Published:Updated:

“அன்று கர்ஜித்த ஜெயகாந்தன் இன்று ‘மியாவ்’ என்கிறார்!”

விகடன் மேடை - பிரபஞ்சன் பதில்கள் வாசகர் கேள்விகள்...

##~##

 இனியா குணசேகரன், திண்டுக்கல்.

''பள்ளிக்கூடங்களில் தமிழ் வழிக் கல்வி அழிந்துவருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? தமிழ், இனி பயன்படாத மொழியா?''

'' 'தமிழே என் மூச்சு’ என்றவர்களே, மூர்க்கமாக ஆங்கில வழிக் கல்வியை சென்ற காலங்களில் வளர்த்தவர்கள். என்னளவில் கல்விக் கொள்கை இப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆறாம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கல்வியே கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதன் பிறகே ஆங்கிலமோ, பிற மொழிகளோ, ஒரு பாடமாக இருக்க வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் ஒரு மாணவர் பெறும் மதிப்பெண், அவரின் வகுப்புத் தேர்ச்சிக்கு, அதாவது பள்ளி இறுதித் தேர்வு, பட்டப்படிப்பு எதற்கும் அடிப்படையாக இருக்கக் கூடாது. ஆங்கிலம், மற்ற எந்த அந்நிய மொழிகளையும், இன்று வளர்ந்திருக்கும் விஞ்ஞான தொழில்நுட்பத்தின் மூலம் சுலபமாகக் கற்றுத்தர முடியும். தவிரவும் தமிழர்கள், அமெரிக்காவுக்குப் பிறக்கவில்லை.

தமிழை, நம் தலைவர்களால் அழித்துவிட முடியாது. கடைசித் தமிழன் இருக்கும் வரை தமிழ் இருக்கும். நாங்கள் இருக்கிறோம். ஆகவே, தமிழ் இருக்கும்!''

பாலகிருஷ்ணன், மதுரை

''காலத்தின் கோலத்தில் இப்போது 'காதல்’ தன் மகத்துவத்தை இழந்துவிட்டதாக நினைக்கிறேன். உங்கள் எண்ணம் என்ன?

''காதல் ஒருபோதும் தன் மகத்துவத்தை இழக்காது, தோழரே! உலகம் எதனால் சுழல்கிறது என்கிறீர்கள்? உலக உயிர்கள் எதனால் வாழ்கின்றன? எந்த நம்பிக்கையில் பத்து சட்டைகளும் ஆறு பேன்ட்களும், வைத்துக்கொண்டு துவைத்து இஸ்திரி போடுகிறோம்? யுத்த பூமியில், வெடிமருந்து புகைகளின் ஊடாக, எங்கோ ஒரு புல் முளைத்து, ஒரு பூவும் பூக்கிறதே, எதனால்... காதலால் தான்! மூடர்களின் தேசத்தில், காதல் இளவரசர்கள் முதலில் கொல்லப்படுவார்கள். ஆனால், அவர்கள் ஆயிரமாயிரமாக உயிர்த்து எழுவார்கள்... காதலைச் சிலாகித்து எழுதுவார்கள்!''

“அன்று கர்ஜித்த ஜெயகாந்தன் இன்று ‘மியாவ்’ என்கிறார்!”

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

''ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்திவிட்டது  தேக்கநிலையா... விரக்தி மனப்பான்மையா?''

''போதும் என்று நினைத்தார். ஆகவே, ஜெயகாந்தன் நிறுத்திக்கொண்டார். அதுதான் நாணயம்; நாகரிகமும்கூட. எழுதத் தெரிவது அல்ல... ஓர் எழுத்தாளனுக்கு நிறுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். நிறுத்தியது அவருக்கும் நல்லது; தமிழுக்கும் நல்லது. ஒருகாலத்தில் அவர் 'கர்ஜித்ததாக’ச் சொல்வார்கள். அண்மைக்காலத்தில் பல சமயங்களில் 'மியாவ்’ என்பதுக்கும் மேலாக அவர் போகவில்லை. தமிழ் எழுத்தாளர்கள் பலரின் கடைசிக் காலம், ஆரோக்கியமாக இல்லை. இது தமிழின் சாபக்கேடு!''

தி.மீனாக்குமாரி, அம்பாசமுத்திரம்.

''மகாபாரதத்தில் இருந்து, நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கலாம் என்ற ஒரு செய்தியைச் சொல்லுங்கள்!''

''பலமும் பலவீனமும்கொண்டவனாகவே உருவான மனிதன், குற்றமும் குற்றமற்ற தன்மையோடும்தான் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை உணர்ந்து, தன் இருட்டுப் பக்கத்தை நீக்கிக்கொண்டு, வெளிச்சத்தின் பக்கம் தன்னைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்பதே மகாபாரதம் சொல்லும் செய்தி. இது என் புரிதல்!''

மகாலிங்கம், திருத்தங்கல்.

''இந்திய அளவில் தங்களைக் கவர்ந்த சினிமா இயக்குநர் யார்?''

''மிருணாள் சென், எனக்குப் பிடித்த கலைஞர். 'ஏக் தின் பிரதிதின்’ என்ற அவரது சினிமா, ஒரு சிறந்த படைப்பு. மாலை ஏழு மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பெண், வரவில்லை. கீழ் மத்தியதரக் குடும்பம் அது. அந்தப் பெண்ணின் சம்பளம்தான், அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரம். குடும்பம் அலைபாய்கிறது. விபத்தா... ஓடிப்போனாளா... என்ன சிக்கல்? பக்கத்து வீட்டுக் குடும்பங்கள் எட்டிப்பார்த்து, அதீத (இந்திய)  அக்கறை காட்டி 'என்ன பிரச்னை?’ என விசாரிக்கின்றன. நாலு மணி நேரம் அந்தக் குடும்பம் எதிர்கொள்ளும் அவஸ்தை படமாக விரிகிறது. கடைசிப் பேருந்தில் அந்தப் பெண் வந்து இறங்குகிறாள். உணவுகொண்டு, உறங்கப் போகிறாள்.

படத்தின் திரையிடலின்போது மிருணாள் சென் உடன் இருந்தார். பார்வையாளர்களில் நானும் இருந்தேன். ஒரு தமிழர் எழுந்து, 'சார்... அந்தப் பெண் எங்குதான் போனாள்?’ என்று ஆவலுடன் கேட்டார். தமிழ்க் கவலை! சென், மிக அமைதியாக, 'I don’t know sir’ என்றார். 'என் பிரச்னை அது அல்ல. கீழ் மத்தியதரக் குடும்பத்து, ஓய்வுபெற்ற அப்பா, அம்மா, வேலை தேடும் தம்பி இவர்களுக்குச் சம்பாதித்துச் சோறு போடும், வேலைக்குப் போகும் பெண், திடுமெனக் காணாமல்போனால், அந்தக் குடும்பம் படும் அவஸ்தையும் பயமும்தான் நான் சொல்ல விரும்பியது’ என்றார் அன்பார்ந்த ஒரு நண்பனின் குரலில். மனிதர்களைப் பேசுவது அல்ல... மனிதர்களின் அர்த்தத்தைப் பேசுவதே சினிமா!

சட்டென்று தோன்றுகிறது... ஓர் உலக இயக்குநரையும் சொல்கிறேனே! 'இல் போஸ்டினோ: தி போஸ்ட்மேன்’ என்ற படம். பாப்லோ நெரூடா நாடு கடத்தப்பட்டு, ஒரு கடற்கரையோரக் கிராமத்தில் வாழ்ந்த, வாழ்க்கையைச் சொன்ன படம். ஒரு பெரிய படைப்பாளியை, அவரது மனிதாம்சத்தைச் சொன்ன படம். எளிய, உண்மையான படம். சினிமா என்பது, கதை அல்ல; சினிமாவைப் பார்க்க, சினிமா மொழியைப் புரிந்துகொள்ள, சினிமா என்பதன் அர்த்தம் தெளிய, தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!''

“அன்று கர்ஜித்த ஜெயகாந்தன் இன்று ‘மியாவ்’ என்கிறார்!”

சி.கேசவன், கடம்பங்குடி.

''சினிமா நடிகர்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்?''

''இன்றைய நடிகர்களில் அஜித், சூர்யா, தனுஷ். நேற்றைய நடிகர்களில் சுப்பையா, ரங்காராவ், சிவகுமார், ரஜினிகாந்த். முந்தாநாள் நடிகர்களில் பி.யூ.சின்னப்பா!''

அப்துல் சலாம், திருச்சி.

''இலக்கியத்தால், இலக்கியவாதிகளால் ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றியமைக்க முடியுமா?''

''கலை இலக்கியங்கள், ஆத்மாவில் செயல் புரிபவை; அவை நுண்மையானவை; மனத்தில் அசைவை ஏற்படுத்துபவை. 'அறம் இது, அறமற்றது இது...’ என்பதைச் சுட்டிக்காட்டுவதே இலக்கியத்தின் பணி. உலக மொழிகளிலேயே அதிகமாக நீதி இலக்கியங்கள் உள்ள மொழி தமிழ். எனினும் தமிழர்க்குள் அவை எந்த அளவில் அசைவை ஏற்படுத்தின? பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால், தமிழர்கள் சாதியை முன்வைத்து, மதத்தை முன்வைத்து, தமக்குள் யுத்தம் செய்வார்களா? தீண்டாமை இன்னும் நீடிக்கிறது என்றால், நீதிகள் அறங்கள் செத்துப்போய்விட்டன என்றுதானே அர்த்தம்.

அரசியல்வாதிகள் 'வி’ மாதிரி விரல்களைக் காட்டிக்கொண்டு (வி ஃபார் விக்டரியாம்) சிறை செல்லும் குற்றவாளிகளாக வாழ்கிற நாடு இது. ஆனால், கலையும் இலக்கியமும் உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டிய நேரமும் இதுதான். நான் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர், இலக்கியம் படித்து, ஐநூறு ரூபாய் வாங்கினாலேகூட இப்போதைக்குப் போதும்தானே?''

மன்னர் மன்னன், திருவாடானை.

 ''நமது சமூக அமைப்பில் அனுதினமும் போராடிக்கொண்டே இருப்பதுதான் நேர்மையாக வாழ்பவர்களுக்கான பரிசாக இருக்கிறதே... ஏன்?''

''இந்தியாவில், நேர்மையாக வாழ்வதே ஒரு போராட்டம்தான். ஊழலிலும் சுரண்டலிலும் தலைசிறந்த நாடாக இந்தியா மிகுவளர்ச்சி பெற்று, நேருவின், இந்திராவின், ராஜீவின், சோனியாவின், ராகுலின், பிரியங்காவின், பிரியங்கா வளர்க்கும் நாய்க்குட்டிகளின் கனவை நனவாக்கிக்கொண்டு இருக்கிறது. மாப்பிள்ளை முறை வைத்து அழைத்து நட்பு பாராட்டிய சுலைமான், நான் வாரந்தோறும் என் சர்க்கரை நோய்க்கு மருந்து வாங்கும் கடைக்காரர். மசூதி இடிப்புக்கு மறுநாள் சந்திக்கையில், முகத்தைத் திருப்பிக்கொண்டு, கடைப் பையனை விட்டு விசாரிக்கச் சொன்ன அந்தக் கணம், என்னை இந்துவாக அவர் நினைத்துவிட்ட அந்தக் கணம், நான் இந்தியனாக இருப்பதில் அவமானம் அடைந்தேன். என் மனதில் ஏற்பட்ட ஆறாத ரணம் அது. ஆனால், போராடத்தான் வேண்டும். போராட்டத்துக்கு மாற்று, இன்னொரு போராட்டம்தான். ஜீவிப்பது என்பதன் இன்னோர் அர்த்தம் போராடுவது!''

- அடுத்த வாரம்...

'' 'சினிமா, சமூகத்தைச் சீரழிக்கிறது’ என்கிறார்களே சில சமூகச் சிந்தனையாளர்கள்... உங்கள் கருத்து என்ன?''

• ''அரை நூற்றாண்டாக எழுதி வருகிறீர்கள். எழுத்துத் துறை, உங்களுக்குத் திருப்தியான வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறதா?''

• ''தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளராக இருப்பது சரியா... தவறா?''

- பகிர்ந்துகொள்வோம்...

“அன்று கர்ஜித்த ஜெயகாந்தன் இன்று ‘மியாவ்’ என்கிறார்!”

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.