என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

சொந்த ஊரில் ஷுட்டிங் எடுக்க மாட்டேன்!

##~##

'எஜமான்’, 'சிங்காரவேலன்’, 'சின்னக்கவுண்டர்’, 'பொன்னுமணி’ என்று 90-களில் தமிழ் சினிமாவில் தடதடத்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். அ.தி.மு.க-வின் தலைமைக் கழக சிறப்புப் பேச்சாளரான இவர், தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையத்தின் நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

 ''நான் பிறந்தது கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பக்கம் இருக்கிற முல்லைப்பாளையம் கிராமம். ஆனால், வளர்ந்தது... இல்லை இல்லை... என்னை வளர்த்தது, தூக்கநாயக்கன்பாளையம்தான். இந்த 53 வயசுலயும் விடலைப் பருவ சேட்டைகள் இன்ன மும் என் மனசுல நிறைஞ்சு இருக்கு...

என் ஊர்!

சின்ன வயசுல இருந்தே கதை எழுதும் ஆர்வம் அதிகம். பள்ளிக்கூடத்தில் கூடப் படிக்கிற பசங்களுக்கு வெறும் கதையா சொன்னா நல்லா இருக்காதுனு காமிக்ஸ் மாதிரி படம் வரைஞ்சு, கன்னித் தீவு மாதிரி தொடர்கதை எழுதுவேன். காலையில் வந்ததும் ஜேம்ஸ் சார் பீரியடில் அந்த காமிக்ஸ் பேப்பரைக் கொடுப்பேன். ஒவ்வொருத்தராப் படிச்சுட்டு கடைசியில் திரும்பவும் எனக்கு வரும். இந்த மாதிரி காமிக்ஸ் வரையறதுக்கு எனக்கு ரத்தினவேல்னு ஒரு சார் உதவுவார். இப்படி ஸ்கூல்

என் ஊர்!

படிக்கும்போது ஆரம்பிச்ச கதை ஆசைதான், என்னை ஒரு இயக்குநராக உருவாக்கியதுனு சொல்லலாம்.

என் அப்பா வெங்கடசாமி, தீவிர பெருமாள் பக்தர். அவர்தான் கோயிலில் பஜனை பாடுவார். கோயில் சுண்டலுக்காகவே நானும் அப்பாவோட கிளம்பிடுவேன். அஞ்சாவது வரை தூக்கநாயக்கன்பாளையம் தெற்கு ஸ்கூல்ல படிச்சேன். ஆறாம் வகுப்புக்கு அங்கே இருந்து ரெண்டு கி.மீ தூரத்தில் இருக்கும் பங்களாபுதூர் மேல்நிலைப் பள்ளிக்கூடம். அப்போ பஸ் எல்லாம்  கிடையாது. தினமும் ரெண்டு கி.மீ நடந்தே போகணும். இப்ப ஸ்கூலுக்குப் பசங்க சைக்கிளில் போற மாதிரி, அன்னிக்கு மாட்டு வண்டியில் வருவாங்க. எல்லாரும் விவசாயக் குடும்பம்கிறதால் பள்ளிக்கூடம் போறதுக்குன்னே சின்ன மாட்டு வண்டிகள் வரும். படிக்கற பசங்களே அதை ஓட்டிக்கிட்டு வந்துடுவாங்க. அப்படி வர்ற வண்டிகள்ல நான் தொத்திக்குவேன்.

அப்ப தோட்டக் கலைனு ஒரு பாடம் இருக்கும். விளையாட்டு மைதானத்தில் பாத்தி பிரிச்சு, யாரு செடியை நல்லா வளர்க்கிறாங்களோ அவங்களுக்கு அதிக மார்க். எல்லாரும் போட்டி போட்டு செடி வளர்ப்போம். ஸ்கூலுக்குள் இருக்கிற புல்லைப் பிடுங்கி மாட்டுக்குக் கொடுப்போம்.

நான் சொந்த ஊரில் இது வரை படம் எடுத்ததே இல்லை. காரணம், ஷூட்டிங்கில் பிஸியா இருக்கும்போது அங்க வர்ற சொந்தக்காரங்ககிட்ட பேச முடியாது. பேசாம இருந்தா, 'உதயகுமாருக்குத் தலைக்கனம் அதிகம்’னு சொல்லிடுவாங்க. அதான் பொள்ளாச்சியில் என் படங்களை எடுத்தேன்.

சமீபத்தில் ஊரோட முன்னாள் சேர்மன் அட்டியண்ணன் மறைவுக்காகத்  தூக்கநாயக்கன்பாளையம் போய் இருந்தேன். எல்லாமே மாறி இருந்தது. ஓட்டு வீடுகள் எல்லாம் பில்டிங்கா ஆகிடுச்சு. நாம வாழ்ந்த ஊரானு எனக்கே சந்தேகம். என் வாழ்க்கையில் சினிமாப் பாதைக்கு வித்திட்டது இந்தத் தூக்கநாயக்கன்பாளையம்தான். இங்குள்ள மனிதர்கள்தான் என் படத்தின் கதாபாத்திரங்களா உருமாற்றம் அடைஞ்சாங்க. ஒரு மனிதன் எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், அவனுடைய சொந்த ஊரை மறக்கவே முடியாது. அதுபோலத்தான் என்னாலும் மறக்க முடியாத ஊர், தூக்கநாயக்கன்பாளையம்!''

என் ஊர்!

- கி.ச.திலீபன், படங்கள்: க.தனசேகரன்