என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

ஒரு பணக்கார பெண் செய்த அடாவடி!

ஒரு பணக்கார பெண் செய்த அடாவடி!

ஒரு பணக்கார பெண் செய்த அடாவடி!
##~##
ரு ஜிப்ஸி, இரண்டு கண்டெஸா, இரண்டு அம்பாஸடர், ஒரு சுமோ, இரண்டு மாருதி (போதுமா?)... எனப் பெரிய பட்டாளமே ஒரு கிராமத்துக்குள் திடுதிப்பென்று நுழைந்து, ''இங்கே ஒரு ஃபேக்டரி கட்டப்போறோம். அதுக்கு இந்தக் கிராமத்தை முழுசா வாங்கி இருக்கோம். உங்க வீட்டை எல்லாம் இடிச்சுட்டு வேலையை ஆரம்பிக்கணும்!'' என்று சொன்னால்..?

 தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம் - கோயம்புத்தூரை அடுத்த தொண்டாமுத்தூர்!

'அடாவடி லேடி’ கேரக்டரில் நடிக்க நாம் தேர்ந்தெடுத்த மாலினி, அந்த கலக்குக் கலக்குவார் என்று நாம் எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கு பி.ஏ-வாக கோட்-சூட்டில் ஒருவர், தவிர இன்ஜினீயர், ஒரு லாயர், சஃபாரியில் பந்தாவுக்கு 'வெயிட்’ சேர்க்க இன்னும் சிலர் என ஒரு படையே ரெடி.

ஒரு பணக்கார பெண் செய்த அடாவடி!

ஞாயிற்றுக்கிழமை... பகல் 12 மணிக்குக் கோவையில் இருந்து கிளம்பினோம். எதிரில் சைக்கிளில் வந்த போலீஸ்காரர் மிரண்டு குதித்து, கண்ணாடிகள் ஏற்றப்பட்ட கார் அணிவகுப்புக்கு ஒரு குத்துமதிப்பான சல்யூட் அடித்ததுதான் முதல் சக்சஸ்.

தொண்டாமுத்தூருக்குள் கார் வரிசை கிறீச்சிட்டு நின்றது. படபடவெனத் திறந்து இறங்கிய பட்டணத்துப் படையைக் கிராமத்தின் அத்தனை கண்களும் குழப்பத்துடன் அளந்தன. நம்மில் ஒருவர் ஓடிப்போய் கண்டெஸா கார் கதவைத் திறந்துவிட, உள்ளே இருந்த மாலினி தன் கூலிங் கிளாஸைச் சரிசெய்தபடியே சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தபடி இறங்கினார். படக்கென்று குடையைப் பிரித்து ஒருவர் பிடிக்க...

கைக்கு வந்தபடி வரைந்துவைத்த ஒரு செட்-அப் மேப்பை விரித்துக் கையில் வைத்துக்கொண்டார் ஒருவர். மேப்பின் ஒரு பகுதியை பேனாவால் தொட்டுக்காட்டி, ''மேடம்! இப்ப நாம் இந்த இடத்துலதான் நிக்கறோம்...'' என்று அவர் சொல்ல... இதற்குள் கேள்வி நிறைந்த கண்களுடன் நம்மைச் சுற்றிலும் ஒரு சின்ன 'வட்டம்’ கட்டிவிட்டார்கள் கிராமத்தினர்.

ஒரு பணக்கார பெண் செய்த அடாவடி!

கிராமத்தின் கிழக்கு வாசல் தெருவைக் காட்டி, ''இங்கேதான் மேடம் மெயின் என்ட்ரன்ஸ் வருது!'' என்று பி.ஏ. சொல்ல... பக்கத்தில் இருந்தவர், ''ஏம்ப்பா, இந்த வழியா கார் போகுமா?'' என்று கேட்டுவிட்டுப் பதிலுக்குக்கூடக் காத்திராமல், ''இந்த மூணு வீட்டை மொத்தமா இடிச்சுட்டு, அந்த அகலத்துல ரோடு போட்டா சரியாயிடும் மேடம்'' என்றார்.

''ஏனுங்க... என்னா பண்றீங்க இங்கே? யாருங்க நீங்கள்லாம்?'' என்று அந்த மூன்று வீட்டுக்காரர்கள் நெருங்கி வந்தார்கள்.

''இங்கே பெரிசா இரும்பு ஃபேக்டரி ஒண்ணு வருதுப்பா! மேடம் மெட்ராஸ்ல இருந்து வந்திருக்காங்க. இந்த இடத்தை எல்லாம் அவங்க விலைக்கு வாங்கிட்டாங்க!'' என்றார் சஃபாரி.

''அது எப்படிங்க? எங்களுக்குத் தெரியாம யாருங்க வித்தது..?'' என்று கேட்டவர்களுக்குப் பதில் சொல்ல யாரும் இல்லை. நம் கண் ஜாடையைப் புரிந்துகொண்டு, பட்டுப் புடைவை சரசரக்க, ஸ்டைலாகத் தன் கூலிங் கிளாஸைச் சரிப்படுத்திக்கொண்டு மேலே நடந்தார் மாலினி.

ஒரு பணக்கார பெண் செய்த அடாவடி!

''என்னா மேன்... இந்த இடத்துல இந்த டிரான்ஸ்ஃபார்மர் பெரிய இடைஞ்சலா இருக்கும்போல் இருக்கே!'' என்று மாலினி சிடுசிடுக்க, ஓடி வந்த ஒரு சஃபாரி, ''அது... இ.பி-ல சொல்லியாச்சு மேடம். வேற இடத்துக்கு மாத்திடறாங்களாம். ஃபேக்டரி வந்த பிறகு, ஊருக்குள்ள பஸ் வந்தா தொந்தரவா இருக்கும்னு சொல்லிட்டோம். ஊருக்கு வெளியிலயே பஸ் ரூட்டைத் திருப்பிடுறாங்க!''

சுற்றிச் சுற்றி வந்து இந்தப் பேச்சுகளைக் கவனித்த மக்கள் முகத்தில் கோபம் கொஞ்சம் கொஞ்சமாகப் பொங்கிப் பெருகியது. ஆங்காங்கே ஆட்களைத் திரட்டுவது தெரிந்தது.

''ஏனுங்க... நமக்கு என்ன ஏதுனு சொல்லிப்போட்டுப் பொறவு உங்க வேலையைப் பாருங்க. அது என்னாதுங்க கம்பெனி?'' - வயசானாலும் உடல் உரம் மாறாத பெரியவர் ஒருவர் முன் வந்து நின்று 'பி.ஏ’-வை அதட்டினார்!

அவரை அலட்சியமாகப் பார்த்துவிட்டு மாலினி திரும்பிக்கொள்ள, உதவியாளர் கடுகடுத்தார் - ''இதோ பாருங்க... உங்களுக்கு விளக்கம் எல்லாம் சொல்ல டைம் இல்ல... வழிவிடுங்க...''

''முடியாதுங்க... நீங்க யாரு? அதெப்படி எங்க வூட்டை இடிச்சுப்போட்டு நீங்க கம்பெனி கட்ட முடியும்? எங்க வூட்டை யாருங்க உங்களுக்கு வித்தாங்க? சொல்லிப்போட்டுத்தாங்க போவணும்.''

ஒரு பணக்கார பெண் செய்த அடாவடி!

''ஆமா... ஆமா...'' என்று ஆர்ப்பரித்தது கூட்டம்.

மேடம் டென்ஷனாகி, ''வாட் இஸ் திஸ்..? முன்னாலயே வந்து இவங்களை எல்லாம் சரி செய்யறதில்லையா?'' என்று கத்த ஆரம்பிக்க... 'அம்மா’வுக்குக் குடை பிடித்திருந்த குறும்பு மெம்பர், ''ஏம்ப்பா... போங்கப்பா... பொறவு சொல்றோம். அம்மா சத்தம் போடறாங்க...''

மேடம் அவரை சைகையால் நிறுத்திவிட்டு, ''பாருங்க... உங்களை எல்லாம் அப்படியே அநாதையாத் துரத்தி அடிச்சிடுவோம்னு நினைக்காதீங்க. லிஃப்ட் வெச்சு ஊருக்கு வெளியே அடுக்கு மாடி அபார்ட்மென்ட் கட்டறோம். நீங்க அதுல வாடகைக்கு வந்துடலாம்!''

''வாடகைக்கா?! ஏம்மா மவராசி... இந்த வூட்டுல 50 வருஷமா வாழறோம்... இது எங்க மண்ணு! நாங்க கொடுக்க மாட்டோம். உனக்கு கம்பெனி கட்ட வேற இடமா கெடைக்கல...'' என்றது ஒரு பெரிசு.

இப்போதான் நம்ம 'லாயர்’ வாய் திறந்தார். ''இதோ பாரும்மா, (கையில் இருந்த சூட்கேஸைத் தட்டிக்காட்டி) உன் வீட்டை மட்டும் இல்ல... இந்தக் கிராமத்தையே விலைக்கு வாங்கிட்டதுக்கு டாகுமென்ட்ஸ் இதுல இருக்கு.''

நம் கும்பலின் பக்காவான நடிப்பால் மக்கள் அரண்டது உண்மை. ஒரு கட்டத்தில் ஆளாளுக்கு ஒதுங்கி நின்று கோபத்துடன் புலம்ப ஆரம்பித்தார்கள். ''காரு, பொட்டினு இவனுங்க வரும்போதே நினைச்சேன்... தொலைஞ்சுதுடா தொண்டாமுத்தூர்னு!'' - வெள்ளை வேட்டி-சட்டை ஒன்று அங்கலாய்த்தது.

சந்தடிசாக்கில் ஒரு 'தலப்பா’ தலையர் நம்மை நெருங்கி, ''ஏனுங்க... ரோட்டுக்கு அந்தப் பக்கமும் நல்ல இடம் இருக்குதுங்க. அதையும் சேர்த்து வாங்கிப்போடுங்க'' என்றார்.

மேடத்தை காரில் ஏற்றிக் கிராமத்தின் இன்னொரு பகுதிக்கு அழைத்துப் போகத் தயாரானது கு. டீம். இதற்குள் த.மா.கா. உறுப்பினர் ஒருவர் பறக்கும் ரயில் மாதிரி  பாய்ந்து வந்தார். மேடத்தைச் சுமந்துகொண்டு கார் புறப்பட்டு விட்டது. அவரிடம் சில சஃபாரிகள் சமாதானம் பேசினர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் மேடத்தின் கார் முன்னால் ஓடி வந்து மறித்து, ''நீங்க எப்படி ஃபேக்டரி கட்டறீங்கன்னு பாத்திர்றோம்... நாளைக்கே சாலை மறியல்! உங்களுக்கா... எங்களுக்கானு பாத்துடுவோம்!''

ஒரு பணக்கார பெண் செய்த அடாவடி!

அரசியல் - அது... இதென்று பெரிதாகி ஏதாவது கலவரமாகிவிடுமோ என்ற கவலை நம்மை அப்பிக்கொண்டது. இதோடு முடித்துக்கொண்டு விஷயத்தைச் சொல்லிவிடுவோமா என்று பார்த்தோம்.

மேடம் ரோலில் இருந்த மாலினியோ செம உஷாராக, ''நோ... நோ... மறியல் நாளைக்குன்னுதானே சொல்றாரு. இன்னும் கொஞ்ச நேரம் விளையாட்டை நடத்துவோம்!''

தொண்டாமுத்தூர் கிராமத்தின் இன்னொரு பகுதி - முனியப்பன் கோயில் தெரு... கிராமமே கலவரப்பட்டுப் போயிருந்தும் 'செய்தி’ இங்கே இன்னும் வந்து சேரவில்லை. வரிசையாக 'கா££££££ர்’கள் போய் நின்றதும் மக்களிடம் அதே புதிர்ப் பார்வை.

காரில் இருந்து மேடம் இறங்கியதுமே குடை, மேப், சூட்கேஸ்கள் தயார் நிலைக்கு வந்துவிட, கையோடு கொண்டுவந்த கார்ட்லெஸ் போனில் பேசுவதுபோல் பாவ்லா செய்தார் பி.ஏ.

''எங்கே... அளங்க பார்ப்போம்...'' என்றார் மாலினி. படபடவென இருவர் ஓடிப்போய்த் தெருவின் அகலத்தை டேப் வைத்து அளக்க... இன்ஜினீயர் ரொம்ப கூலாக, ''பத்தாது போலிருக்கு. நான் சொன்ன மாதிரி இந்த வீட்ல பாதியை இடிச்சுட்டு சமப்படுத்தினால்தான் சரிப்படும்!'' என்றார்.

வீட்டுக்காரர் வாரிச் சுருட்டிக்கொண்டு ரோட்டுக்கு ஓடி வந்து, தன் வீட்டை ஒரு முறை பார்த்தார். பிறகு, ''என்னது... என்னது... யோவ்... என்ன பண்ணப்போறீங்க... யாரு நீங்க?'' என்று அவர் கத்த... நமக்குத் தேவையான கும்பல் தேற ஆரம்பித்தது.

''அதோ அது... இது... அந்த ஓட்டு வீடு...'' என்று இன்ஜினீயர் கையைக் காட்டிக்கொண்டே போக, அந்தந்த வீட்டு வாசல்களில் நின்று பார்த்தவர்கள் தாவித் தாவி ஓடி வந்தனர்.

''சரி... வேலையை எப்போ ஆரம்பிக்கப் போறீங்க?'' - கூல்டிரிங்க்கை உறிஞ்சிக்கொண்டே கேட்டார் மாலினி. பி.ஏ. பாதிக்கு மேல் உடம்பை வளைத்து, ''ஆயிடுச்சு மேடம்! புல்டோஸருக்குக்கூடச் சொல்லியாச்சு. வர்ற வெள்ளிக்கிழமை இடிக்க ஆரம்பிக்கிறோம்!'' என்றார்.

அந்தத் தெருவில் கொஞ்சம் பெரிசாக ஒரு பாட்டியம்மா, 'லேடி இந்தியன்’ மாதிரி வீட்டு வாசலில் இடுப்பில் கைவைத்தபடி நம்மை வரவேற்றார்.

''பாட்டியம்மா! உங்க வீட்டை 'அம்மா’ வாங்கிட்டாங்க. விடியறதுக்குள்ளே காலி பண்ணிடுங்க!'' என்று குடை பிடித்தவர் கிட்டே போக... வழி மறித்தார் அந்த லேடி இந்தியன்.

''வாங்கடீ... வாங்க! நீங்க இங்கே கம்பெனி கட்டுனா, நாங்க சுடுகாட்டுக்குப் போறதா? எல்லாம் அந்த எம்.எல்.ஏ. வேலையாத்தான் இருக்கும். போய் அந்த ஆளை அனுப்புங்க, பேசிக்கிறோம். எங்களாண்ட ஓட்டு வாங்கிப்போட்டு, உங்களாண்ட எங்க ஊரையே வித்துப்போட்டுப் போயிட்டாரா?''

- அடுத்த 10 நிமிடங்களில் நம்மைச் சூழப்போகிற ஆபத்துபற்றி உணராமல் ரொம்ப

'அறிவாளி’த்தனமாக அந்தப் பாட்டியைச் சீண்டினோம்!

அந்தச் சமயம் பார்த்து மொபெட்டில் வந்தார் ஒருவர். மொட்டை வெயிலில் நெற்றியில் கொட்டிய வியர்வையைத் துடைத்தபடி, ''இன்னாங்க மேட்டரு?'' என்றார்.

''இந்த ஏரியாவுல ஃபேக்டரி கட்டலாம்னு இருக்கோம்...'' எடுபிடிகளில் ஒருத்தர் அவரது தோளில் கைபோட்டுச் சொன்னார். ''அட, அப்படியா? கட்டுங்க... கட்டுங்க''- வண்டியில் உட்கார்ந்தபடியே உற்சாகமாக உடம்பை ஆட்டினார் அவர். ''அதுக்காக இந்த ஏரியாவை வாங்கிட்டோம்...'' என்றதும், ''ஒ! வாங்குங்க, வாங்குங்க''- வண்டிக்காரர் திரும்ப ஆடினார்.

''வீட்டையெல்லாம் இடிக்கணும்...'' என, ''இடிங்க, இடிங்க...'' என்றபடி வண்டியை எடுத்துக்கொண்டு 40 அடி தொலைவில் இருந்த தன் வீட்டில் போய் நின்றார். வீட்டுப் பெண்கள் அவரிடம் அழுகிற குரலில், ''நம்ம வீட்டை இடிக்கப்போறாங்களாம்!'' என்றனர்.

மொபெட்டை அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்தார். ''எலேய்... யார்றா அது என் வீட்டை இடிப்பேன்னு சொன்னது?'' - சாமியாட ஆரம்பித்துவிட்டார். ''டோன்ட் வொர்ரி... யு நோ... ஆக்சுவலி...'' என்று மேடம் ஆரம்பிக்க... ''ஏய்! தமிழ்ல பேசும்மா... தஸ்ஸுபுஸ்ஸுனு வந்திர்றாளுங்க''- கத்தியது அந்த இந்தியன் பாட்டி!

அதைத் தொடர்ந்து, கண்டமேனிக்கு ஆக்ரோஷம் கலந்து கமென்ட்டுகள் வர... பாட்டியை அப்படியே பாதியில் விட்டுவிட்டு, கிராமத்தின் இன்னொரு மூலையில் இருந்த வ.உ.சி. வீதிக்கு காரை எடுத்தோம். வழியில்தான் நாம் முதலில் சென்ற கிழக்கு வீதியைக் கடக்க வேண்டும்.

தெருவுக்குள் திரும்பும் முன்பே, கூச்சலும் குழப்பமும் காதில் விழுந்தது. தெருவுக்குள் நுழைந்ததுதான் முட்டாள்தனம்!

ஏரியாவாசிகள் நட்ட நடுரோட்டில் உட்கார்ந்து இருந்தார்கள். எதிர்ப் பக்கம் ஒரு பஸ், ஒரு லாரி, மூன்று மொபெட்டுகள், சைக்கிள்கள் அத்தனையும் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பித்து இருந்தது.

நம்மைப் பார்த்ததும் அவ்வளவு பேரும் எழுந்து, வண்டிகளை நிறுத்தி சூழ்ந்துகொண்டார்கள்.

''ஃபேக்டரி...''

''கட்டக் கூடாது...''

''திட்டத்தை...''

''வாபஸ் வாங்கு!''

தடுப்பதற்குள் மேடம் காரைவிட்டு இறங்கி, ''இருங்க... இருங்க... என்ன வேணும் உங்களுக்கு? சொல்லுங்க...'' என்று கேட்க, 'தலைவரைக் கூப்பிடுங்கய்யா... அம்மாவோட பேசட்டும்’ என்று ஒரு 'அசரீரி’ கூட்டத்தில் இருந்து வந்தது. அதற்குள் நம்முடைய ஜமா, மேடத்தைப் பாதுகாப்பாக சாலையோரம் அழைத்துப் போக, கூட்டமும் கோந்து போட்ட மாதிரி முற்றுகைஇட்டபடி நம்முடன் சேர்ந்து நகர்ந்தது. பெயருக்குதான் சாலை மறியல் மாதிரி இருந்ததே தவிர, அங்கங்கே கத்தி, கம்பு, அருவா என்று கிராமத்துக்கே உரிய ஆயுதங்களும் தலை காட்டின. 'எதற்கும்’ தயாராக இருக்கிறார்கள் கிராமத்துக்காரர்கள் என்பது புரிந்தது. இவர்களுக்கு எப்படிச் சொல்வது, யார் சொன்னால் கேட்பார்கள் என்பதெல்லாம் புரியாததால் குளிர்... ஸாரி, நடுக்கம் எடுத்தது.

பொதுவாக, இதற்கு முந்தைய குறும்பில் எல்லாம் டென்ஷனாகி, க்ளைமாக்ஸை நெருங்கும்போது, சரி... எப்படியும் விஷயத்தைச் சொல்லித் தப்பிவிடலாம் என்கிற நம்பிக்கை இருக்கும். அதேபோல, அதிஷ்டவசமாக நடக்கவும் செய்யும். ஆனால், இந்தத் தடவை அந்த மாதிரி நம்பிக்கை இழை நமக்கும் ஓடவில்லை.

இதற்குள் தொண்டாமுத்தூர் முன்னாள் சேர்மன் எம்.கே.கந்தசாமியை அழைத்து வந்துவிட்டனர். அவர் என்ன சொன்னாலும் வேத வாக்காக இந்தக் கிராம மக்கள் கேட்பார்கள் என்பது தெரியவந்தபோது, நம்மைக் காப்பாற்றக்கூடிய ஒரே ஆபத்பாந்தவன் அவர்தான் என்று புரிந்தது.

''அம்மிணி! நீங்க நினைக்கிற மாதிரி இந்த ஊரை வாங்கிட முடியாது. இந்த ஜனங்களைத் தூரத்திட்டு, ஃபேக்டரி கட்டவும் முடியாது. நீங்க விபரீதம் புரியாம வந்துட்டீங்கபோல இருக்குது!'' என்று பதற்றப்படாமல் சேர்மன் பேச ஆரம்பிக்க... ''விபரீதம் தெரியாமத்தாங்க வந்துட்டோம். உண்மை என்னன்னா...'' என்று ஆரம்பித்து, மூச்சுவிடாமல் முழு விஷயத்தையும் சொல்லி, ''எல்லாம் ஒரு குறும்புதான்னு இவங்ககிட்ட நீங்கதான் எடுத்துச் சொல்லணும்...'' என்று பூரண சரணாகதி அடைந்தோம்.

நெற்றியைச் சுருக்கியவர், மாலினியையும் நம்ம கும்பலையும் ஒரு முறை கண்களால் அளந்தார். எல்லோரும் இப்போது நட்புடன் சிரிப்பதைப் பார்த்துவிட்டு, அவரும் ரிலாக்ஸ் ஆனார்.

''ஆனந்த விகடனா? நல்லாப் பண்ணீங்க போங்க! ஆனா, இந்த ஜனங்க கொஞ்சம் டென்ஷனா இருக்காங்க. குறும்பு கிறும்புன்னு எல்லாம் சொன்னாப் புரியாது. வேற... என்ன பண்ணலாம்?'' என்று யோசித்தவர், கூட்டத்துக்கு நடுவே போய் நின்றார்.

அது வரை சலசலத்துக்கொண்டு இருந்த கூட்டம் அமைதியானது.

''பயப்படறபடி ஒண்ணுமில்ல... வந்தவங்க பத்திரிகைக்காரங்க. 'ஆனந்த விகடன்’லேர்ந்து வந்திருக்காங்க. உங்க கிராமத்துல இப்படித் திடுதிப்புனு வந்து, 'வீடு வாங்கிட்டோம்... ஃபேக்டரி கட்டப்போறோம்’னு சொன்னா,நீங்க  எந்த அளவுக்கு எதிர்த்துப் போராடறீங்கன்னு பார்க்கத்தான் இப்படிப் பண்ணாங்களாம். பரவாயில்ல... நல்லாவே உங்களோட எதிர்ப்பைக் காட்டியிருக்கீங்க... உங்க மண்ணு மேல எவ்வளவு உசுரு வெச்சிருக்கீங்கன்னு புரிஞ்சதுல அவங்க ரொம்ப சந்தோஷமாயிட்டாங்க. எல் லோரும் கவலைப்படாம அவங்க அவங்க வேலையைக் கவனிங்க...'' என்றார் கந்தசாமி.

டீமும் தயக்கத்துடன் தலைவர் பின்னால் இருந்து ஆஜராகி... ஹிஹிளித்தது.

  கிராம மக்களுக்கு ஸ்வீட்ஸ் விநியோகித்தோம். 'லேடி இந்தியன்’ பாட்டி மட்டும் கடைசி வரை நம்பவில்லை!

''ஆங்! மிட்டாய் கொடுத்து ஏமாத்தலாம்னு பாக்கறீங்களா? எட்டப் போங்க... வீடெல்லாம் தர முடியாது... முதல்ல எம்.எல்.ஏ-வை வரச் சொல்லு... பேசிக்கறேன்'' என்று திரும்பக் கூச்சலிட ஆரம்பித்தவரைச் சமாதானப்படுத்தி 'சகஜ’ நிலைக்குக் கொண்டுவருவதற்குள் மண்டை காய்ந்துவிட்டது!

- விகடன் குறும்பு டீம்: ஏ.உபைதுர் ரஹ்மான், பி.செந்தில்நாயகம், எஸ்.ரகோத்தமன், கே.ராஜசேகரன்