Published:Updated:

“நான் ஒரு ‘ஒண்டி மின்னி’!”

விகடன் மேடை - சத்யராஜ் பதில்கள் வாசகர் கேள்விகள்... , படம்: கே.ராஜசேகரன்

“நான் ஒரு ‘ஒண்டி மின்னி’!”

விகடன் மேடை - சத்யராஜ் பதில்கள் வாசகர் கேள்விகள்... , படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

 பிரசன்னா ராமசுப்ரமணியன், ஆம்பூர்.

''உங்களின் ஆல் டைம் ஃபேவரைட் காமெடி கவுண்டரோடுதான். அந்த கிளாஸிக் காமெடியின் மேக்கிங் அனுபவ சுவாரஸ்யங்களை ஷேர் பண்ணுங்களேன்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இது, இங்கீதத்துக்காகச் சொல்ற சாதுர்யமான பதில் இல்லை; முகத்தில் அடிக்கிற உண்மை. கவுண்டமணி அண்ணனுக்கும் மணிவண்ணனுக்கும் இங்கு மாற்றே கிடையாது. கவுண்டமணி அண்ணனின் உண்மையான பேர் சுப்ரமணி. 'கவுன்ட்டர்’ அடிக்கிறதுனாலயே, 'கவுண்ட’மணி ஆனார். 'பிரம்மா’, 'நடிகன்’ போன்ற படங்கள்ல அவர்கூட நடிக்கும்போது, நான் சிரிப்பை அடக்கிட்டு நிற்பதைக் கொஞ்சம் கூர்ந்து கவனிச்சுப் பார்த்தாக் கண்டுபிடிச்சிடுவீங்க.

'நடிகன்’ல புளியஞ்சாதத்து மேல முட்டைய வெச்சு பிரியாணினு சொல்லி அவர்கிட்ட தருவேன். சாப்பிட்டுப் பார்த்துட்டு, 'த்தூ... என்ன பிரியாணி புளிக்குது’ம்பார். 'புளிசாதம்யா அது’ம்பேன். 'அடப்பாவிங்களா... புளியஞ்சாதத்து மேல முட்டைய வெச்சு பிரியாணினு பொய் சொல்றியா. இதுலயும் ஃபோர்ஜரியா’ம்பார். இதெல்லாம் ஸ்கிரிப்ட்ல இல்லாமல் ஸ்பாட்ல அவரா சொன்ன டயலாக்.

அந்தப் படத்துல எனக்கு வெள்ளை தாடி, மீசைனு வயசான கெட்டப். ஆனா, எனக்கு ஒரிஜினலாவே உடம்பு பூரா கறுப்பு முடி. உடம்புல உள்ள முடியை வெள்ளையாக்கிறது கஷ்டம்னு அப்படியே விட்டுட்டோம். ஒரு சமயத்தில் நான் சட்டையைக் கழட்டுவேன். அப்ப உடம்புல உள்ள கறுப்பு முடியைப் பார்த்துட்டு, அதை அட்ஜெஸ்ட் பண்ற மாதிரி அவராவே, 'என்ன இது... தலை முடி வெள்ளையா இருக்கு, உடம்புல இருக்கிற முடி கறுப்பா இருக்கு. இவன் ஒரு வித்தியாசமான கிழவனா இருப்பான் போலயிருக்கே’னு ஒரு டயலாக் விட்டார். இப்படி சொதப்பலா இருக்கிற இடங்கள்லகூட சின்ன பன்ச் மூலமா ஸ்கோர் பண்ணிடுவார்.

இன்னைக்கு சமூக வலைதளங்கள்ல, யாரைக் கிண்டல் பண்றதா இருந்தாலும் கவுண்டமணி அண்ணன் 'பன்ச்’சைப் போட்டுத்தான் கிண்டல் பண்றாங்க. அப்படி என்னை ஒரு விஷயத்துல கிண்டல் பண்ணியிருக்காங்க. நான் மேடையில் ஒருத்தரைப் பற்றி புகழும்போது சமயத்துல கட்டுப்பாடு இல்லாம வண்டி இழுத்துட்டுப் போயிடும். அப்படி சமீபத்துல ஒரு டைரக்டரைப் பற்றி புகழும்போது, 'இவர்தான் சவுத் இண்டியன் ஜேம்ஸ் கேமரூன்’னு சொல்லிட்டேன். நான் பேசுறதை எடுத்துப்போட்டு, அடுத்து கவுண்டர் கேக்கிறமாதிரி, 'ஏம்பா, நீ 'டைட்டானிக்’ பார்த்திருக்கியா, 'அவதார்’ பார்த்திருக்கியா. நீ நடிச்ச இந்தப் படத்தையும் பார்த்திருக்கில்ல. உனக்கு எப்படிப்பா மனசு வந்தது, நீ எத்தனை நாள் என்கூட நண்பனா இருக்க, இப்ப உன்னை நண்பன்னு சொல்லிக்கிறதுக்கே எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்குப்பா’னு ஃபுல் கலாய்ப்பு.

“நான் ஒரு ‘ஒண்டி மின்னி’!”

நான் தனியா என் வீட்ல உட்கார்ந்து செல்போனை காதுல வெச்சு விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருந்தேன்னா, என் மகள் திவ்யா, மகன் சிபி எல்லாம், 'அநேகமா ஐயா, கவுண்டமணி மாமாகூட பேசிட்டு இருக்காங்கனு நினைக்கிறேன்’னு சொல்வாங்க. (கோவையின் சில பகுதிகள்ல அப்பாவை 'ஐயா’னுதான் சொல்வாங்க.) அந்தமாதிரி விழுந்து விழுந்து சிரிப்பேன். அது ஓர் உற்சாக டானிக்!''

புகழேந்தி, கள்ளக்குறிச்சி.

''நீங்கள் நாத்திகவாதியாக இருப்பதில் மகிழ்ச்சியே... ஆனால் உங்கள் பகுத்தறிவு, மற்ற மதங்களை சாய்ஸில் விட்டுவிட்டு இந்து மதத்தை மட்டும்தான் கேள்வி கேட்குமா?''

''என்னைப் போன்ற உண்மையான பகுத்தறிவாளனுக்கு எம்மதமும் சம்மதம் இல்லை!''

பாஸ்கரன், திருப்பூர்.

'' 'அமாவாசை’ மூலம் தமிழக அரசியல்வாதிகளுக்கு குறுக்குவழியில் முன்னேறும் உத்தியைக் கற்றுக்கொடுத்தீர்கள். ஆனால், நீங்கள் ஏன் அரசியலில் இறங்கவில்லை?''

''என்னைப் பற்றிய ஒரு ரகசியம் சொல்லணும். சத்யராஜ்னா பொதுவா, 'காமெடி பண்ற கலகலப்பான ஆளு; செட்ல ரொம்ப ஜாலியா இருப்பார்; மேடைல சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்’னு ஒரு பிம்பம் இருக்கு. ஆனா, உண்மையில் நான் ஒரு தனிமை விரும்பி. அதை என் பொண்ணு திவ்யாதான், 'ஐயா எல்லாரும் உங்களைப் பற்றி தப்பா நினைச்சிட்டு இருக்காங்க. நீங்க சரியான 'ஒண்டி மின்னி’னு சொல்லுவா. எப்பவும் தனியா உட்கார்ந்துகிட்டு ஏதோ சிந்தனையிலேயே இருக்கிறவங்களை கோவை பக்கம் 'ஒண்டி மின்னி’னு சொல்லுவாங்க. 'அவுட்டோர் ஷூட் போனாக்கூட சாயங்காலத்துக்கு மேல தனியாத்தான் இருப்பேன். இப்படிப்பட்ட ஒண்டி மின்னிக்கு அரசியல் செட் ஆகுமா? அரசியல்னா மேடை ரொம்ப முக்கியம். ஆனா, 'அனலில் இட்ட புழுவாகத் துடிப்பதுபோல’னு சொல்வாங்கள்ல... மேடைனா எனக்கு அப்படித்தான் இருக்கும். அதுக்கான பொறுமையே கிடையாது. தவிர, நான் கொஞ்சம் சோம்பேறி. கொஞ்சம் பிரேக் கிடைச்சாக்கூட குன்னூர்ல இருக்கிற என் வீட்டுக்கு ஓடிடுவேன்.

எனக்குனு ஒரு சமூகப்பார்வை இருக்கு. இப்ப குறிப்பிட்ட கட்சியில் சேர்ந்துட்டா, அந்தக் கட்சித் தலைமை என்ன சொல்லுதோ, அதுக்கு நான் கட்டுப்படணும். உதாரணத்துக்கு ஓட்டு கேட்கப் போகும்போது, பெண்கள் ஆரத்தி எடுத்துப் பொட்டு வைக்க வந்தால், 'இதெல்லாம் வேண்டாம், நம்பிக்கை இல்லை’னு நான் சொல்லமுடியுமா? 'உங்க கொள்கையை எல்லாம் உங்களோடவே வெச்சுக்கங்க சார்’னு கட்சி சொல்லாதா? இது எல்லாத்தையும்விட, நான் சுகவாசி. சினிமா நடிப்புக்காக மட்டும்தான் கஷ்டப்பட்டு இருப்பேன். மற்றபடி தேர்தல் பிரசாரத்துக்காக அலையிற மனோபாவம் எனக்கு இல்லை. என் கேரக்டரை நல்லா புரிஞ்சிக்கிட்டதாலத்தான் நான் அரசியலுக்கு வரலை!''

கார்த்திக், குமணன்சாவடி.

''உங்கள் பார்வையில் அன்றைய அ.தி.மு.க.- இன்றைய அ.தி.மு.க. ஒப்பிடுங்க!''

''இரண்டு காலகட்டங்களிலும் தலைவர் கட்சி, பவர்ஃபுல் பெர்சனாலிட்டிகளால அசைக்கமுடியாத சக்தியா இருக்கு!''

கார்த்திகேயன் ராஜு, ஃபேஸ்புக்.

''முன்பெல்லாம் நீங்களும் கமல்ஹாசனும் போட்டிப் போட்டு நடிப்பீங்க. ஆனால், இப்போது ஏன் நீங்கள் அவருடன் இணைந்து நடிப்பது இல்லை?''

''பொதுவா கல்லை சிற்பிகள்தான் செதுக்கி சிற்பமாக்குவாங்க. ஆனா, ஒரு சிற்பம் தன்னைத்தானே செதுக்கிட்டு இருக்கிறதைப் பார்த்திருக்கீங்களா? அதுதான் கமல். அப்போ ஒவ்வொரு படத்துலயும் வேற வேற ஹீரோயினோட நடிச்சிட்டு இருப்பார். ஆனாலும் அவருக்கு வில்லனா நான் மட்டும்தான் நடிப்பேன். இப்பவும் அவர்கூட போட்டிப் போட்டு நடிக்க எனக்கும் ஆசைதான். ஆனா, அவர் கேரக்டருக்கு சவால் விடுற மாதிரி வில்லன் கேரக்டர் அமையலையே.

'விருமாண்டி’யில் நெப்போலியன் கேரக்டர்ல என்னை நடிக்கக் கேட்டார். அது அந்த அளவுக்கு சவாலான கேரக்டர் இல்லைனு தோணுச்சு. நான் அவர் அலுவலகத்துக்கே நேர்ல போய், 'சார் இது 'காக்கிச்சட்டை’ லெவலுக்கு இல்லை’னு சொல்லி மறுத்துட்டேன். 'வேட்டையாடு விளையாடு’ல பிரகாஷ்ராஜ் சார் கேரக்டர் எனக்கு வந்துச்சு. இதுலயும் அதே சிக்கல்தான்.

இன்னொரு விஷயத்துல என் மேலயும் தப்பு இருக்கு. 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ காலத்துல ஒரு சரித்திரப் படத்தை கமல் சார் சொந்தமா தயாரிச்சு இயக்கும் எண்ணத்துல இருந்தார். அதுல நானும் சேர்ந்து நடிக்கிறதா இருந்துச்சு. அதுல அவர் கேரக்டரைவிட என் கேரக்டருக்கு நல்ல ஸ்கோப் இருக்கும். ஆனா, நான் சினிமாவுல அப்பதான் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிருந்தேன். அந்த நேரத்துல அவர்கூட மறுபடியும் வில்லனா நடிச்சோம்னா, சறுக்கிடுமோனு ஒரு பயம். இதை அவர்கிட்டயே சொன்னேன். 'நீங்க திறமையான நடிகர். உங்களுக்கு இந்தத் தயக்கம் எல்லாம் தேவை இல்லை’னு சொன்னார். ஆனாலும், அந்தப் படத்தில் நான் நடிக்கலை. என்ன காரணமோ, கமல் சாரும் அந்தப் படத்தை எடுக்கலை. ஒருவேளை, நான் ஒப்புக்கிட்டு இருந்திருந்தா, அந்தப் படத்தை அவர் எடுத்திருப்பாரோ என்னவோ! அப்படி நடந்திருந்தா, அந்தப் படம் எனக்கு இன்னும் பெரிய பேர் கொடுத்திருக்கும். என் தவறான கணிப்பால் அந்தப் படத்தை நான் மிஸ் பண்ணிட்டேன். ஸாரி கமல் சார்!''

பாலமுருகன் நாகராஜன், சென்னை.

''தங்களுடைய ஆகச் சிறந்த படம் 'ஒன்பது ரூபாய் நோட்டு’ கவனிக்கப்படாமலே போய்விட்டதில் வருத்தம் ஏதேனும் உள்ளதா?''

''மிகப் பெரிய வருத்தம் உண்டு. அந்தப் படத்துல நடிக்கிற அளவுக்கு எனக்கு என்மேல நம்பிக்கை இல்லை. ஏன்னா, வறுமையின் காரணமா வரும் சோக உணர்வுகள் என் முகத்துல வரணும். ஆனா, நான் ரொம்ப வாட்டசாட்டமான ஆளு. நல்ல கலர். என்னதான் கஷ்டப்பட்டு நடிச்சாலும்கூட என் தோற்றத்துக்கு அந்த வறுமை சார்ந்த சோகம் சரியா வெளிப்படுமாங்கிற சந்தேகம் இருந்தது.

நான் தயங்கினப்ப, என்னைச் சரியா நடிக்க வெச்சு பேர் வாங்கித் தந்தது தங்கர்பச்சான்தான். அந்தப் படம் பார்த்துட்டு என்னைப் பாராட்ட போன்ல கூப்பிட்ட எல்லாருமே, பேசும்போது அழுதிடுவாங்க. குறிப்பா, கலைஞர் பார்க்கிறதுக்காக ஒரு ஷோ ஏற்பாடு பண்ணினோம். அப்ப எனக்கு வேறொரு படப்பிடிப்பு இருந்ததால், அதை முடிச்சிட்டு வர்றதுக்கும் படம் முடியிறதுக்கும் சரியா இருந்துச்சு. நான் தியேட்டர் வாசல்ல நிக்கிறேன். க்ளைமாக்ஸ் காட்சி பார்த்துட்டு கலங்கின கண்களோட, சோகமா வெளியே வந்தார் கலைஞர். கையை இறுக்கமாப் பிடிச்சுட்டு மனசுவிட்டுப் பாராட்டினார். வியாபாரரீதியா பெரிய வெற்றி அடையலைன்னாகூட இதெல்லாம்தான் எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய பரிசு. இதுக்கெல்லாம் காரணமான ஒரே நபர் தங்கர்பச்சான்!''

- அடுத்த வாரம்...

•  ''உங்களின் நெருங்கிய நண்பரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் பற்றி?''

•  ''இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்த நீங்கள், இப்போது இந்திப் படத்தில் நடித்தபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது..?''

• ''சினிமா நூற்றாண்டு விழாவில் மரியாதைக்குரிய திரைக் கலைஞர்கள் சிலர்  புறக்கணிக்கப்பட்டார்களே, ஏன் உங்களைப் போன்ற சீனியர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லை? கலைஞர் முதல்வராக இருந்தபோது, அவரை வைத்துக்கொண்டே உங்களைவிட ஜூனியரான அஜித்தால் குறைசொல்ல முடிந்த போது, இது மட்டும் ஏன் முடியவில்லை?''

- கேரக்டரை இன்னும் புரிஞ்சுக்கலாம்...

“நான் ஒரு ‘ஒண்டி மின்னி’!”

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism