Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 7

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

##~##

பள்ளித் தலமனைத்தும்...

''உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்புதமான உபாயம் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் அடுத்த நாள் பள்ளிக்குச் செல்வதை நினைத்துக்கொண்டே தூங்கப் போவேன்!''

- மனுஷ்ய புத்திரன்

ந்தாம் வகுப்பு முடித்து காஞ்சிபுரத்தில் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் இவன் ஆறாம் வகுப்பு சேர்ந்தான். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியைக் கட்டிய ஆண்டர்சன் என்கிற வெள்ளைக்காரர், 1837-ம் ஆண்டு கட்டிய கிறிஸ்துவ மிஷினரி பள்ளி அது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில், கல்வித் துறை இயக்குநராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு படித்த பள்ளி. களிமண்ணாக உள்ளே நுழைந்த இவனை கவிஞனாக வனைந்து வெளியே அனுப்பியதில் அந்தப் பள்ளிக்கும் பெரும் பங்கு உண்டு.

பள்ளி தொடங்கிய முதல் நாளன்று அப்பாவுடன் சைக்கிளில் சென்ற பயணம், நேற்று நடந்ததுபோல் இப்போதும் இவன் நினைவில் நிற்கிறது. காக்கி டவுசர், வெள்ளைச் சட்டை, சிவப்பு டை அணிந்து, ஷூ மாட்டி சைக்கிளின் பின் இருக்கையில் அமரும் வரை குதூகலமாகத்தான் இருந்தான்.

இவன் கிராமத்தைத் தாண்டியதும், அப்பா, 'நானும் இந்த ஸ்கூல்லதான்டா படிச்சேன். எங்க காலத்துல ரொம்ப ஸ்டிரிக்ட்டா இருந்திச்சு. இங்கிலீஷ்ல கேள்வி கேப்பாங்க. சமாளிச்சிடுவியா?’ என்று கேட்டார்.

வேடிக்கை பார்ப்பவன் - 7

வன் மனதுக்குள் 'ஏ’-வில் இருந்து 'இஸட்’ வரை, ஆங்கில எழுத்துகளைச் சொல்லிப் பார்த்துக்கொண்டான். 'என்ன கேள்வி கேட்டாலும் இந்த 26 எழுத்துக்குள்ளதான கேப்பாங்க’ என்று நினைத்தபடி, தலையாட்டினான். ஆனால், வடக்கு மாடவீதி, செட்டித் தெரு, ரங்கசாமி குளம், தேரடி வீதி, மூங்கில் மண்டபம் என்று ஒவ்வோர் இடத்தையும் சைக்கிள் கடந்துகொண்டிருந்தபோது முன்பு படித்த கிராமத்துப் பள்ளியைப் பிரிந்த ஏக்கமும், புதிதாகச் சேரப்போகும் பள்ளியின் சூழல் குறித்த அச்சமும், இவனை பொன்வண்டாக்கி, கழுத்தில் நூல் கட்டி, அடிவயிற்றுப் பயத்துடன் அந்தரத்தில் பறக்கவிட்டுக்கொண்டிருந்தது.

இவன் பள்ளி இருந்த தாலுகா அலுவலக வளாகத்துக்குள், அப்பாவின் சைக்கிள் நுழைந்தது. இந்தப் பக்கம் வட்டாட்சியர் அலுவலகம். அதற்குப் பக்கத்தில் காவல் நிலையம். காவல் நிலையத்துக்கு முன்பாக, விபத்துக்குள்ளான நசுங்கிய கார்கள் மழையில் துருப்பிடித்துக்கிடந்தன. கூடவே மோட்டார் சைக்கிள்களும் மிதி வண்டிகளும். அந்த இரும்புக் குவியலில் நசுங்கிக்கிடந்த ஒரு காரில், பலூன் போன்ற ஹாரனை இவனைப் போலவே யூனிஃபார்ம் அணிந்த ஒரு வளர்ந்த பையன் 'பீம்... பாம்’ என்று அடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, இன்டர்வெல் கேப்பில் விளையாடுவதற்கு நல்ல ஓர் இடம் கிடைத்தது என்று இவன் சந்தோஷப்பட்டான்.

காவல் நிலையத்துக்கு அருகில் இருந்த நீதிமன்ற வாசலில் இரு கைகளில் விலங்குடன் லுங்கி கட்டிய ஒரு கைதி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்க, அந்தக் கைதியின் வாயில் பீடி ஒன்றைச் செருகி, கான்ஸ்டபிள் ஒருவர் பற்ற வைத்துக்கொண்டிருந்தார். அந்தக் கைதி இரண்டு இழுப்பு, இவர் இரண்டு இழுப்பு என்று சாவகாசமாகப் பேசியபடி பீடி குடிப்பதைப் பார்க்கையில் இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவன் கிராமத்தில் நண்பர்களுடன் விளையாடும் திருடன் போலீஸ் ஆட்டத்தில், திருடன் எப்போதுமே போலீஸுக்கு எதிரி. 'இப்படியும் நடக்குமா?!’ என்று இவன் மீண்டும் ஆச்சர்யப்பட்டான்.

நீதிமன்றத்துக்கு இடது பக்கம் தீயணைப்பு நிலையம். பக்கத்தில் கருவூலம். இவற்றுக்கு மத்தியில் இவன் பள்ளி இருந்தது. வாசலில் இறக்கி விட்டுவிட்டு அப்பா சொன்னார். 'பத்திரமாப் போயிட்டு வா. சாயங்காலம் கேட்ல வெயிட் பண்றேன்!’

மிகப் பெரிய இரும்பு கேட்டைக் கடந்து இவன் உள்ளே நுழைந்தான். எதிரில் தெரிந்த கட்டடத்தின் சுவற்றில் பாதி அளவுக்கு தாடி வைத்திருந்த ஒருவரின் ஓவியத்தை வரைந்திருந்தார்கள். அதற்கு கீழே இருந்த வாசகத்தை இவன் எழுத்துக் கூட்டிப் படித்தான். 'வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள். இளைப்பாறுதல் தருவேன்’. இவனுக்கு அந்த வாசகம் பிடித்திருந்தது. இவனை அறியாமல் முதுகில் மாட்டியிருந்த புத்தகப் பையை ஒருமுறை தொட்டுப் பார்த்துக்கொண்டான்.

அந்த ஓவியத்தில் வரைந்திருந்த நபரின் முகத்தில் ஒரு பெண் சாயல் இருந்தது. தீட்சண்யமான கண்களுடன் அந்த முகத்தில் தெரிந்த ஏதோ ஒரு கனிவு, இவனுக்கு இவன் தாய் முகத்தை ஞாபகப்படுத்தியது. அவர்தான் 'யேசு’ என்றும், 'கிறிஸ்துவர்களின் கடவுள்’ என்றும் பின்னாட்களில் இவன் அறிந்துகொண்டான். அந்த ஓவியத்துக்குக் கீழே ஒரு பலகையில், 'இது என் பள்ளி. என் பள்ளி என்னால் பெருமை அடைய வேண்டும்’ என்று எழுதியிருந்தது. இவன் கர்த்தரின் கரங்களைப் பிடித்தபடி உள்ளே நடந்துபோனான்.

வேடிக்கை பார்ப்பவன் - 7

பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை கப்பல்களில் கொண்டுவந்து சுண்ணம் அரைப்போரும், சுண்ணாம்பு இடிப்போரும் இரவு பகல் உழைக்க, ஆண்டர்சன் துரை என்கிற வெள்ளைக்காரன் கட்டிய கட்டடம் இவன் முன் விரிந்தது. ஆங்கிலேயன் கட்டிய பள்ளி என்பதால், ஆங்கிலம் இவனுக்கு விரோதியாக இருந்தது. அச்சமும் பயமும் இவன் பாடங்களாக இருந்தன.

ள்ளிக்கூடத்தைப் பற்றி நினைக்கையில் வகுப்பறைகளைவிட, வெளியே இருக்கிற மரங்களும் மைதானமும்தான் இவன் நினைவுக்கு வருகின்றன. இவன் பள்ளி மைதானத்தில் நட்டுவைத்த குடைகள் போல அசோக மரங்கள் வரிசையாக நின்றிருக்கும். அசோக மரத்து பழங்களுக்கும் நாவல் பழங்களுக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கச் சொன்னால், ஆண்டவனால் கூட கண்டுபிடிக்க முடியாது. இரண்டின் நிறமும் வடிவமும் ஒரே கிளையில் கருவானவையோ என வியக்கவைப்பவை. மீசை வைத்து பென்னாம்பெரிய மிதி வண்டியில் வரும் பெரிய வகுப்பு மாணவர்கள், முதல் நாள் பள்ளியில் நுழைந்த அன்று நாவல் பழம் என்று ஏமாற்றி, அசோக பழங்களைக் கொடுத்து இவனிடம் இருந்து காசு பறித்தார்கள். முதல்முறையாக வகுப்பறை சொல்லித்தராத வணிகவியல் இவனுக்கு அறிமுகமானது.

ஒருமுறை, கள்ளச்சாராய கேன்களைக் கையகப்படுத்தி காவல் நிலையத்தின் வாசலில் வைத்து தீ ஊற்றி எரித்தார்கள். அந்தக் காற்றின் வாசம் வேதியியலை இவனுக்கு அறிமுகப்படுத்தியது.

இப்படி இப்படி, ஐந்து பைசாவுக்கு பத்து கடலைகள் கொடுக்கும் பாட்டிக் கடை கணிதத்தையும், உடைந்த அரச மரக் கிளைப் பொந்திலிருந்து அவ்வப்போது பகலில் எட்டிப் பார்த்து, திரும்பவும் பொந்துக்குள் நுழையும் ஆந்தை விலங்கியலை யும், ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுக்க, கிராமத்து மாணவர்கள் கிளிப் பச்சை நிறத்துடன் ஒடித்து வந்து நீட்டும் மூங்கில் கழிகள் தாவரவியலையும், படம் வரைந்து பாகம் குறித்த கழிவறைகள் உயிரியலையும், மேற்கூரைக் கண்ணாடிச் சட்டகத்தில் இருந்து உள் நுழைந்து, கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கும் சந்திரசேகர் மாஸ்டரின் முதுகில் விழுந்து, c=3X108 m/sec வேகத்தில் பயணிக்கும் சூரிய வெளிச்சம் இயற்பியலையும், பள்ளிக்குப் பின்புறம் பாலித்தீன் கவர்கள் மிதந்தோடும் செங்கழு நீரோடையின் பின்னணியில் ஒன்றில் இருந்து ஒன்று கிளை பிரியும் ஒற்றையடிப் பாதைகள் புவியியலை யும், முன்புக்கும் முன்பு பத்தாம் வகுப்புத் தேர்வில் ஃபெயிலானதால் தூக்குப் போட்டு இறந்த பழைய மாணவன் ஒருவனைப் பற்றிய வதந்திகள் வரலாற்றையும், As I am suffering from fever’ என்று தொடங்கி எழுத்துப் பிழைகளோடு எழுதப்படும் விடுமுறைக் கடிதங்கள் ஆங்கிலத்தையும் அறிமுகப்படுத்தின.

எல்லோருக்கும் போலவே இவனுக்கும் இவன் பள்ளி, வகுப்பறைக்கு வெளியேதான் பாடங்களைக் கற்றுத்தந்தது. ஆயினும் என்ன? கற்றுத்தர மட்டுமா பள்ளிகள்? பள்ளியைப் பற்றி நினைக்கையில், ப்ளஸ் டூ படிக்கையில் இதே ஆனந்த விகடனில் இவன் எழுதிய கவிதைதான் இவனுக்கு ஞாபகம் வருகிறது. 'பள்ளி’ என்ற தலைப்பிலான அந்தக் கவிதை,

'தண்டவாளத் துண்டு
காற்றில் ஒலி எழுப்ப
ஆரம்பம் அதன் இயக்கம்.

நீராருங் கடலுடுத்த
பாடத் துவங்குகையில்
டியூஷன் எடுத்த களைப்பில்
கொட்டாவி விடும் ஆசிரியர்கள்.

 மர பெஞ்சில் பெயர் செதுக்கி
முத்திரை பதிக்கும் மாணவர்கள்.
இன்ஸ்பெஷனுக்காய் வாங்கிய
கட்டுரை நோட்டு

அட்டையுடன் காத்திருக்க
பாடத்தில் இல்லாத
பாலியல் கல்வி
பாத்ரூமில்.
யாரும் மெனக்கெடாமலே
வருடந்தோறும் உருவாகிறார்கள்
சில அறிவாளிகளும் முட்டாள்களும்’

இவன் அறிவாளியா... முட்டாளா என்று இவனுக்குத் தெரியாது. சில வருடங்களுக்கு முன்பு, இவன் பள்ளியில் நடந்த தமிழ் மன்றத் தொடக்க விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக இவனை அழைத்திருந்தார்கள். துருப்பிடித்த பள்ளியின் இரும்புக் கிராதிக் கேட்டினைத் திறந்து இவனை வரவேற்றார்கள். முன்பு ஒவ்வொரு முறை அதைக் கடந்து உள்ளே நுழையும்போதும் அடிவயிற்றில் இருந்து மேலெழும் ஒரு பயம் தன் பழைய பாசத்துடன் மேலே வந்தது. பரிசுத்த ஆவியின் பெயரால் இவன் பள்ளிக்குள் நுழைந்தான். காலை பிரார்த்தனை நேரத்தில் 'ஜபம் செய்வோம்’ என்ற குரல் கேட்டு எத்தனை முறை மண் தரையில் முட்டிப் போட்டிருப்பான். அந்த மண் துகள்கள் இன்று எங்கு போய் உதிர்ந்தன?

வேடிக்கை பார்ப்பவன் - 7

'இதோ 10-ம், 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவர்களை உமது பாதங்களில் ஒப்படைக்கிறோம் எமது ராஜ்ஜா... அவர்கள் படித்தது மனதில் பசுமரத்தில் அடித்த ஆணிபோல் பதியவும், அவர்களால் நமது பள்ளி மென்மேலும் உயரவும் ஆசீர்வதியும் எம் ராஜ்ஜா...’ என்கிற பால்பாண்டி மாஸ்டரின் குரலும், அதை தொடர்ந்து ஒலிக்கிற 'ஆத்துமமே என் முழு உள்ளமே...’ என்ற பாடலும் காற்றின் அலைகளில் கரையாமல் ஒலிக்கின்றன.

பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியரும், சிறந்த சிறுகதை எழுத்தாளருமான அ.எக்பர்ட் சச்சிதானந்தம், நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க, இவன் தமிழ் ஆசிரியர்களான புலவர் வே.கணேசன், சாலமன் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்க விழா முடிந்தது.

மாணவர்கள் விடைபெற்றுப் போன பின் மாலையில், இவன் படித்த ஒவ்வொரு வகுப்பிலும் மீண்டும் நுழைகிறான். ஆதிக் கருவறையின் இருளும் ஒளியும் கலந்த அறைகள். 8-ம் வகுப்பு 'அ’ பிரிவில் நுழையும்போது மட்டும், இவனை அறியாமல் தேகம் சில்லிடுகிறது. அதோ இவன் அமர்ந்து எழுதிய பர்மா தேக்கு மேஜை. மீண்டும் இவன் பால்ய வயதுக்குள் சென்று, காக்கி கால் சட்டையும், வெள்ளைச் சட்டையும் அணிந்து அமர்கிறான். பிரில் இங்க் கரை படிந்த பழைய மேஜையில் இவன் எப்போதோ உணவு இடைவேளையின்போது, காம்பஸ் முனைகளால் கிறுக்கிய N.M.K. என்ற எழுத்துகள் இன்னும் அழியாமல் இருக்கின்றன. ஒரு கணம் இனம்புரியாத உணர்வுக்குள் மூழ்கித் திரும்புகிறது மனது. இதோ இவன் தொலைத்த பால்யத்தின் மிச்சம். பதின் வயதுகளின் ஒரு துண்டு. இவன் கடவுளாக இருந்தபோது இவனுக்குள் இருந்த சாத்தான் உரித்த பாம்புச் சட்டை.

ல்லோரும் வழியனுப்ப, பள்ளியைவிட்டு வருகையில் தாலுகா ஆபீஸ் மைதானத்தில் அதே பழைய காசியண்ணன், கொஞ்சம் முதிர்ந்த தோற்றத்துடன் ஐஸ் விற்றுக்கொண்டிருந்தார். எத்தனையோ முறை அவரிடம் கடன் சொல்லி குச்சி ஐஸும் சேமியா ஐஸும் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறான்.

காரை விட்டு இறங்கி இவனை அறிமுகப்படுத்திக்கொண்டான். அவர் முன் நிழலாடிய பல பிஞ்சு முகங்களில் இவன் முகமும் பெயரும் ஞாபகத்துக்கு வரும் என்று எப்படி இவன் எதிர்பார்க்க முடியும்?

'அண்ணே ஒரு சேமியா ஐஸ் குடுங்கண்ணே' என்றான்.

'அதெல்லாம் இப்ப யாரு தம்பி கேக்கிறாங்க? மேங்கோ, ஆரஞ்சு ரெண்டுதான் இருக்கு. உனக்கு என்ன வேணும்?'' என்றார்.

'ஒரு மேங்கோ குடுங்கண்ணே...' என்று கூறி 100 ரூபாயை நீட்டினான்.

கொடுத்த ரூபாயைத் திருப்பித் தந்துவிட்டு, 'சினிமாவுல பாட்டெல்லாம் எழுதறனு சொல்ற. அண்ணன மறக்காம வந்து ஐஸ் கேட்ட பாரு. அது ஒண்ணே போதும் தம்பி. காசு பணமெல்லாம் வேணாம்' என்று சொல்லிவிட்டு தன் முன் இருந்த ஐஸ் பெட்டிக்குள் குனிந்தார். அதில், 'காலம்’ கட்டிக் கட்டியாக உறைந்து கிடந்தது!

- வேடிக்கை பார்க்கலாம்...