’ என்று சொல்லி, அதன் உரிமையைக் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனாலும் சிலர், முறையின்றி இப்போதும் பயன்படுத்திவருகிறார்கள்.

- கே.யுவராஜன்

அடுத்த கட்டுரைக்கு