Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 8

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 8

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
##~##

எமக்குத் தொழில் கவிதை

'முதலாளிமார்கள்
விரல் எல்லாம் மோதிரங்கள்
மனசெல்லாம் தந்திரங்கள்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

                           - கவிஞர் விக்ரமாதித்யன்

வ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும். ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் தெற்கு மாட வீதி கிளை நூலகத்தில் இவன் வாசித்த 'நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்’ என்ற புத்தகமே அதற்குக் காரணம்.

ஒவ்வொரு பக்கமாக அந்தப் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருக்கும்போது, இவன் சஃபாரி சூட் அணிந்து காரில் இருந்து இறங்குவதுபோலவும், இவனிடம் வேலை செய்யும் நூற்றுக்கணக்கானவர்கள் இவனுக்கு வணக்கம் வைப்பதுபோலவும், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் என்று சினிமாவில் பார்த்த கிளப்களில் எல்லாம் இவன் தலைமை உரை ஆற்றுவதுபோலவும் கனவு காணத் தொடங்கினான்.

விக்ரமாதித்யனைப் பிடித்த வேதாளம் போல, அந்தப் புத்தகம் இவன் தோளில் தொற்றிக்கொண்டு, பல்வேறு சுயமுன்னேற்ற, தன்னம்பிக்கை நூல்களை நோக்கி இவனை அழைத்துச் சென்றது. 'சிறு தொழில் பெரும் லாபம்’, '30 நாட்களில் முன்னேறுவது எப்படி?’, 'கோபுரத்தில் ஏறியவர்கள்’, 'டாடாவுக்கே டாட்டா காட்டலாம்’, 'வா இளைஞனே வளரத் தொடங்கு!’ என்று யார் யாரோ எழுதிய புத்தகங்கள் எல்லாம் இவன் மூளைக்குள் முகாமிட்டு 'காசேதான் கடவுளடா... அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா...’ என்று பாடத் தொடங்கின.

டுத்த நாள் காலையில் தொழிலதிபர் கனவில் இவன் திளைத்துக்கொண்டிருந்தபோது, இவன் ஆயா இவனை எழுப்பி ''காபித் தூள் தீர்ந்துபோச்சுடா... அண்ணாச்சி கடைல ஒரு பாக்கெட்டு வாங்கிட்டு வா'' என்று கையில் பத்து காசைக் கொடுக்க, இவன் 'ஊட்டியில் காபி எஸ்டேட் ஒன்று வாங்க வேண்டும்’ என்ற கனவுடன் ஓடத் தொடங்கினான்.

வேடிக்கை பார்ப்பவன் - 8

ஆனால், யதார்த்தம் வேறு என்று அன்று இவன் அறிந்தானில்லை. அன்று முதல் இன்று வரை, இவன் சட்டைப் பாக்கெட்டிலும், கால் சட்டைப் பாக்கெட்டிலும் ஏதோ ஒரு மாய ஓட்டை இருந்துகொண்டுதான் இருக்கிறது. இவனிடம் காசு இருக்கும்போதெல்லாம் அந்த மாய ஓட்டை வழியே நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அள்ளிக் கொடுத்துவிட்டு, அடுத்த வார செலவுக்கு யாரிடம் கடன் வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பான். இப்படி வாழ்வதும் இன்னோர் ஆனந்தம்தான் இவனுக்கு!

துருப்பிடித்த சைக்கிளில் 'தொழிலதிபர்’ கனவில் இவன் சுற்றிக்கொண்டிருப்பதை அறிந்த இவன் தந்தை, சென்னையில் சிறு தொழில் பற்றி நடந்த பயிற்சி வகுப்பு ஒன்றுக்கு இவனை அனுப்பிவைத்தார். அப்போது இவன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த சிறு பத்திரிகைகளில் 'சிந்தனையாளன்’ பத்திரிகையும் ஒன்று.

சிந்தனையாளன் பத்திரிகையில் அரசியல் இலக்கியம் குறித்த கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர் சங்கமித்ராதான், அந்த இரண்டு நாள் பயிற்சி முகாமை நடத்தினார். சுற்றிலும் நடுத்தர வயதினர்கள் அமர்ந்திருக்க, அப்போதுதான் மீசை அரும்பத் தொடங்கியிருந்த மாணவனாக, கையில் குறிப்பேட்டுடன் சிறு தொழில்கள் குறித்தும், சுயமுன்னேற்றம் குறித்தும் அவர் சொல்வதை இவன் குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தான்.

அந்தப் பயிற்சி முகாமில்தான் இவன், கவிஞர் மு.சுயம்புலிங்கத்தைச் சந்தித்தான். 'நாட்டுப் பூக்கள்’, 'ஊர்க்கூட்டம்’ என்னும் தலைப்பிலான கவிதைத் தொகுப்புகளுக்கு சொந்தக்காரர். கரிசல்காட்டு இலக்கியத்தில் கி.ரா- வுக்குப் பிறகு குறிப்பிடத்தகுந்தவர். அவர் எழுதிய கவிதை ஒன்றை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இவன் வரிவிடாமல் சொல்வான். அப்படிச் சொல்லும்போதெல்லாம் நெஞ்சை கனக்கச் செய்யும் அந்தக் கவிதை.

'நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்.
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை.

 டவுசர் இல்லையென்று குழந்தைகள் அழும்
ஒரு அடி கொடுப்போம்.
வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.

தீட்டுக்கறை படிந்த
பூ அழிந்த சேலைகள்
பழையத் துணிச் சந்தையில்
சகாயமாகக் கிடைக்கின்றன.

இச்சையைத் தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது

கால் நீட்டி தலை சாய்க்க
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது.

திறந்தவெளிக் காற்று யாருக்குக் கிடைக்கும்?
எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது.

எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது.

எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்!’

பயிற்சி முகாமின் இரண்டு நாட்களிலும் இவன், கவிஞர் மு.சுயம்புலிங்கத்தையே வியந்தபடி பார்த்துக்கொண்டிருந்தான். சிவப்பாக, ஒல்லியான தோற்றத்துடன் இருக்கும் இவரா,

'அதோ மேகங்கள்
மழையைக் கொண்டுபோகின்றன
நம்முடைய குளங்கள்
வறண்டுவிட்டன
நம்முடைய பயிர்கள்
வாடிவிட்டன
விடாதே
மேகங்களை மடக்கு
பணிய வை!’

வேடிக்கை பார்ப்பவன் - 8

போன்ற கவிதைகளை எழுதியவர்!

அந்தப் பயிற்சி வகுப்பிலும் அவர் ஒரு கவிதை படித்தார். எளிமையான வார்த்தைகளுடன் சிறு தொழில் செய்ய தன்னம்பிக்கை கொடுத்த அந்தக் கவிதை, இப்போதும் இவன் நினைவில் நிற்கிறது.

'புளிய மரத்தடியில்
பாய், பிரியாணி விற்கிறார்.
சுவையாக இருக்கிறது.
ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது.
மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்
நாம் ஏன் முயற்சிக்கக் கூடாது? ’

கவிதையைத் தொடர்ந்து, தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் தான் ஒரு மிட்டாய்க் கடை நடத்துவதையும், அதில் சந்திக்கும் சிக்கல்களையும் அவர் பேசத் தொடங்க, இவன் அண்ணாந்து வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தான்.

ருக்குத் திரும்பியதும் ''என்னடா... பயிற்சி வகுப்பு எப்படி இருந்துச்சு?'' என்று அப்பா இவனிடம் கேட்க,

''நல்லா இருந்துச்சுப்பா. இந்த லீவுல நம்ம திண்ணையிலேயே நான் பெட்டிக் கடை வெக்கப் போறேன்'' என்று இவன் சொல்ல, அப்பா சம்பளப் பணத்தில் இருந்து 500 ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.

டுத்த நாள் அதிகாலை அப்பா, இவனை காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் இருந்த ஹோல்சேல் கடை ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். பிஸ்கட்டுகள், கலர்கலரான மிட்டாய்கள், கமர்கட்டு, தட்டை, முறுக்கு, லக்கி பிரைஸ் அட்டை, பென்சில்கள், பல்பம், எலந்தப்பழ ஊறுகாய் அட்டை என்று இவனுக்குப் பிடித்த எல்லாவற்றையும் தேடித் தேடிக் கொள்முதல் செய்தான்.

காலி ஹார்லிக்ஸ் பாட்டில்களிலும், பிளாஸ்டிக் டப்பாக்களிலும் தின்பண்டங்களை அடைத்து, மற்ற பொருள்களை கயிறு கட்டிக் கூரையில் இருந்து தொங்கவிட்ட பின், இவனது பெட்டிக் கடை திண்ணையில் தயாராகிவிட்டது. ஜி.நாகராஜன் எழுதிய 'நாளை மற்றுமொரு நாளே’ என்ற புத்தகத்தை வாசித்தபடி, வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கத் தொடங்கினான். காலையில் இருந்து மதியம் வரை வெவ்வேறு இடங்களில் வட்டம் வட்டமாக விழுந்துகொண்டிருந்த வெயில் மட்டுமே இவன் வாடிக்கையாளராக இருந்தது.

பூக்கடைக்கே விளம்பரம் தேவைப்படும்போது பெட்டிக் கடைக்கு வேண்டாமா? நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று, கடை ஆரம்பித்திருப்பதைச் சொல்லிவிட்டு வந்தான். ஆர்வமாக வந்து மிட்டாய்களையும் பிஸ்கட்டுகளையும் அள்ளிக்கொண்டு கடன் சொன்னார்கள். இவன் 'கடன் அன்பை முறிக்கும்’ ஸ்டிக்கரைக் காட்டிய போது, ''அப்ப போன வாரம் என்கிட்ட நெல்லிக்காய் வாங்கிச் சாப்பிட்டியே. நான் காசு கேட்டேனா?'' என்று எதிர் கேள்வி கேட்க கேட்க, அந்தக் கேள்வியில் இருந்த நியாயம் புரிந்து, இவனும் கடன் கொடுக்கத் தொடங்கினான்.

இப்படியாக இவனுடைய முதல் முதலீடு இவனும், நண்பர்களும், இன்னும் பல எறும்புகளும், வீட்டுக்கு வந்த விருந்தினர்களும் தின்றது போக, 35 ரூபாயில் முடிந்திருந்தது.

அதை அப்பாவிடம் கொடுத்தான். அவர் சிரித்தபடி வாங்கிக்கொண்டு ''அடுத்து என்ன?'' என்றார்.

இவன் சற்றும் மனம் தளராமல் ''ஊதுவத்தி தயாரிக்கப் போறேன்'' என்றான்.

கப்பட்ட கச்சாப் பொருள்களுடன் புத்தகங்களைப் படித்து இவன் தயாரித்த ஊதுவத்திகள் வாசனை தர மறுத்தன. ஏனென்றால், அவை எரியவே மறுத்தன. அந்தத் தொழில் அதோடு அணைந்துபோனது. அடுத்து இவன் தயாரிப்பில் வெளிவந்த 'பபுள்ஸ் ஷாம்பு’ ஊதுவத்தியைப் போல் ஏமாற்றாமல், அதிகமாகவே நுரைகளைக் கொடுத்தபோதிலும், இவன் கிராமத்தில் எல்லோரும், பம்ப் செட்டில் தேங்காய் நாரைத் தேய்த்துக் குளிப்பதால், அந்த ஷாம்புகளின் நீர்க்குமிழ்கள் உடைந்துபோயின.  இத்துடன் தமிழகம் இரண்டாவது ஜி.டி.நாயுடுவை இழந்தது.

வேடிக்கை பார்ப்பவன் - 8

அப்போதுதான் இவனுக்குள் அந்தத் 'தங்க மீன்கள்’ திட்டம் உருவாகத் தொடங்கியது. நகரத்தில் வசித்த நண்பர்களின் வீடுகளில் 'கோல்டு ஃபிஷ்’ எனப்படும் தங்க மீன்கள், கண்ணாடித் தொட்டிகளில் துள்ளித் திரிவதைப் பார்த்திருக்கிறான். ஒரு மீன் ஐந்து ரூபாய் என்றும், அது குட்டி போட்டால் இரண்டு ரூபாய் என்றும் இவன் பெருங்கனவு விரிந்தது. மிகப் பெரிய தொட்டிகளில் தங்க மீன்களை அடைத்துவைத்து, அதே பழைய ஹார்லிக்ஸ் பாட்டில்களில் விற்கத் தொடங்கினான். ஒரு மீன், இரு மீன்!

மறுநாள் விடிந்ததும் இவன் வீட்டின் முன்பு சிறு கூட்டம். எல்லோர் கைகளிலும் ஹார்லிக்ஸ் பாட்டில்கள். அதில் இருந்த மீன்கள் இறந்து கிடந்தன. இவன் அதிர்ச்சியுடன், இவன் வீட்டில் இருந்த கண்ணாடித் தொட்டியைத் திரும்பிப் பார்த்தான். அங்கு இருந்த மீன்களும் இறந்து மிதந்துகொண்டிருந்தன. எல்லோருக்கும் காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, இவன் மீண்டும் கனவுக்குள் நீந்தத் தொடங்கினான்.

ள் பாதி, ஆடை பாதி என்பார்கள். இவனது அடுத்த இலக்கு ஆயத்த ஆடைகள் வாங்கி விற்பது. சென்னைக்கு வந்து, பூக்கடைப் பேருந்து நிலையத்தில் இறங்கி, தங்க சாலைக் கடைகளுக்குள் நுழைந்து, ரெடிமேட் சட்டைகளும் பேன்ட்களும் வாங்கிக்கொண்டு, அம்பானியாகும் கனவுடன் அய்யம்பேட்டையில் இறங்கி ஊருக்குள் நடந்து வந்தான். இந்த முறை தொழிலதிபர் வி.ஜி.பன்னீர்தாஸ் எழுதிய சுயசரிதையில், நரிக்குறவர்களுக்கு தவணை முறையில் டிரான்சிஸ்டர் ரேடியோ கொடுத்து முன்னேறியதைப் போல், தவணை முறைத் திட்டத்தைச் செயல்படுத்த தொடங்கினான். மடித்துக் கட்டிய வேஷ்டியும், கோவணமும், அரைக்கால் டவுசரும், அணிந்தபடி தறிக்குழிலில் அமர்ந்து பட்டுச் சேலைகள் நெய்துகொண்டிருந்த கிராமத்து ஆட்கள், ''இன்னாது ரெடிமேடு சொக்காவா? இப்பத்தாம்பா பொங்கலுக்கு துணி எடுத்துத் தெச்சேன். இத்தோட தீபாவளிக்குத்தான். அப்ப வா பாக்கலாம்'' என்றார்கள்.

''இல்லண்ணே தவணை முறையில் வாங்கிக்குங்க. இப்ப அஞ்சு ரூவா குடுங்க. அப்புறம் மாசமாசம் அஞ்சு ரூவா குடுத்தாப் போதும்'' என்ற இவன் வார்த்தைக்கு, அமோக வரவேற்பு இருந்தது. எல்லாத் துணிகளும் விற்றுத் தீர்ந்தன.

அடுத்த மாதம் தவணைக்காகப் போய் நின்றபோது, ''இன்னாப்பா துணி குடுத்திருக்க? ரெண்டு தடவைதான் போட்டேன். அதுக்குள்ள சாயம் போயிடிச்சு. குடுத்த காசைத் திருப்பிக் கேக்காம இருக்கேனே... அத நெனச்சு சந்தோஷப்படு'' என்றார்கள். இவனும் அதை நினைத்து சந்தோஷத்துடன் வீடு திரும்பினான்.

ல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இவன் அப்பா, இவனிடம் சொன்னார், ''கவலைப்படாத. காசுங்கிறது காகிதம் மாதிரி. வரும்... போகும். இதையெல்லாம் ஒரு அனுபவமா எடுத்துக்கோ.''

இன்று எல்லாவற்றையும் விட்டு தள்ளி நின்று இவன் யோசித்துப்பார்க்கையில் இந்த அனுபவங்கள் இவனுக்கு இந்தப் பாடத்தைதான் கற்றுக்கொடுத்தன: 'ஒரு வியாபாரி கவிதை எழுதினால், அவனிடம் இருக்கும் காசு மட்டுமே காணாமல் போகும். ஒரு கவிஞன் வியாபாரியானால், அவனிடம் இருக்கும் கவிதையே காணாமல் போய்விடும்!’

- வேடிக்கை பார்க்கலாம்...