Published:Updated:

“விக்குகள் இருக்கிறவரை நான் வின்னர்தான்!”

“விக்குகள் இருக்கிறவரை நான் வின்னர்தான்!”
News
“விக்குகள் இருக்கிறவரை நான் வின்னர்தான்!”

விகடன் மேடை - சத்யராஜ் பதில்கள் வாசகர் கேள்விகள்... படம்: கே.ராஜசேகரன்

##~##

பூர்ணிமா ஜீவா, ஃபேஸ்புக். 

''படப்பிடிப்புகளில் டான்ஸ் ஆடத் தெரியாம, சொல்லிக்கொடுத்தும் வராம டான்ஸ் மாஸ்டரிடம் திட்டு வாங்கின அனுபவம் உண்டா?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அது கெடக்குதுங்க ஏகப்பட்ட கதை! ஆனா, ஸ்பாட்ல ஒரு ஹீரோவை வெளிப்படையாத் திட்ட முடியாது. ஆனா, 'இவனையெல்லாம் ஆடவைக்க வேண்டியிருக்கே’னு எனக்கு ஆட்டம் சொல்லிக் கொடுத்த டான்ஸ் மாஸ்டர்கள் அத்தனை பேரும் கண்டிப்பா மனசுக்குள்ள கதறிக் கதறி அழுதிருப்பாங்க. அதுவும் குறிப்பா, 'பிரம்மா’ல 'நடப்பது நடக்கட்டும் கிடப்பது கிடக்கட்டும் நான் ரொம்பத் துணிஞ்சவன்டா’னு ஒரு பாட்டு. விஜயா ஸ்டுடியோவுல ராத்திரி நடக்குது ஷூட்டிங். பாட்டுல ஒரு இடத்துல பாடல் வரிகளே இல்லாம, நீளமான பின்னணி இசை மட்டும் வரும். அதை நாலைஞ்சு ஷாட்டாப் பிரிச்சு ஆடவைக்கலாம்னு பாபு மாஸ்டர் பிளான் பண்ணார். ஆனா, ஆர்வக்கோளாறுல, 'இதை ஒரே ஷாட்ல ஆடுறேன்’னு நான் அடம்பிடிச்சு ஆடினேன். ஆட ஆட வேர்த்துக் கொட்டி சட்டை தொப்பலா நனைஞ்சிடுச்சு. கன்டினியூட்டி மிஸ் ஆகக் கூடாதுனு அந்த ராத்திரி நேரத்துல கடைகடையா ஏறி இறங்கி அதே கலர்ல சட்டை வாங்கிட்டு வரச் சொல்லி ஆடினேன். 20 டேக்குக்கு மேல போயிருச்சு. 'உனக்குத்தான் ஆடவே வராதே... அப்புறம் ஏன் ஒரே ஷாட்ல ஆடுறேன்னு அடம்பிடிக்கிற’னு பாபு மாஸ்டர் மனசுக்குள்ள என்னைத் திட்டியிருப்பார். ஆனா, அதே 'பிரம்மா’வின் இந்தி ரீமேக்கில் கோவிந்தா நடிச்சார். அலட்டிக்காம சூப்பரா டான்ஸ் ஆடுறவர் அவர். அந்தப் பாட்டுல நான் ஆடியிருக்கிறதைப் பார்த்துட்டு, 'நானும் சத்யராஜ் மாதிரி ஒரே ஷாட்ல ஆடுவேன்’னு கேட்டு ஆடினாராம். அதைக் கேள்விப்பட்டதும் அந்த அர்த்தராத்திரி உழைப்புக்கான பலன் எனக்குக் கிடைச்சிருச்சுனு நினைச்சுக்கிட்டேன். 'திருமதி பழனிச்சாமி’யில் 'குத்தாலக் குயிலே... குத்தாலக் குயிலே’ பாட்டுக்கு பிரபுதேவா மாஸ்டர். அதுலயும் கிட்டத்தட்ட 20 டேக். 'பிரபு, நீ பெரிய டான்சர். உன் ஃபினீஷிங்கை என்கிட்ட எதிர்பார்த்தா எப்படிப்பா வரும்?’னு கேட்டேன். 'இல்லண்ணா... கண்டிப்பா வரும். ஆடுங்க ஆடுங்க’னு சொல்லி பேக்கப் வரைக்கும் என்னை விடலை. டான்சர் ஷோபனா எனக்கு நல்ல ஃப்ரெண்ட். 'மல்லுவேட்டி மைனர்’ படத்துல 'மல்லுவேட்டியை மடிச்சிக் கட்டிட்டு ஆட வாடி மானே’னு ஒரு பாட்டுல நானும் அவங்களும் போட்டிப் போட்டு ஆடணும். இதுக்கு மாஸ்டர் புலியூர் சரோஜா. கதைப்படி நான் ஜெயிச்சிடுவேன். அதைக் கேட்டதும், 'ஐயோ ஐயோ’னு அவங்க தலையில அடிச்சிட்டு சிரிச்சது தனி காமெடி. 'ஏம்மா கொஞ்சம் யோசிச்சுப் பாரு... உங்க அத்தை பத்மினியம்மா, நாட்டியப் பேரொளி. 'மன்னாதி மன்னன்’ல அவங்க தலைவர்கிட்ட டான்ஸ்ல தோத்துப்போற மாதிரி நடிக்கலையா? அது மாதிரி இதை ஒரு நடிப்பா நினைச்சுக்க’னு நான் கேட்டுக்கிட்டேன். இந்த டான்ஸ் ஆடுறதை வெச்சு நானும் கவுண்டமணி அண்ணனும் பயங்கரமா சதாய்ச்சுக்குவோம். டான்ஸ் எடுக்குற சமயம் 'ஷாட் ரெடி’னு அவர்கிட்ட சொன்னா, 'யோவ் முதல்ல நம்ம மைக்கேல் ஜாக்சனை வரச் சொல்லுங்கப்பா’னு என்னை கலாய்ப்பார். அவர் டான்ஸ் ஆடுற மாதிரி காட்சிகளுக்கு முட்டியில அடிபடாம இருக்க, 'knee cap’-லாம் போட்டுட்டு வந்து பந்தாவா நிப்பார். 'அண்ணே நாம ஆடுற ஆட்டத்துக்கு இதெல்லாம் தேவையாண்ணே’னு நான் அவரைக் கிண்டல் பண்ணுவேன். இத்தனை வருஷப் பொது வாழ்க்கைல எத்தனையோ பிரச்னைகளைச் சமாளிச்சுட்டோம். ஆனா, இந்த டான்ஸ் மட்டும் நமக்கு எப்பவுமே உடான்ஸ்தான்!''

“விக்குகள் இருக்கிறவரை நான் வின்னர்தான்!”

செல்வின் மனோபாலா, ஃபேஸ்புக்.

'' 'அமைதிப்படை’ அமாவாசை - 'ராஜா ராணி’ அப்பா... என்ன சார் வித்தியாசம்?''

'' 'அமைதிப்படை’ காலகட்டத்தில் சினிமா என் கையில் இருந்தது. இப்போ 'ராஜா ராணி’ சமயம் சினிமா கையில் நான் இருக்கேன். இது யதார்த்தம். 'அமைதிப்படை’க்காக நானும் நண்பர் மணிவண்ணனும் ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு வசனத்தையும் ஏகப்பட்ட ரிகர்சல் பார்த்துப் பார்த்து, ஒவ்வொரு சமயமும் ஒரு வசனமோ, ரியாக்ஷனோ சேர்த்துச் சேர்த்து மெருகேத்தினோம். அப்போ அதுக்கான சுதந்திரமும் எங்களுக்கு இருந்தது. இப்படி நண்பர் மணிவண்ணன், கவுண்டமணி அண்ணன்கூட நடிச்ச படங்கள் இப்பவும் பேசப்படுறதுக்குக் காரணம் அந்த மெனக்கெடல்தான்.

இப்போ, 'என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல எப்பவும் ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்கணும்’னு சிவாஜி சார் சொல்ற மாதிரி, நான் என்னை சினிமா வசம் ஒப்படைச்சிட்டேன். 'நண்பன்’ சமயத்தில் ஷங்கர் சார் என் வீட்ல வெச்சு ரெண்டு நாள் பலவிதமான கெட்டப்களை எனக்குப் போட்டுப் பார்த்தார். எட்டு விக்குகள் மாறுச்சு. 'இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே’னு நான் அவரைப் பார்த்து காமெடியாப் பாட ஆரம்பிச்சுட்டேன். ஆனானப்பட்ட அமிதாப்பே எல்லா படத்துலயும் ஒரே கெட்டப்ல நடிச்சிட்டு இருக்கும்போது, நான் 'நண்பன்’ல ஒரு மாதிரியும் 'தலைவா’ல வேறமாதிரியும், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, 'ராஜா ராணி’யில புதுமாதிரியும்னு வாழ்க்கையை சுகமா அனுபவிக்கிறேன். விக்குகள் இருக்கும் வரை, 'றெக்கக் கட்டிப் பறக்குதடா சத்யராஜ் சைக்கிள்’னு பாடிட்டு நடிச்சிட்டே இருக்க வேண்டியதுதான்!''

பிரசன்னா ராமசுப்ரமணியன், ஃபேஸ்புக்.

''மறைக்காம உண்மை சொல்லணும். அல்வா சாப்பிடும்போதெல்லாம் என்ன தோணும்?''

''சினிமாவோட பவர்தான். ஏன்னா, அல்வாவைக் கண்டுபிடிச்சு எத்தனையோ வருஷங்கள் ஆச்சு. ஆனா, இன்னைக்கு அல்வானு சொன்னதும் 'அமைதிப்படை’ அமாவாசைதான் ஞாபகத்துக்கு வருதுனா, அதுக்கு சினிமாவோட வீரியம்தான் காரணம். அதே மாதிரிதான் முருங்கைக்காயை எத்தனையோ ஆயிரம் வருஷமா நம்மாளுங்க பயிர் பண்ணிட்டு இருந்தாலும், அந்தப் பேரைச் சொன்னதுமே பாக்யராஜ் சார்தான் ஞாபகம் வர்றார்னா, சினிமாவுக்குத்தான் நாங்க நன்றி சொல்லணும்!''

முத்துராஜா, ஃபேஸ்புக்.

''எம்.ஜி.ஆர். உங்களிடம் கர்லா கட்டை கொடுத்த அந்த சம்பவம் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!''

''நான் எப்பவுமே புரட்சித்தலைவரை அப்பாயின்மென்ட் வாங்கிப் பார்த்ததே இல்லை. அவரைப் பார்க்கணும்னு தோணிட்டா, உடனே தோட்டத்துக்குக் கிளம்பிப் போயிடுவேன். இது இங்கிதம் இல்லாத பண்பா இருக்கலாம். என் மேல் அவர் வெச்சிருந்த அன்புக்காக நான் கொஞ்சம் ஓவராவே உரிமை எடுத்துக்கிட்டுப் பண்ண விஷயம்தான். ஆனா, அந்த உரிமை தலைவருக்கும் பிடிச்சிருந்ததுதான் ஆச்சர்யம்.

இப்படித்தான் ஒரு தடவை நான், சித்ரா லட்சுமணன், சித்ரா ராமு மூணு பேரும் 'ஜல்லிக்கட்டு’ பட 100-வது நாள் விழாவுக்கு தலைவரைத் தலைமைதாங்கச் சொல்லிக் கேட்கப் போயிருந்தோம். 'வர்றேன்’னு சம்மதிச்சுட்டார். அப்ப என்கிட்ட தனியா பேசும்போது, 'உனக்கு நான் ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன். என்ன வேணுமோ கேள்’னு சொன்னார். 'இல்லண்ணே... ஒண்ணும் வேணாம். நான் இப்போ நல்லா சௌகர்யமாவே இருக்கேன். எப்ப வேணும்னாலும் அப்பாயின்மென்ட் வாங்காம உங்களைப் பார்க்குறேனே... அதைவிட வேறென்ன வேணும்’னு சொன்னேன். 'இல்ல நீ ஏதாச்சும் கேளு... கேட்டே ஆகணும்’னு சொன்னார். நான் கொஞ்சம் யோசிச்சுட்டு, 'நீங்க எக்சர்சைஸ் பண்ண தம்புள்ஸ் ஏதாவது இருந்தாக் கொடுங்க. அது போதும்’னு சொன்னேன். தலையில அடிச்சிட்டு சிரிச்சவர், 'நான் சொன்னது வேற... ஏதாவது பெருசாக் கேளு’னு அழுத்தமா அவர் சொன்னதும்தான் கான்ட்ராக்ட் அனுமதி, பொறியியல் கல்லூரினு பெரிய ரேஞ்சா கேள்னு சூசகமாச் சொல்லியிருக்கார்னு புரிஞ்சது. அது என் மரமண்டைக்கு சட்டுனு புரியலை. 'அண்ணே எனக்கு அவ்வளவு விவரம் இல்லை. நீங்க அந்தளவுக்கு ஏதாவது பண்ணினாலும் அதை வெச்சுட்டு எனக்குப் பொழைக்கத் தெரியாது. அதனால நீங்க எக்சர்சைஸ் பண்ண கருவி ஏதாச்சும் இருந்தா கொடுங்க. அது போதும்’னு பிடிவாதமா சொல்லிட்டேன். உடனே தன் உதவியாளரைக் கூப்பிட்டு அந்த கர்லா கட்டையை எடுத்துட்டு வரச் சொன்னார். தலைவர் அப்பதான் உடம்புக்கு முடியாம அமெரிக்கா போயிட்டு வந்திருந்த நேரம். இவரால கர்லா கட்டையைத் தூக்கித் தர முடியாதுனு நினைச்சு நானே அதை எடுக்கப்போனேன். 'இரு’னு தடுத்தவர், அசால்டா ஒரு கையால கர்லா கட்டையைத் தூக்கி 'நான் இன்னும் பலமாத்தான் இருக்கேன்’னு சொல்லாம சொல்லி என்கிட்ட கொடுத்தார். ஹ்ம்ம்... தலைவர்னா தலைவர்தான்!''

தமிழ் பாலா, ஃபேஸ்புக்.

''படித்ததில் உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது... ஏன்?''

''பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகம். பெண் விடுதலைதான் இந்த சமூகத்தின் விடுதலை. ஒவ்வொரு பெண்ணும் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம். அதே போல ஓஷோவின், 'நான் ஒரு வெண்மேகம்’ புத்தகமும் எனக்குப் பிடிக்கும். ஓஷோ, ஓர் ஆன்மிகப் புரட்சியாளன். பலர் பேசத் தயங்கிய விஷயங்களைத் தைரியமாகப் பேசினவர் என்பது என் கருத்து. ஓஷோவின் புத்தகங்களைப் படிச்ச பிறகுதான் யதார்த்தத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலான வித்தியாசம் எனக்குப் புரிஞ்சது. இந்த ரெண்டுக்கும் இடையிலான மன அழுத்தம், மனப் புழுக்கம் பத்தி தெரிஞ்சுக் கணும்னு ஆசைப்படுறவங்க, ஓஷோவின் புத்தகங்களை வாசிச்சுப் பாருங்க!''

- அடுத்த வாரம்...

• ''உங்களின் ஆல் டைம் ஃபேவரைட் காமெடி கவுண்டரோடுதான். அந்த கிளாசிக் காமெடி மேக்கிங் அனுபவ சுவாரஸ்யங்களை ஷேர் பண்ணுங்களேன்!''

• ''நீங்கள் நாத்திகவாதியாக இருப்பதில் மகிழ்ச்சியே. ஆனால், ஒரு சந்தேகம்... உங்கள் பகுத்தறிவு மற்ற மதங்களை சாய்ஸில் விட்டுவிட்டு இந்து மதத்தை மட்டும்தான் கேள்வி கேட்குமா?''

'' 'அமாவாசை’ மூலம் தமிழக அரசியல்வாதிகளுக்கு குறுக்குவழியில் முன்னேறும் உத்தியைக் கற்றுக்கொடுத்தீர்கள். ஆனால், நீங்கள் ஏன் அரசியலில் இறங்கவில்லை?''

- கேரக்டரை இன்னும் புரிஞ்சுக்கலாம்...

“விக்குகள் இருக்கிறவரை நான் வின்னர்தான்!”

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

சத்யராஜிடம் கேட்பதற்கான உங்கள் கேள்விகளை உடனடியாக அனுப்ப வேண்டிய முகவரி:   'விகடன் மேடை- சத்யராஜ்’, ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை, சென்னை-600002. இ-மெயில்: av@vikatan.com கேள்விகளுடன் மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணையும் அவசியம் குறிப்பிடவும்.