Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 5

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 5

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
##~##

  வாணவேடிக்கை

'சமூகம் என்பது நான்கு பேர்.’

- ஜெயகாந்தன்

5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும்.

திருவாளர் மகனார் திருப்பள்ளி எழுச்சி முடிந்து, நீராடி, உண்டு, உடுத்தி, பள்ளிக்குக் கிளம்புகையில், வீடு போர்க்களமாக மாறி இருக்கும். அரை மணி நேரத்துக்குள் அவனை ஹோம்வொர்க் எழுதவைத்து, குளிக்கவைத்து உணவு ஊட்டித் தயார்ப்படுத்தும் மனைவியைப் பார்த்து இவனுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

'பேசாம நைட்டே யூனிஃபார்ம் போட்டுப் படுக்கவெச்சிறேன். உனக்கும் ஈஸியா இருக்கும்; ஸ்கூலுக்கும் சீக்கிரம் போலாம்’ என்று இவன் தன் மனைவியைக் கிண்டல் செய்வான்.

மேற்சொன்ன காலைப் பரபரப்பில் யாராவது நண்பர்களைச் சந்திக்கவேண்டி இருந்தால், இவன் வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவுக்கு வரச் சொல்வான். அன்றும் அப்படித்தான். ஒரு நண்பருக்காக பூங்காவில் காத்திருந்தான்.

காலைச் சூரியனின் இளமஞ்சள் வெளிச்சம், பூங்காவின் இலைகளில் வழிந்துகொண்டிருந்தது. 'வானகமே, இளவெயிலே, மரச்செறிவே...’ என்று கொஞ்ச நேரம் பாரதியாகி மனசுக்குள் கவிதை பாடி, மீண்டும் இவனானான்.

வேடிக்கை பார்ப்பவன் - 5

வெவ்வேறு தோற்றமும், வயதும்கொண்ட ஆண்களும் பெண்களும், மஞ்சள் வெயிலில் நனைந்தபடி நடைப்பயிற்சியில் இருந்தார்கள். இன்னொரு பக்கம் சிறுவர்களுக்கு ஒரு மாஸ்டர் கராத்தே கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார். மற்றோர் இடத்தில் மேட் விரித்து தியான வகுப்பு. பூங்காவின் மைதானத்தில் முதிர் இளம் ஆண்கள் தொப்பையுடன் பேட்மிட்டன் விளையாட்டு. மாநகரத்துக்கு வந்த புதிதில் தெருக்களிலும் பூங்காக்களிலும் வயதான ஆண்கள் இப்பிடி விளையாடுவதைப் பார்த்து இவனுக்கு ஆச்சர்யமாக இருக்கும். சின்னப்பசங்கதானே விளையாடுவாங்க? இவன், தன் கிராமத்தில் பெரிய மனிதர்கள் விளையாடிப் பார்த்ததே இல்லை.

சிறுவயதில் முதன்முதலில் பஞ்சாயத்து தொலைக்காட்சிப் பெட்டியில் கிரிக்கெட் பார்த்தபோது கவாஸ்கரையும் கபில்தேவையும் பார்த்து, 'இவ்வளவு வயசாகியும் வெளையாடிட்டு இருக்காங்களே! வீட்ல திட்ட மாட்டாங்களா!’ என்று இவன் ஆச்சர்யப்பட்டிருக்கிறான். போகப்போக அது பழகிவிட்டது.

மண்ணில் உதிர்ந்துகிடந்த பாதாம் மரத்தின் பேரிலை ஒன்று, வெயிலில் தகதகப்பதையும், அதில் ஓர் எறும்பு ஊர்ந்துசெல்வதையும் இவன் பார்த்துக்கொண்டிருந்தபோது, 'சார் வணக்கம்’ என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான்.

''என் பேரு கல்யாணராமன். பேங்க்ல வேல செய்றேன். வாராவாரம் விகடன்ல நீங்க வேடிக்கை பார்க்கிறதை நானும் வேடிக்கை பார்த்துட்டுத்தான் இருக்கேன். கொஞ்சம் பேசலாமா?'' என்றபடி சிமென்ட் பெஞ்சில் இவன் பக்கத்தில் அமர்ந்தார். அவருக்கு 50 வயது இருக்கும்; தோற்றத்தில் பழைய நடிகர் பாலையா போல் இருந்தார்.

''சொல்லுங்க சார்'' என்றான்.

''நல்லாதான் எழுதுறீங்க. ஆமா... என்ன எழுதுறீங்க, சுயசரிதையா?''

''அப்படியும் வெச்சுக்கலாம் சார்.''

''அப்படியும் வெச்சுக்கலாம்னா... அனுபவக் கட்டுரைகளா?''

''கட்டுரைனும் சொல்ல முடியாது... என் தொண்டையில நிறைய மீன் முள் சிக்கிக்கிட்டு இருக்கு. அதை ஒண்ணு ஒண்ணா எடுக்கிற முயற்சினு சொல்லலாம்!''

''அப்ப சிறுகதை எழுதுறீங்க!''

வேடிக்கை பார்ப்பவன் - 5

''நம்ம வாழ்க்கையே ஒரு சிறுகதைதானே சார்.  'நெருந  லுளனொருவ  னின்றில்லை யென்னும் பெருமை யுடைத்திவ் வுலகு’ னு வள்ளுவரே சொல்லியிருக்கார்.'

''அப்படினா?''

''நேத்து இருந்தான்; இன்னைக்கு இல்ல. அதுதான் இந்த உலகத்தோட பெருமை. இதைவிட ஒரு சிறந்த சிறுகதை இருக்க முடியுமா சார்?'

''அது சரி... 'உடல் வளர்த்தேன்; உயிர் வளர்த்தேன்’னு சொன்னது யாரு?''

''திருமூலர்.''

''அதான் டெய்லி ஒரு மணி நேரம் பார்க்ல வாக்கிங் போயிட்டு இருக்கேன்.''

இதற்குள் இவன் அலைபேசியில் நண்பரின் அழைப்பு. 'போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டிருப்பதால், வருவதற்கு 20 நிமிடங்கள் ஆகும்’ என்று நண்பர் சொல்ல, கல்யாணராமன் அடுத்தகட்ட உரையாடலுக்கு ஆயத்தமானார்.

''சார் உங்களை டிஸ்டர்ப் பண்ணலயே?''

''ஐயோ..! அதெல்லாம் இல்ல சார். சும்மாதான் ஒரு ஃப்ரெண்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்'' என்றான் இவன்.

''அப்ப கொஞ்சம் பேசலாம். இப்படி இலக்கியம் பேசி ரொம்ப நாளாச்சு. 'எழுத்து’ங்கிறது என்ன சார்?''

இவன் யோசித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரே தொடர்ந்தார்.

''ஒரு நம்பிக்கையை நெஞ்சுல விதைக்கணும். 'விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்குவதில்லை’ எங்கேயோ படிச்சது. அப்படியே புல்லரிக்குது பாருங்க. இன்னொண்ணு சொல்றேன். 'வேர்வை சிந்து... வேர் ஊன்றுவாய்!’ உழைப்போட அருமையை எவ்வளவு அழகாச் சொல்லியிருக்கான் பாருங்க. இப்படி நீங்களும் வாசகர்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கணும்.''

'கொடுத்துருவோம் சார்.''

''இப்படி நம்பிக்கை, உழைப்பு, காதல்னு கலந்துகட்டி எழுதணும். நீங்க காதலிச்சிருக்கீங்களா?''

''ஸ்கூல் டேஸ்ல ஒன் சைடா சார். அதுவும் சொல்லாத காதல்!''

''சொல்லாத காதல்னா?''

''தூரத்துல இருந்து பார்க்கிறது, தூங்காம நெனைச்சுக்கிறது, பேசாமத் தவிக்கிறது.''

''அடப் பாவமே! எழுத்தாளன்னா அடிக்கடி காதலிக்கணும் சார். அடுத்த வாரமே காதலைப் பற்றி எழுதுறீங்க. காதலிக்கலைனாலும் பரவாயில்ல, கற்பனையா ஒரு கதை சொல்லுங்க சார். ஒரு பொண்ணும் நீங்களும் தீவிரமா லவ் பண்றீங்க. கோயில்ல பார்த்தீங்க, பஸ் ஸ்டாண்ட்ல பேசுனீங்க, கவிதையாத் தொடருது உங்க காதல். அப்ப திடீர்னு குடும்பக் கட்டாயத்துல அந்தப் பொண்ணை சிங்கப்பூர் மாப்பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிவெச்சிடுறாங்க. கல்யாண ரிசப்ஷன்ல நினைவுப்பரிசு கொடுத்துட்டு, நீங்க நடந்து போறீங்க. உங்க கண்ணுலயும் ஒரே ஒரு நீர்த்துளி; அவ கண்ணுலயும் ஒரே ஒரு நீர்த்துளி. 'அந்தக் கண்ணீர்த்துளிகூட ஒன்றுசேர முடியாமல் கீழே விழுந்து கரைந்தது’னு முடிங்க சார். படிக்கிறவனும் அழுதுருவான்ல.''

கல்யாணராமன் சார், இவனுக்கு டைவர்ஸ் வாங்கிக் கொடுத்துவிடுவார் என்று தீர்மானமாகத் தெரிந்தது.

''என் வொய்ஃபும் விகடன் படிக்கிறாங்க சார்'' என்றான்.

''அப்ப காதல் வேணாம். சென்டிமென்ட் பக்கம் வாங்க. ஒருவாரம் கோயில் வாசல்ல உக்காந்து பிச்சை எடுக்குறீங்க...''

இவன் இடைமறித்து, ''சார் எங்க குடும்பம். மிடில் க்ளாஸ்தான். ஆனா, கோயில் வாசல்ல பிச்சை எடுக்கிற அளவுக்கு நான் கஷ்டப்படல' என்றான்.

''ஒரு வாரம்தானே சார். உங்க தட்டுல யாருமே காசு போடல. பக்கத்துல இருக்கற ஒரு தொழுநோயாளி அம்மா உங்களுக்கு சாப்பாடு வாங்கித் தர்றார். எவ்வளவு நெகிழ்ச்சியா இருக்கும்?''

வேடிக்கை பார்ப்பவன் - 5

''சார், இந்தப் பிச்சை எடுக்கற மேட்டர் மட்டும் வேணாம்...'

''அப்ப ஒண்ணு பண்ணுவோம். ரயில்வே ஸ்டேஷன் சிமென்ட் பெஞ்ச்ல உக்காந்து இருக்கீங்க. பக்கத்துல ஒரு பூவரசு மரம், தூரத்துல ஒரு இளம் தாய் அழுதிட்டு இருக்கா. அவ கண்ணுல, பல பெண்களோட கண்ணீரை நீங்க பார்க்கறீங்க. 'அந்த அழுகை எப்ப கோபமா மாறும்?னு கேட்கிறீங்க.''

''இத வேணா டிரை பண்றேன் சார்'' என்றான்.

''இப்படித்தான் சார், 'எழுத்து’ங்கிறது ஒரு நம்பிக்கை, ஒரு தேடல், ஒரு நட்பு, ஒரு பரிவு, ஒரு காதல், ஒரு காமம், ஒரு துரோகம்...'' என்று ஏகப்பட்ட 'ஒரு’க்களை அவர் தொடர்ந்துகொண்டிருக்க, அவரிடம் இருந்து ஒரே ஒரு 'ஒரு’வை மட்டும் கடன் வாங்கி 'ஒரு நிமிஷம் சார்’ என்று நண்பரின் அலைபேசி அழைப்பை எடுத்துப் பேசி, அமர்ந்திருந்த இடத்துக்கு வரச்சொன்னான்.

கல்யாணராமன் சாரைப் பார்த்து ''சார், நான் ஒரு கவிதை சொல்லலாமா?'' என்றான்.

''தாராளமா...'' என்றார்.

''எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய கவிதை சார் இது. என் ஞாபகத்தில் இருந்து சொல்றேன்.''

''சொல்லுங்க சார்...''

''உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப்  புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு''

கல்யாணராமன் சார் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். சட்டென 'சாரில்’ இருந்து தம்பிக்கு மாறி, ''ரொம்ப ரொம்ப நல்ல கவிதை தம்பி. அப்படியே அலேக்காத் தூக்கி என் பார்வையை மாத்திப் போட்ருச்சு. உண்மைதான்... அவங்க அவங்க வாழ்க்கையை, அவங்க அவங்க அனுபவத்தை, அவங்க அவங்கதான் எழுதணும்'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்லியபடி, அவரது தோளில் மாட்டியிருந்த ஜோல்னா பையில் இருந்து வாட்டர் பாட்டில் ஒன்றை எடுத்து பிளாஸ்டிக் கப்பில் ஊற்றி இவனிடம் நீட்டினார்.

''குடிங்க தம்பி'' என்றார்.

''என்னது சார்?'' என்றான்.

''அருகம்புல் ஜூஸ் தம்பி. உடம்புக்கு நல்லது. அடுத்த வாரத்திலேர்ந்து தெம்பா வேடிக்கை பார்க்கலாம். அப்ப நான் கிளம்பறேன். மறுபடியும் சந்திக்கலாம்'' என்று விடைபெற்று நடந்து போனார்.

இவன், அவர் செல்வதையும், தூரத்தில் இவன் நண்பர் வருவதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

- வேடிக்கை பார்க்கலாம்...