Published:Updated:

களைப்பு இல்லா கலப்பை!

கோவை நம்பிக்கை

களைப்பு இல்லா கலப்பை!

கோவை நம்பிக்கை

Published:Updated:
##~##

கோவை நகரம் விசித்திரமானது. பன்னாட்டு நிறுவனங்கள் நிரம்பி வழியும் இதே மண்ணில்தான் 'மானாவாரிப் பயிர்களில் இலை சுருட்டு நோய்க்கு என்ன மருந்து தெளிக்கலாம்?’ என்று ஆராயும் வேளாண் பல்கலைக்கழகமும் இருக்கிறது. இங்கு சமீபத்தில் உழவர் தின விழா!

 ஆடி மாதத்தில் தைப் பொங்கல் வந்துவிட்டதோ என ஆச்சர்யப்படும் அளவுக்கு, கரும்பு, வாழை, காய்கறிகளைச் சுமந்தபடி ஊரையே உற்சாகத்தில் உலுக்கிவிட்டார்கள் உழவர் பெருமக்கள்.

களைப்பு இல்லா கலப்பை!

விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வு, விவசாயக் கண்காட்சி. விவசாயிகளை மட்டுமின்றி,  வேளாண்மையின் அரிச்சுவடி தெரியாதவர்களைக்கூட கவர்ந்து இழுத்தது கண்காட்சி. முகப்பில் 'என்னையப் பெத்தா இளநீரு’ என்று வரவேற்றுச் சிரித்தன தென்னங்கன்றுகள். 'வருஷத்துக்கு 400 காய்கள் வரைக்கும் காய்க்குமுங்க. இளநீர், கொப்பரை ரெண்டுக்குமே ஏத்த ரகமுங்ணா இது. வறட்சியைத் தாங்கி வளருமுங்க... குரும்பை உதிர்வதும் குறைவுங்ணா!’ நுனி நாக்கு கொங்கில் கலகல மார்க்கெட்டிங் களைகட்டியது!

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் சார்பாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விவசாயக் கருவிகளும் இடம் பெற்றிருந்தன. மரம் ஏறத் தெரியாதவர்கள் சுலபமாக மரம் ஏறக்கூடிய வகையில் உதவும் கருவிக்கு செம வரவேற்பு. வெவ்வேறு தன்மை உடைய நிலங்களை எளிதாக உழுது முடிக்கும் வகையில் வேளாண் பொறியியல் துறை சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட கொத்துக் கலப்பை, சுழற் கலப்பை, உளிக் கலப்பைகளால் உழவு செய்யும்போது விவசாயிகளுக்குக் களைப்பே வராதாம்.

களைப்பு இல்லா கலப்பை!

பல வகையான தானியங்களைக்கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்த தானியப் பொங்கல் பானைக்குப் பக்கமாக உட்கார்ந்து ஒன், டூ, த்ரீ என தானியங்களை எண்ணிக்கொண்டு இருந்தார்கள் வெளிநாட்டுப் பெண்கள் இருவர். ஆராய்ச்சி முடிந்த பின் 'இட்ஸ் அமேஸிங்’ என்று தோள் குலுக்கி ஆச்சர்யப்பட்டுக்கொண்டார்கள். சரிவர ரோமம் முளைக்காத பருவத்தில் இருந்து கொழுத்த சேவல்கள் வரை காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

கால்நடைத் துறை சார்பில் வைக்கப்பட்டு இருந்த ஜமுனாபாரி, சேனன், சிரோகி என்று விதவிதமான ஆடுகளின் படங்களைத் தொட்டுத் தடவி சிலிர்த்தன குழந்தைகள்.

களைப்பு இல்லா கலப்பை!

'கத்தரிக்காயை விளையவைத்து அப்படியே விற்றால், ஓரளவு லாபம் கிடைக்கும். ஆனால், அதையே வற்றலாக்கி பாக்கெட்டில் அடைத்து விற்றால், நிறைய லாபம் கிடைக்குமே’ என்று மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் தொழில்நுட்பத்தையும் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். கரும்புச் சாகுபடித் துறை சார்பில் வைக்கப்பட்டு இருந்த அச்சுவெல்லத் தேரைப் பார்த்ததுமே நாக்கின் ருசி அரும்புகள் சிலிர்த்துக்கொண்டன. ஆனால், கூடும் கும்பல் ஆர்வத்தில் 'அச்சு வெல்லத் தேரை’ கரைத்துவிடக் கூடாது என்று கண்கொட்டாமல் கவனித்துக்கொண்டார்கள் ஊழியர்கள். ஸ்டால்களில் நின்று தங்கள் தொழில்நுட்பத்தை விளக்குபவர்களிடம் விவசாயிகள், 'ஏனுங்க... ஆறு ஏக்கர்ல பயிர் போட்டு இருக்கிற எனக்கு நாலு டன்தான் விளையுது. ஆனா, நீங்க என்னமோ ஒரே ஏக்கர்ல ரெண்டு

களைப்பு இல்லா கலப்பை!

டன் கிடைக்கும்கிறீங்க. அதெப்டிங்ணா சாத்தியம்?’ என்று புரட்டி எடுத்துக்கொண்டு இருந்தார்கள். விவசாயிகளுக்கு எனத் திறந்தவெளி பல்கலை படிப்புகள் இருப்பதை விளக்கிச் சொல்லி பட்டறிவுகொண்ட விவசாயிகளை படிப்பறிவு மிக்கவர்களாக மாற்ற முனைந்துகொண்டு இருந்தார்கள் ஒரு ஸ்டாலில். கூடவே, வேளாண் பொருட்களின் சந்தை நிலவரத்தை விவ சாயிகள் மொபைல் போன் மூலம் அறிந்துகொள்ளும் வசதியையும் கற்றுக்கொடுத் தார்கள்.

'அக்ரி யுனிவர்சிட்டியில் ஏதோ பொருட்காட்சியாம். ஒரு ரவுண்டு அடிச்சுப்போட்டு அப்பளம், பஜ்ஜி சாப்பிட்டு வரலாம்’ என்று கிளம்பி வந்தவர்கள்கூட ஆளுக்கொரு மரக் கன்றையும், பை நிறைய விதை பாக்கெட்டு களையும் வாங்கிச் சென்றதுதான் வெற்றி!

- எஸ்.ஷக்தி , படங்கள்: தி.விஜய்