Published:Updated:

ஹாலிவுட் டீன் ஸ்டார்

##~##

உலக அளவில் சுட்டிகளின் மனம் கவர்ந்த இளம் நாயகன், ஜேடன் ஸ்மித். பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித்தின் மகன். 15 வயதைக் கடந்த இந்த 'டீன் ஹீரோ’ பற்றி சில துளிகள்...

தந்தை வில் ஸ்மித் உடன் ஜேடன் இணைந்து நடித்து, 2006ல் வெளியான படம்,  'தி பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ்’ (The Pursuit of Happyness). இந்த முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்து, விருதுகளையும் பெற்றார் ஜேடன்.

கலிஃபோர்னியாவில் ஜூலை 8, 1998ல் பிறந்தவர் ஜேடன். இவரது தாய், ஜேடா பின்கிட் ஸ்மித்தும் பிரபல நடிகைதான். ஜேடனின் தங்கை, வில்லோ ஸ்மித். இளம் பாடகியாக இப்போதே பட்டையைக் கிளப்பிவருகிறார்.

ஹாலிவுட் டீன் ஸ்டார்

'ராப்’ பாடல்களிலும் ஜேடன் அசத்திவருகிறார். கனடாவின் புகழ்பெற்ற பாடகரான 'ஜஸ்டின் பீபர்’ (Justin Beiber) உடன் சேர்ந்து பாடிய, 'நெவர் சே நெவர்’ என்ற பாடல் பலரின் ஃபேவரிட்.

2010ல் ஜாக்கி சான் உடன் இணைந்து நடித்த, 'தி கராத்தே கிட்’ மேலும் புகழை அள்ளித் தந்தது. இந்தப் படத்துக்காக இவர் வாங்கிய சம்பளம்,    ஒரு மில்லியன் டாலர்கள். 'இவன்தான் ஹாலிவுட்டின் அடுத்த சூப்பர் ஹீரோ’ என்று புகழ்ந்தார் ஜாக்கி சான்.

ஜேடன், தன் தங்கையுடன் மாதம் ஒருமுறை ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று நாள்முழுவதும் அங்கு இருப்பவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆப்பிரிக்காவில் வறுமையில் வாழும் குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்காக அடிக்கடி உதவுகிறார் ஜேடன் ஸ்மித்.

- அ.பார்வதி

அடுத்த கட்டுரைக்கு