Published:Updated:

ஆறாம் திணை - 63

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை - 63

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
##~##

 டந்த வாரம், பன்னாட்டு சித்த மருத்துவ மாநாட்டில் உரையாற்ற கோலாலம்பூர் பயணம். ''பன்னாட்டு உணவுகளை வரிந்துகட்டிச் சாடுகிறீர்களே... இட்லி, தோசை, கம்பங்கூழ்... இவற்றைத் தாண்டி எதையும் சாப்பிடக் கூடாதா?'' என்று அங்கும் பிலுபிலுவென பிடித்துக்கொண்ட சில நண்பர்கள், ''இன்று இரவு உங்களுக்கு  'மீ ஹோன்ங் சூப்’தான் சாப்பாடு!'' என்றனர். ஜாக்கி சான் பட வில்லன் போல ஒலித்தாலும், சூப்  சுவையாகவே இருந்தது.

இடியாப்பத்துக்கும் நூடுல்ஸுக்கும் நடுவில், ஒல்லியான சேமியா போல் இருக்கும் வஸ்துவை 'மீ’ என்கிறார்கள் சீனர்கள். அந்த மீ-யுடன், கட்டைவிரல் அளவுக்கு வளர்ந்த முளைகட்டிய பாசிப்பயறு, நம் ஊரில் அடைப்பிரதமன் பாயசத்துக்குப் போடும் வெந்த அரிசியடை, 'தோஃபு’ எனும் சோயா பன்னீர், பிராக்கோலி துண்டுகள், வெங்காயத்தாள், கொத்துமல்லி இலை இதையெல்லாம் ஒரு குவளையில் போட்டு, எதிரே ஒரு பானையில் காய்கறி சூப்பை வைத்து, ''டாக்டர், இந்தப் பானையில் இருந்து சூப்பை உங்கள் குவளையில் ஊற்றிக் குடியுங்கள்'' என்றனர். அற்புதமான சுவை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விருந்து முடிந்து கிளம்புகையில், சூப்பைத் தயாரித்த சீனப் பாட்டிக்கு நன்றி சொன்ன போது, அந்தப் பாட்டி சொன்னதை நண்பர் மொழிபெயர்த்தார். ''நீங்க ரசிச்சுச் சாப்பிட்ட இந்த சூப், உடம்புக்கு நல்லது. சாப்பாட்டுல கவனமா இருந்தா உடம்புக்கு நோய் வராதுனு நம்புறவங்க நாங்க. நீங்க சாப்பிட்ட சூப்ல கம்போ மருந்துகள் (சீன ஜப்பானிய பாரம்பரிய மருத்துவம்) சேர்ந்திருக்கு. இந்த மீ-யில் கெமிக்கல்ஸ் இல்லை. இரவு நீங்க உறங்கச் செல்வதற்குள் ஜீரணமாகிடும். இந்த உணவே மருந்து!'' என்றார்.

ஆறாம் திணை - 63

விடுதிக்கு வரும் வழியில், வழியெல்லாம் உணவகத்தில் 'மீ சவான்’, 'மீ கோரிங்’... என சீன நூடுல்ஸ் உணவுகளின் படங்களை வண்ண வண்ண விளக்குகளில் அலங்கரித்திருந்தார்கள்.

பொதுவாக, சீனர்கள் உணவுப் பிரியர்கள். கிட்டத்தட்ட 35 ஆயிரம் உணவு வகைகள் சீனாவில் இருக்கின்றனவாம். அனைத்துவிதமான பழங்கள், காய்கறிகள், தானியங்களையும் வற்றலாக, மிட்டாயாக ஆக்குவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். மீன் வற்றல், நண்டு வடாம், இறால் அப்பளம், உலர்கொய்யா மிட்டாய், பப்பாளி சூயிங் கம், புளி கம்மர்கட்... இவற்றுடன் சித்த மருந்துகளான இஞ்சித் தேனூறலும் நெல்லிக்காய் தேனூறலும்கூட அங்கே இருந்தன. வீட்டிலேயே செய்யக்கூடிய இஞ்சித் தேனூறல், 'மைக்ரேன்’ எனும் ஒற்றைத் தலைவலி வராமல் காக்கக்கூடியது. நெல்லிக்காய் தேனூறல், அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து. (இவற்றின் செய்முறை பெட்டிச் செய்தியில்)

சீனா, தாய்லாந்து, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா... போன்ற நாடுகளுக்கு இடையே இருந்த உணவு-மருத்துவக் கலாசாரப் பரிமாறல்கள் ஏராளம். காப்புரிமை பஞ்சாயத்துகள் வரும் முன்னரே, பல விஷயங்கள் அங்கும் இங்கும் பரிமாற்றம் நிகழ்ந்திருக்கின்றன.

'ஜாவா டீ’ மலேசியக் கடைகளில் பிரபலம். 'உடல் உறுதிக்கு, சர்க்கரை நோய்க்கு, சிறுநீரகக் கல்லுக்கு சிறந்த மருத்துவ உணவு’ என சொல்லி விற்கப்படும் அந்தத் தேநீரை வாங்கிப் பார்த்தால், 'மிசாய் குச்சிங்’ என்று மலாய் மொழியில் எழுதியிருந்தது. இது பற்றி மலாய் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, ''மிசாய் என்றால் மீசை, குச்சிங் என்றால் பூனை'' என்றார். 'நம்ம ஊர் மூலிகைப் பூனை மீசையா?’ என ஆர்வத்துடன் விசாரித்தால், சாட்சாத் இரண்டும் ஒன்றுதான்.

துளசிச் செடி போலவே இருக்கும் அந்த மூலிகைப் பூனை மீசை, சர்க்கரை வியாதியில் வரும் ஆரம்பகட்ட சிறுநீரக நோய்களுக்குப் பயனளிக்கும் ஒரு மூலிகை. 4000, 5000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த இரு நாடுகளுக்கு இடையே தொன்றுதொட்டே ஒரு பாரம்பரியப் புரிதல் இருந்திருக்கிறது. சோழர் காலத்தில் சென்றிருக்கலாம் அல்லது லெமூரியக் குடிகளின் அறிவுச் சொத்தாக இருந்திருக்கலாம்.

வணிக இரைச்சலில் ஓரமாக ஒடுங்கி வயோதிகச் சுருக்கங்களில் ஒளிந்திருக்கும் பாரம்பரிய அறிவையும், அக்கறைகளையும் மீட்டெடுத்துப் பயனாக்குவது, பின்னாளில் சில இறுக்கமான நோய்ப்பிடியிலிருந்து நம்மை விடுவிக்க நிச்சயம் வழிவகுக்கும்!

- பரிமாறுவேன்...

இஞ்சித் தேனூறல் - நெல்லிக்காய் தேனூறல்

இஞ்சித் தேனூறல் செய்ய, இஞ்சியின் மேல்தோலைச் சீவி நீக்கிவிட்டு, பின் சிறு கீற்றுகளாக நறுக்கி, தேனில் ஊறவைக்கவும். நெல்லிக்காய்த் தேனூறலுக்கு, நெல்லிக் காயின் கொட்டையை நீக்கிவிட்டு, சதைப் பகுதியை சிறு பூண்டுகளாக நறுக்கி, லேசாக உலர்த்திய பின் தேனில் ஊறவைக்கவும். சிலர் நெல்லியை சில நிமிடம் மட்டும் ஆவியில் வேகவைத்த பின்னரும் தேனில் ஊற வைப்பர். எளிதில் புளித்துவிடும் என்பதால், அவ்வப்போது குறைந்த அளவில் செய்வது சிறப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism