Published:Updated:

என் ஊர்!

சட்டையை மாற்றலாம் உடலை மாற்றாலாமா?

என் ஊர்!

சட்டையை மாற்றலாம் உடலை மாற்றாலாமா?

Published:Updated:
##~##

முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தன் சொந்த ஊரான குன்றத்தூர் பற்றி பேசுகிறார்...

 ''இது சேக்கிழார் பிறந்த பூமி. அவர் பெரியபுராணம் பாடின ஸ்தலம். இங்கு 90% நெசவாளர்கள். முஸ்லிம் தெரு முக்கூட்டில்தான் மூணு தலை முறையாக எங்க வீடு உள்ளது. தாத்தா தானப்ப முதலியார், அப்பா மோகலிங்கம் இருவரும் தீவிர திராவிட இயக்கத்தினர். பூர்வீகத் தொழில் நெசவு. அப்பவே 100 தறிகளை வைத்து இருந்தோம். வீடு, தெரு சந்திப்பில் இருப்பதால் வாஸ்துபடி நல்லது இல்லைனு பலரும் சொல்லியும் அதில் நம்பிக்கை இல்லாத தாத்தாவும் அப்பாவும் கடைசிக் காலம் வரை இங்கேயே வாழ்ந்தாங்க. அந்த வகையில் இந்த வீடு பகுத்தறிவுச் செங்கல்லால் கட்டப்பட்டது என்றே சொல்லலாம்.

குன்றத்தூர் யூனியன் 'கலப்பு பள்ளி’யில்தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். சரியான இட வசதி இல்லாத அங்கு ஃபுல் அட்டென்டன்ஸ் தினங்களில் எல்லாம் திண்டாட்டம்தான். அனைவரும் உட்கார இடம் இருக்காது. அமைச்சரான பின்பு ஸ்கோப் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் பேசி, ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தில் எங்கள் பள்ளியைத் தத்தெடுக்க வைத்தேன். இப்போது அதைச் சாதாரண தொடக்கப் பள்ளி என்றால் யாரும் நம்ப மறுப்பீர்கள். கல்லூரிக் கட்டடம்போல் பிரமாண்டமாக இருக்கிறது. அமைச்சராக அந்தப் பள்ளியின் திறப்பு விழாவில் கலந்துகொண்டது எனக்குப் பெருமித நினைவு.

என் ஊர்!

என் வகுப்பாசிரியர் ராஜகுலபாண்டியன், 'என் மாணவன் ஒரு அமைச்சர்னு சொல்வதைவிட தன் பள்ளியை உயர்த்திய பழைய மாணவன்னு சொல்வதில் பெருமைப்படுறேன்’னு சொல்லி கண்ணீர்விட்டார்.

என் ஊர்!

அண்ணா, கலைஞர் படங்களால் எங்கள் வீடு கட்சி அலுவலகம்போல இருக்கும். அதனால் இயல்பாகவே எனக்கும் தி.மு.க. மீது ஈர்ப்பு. அப்பா ஒரு பக்கம் கூட்டங்களுக்குக் கிளம்பினால், நான் என் வயசுப் பசங்களுடன் தி.மு.க. விளம்பரங்களை எழுதக் கிளம்பிடுவேன். அன்று நான் வீதி வீதியாகக் கொடிபிடித்துச் சென்ற இடங்கள், சுவர் விளம்பரம் செய்த இடங்களில் பிறகு மேடைபோட்டு அமைச்சராக பேசிய பெருமையைத் தந்ததும் எங்கள் குன்றத்தூரே.

குன்றத்தூர் இளைஞர் அணி அமைப்பாளராக 1980-ல் கட்சியில் முதல் பொறுப்பு. வைகோ கட்சியில் இருந்து வெளியேறியபோது காஞ்சி மாவட்டத்தில், தொண்டர்களுடன் இணைந்து மாவட்டத்தில் கட்சிக்காகப் பாடுபட்டதைத் தலைவர் மனதில் குறித்துவைத்துக்கொண்டார். பேரூராட்சித் தலைவர், ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் என்று படிப் படியாக வளர்ந்து 2006-ல் அமைச்சரானேன்.

என் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை அளித்த  நன்றிக்காக, குன்றத்தூரில் நெசவாளர்களுக்கான சமுதாயக் கூடம், புதிய பேரூராட்சி கட்டடம்,  சேக்கிழார் மணிமண்டபம், தியான மண்டபம், பெரிய நூலகம் என கம்பீரமான கட்டடங்களை உருவாக்கினேன். சொந்த செலவில் குன்றத்தூர் முருகன் கோயிலில் சுற்றுவட்டாரப் பாதை, கான்க்ரீட் கூரை வேய்ந்தது என, கட்சிக்கு அப்பாற்பட்ட பணிகள் எனக்கு மனத் திருப்தியை அளிப்பவை.  

பொதுவா வசதி வாய்ப்புக்காகப் பலர் சென்னைக்கு இடம்பெயர்வார்கள். ஆனால், தற்போது சென்னையில் இருந்து இங்கு குடிபெயர்ந்து வருகிறார்கள். காரணம், இங்குள்ள நீர் வசதி. இங்கு 20 அடி தோண்டினால் தண்ணீர் தென்படும். தமிழ்நாட்டில் இங்கே நெய்யப்படும் துணிகளுக்கு மட்டும்தான் தும்பைப் பூ நிற வெண்மை கிடைக்கும். அதற்குக் காரணம், இந்த நன்னீர்தான்.

கட்சியில் சேர்ந்த நாளில் இருந்து அமைச்சரான பிறகு வரை கூட்டம் முடிந்து ஊர்த் திரும்பினால், டிரைவர் என்னைக் கேட்காமலேயே வேலு டீ கடை வாசலில்தான் வண்டியை நிறுத்துவார். அங்கு ஒரு டீயை வாங்கி உறிஞ்சினால்தான் அன்றைய பொழுது முழுமை அடையும். மாவட்டச் செயலாளர் ஆனதுமே, 'அண்ணே சென்னைக்கோ காஞ்சிபுரத்துக்கோ போயிட்டா இன்னும் நல்லா  இருக்கும்’னு சொன்னாங்க. 'வசதிக்காக சட்டையை மாத்தலாம். உடம்பை மாத்த முடியாது’னு சொல்லிட்டேன்!'' பகபகவென சிரிக்கிறார் தா.மோ.அன்பரசன்!  

- எஸ்.கிருபாகரன், படங்கள்: வீ.ஆனந்தஜோதி