என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

சேலம் 28

சேலங்களைத் தேடி ஓர் உலக உலா!

##~##

'சேலங்களைத் தேடி...’ - உலகம் முழுக்கப் பரவி இருக்கும் சேலங்களைக் கண்டுபிடிக்க கிளம்பி இருக்கும் பிரவீன்குமாரின் முயற்சிக்குச் சூட்டியிருக்கும் பெயர் இது! உலகம் முழுக்க சேலம் என்கிற பெயரில் இருக்கும் ஊர்களைத் தேடிப் பிடித்து அங்கு உள்ளவர்களுடன் ஒரு வலைப் பின்னல் ஏற்படுத்தும் முனைப்போடு செயல்படுகிறார் பிரவீன்குமார்.

''ஊர்ப் பாசம் அதிகம் எனக்கு. சொந்த மண்ணை விட்டுப் போக மனசு இல்லாமல் வெளியூரில் கிடைச்ச நல்ல வேலையை ஏத்துக்கவே இல்லை. ஏற்கெனவே பாலசுந்தரம்னு ஒருத்தர் 1960-ல் சேலத்தைப் பத்தி ஆராய்ச்சிப் பண்ணி இருக்கார்னு கேள்விப்பட்டு அவரைச் சந்திச்சேன். 'உலகம் முழுக்க பல நாடுகள்ல சேலம்ங்கிற பேர்ல ஊர்கள் இருக்குது. அந்த ஊர்களில் வசிக்கும் முக்கிய நபர்களை எல்லாம் ஒருங்கிணைச்சு ஒரு இணைப்புப் பாலத்தை ஏற்படுத்த முயற்சி செஞ்சேன். என்னால் முடியலை. வயசாயிடுச்சு. நீயாவது செய்’னு சொன்னாரு.

அவரை மானசீக குருவா ஏத்துக்கிட்டு உலகத்துல சேலங்களைத் தேட ஆரம்பிச்சேன். அமெரிக்காவில் மட்டும் சேலம் என்கிற பேரில் 24 ஊர்கள் இருக்குது. தென் ஆப்பிரிக்கா, சுவீடன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் தலா ஒரு ஊர் இருக்கு. கணக்குப் போட்டுப் பார்த்தா, நம்ம ஊரோடு சேர்த்து உலகத்துல 28 சேலம் இருக்கு. இந்த 28 சேலத்தையும் ஒரு வட்டத்துக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கி இருக்கேன்.

சேலம் 28

அமெரிக்காவின் ஓரிஸான் மாகாணத்தைச் சேர்ந்த சேலத்தில் இருக்கும் ஜர்னலிஸ்ட் டிம்கிங் என்பவர் அறிமுகம் ஆனார். அவருக்கும் என் ஐடியா பிடிச்சுப் போயி என்னோடு கைகோத்துக்கிட்டார். சீக்கிரமே நம்ம சேலத்துக்கு அவர் வரப் போறார். நம்ம சேலத்து மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம் போன்றவற்றை ஒரு குறும்படமாக இயக்கி  அவங்க 'சேலத்தில்’ ஒளிபரப்பும் திட்டத்தோடு வர்றார்.

இதனால் என்ன லாபம்னு நீங்க கேட்கலாம். எல்லா சேலத்திலும் இருக்கும் சமூக சேவகர்கள், வர்த்தகர்கள்,  அதிகாரிகள் போன்ற பிரபலங்களை ஒருங்கிணைச்சா எவ்வளவு நல்லா இருக்கும். அந்நகர மக்களுக்குள்ள நட்பு உணர்வு ஏற்படும். வர்த்தகரீதியிலான தொடர்பில் துவங்கி கலாசாரப்  பகிர்தல் வரை ஏகப்பட்ட நன்மைகள் உண்டாகும். இந்த அமைப்புக்கு 'மை சேலம்’னு பேருவெச்சிருக்கோம்.  இந்த அமைப்பில் சேர ஒரே தகுதி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

www.salemjilla.com என்ற தளத்தில் சேலம் பற்றிய செய்திகள், புகைப்படங்களை தினமும் அப்டேட் பண்ணிட்டே இருப்போம். இப்போ உலகம் முழுக்க இருக்கும் சேலங்களை பத்தின செய்திகளையும் கொண்டுவரப் போறோம். எங்கேயும் சேலம்... எப்போதும் சேலம்... இதுதான் எங்க தாரக மந்திரம்!'' சிலாகிக்கிறார் பிரவீன்.

- கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: எம்.விஜயகுமார்