Published:Updated:

ஒரு தண்டர்பேர்ட், ஒரு நெடும்பயணம்! - ஒரு toll free ஊர்சுற்றியின் கதை

தார்மிக் லீ
ஒரு தண்டர்பேர்ட், ஒரு நெடும்பயணம்! - ஒரு toll free ஊர்சுற்றியின் கதை
ஒரு தண்டர்பேர்ட், ஒரு நெடும்பயணம்! - ஒரு toll free ஊர்சுற்றியின் கதை

ராயல் என்ஃபீல்டு என்றாலே கண்முன் வந்து நிற்பது கௌதம் மேனன்தான். ஆனால் அதைவைத்து இந்தியா முழுவதும் ஊர் சுற்றும் ரோகித் அஷோக்கைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? டோல்ஃப்ரீ ட்ராவலர் என்ற பெயரில் காடு மலை எல்லாம் சுற்றி வாழ்க்கையை அனுபவிக்கிறார் ரோகித். அவரின் ஷோக்காளி ஸ்டோரியை ஷேர் செய்யச் சொல்லிக் கேட்டோம்.

''உங்களைப் பற்றி சொல்லுங்க பாஸ்?''

''என்னோட சொந்த ஊர் சென்னைதான். எனக்குச் சின்ன வயசுலிருந்தே பைக் மேல பயங்கர கிரேஸ் இருந்துச்சு. இது எல்லாமே என்னோட அப்பாகிட்ட இருந்துதான் எனக்கு ஒட்டிக்கிச்சு. எனக்கு சின்ன வயசா இருக்கும்போதே ஃபேமிலியோட நிறைய இடத்துக்கு ரோட் ட்ரிப் போயிருக்கோம். திடீர்னு ப்ளான் பண்ணி காரை எடுத்துட்டு கோவாவுக்கு போறது, அப்படியே அங்கிருந்து வேற எதாவது ஒரு ஊருக்குப் போறதுன்னு எங்கேயாவது சுத்திக்கிட்டேதான் இருப்போம். ஸ்கூல் முடிச்சிட்டு புனேவுல படிச்சேன். அப்புறம் மும்பையில ஒரு 5 வருஷம் வேலை பார்த்தேன். அங்கிருந்து சென்னைக்கு வரும்போது பைக்லேயே வந்துட்டேன். அப்படி வந்தது எனக்கு ரொம்பவே புது அனுபவமா இருந்துச்சு. அப்புறம்தான் இந்தியா ஃபுல்லா ஜாலியா ஒரு விசிட் போயிட்டு வரலாம்ன்னு முடிவு பண்ணேன். அங்க நான் மும்பையில சம்பாதிச்சது எல்லாத்தையும் இதுக்குச் செலவு பண்றேன்.''

''உங்க ரோட் ட்ரிப் அனுபவம் எப்படி இருக்கும்?''

''நான் எங்க ட்ரிப் போனாலும் தனியாதான் போவேன். பசங்களைக் கூட்டு சேர்த்துகிட்டா என்ன நடக்கும்ன்னு நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும்னு இல்ல. இதே, நான் மட்டும் போனா நான்தான் ராஜா. எனக்கு எங்கே வேணுமோ அங்க போகலாம். அவசர அவசரமா ஒரு இடத்துக்குப் போகணும்ன்னு அவசியம் இல்ல. பொறுமையாதான் ஒவ்வொரு இடத்துக்கும் போயிட்டு வருவேன். இப்படி இடங்கள்ல பாக்குற அனுபவம் ஒரு பக்கம் இருந்தாலும் புதுசா நிறைய மக்களைப் பாக்குற அனுபவம் இன்னொரு பக்கம் ஜாலியா இருக்கும். என்னைப் பற்றி அவங்களுக்கு தெரியாது, அவங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம ஒருத்தர்கிட்ட பழகும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். பைக்ல போறதுல பாதுகாப்பு கொஞ்சம் கம்மிதான். ரொம்ப ஜாக்கிரதையாதான் ஒவ்வொரு இடத்துக்கும் போவேன்.'' 

''மறக்க முடியாத மக்கள் யாரையாவது மீட் பண்ணீங்களா?''

''நான் போற வழியில பாக்குற யாரையுமே என்னால மறக்க முடியாது. குறிப்பிட்டுச் சொன்னா... நான் பைக்ல போகும்போது என்னை மாதிரியே ராயல் என்ஃபீல்டுல ஒருத்தர் ரோட் ட்ரிப் போயிட்டு இருந்தார். என்னைப் ரோட்டுல பார்த்ததும் ஒரு ஹாய் சொல்லி டீக்கடையில நின்னு ஜாலியா கொஞ்சநேரம் அரட்டை அடிச்சிட்டு என்கூட ஒரு 50 கி.மீ ட்ராவல் பண்ணி வந்தார். அப்புறம் அவர் இடம் வந்தவுடனேயே ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் பால் வாக்கர், வின் டீசல் மாதிரி ரெண்டு பேரும் வேற வேற ரூட்டை எடுத்துப் போயிட்டோம். இதே மாதிரி கலிம்போங்ல தங்குறதுக்கு எங்கேயாவது இடம் இருக்கான்னு பார்த்துகிட்டே போயிட்டிருந்தேன். அப்போ பைக்ல எனக்கு முன்னாடி போயிட்டிருந்த ஜோடிகிட்ட 'பக்கத்துல எங்கயாவது ஹோட்டல் இருக்கான்னு' கேட்டேன். 'என் பின்னாடியே வாங்க'னு சொல்லி அவங்க வீட்டுக்கே கூட்டிட்டுப் போயிட்டாங்க. அங்க ரெண்டு நாள் இருந்து பார்த்த விஷயங்கள் எல்லாமே ரொம்ப அழகா இருந்தது. அந்த ஊர் சாப்பாடு, அங்க இருக்குற கோவில், அந்த ஊர் மக்கள்ன்னு என்னையும் அந்த ஊர்ல ஓர் ஆளாதான் எல்லாரும் பார்த்தாங்க. ரெண்டு நாள் கழிச்சு அந்த இடத்தை விட்டுப் போறதுக்கு மனசே இல்லாம கிளம்புனேன்.'' 

''உங்களுக்குப் பெர்சனலா பிடிச்ச இடம்?''

''எனக்குப் பெர்சனலா பிடிச்ச இடத்துக்கு மட்டும்தான் நான் போவேன். எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரைப் பத்தி நல்லா தெரிஞ்சிகிட்டுதான் போவேன். அதுமட்டுமில்லாம அந்த ஊர் மக்கள்கிட்ட பக்கத்துல எந்த இடம் நல்லா இருக்கும்னு கேட்டு ஒரு இடம் விடாம எல்லா இடத்துக்கும் போயிட்டு வந்துருவேன். பெர்சனலா எனக்கு பிடிச்ச இடம்னு சொன்னா... இப்போ நான் அருணாச்சல பிரதேசத்துல போமிடிலான்னு ஒரு இடத்துல இருக்கேன். எனக்கு இந்த இடம் கூட ஃபேவரைட்தான் பாஸ்.'' 

''அடுத்தது என்ன... வேற நாட்டுக்கு ட்ரிப்பா?''

''ஹா ஹா... அதெல்லாம் இல்லை. இன்னும் ரெண்டு நாள்ல இங்கிருந்து இன்னொரு இடத்துக்குப் போறேன். அங்கிருந்து நேரா வீட்டுக்குத்தான். என்ன ப்ளான்னு அங்க போயிட்டுதான் யோசிக்கணும். அதுக்கு நடுவுல என்னோட ட்ராவல் ப்லாக்கை டெவலப் பண்ணலாம்ன்னு இருக்கேன். என்னை மாதிரியே நிறைய பேர் ரோட் ட்ரிப் போவாங்க. அவங்களுக்கு அட்வைஸ் பண்ற விதமா வீடியோஸ், டிப்ஸ் எல்லாம் போடலாம்னு இருக்கேன். எந்த ஊர்ன்னு முடிவு பண்ணிட்டு மொதல்ல உங்களுக்கு போன் பண்றேன்'' என சொல்லிவிட்டு மறுபடியும் ட்ரிப் கிளம்பிவிட்டார் இந்த டோல் ஃப்ரீ ட்ராவலர்.