Published:Updated:

ஜனாதிபதி அலுவலகத்தையும் ஆய்வு செய்யலாம்!

ஜனாதிபதி அலுவலகத்தையும் ஆய்வு செய்யலாம்!

##~##

றும்பு ஊறக் கல்லும் தேயும்தான்! ஆனால், அரசு அலுவலகங்களுக்கு இந்தப் பழமொழி பொருந்தாது. அலைகிற அலைச்சலில் நம் கால்தான் தேயும். இதற்குத் தீர்வு காணும் வகையில் வந்தது தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தை, கிட்டத்தட்ட முழுமையாகப் பயன்படுத்தியவர் என்று ஈரோட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மதியழகனைச் சொல்லலாம். இது வரை சுமார் 1,000 மனுக்களை அனுப்பி, 3000-த்துக்கும் மேற்பட்ட பதில்களைப் பெற்றுள்ளார். சமீபத்தில் இவருக்கு வந்த ஒரு பதில், 'ஜனாதிபதி அலுவலகத்தைக்கூட தேவைப்பட்டால் ஆய்வுசெய்யலாம்’ என்பது!

ஜனாதிபதி அலுவலகத்தையும் ஆய்வு செய்யலாம்!

''இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 51(கி)யின் படி இந்த நாட்டின் எல்லா வளங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. நான் சமூக ஆர்வலராக இருப்பதால், பல தகவல்களைப் பெற அரசு அலுவலகத்தை நாட வேண்டிய சூழ்நிலை. ஆனால், அரசு அலுவலகத்தில் தகவல் தராமல் அலைக்கழித்தார்கள். அதனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டேன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மக்களுக்கு அரசில் பணிகள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ளும் அதிகாரம் உண்டு.

இந்தச் சட்டத்தை எப்படிக் கையாள்வது?  ஒரு வெள்ளைத் 'தாளில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ்’ என்று தலைப்பு எழுத வேண்டும். அதன் கீழ் நீங்கள் கேட்க விரும்பும் தகவல்களைக் கேள்விகளாக எழுத வேண்டும். பிறகு 10 ரூபாய் நீதிமன்ற வில்லையை ஒட்டி பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அந்தத் துறை சார்ந்த பொதுத் தகவல் அதிகாரியிடம் அளிக்க வேண்டும்.

ஜனாதிபதி அலுவலகத்தையும் ஆய்வு செய்யலாம்!

நாம் தகவல் கோரி விண்ணப்பித்த  30 நாட்களுக்குள் அவர்கள் பதில் தர வேண்டும். இல்லை என்றால் மேல் முறையீட்டு அலுவலருக்கு அனுப்பி, அடுத்த 30 நாட்களுக்குள் மாநிலத் தகவல் ஆணையரிடம் தகவல் பெறலாம். அல்லது மத்தியத் தகவல் ஆணையருக்கு 90 நாட்களுக்குள் இரண்டாம் மேல் முறையீடு மனு அனுப்பலாம். தகவல் பெறும் உரிமை மறுக்கப்படக் கூடாது என்ற சட்டம், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும்.  

இப்படி கடந்த ஐந்து வருடங்களாக மனுக்கள் அனுப்பிப் பதில் பெற்று வருகிறேன். 'இது வரை தமிழ்நாட்டில் எத்தனை போலீஸார் ஹெல்மெட் போடவில்லை என்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?’ என்ற கேள்வியைக் கேட்டேன். அதற்கு, 'ஒருவர்கூட கிடையாது!’ என்று பதில் வந்தது!

பரமத்தி வேலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்துத் துறை, வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை சார்பாக செக்போஸ்ட் வைத்து இருந்து, பிறகு மூடிவிட்டார்கள். இதனால் பல அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இப்போது அந்தச் சாலையில் எத்தனை செக்போஸ்ட்கள் இருக்கின்றன? என்று கேள்வி கேட்டேன். அதற்கு, 'நான்கு செக் போஸ்ட்கள் இருக்கின்றன.’ என்று பதில் வந்தது. ஆனால், சோதித்துப் பார்த்தால் ஒன்றுகூட இல்லை. உடனே, அந்தப் பதில் கடித நகலை இணைத்து 'செக் போஸ்ட்களைக் காணவில்லை’ என்று புகார் கொடுத்தேன்.

ஜனாதிபதி அலுவலகத்தையும் ஆய்வு செய்யலாம்!

இப்படி கேள்வி கேட்பது மட்டும் அல்லாமல், பல அலுவலகங்களில் ஆய்வுகளும் செய்து இருக்கிறேன். இதனால் நாமக்கல்லில் கொத்தடிமைகளாக அவதிப்பட்ட பலரை மீட்டுள்ளேன். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அரசு நிலங்கள் மீட்பு என்று பல பணிகளைச் செய்து வருகிறேன். இப்படி விடாமல் கேள்வி கேட்டதால், சட்டத்தை மீறும் பலருக்கும் எதிரியாகிப் போனேன். விளைவு, பல முறை பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் அடைத்தார்கள்.

ஆனால், எந்த அடக்குமுறையும் என்னை அடக்கிவிடாது. இந்தச் சட்டத்தைப்பற்றி பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருப்பேன்!'' என்கிறார் மதியழகன் திடமான உற்சாகத்துடன்!

- வீ.கே.ரமேஷ், படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு