Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 6

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 6

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
##~##

வயதென்னும் ரயில் வண்டி

'அந்த மாபெரும் வெற்றிடத்தில்
முன்னும் இல்லை, பின்னும் இல்லை
பறவையின் பாதை
கிழக்கையும் மேற்கையும்
அழித்துவிடுகிறது.’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

                                     - ஜென் தத்துவம்

பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிடங்களே இருந்தன. எக்மோர் வந்து இறங்கி, ஸ்டேஷன் வாசல் சங்கீதாவில் சப்பாத்தி குருமாவும் தயிர்சாதமும் வாங்கிக்கொண்டு, பிளாட்ஃபார்ம் கண்டுபிடித்து, இவன் வண்டியை அடைவதற்கு இரண்டு நிமிடங்களே மிச்சம் இருந்தன.

நடைபாதைக் கடையில், வாழைப்பழமும் தண்ணீர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு திரும்புகையில், ஒரு ராட்சஸ உலோகப் பாம்பாக, இவன் வண்டி தண்டவாளத்தில் ஊர்ந்துகொண்டிருந்தது. நகரத் தொடங்கியிருந்த வண்டியின் கூடவே ஓடி, இவன் பெட்டியைத் தேடி இருக்கையில் அமர்ந்தான். அதிர்ஷ்டவசமாக இந்த முறை இவனுக்கு ஜன்னல் இருக்கை கிடைத்திருந்தது.

வேடிக்கை பார்ப்பவன் - 6

பேருந்தோ, புகைவண்டியோ, ஜன்னல் ஓர இருக்கை என்பது இவனது தீராக் காதல். ஆனால், தொண்ணூறு சதவிகிதப் பயணங்களில் வேறு யாரோ அங்கு அமர்ந்து, வண்டி கிளம்பியதுமே தூங்கி வழிந்துகொண்டிருப்பார்.

பார்ப்பதற்கு நிறையக் காட்சிகளும், படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்களும்,  பழகுவதற்கும் பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும், இந்த ஜன்னல் ஓரத்து இருக்கையிலேயே வசித்துவிட இவனுக்குச் சம்மதம். ஆயினும்...

'போய்க்கொண்டும்
வந்துகொண்டும்
இருக்கும் பேருந்துகள்
திருவிழாவுக்குத் திருவிழா

வெளியே வரும் தேர்’  - கவிஞர் விக்ரமாதித் யனின் கவிதையைப் போல எப்போதாவது வந்தால்தான் ஊர்வலம். எப்போதும் வந்தால் அதில் என்ன ஆச்சர்யம்! தினம் தினம் வந்து கொண்டிருந்தால் வானவில்லை யார் அண்ணாந்து பார்ப்பார்கள்?

இந்தப் பயணம்கூட மதுரையில் ஒரு நண்பரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக கடைசி நேரத்தில் முடி வானதுதான். சாவகாசமாக இவனது லெதர் பேக்கை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு, நிமிர்ந்தபோதுதான், இரண்டு விஷயங்களைக் கவனித்தான். ஒன்று, ரயில் வழக்கமாகச் செல்லும் திசையில் இல்லாமல் பின்பக்கமாக எதிர் திசையில் சென்றுகொண்டிருந்தது. இரண்டு, இவனைத் தவிர, அந்தப் பெட்டியில் யாருமே இல்லை!

வேடிக்கை பார்ப்பவன் - 6

எல்லோரும் கடைசி நேரத்தில் வண்டியைத் தவறவிட்டுவிட்டார்களா? அது எப்படிச் சொல்லிவைத்தாற்போல் எல்லோரும் தவறவிடுவார்கள். இவன் இருக்கையைவிட்டு எழுந்து, எல்லா இருக்கைகளையும் சென்று பார்த்தான். அந்தப் பெட்டியிலேயே யாரும் இல்லை. 'பாண்டியன் எக்ஸ்பிரஸில்தான் ஏறியிருக்கிறோமா?’ என்று இவனுக்குச் சந்தேகம் வந்தது. பிளாட்ஃபார்ம் எண் பார்த்து, பெயர்ப் பலகை பார்த்து, எதிரில் சென்றுகொண்டிருந்த டி.டி.ஆர். ஒருவரிடம் விசாரித்துத்தானே வண்டியில் ஏறினான்?!

குழப்பத்துடன் மீண்டும் இவன் இருக்கைக்கு வந்தபோது, எதிர் இருக்கையில் ஒருவர் அமர்ந்திருந்தார். இவனைப் பார்த்து புன்னகையுடன் ''வணக்கம்'' என்றார். இவனும் வணக்கம் சொல்லிவிட்டு, ''சார் இது பாண்டியன் எக்ஸ்பிரஸ்தானே? இந்தப் பெட்டியில் யாருமே இல்லையே...'' என்றான்.

''இந்தப் பெட்டியில் மட்டுமில்லை, இந்த ரயில் முழுக்கவும் யாரும் கிடையாது. ஏன்னா, இது 'கால ரயில்''’ என்றார் அவர்.

இவன் அச்சத்துடன், ''கால ரயிலா? அப்படின்னா எந்த ஊருக்குப் போகுது?'' என்றான்.

அவர் மீண்டும் புன்னகைத்தபடி, ''எந்த ஊருக்கும் போகாது. இது கடந்தகாலத்துக்கும், எதிர்காலத்துக்கும் மாறி மாறிப் பயணிக்கிற வண்டி. இப்ப நாம இருக்கிறது நிகழ்காலப் பெட்டி'' என்றார்.

இவனது அச்சம் அடிவயிற்றில் அமிலமாகவும்,    கைகால்களில் நடுக்கமாகவும் உருமாறத் தொடங்கியிருந்தது. நடுக்கத்துடன், ''சார் நீங்க யாரு?'' என்றான். இவன் குரல் இவனுக்கே கேட்கவில்லை.

''நானா..? கடவுள்!'' என்றார் அதே சிரிப்புடன்.

இப்போது அச்சத்துடன் திகிலும் இனம்புரியாத ஒரு பரபரப்பும் இவனை ஆட்கொண்டது. அவரை மேலும் கீழும் பார்த்தான். அவரது தோற்றத்தை வர்ணிக்க மனசுக்குள் வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, அவரே தொடர்ந்தார்.

''என்னை வர்ணிக்க வீணா முயற்சி பண்ண வேண்டாம். பல நூற்றாண்டுகள், பல கவிஞர்கள், என் தோற்றத்தை வெவ்வேறு விதமாக வர்ணிச்சுப் பார்த்துட்டாங்க. நான் இருப்பதில் இல்லாதவன்; இல்லாதவற்றில் இருப்பவன். எனக்கு முதலும் இல்லை... முடிவும் இல்லை.''

இப்போது இவனுக்கு அவரை 'சார்’ என்று அழைப்பதா, 'ஐயா’ என்று அழைப்பதா அல்லது 'சாமி’ என்று அழைப்பதா... என்று குழப்பமாக இருந்தது.

''என்னை எதுக்கு இந்த வண்டியில ஏத்தினீங்க?'' என்றான் பொதுவாக.

''ஏன்னா நீ ஒரு கவிஞன். எனக்கு குழந்தைகளையும் கவிஞர்களையும் ரொம்பப் பிடிக்கும்!''

இவன் கொஞ்சம் பயம் குறைந்து, அவரை பக்தியுடன் பார்த்தான்.

''நீ கவிஞன்கிறது மட்டும் காரணம் இல்லே. சாதாரணமா எல்லாரும் எப்போ கடந்தகால நினைவுகளுக்குப் போவாங்க?'' என்று கேட்டார்.

பதற்றத்தில் இவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவரே பதில் சொன்னார். ''எல்லோருக்கும் கல்யாண வீடு, மரண வீடு, பண்டிகை, விழாக்கள்... போன்றவற்றில் உறவினர்களையோ, பால்ய கால நண்பர்களையோ சந்திக்கும்போது, பழைய கால ஞாபகம் பளிச்னு நினைவுக்கு வரும்.''

சரிதான் என்று இவனும் ஆமோதித்தான்.

''ஆனா நீங்க கவிஞர்கள், படைப்பாளிகள் என்ன பண்றீங்க? ஒவ்வொரு நாளும் கூடுவிட்டுக் கூடு பாயிற மாதிரி, கடந்தகால நினைவுகளுக்குப் போயிட்டு வர்றீங்க. அந்த அனுபவக் கிடங்குகள்தான் உங்க படைப்புகளுக்கான கச்சாப்பொருள்!''

வேடிக்கை பார்ப்பவன் - 6

இவன் பிரமிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான்.

''அப்படி ஒவ்வொரு முறையும் நீங்க கடந்த காலத்துக்குப் பயணிக்கிறப்போ, காட்சிகள் சரியாப் பிடிபடாம, வார்த்தைகள்ல கொண்டு வரக் கஷ்டப்படுறதை நான் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். அதுக்காகத்தான் இந்தக் கால ரயில். கவிஞர்களுக்காகவே தயாரிக்கப்பட்டது. ஏன்னா... கவிஞர்கள் காலத்தின் கண்ணாடிகள்!''

இவன் பிரமிப்புடன், ''இந்த ரயில்ல என்ன விசேஷம்?'' என்று கேட்டான்.

''இடது பக்கம் போனா ஒவ்வொரு பெட்டியும் கடந்தகாலத்துக்குக் கூட்டிட்டுப் போகும். முதல் பெட்டியில் ஐந்து வயது வரை உன் மனசுல பதிந்த காட்சிகளைப் பார்க்கலாம். அடுத்த பெட்டி ஐந்தில் இருந்து பத்து வயசு வரை... இப்படி உன் நிகழ்கால வயசு வரைக்கும் உன் மனசுல இருக்கிற கடந்தகாலக் காட்சிகளை நீ திரும்பவும் பார்க்கலாம். வா போகலாம்'' என்றபடி கடவுள் எழுந்து நடக்க, இவன் பின்தொடர்ந்தான்.

முதல் பெட்டிக்குள் நுழைந்தார்கள். முதல் ஐந்து வயது வரை ஞாபகங்கள், கலைடாஸ்கோப் புக்குள் நுழைந்த வளையல் துண்டுகளைப் போல, இவனுக்கு வெவ்வேறு தோற்றங்களைக் காட்டின. சிறுகுழந்தையாகத் தவழ்ந்தபடி ஒரு கட்டெறும்பின் பின்னால் சென்றுகொண்டிருக்கிறான். அந்த எறும்பு, தாழ்வாரத்தைக் கடந்து சுவரில் ஏறுகிறது. இவனும் சுவரில் ஏற முயற்சித்து தலைகுப்புற விழுந்து அழுகிறான். யாரோ ஒரு பாட்டி ஓடிவந்து இவனைத் தூக்கி, வெற்றிலைக் கரையுடன் முத்தம் கொடுக்கிறார். அந்தப் பாட்டியை இவன் எங்கோ பார்த்திருக்கிறான். இது இவன் வீடுதானா? முதலில் இது இவனேதானா? ஏதோ ஒரு கோயில் திருவிழா. பட்டுப்பாவாடை சட்டையுடன் ஒரு சிறுமி ஓடுகிறாள். இவன், அவளது கொலுசு வேண்டும் என்று அடம்பிடிக்கிறான். முதுகில் சுளீர் என்று அடி விழுகிறது. வித்தைகாட்டுபவன் ஒரு கரடியுடன் நுழைகிறான். கதவுக்குப் பின்பக்கம் ஒளிந்தபடி, அந்தக் கரடியையும், அது செய்யும் வித்தைகளையும் இவன் பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

இப்படி ஒவ்வொரு காட்சியாக கொலாஜ் ஓவியம்போல் எதிரே தெரிந்துகொண்டிருக்க, இவன் அம்மா இறந்துபோன நான்காம் வயதை அவசரமாகக் கடந்தபடி, ''அடுத்த பெட்டிக்குப் போகலாம்'' என்றான் கடவுளைப் பார்த்து. இவன் எண்ணத்தைப் புரிந்துகொண்ட கடவுள், ''அவ்வளவு சீக்கிரம் எந்த வலியையும் தாண்டிப் போய்விட முடியாது'' என்று சொல்லியபடி இவனை அடுத்த பெட்டிக்கு அழைத்துச் செல்கிறார்.

ண்பர்களுடன் ஆற்றங்கரையில் கபடி விளையாடிக்கொண்டிருக்கிறான். மூச்சைப் பிடித்தபடி கோட்டைத் தொடுகையில், கீழே விழ இவன் முட்டி பெயர்ந்து ரத்தம் கொட்டுகிறது. நண்பர்கள் மண்ணை அள்ளி, ஊதி ஊதி காயத்தின் மேல் பூசுகிறார்கள். மண்ணின் நிறத்தையும் தனக்குள் உள்வாங்கியபடி ரத்தம் கொட்டிக்கொண்டே இருக்கிறது.

வேறு ஒரு காட்சியில் நீச்சல் தெரியாத இவனை, பையன்கள் கிணற்றில் தள்ளிவிடுகிறார்கள். தண்ணீரைக் குடித்தபடி மூச்சுத் திணறி, மேலே வந்த இவன் தலைமுடியை, செந்தில் பிடித்து இழுத்து படிக்கட்டில் அமரவைக்கிறான். கிணற்றின் செங்கல் பொந்தில் இருந்து, ஒரு பாம்பு எட்டிப்பார்க்கிறது. பள்ளி உணவு இடைவேளையில் கே.எஸ்.சித்ராவுடன்  அப்பா அம்மா விளையாட்டு விளையாடுகிறான். மண்ணில் நீர் குழைத்துச் செய்த இட்லிகளை, அவள் ஆலம் இலைகளில் எடுத்துக் கொடுக்க, இவன் ருசித்துச் சாப்பிட்டு, 'அப்புறம் என்ன பண்ணணும்?’ என்கிறான். 'அப்புறம் என்ன? அப்பா, அம்மாவுக்கு முத்தம் கொடுக்கணும்’ - இவன் மூளைக்குள் முதல் காதலும் முதல் காமமும் எட்டிப்பார்க்கின்றன. கடவுள் ஒரு கள்ளச்சிரிப்பை தன் முகத்தில் தவழவிட்டபடி, இவனை அடுத்த பெட்டிக்கு அழைத்துச் சென்றார்.

ப்போது 10-ம் வகுப்பு படிக்கிறான். பள்ளியின் மைதானத்தில் அசோக மரத்தடியில், இவனுடன் அகஸ்டின் செல்லபாபு, கே.கண்ணன், பாலாஜி... எல்லோரும் அமர்ந்து பொதுத் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவன், ‘I owe to thee my country… I owe to the my country’’ என்று மக்கடித்துக்கொண்டிருக்கிறான். அதைப் பார்த்த பாலாஜி, இவன் தலையில் நங்கென்று குட்டியபடி, 'இப்படியா மக்கடிக்கிறது? எதையும் புரிஞ்சுக்கிட்டுப் படிக்கணும். அப்பத்தான் தெளிவா மனசுல பதியும். உதாரணத்துக்கு H2ன்னா என்ன? ஹைட்ரஜன். O2 ன்னா என்ன? ஆக்ஸிஜன். ரெண்டும் சேர்ந்தா H2O வரும். அதாவது வாட்டர். நாம குடிக்கிற தண்ணி. இப்பப் படி H2 + O2 =H2O’. இவன் சொல்லிப் பார்க்கிறான். மனதுக்குள் உடனே பதிகிறது.

கடவுளுடன் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இவன் கண்களில் நீர் வந்துவிட்டது. இந்த பாலாஜிதான் பின்னாட்களில் 10-ம் வகுப்பு முடித்து, பாலிடெக்னிக் சேர்ந்து, திருமணம் முடித்து, அடுத்த ஆறாவது மாதத்தில் ஒரு விபத்தில் சிக்கி இறந்துபோனவன்.

''டேய் பாலாஜி, இந்தப் பெட்டியிலயே இரு. அடுத்த பெட்டிக்குப் போனா... நீ செத்துப் போயிருவ'' என்று இவன் உரக்கக் கத்தினான். கடவுள் இவன் தோளில் கை வைத்து, ''இந்தக் காட்சியை நீ தள்ளியிருந்து வேடிக்கை பார்க்கத்தான் முடியும். நீ சொல்றது அவனுக்குக் கேட்காது. அப்புறம் இன்னொரு விஷயம்... இது ஏற்கெனவே போடப்பட்ட இருப்புப் பாதை. இங்க யாரோட மரணத்தையும் யாராலயும் தடுக்க முடியாது. வா, அடுத்த பெட்டிக்குப் போகலாம்!'' என்றார்.

அடுத்தடுத்த பெட்டிகளின் காட்சிகளில் இவன் மனம் ஒன்றாமல் ஏனோ பாரமாகவே இருந்தது.

வேடிக்கை பார்ப்பவன் - 6

பிரசன்னா பஸ் சர்வீஸ் புழுதி கிளப்பியபடி வருவது, முதன்முதலில் இவன் கல்லூரிக்குள் நுழைந்தது, இவன் எழுதிய முதல் காதல் கடிதம் கொடுக்கப்படாமல் காத்திருந்தது, கல்லூரி முடித்து சினிமா ஆசையில் சென்னை வந்தது, பாலு மகேந்திரா சாரிடம் உதவி இயக்குநராக உலகப் படங்கள் பார்த்துத் திரிந்தது, எழுத்தாளர் சுஜாதா இவனுடைய 'தூர்’ கவிதையை ஒரு மேடையில் வாசித்துக்காட்டிப் பரவசப்பட்டது, அறிவுமதி அண்ணனுடன் கவியரங்குகளில் கைதட்டல்கள் வாங்கியது, சீமான் அண்ணன் அறிமுகப்படுத்த முதல் பாடல் பதிவானது, இவன் மனைவியைப் பெண் பார்க்கச் சென்றது, அப்போதுதான் பிறந்த அணில் குஞ்சைப் போலிருந்த இவன் மகனை ஒரு நர்ஸ் உள்ளங்கையில் கிடத்தியபோது தன் ரத்தச்சூட்டை உணர்ந்தது... என ஒவ்வொரு காட்சியிலும் இவன் திண்டாடிக்கொண்டிருந்தான்.

கடந்தகாலத்தில் நுழைவது இவ்வளவு இன்பமா அல்லது இத்தனை துன்பமா? இல்லை இன்பம் கலந்த துன்பமா? இவனுக்குச் சொல்லத் தெரியவில்லை.

''நாம நிகழ்காலத்துக்கே திரும்பிவிடலாம்'' என்றான் கடவுளிடம்.

நிகழ்காலப் பெட்டிக்கு வந்ததும், ''இந்தப் பக்கம் இருப்பது எதிர்காலப் பெட்டிகள். நாற்பது வயசுக்குப் பிறகு, உனக்கு என்ன நடக்கப்போகுதுனு தெரிஞ்சுக்க விருப்பமா? வண்டியை எதிர்ப்பக்கம் விடச் சொல்றேன்!'' என்றார் கடவுள்.

''வேண்டாம். நாளைக்கு என்ன நடக்கப் போகுதுனு தெரிஞ்சுக்கிட்டா, வாழ்க்கையில சுவாரஸ்யம் இருக்காது. வண்டியை நிறுத்தச் சொல்லுங்க. நான் இறங்கிக்கிறேன்!'' என்றான்.

வண்டி நின்றது. இவன் இறங்கி ஸ்டேஷன் பெயர்ப்பலகையை வாசித்தான். விழுப்புரம் ஜங்ஷன்.

''தினமும் புதுசு புதுசா ஏதாவது படைச்சுக்கிட்டே இரு. அதுதான் உன்னைத் தக்கவைக்கும்!'' என்றார் கடவுள்.

இவன் புன்னகையுடன் அவருக்குக் கையாட்டி விடை கொடுத்துவிட்டு, அடுத்த மதுரை வண்டிக்காகக் காத்திருக்கத் தொடங்கினான்!

- வேடிக்கை பார்க்கலாம்...