Published:Updated:

குறைந்த ஆக்ஸிஜன்... நடுங்கும் குளிர்... பனிப்பொழிவு... இமயமலையின் பிள்ளைகள் "ஷெர்பாக்கள்"!

குறைந்த ஆக்ஸிஜன்... நடுங்கும் குளிர்... பனிப்பொழிவு... இமயமலையின் பிள்ளைகள் "ஷெர்பாக்கள்"!
குறைந்த ஆக்ஸிஜன்... நடுங்கும் குளிர்... பனிப்பொழிவு... இமயமலையின் பிள்ளைகள் "ஷெர்பாக்கள்"!

கொஞ்சம் மூச்சைப் பொறுமையாக உள் இழுத்துக் கொள்ளுங்கள். அப்படியே இருங்கள்... இன்னும் சில நொடிகள்... இன்னும்... இன்னும் கொஞ்சம்... இப்போது அப்படியே மிக மெதுவாக வெளிவிடுங்கள். அப்படியே சில நொடிகள்... மீண்டும் மெதுவாக இழுங்கள்... இப்படியாக எவ்வளவு நேரம் செய்ய முடிகிறது?... எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது? இது மாதிரி நூறு மடங்கு கஷ்டமாக இருக்கும், பனி சூழ்ந்த எவரெஸ்ட் மலையின் அடிவாரத்தை நீங்கள் அடையும்போதே. இன்னும் மலையேறத் தொடங்கினால்... தலை சுற்றும்... பத்து கைகள் உங்கள் கழுத்தை நெரிப்பதுபோல் இருக்கும். கண்கள் வெளி வருவது போல் தோன்றும். குடல்... வாய் வரை வந்து செல்லும். உயிர் இருக்கிறதா என்ற சந்தேகம் வரலாம்... இந்த அறிகுறிகளோடு இருக்கும் ஏ.எம்.எஸ் ( Altitude Medical Sickness ) நிலை மிக சகஜமாக ஏற்படும். இதையெல்லாம், கடந்து நீங்கள் மலையேற வேண்டும். அந்தக் கடுங்குளிரைத் தாங்க வேண்டும். எதிர்வரும் ஆபத்துக்கக் கடக்க வேண்டும். இதையெல்லாம் கடந்து உயிர் பிழைத்தால், அந்த எவரெஸ்ட் உச்சியை அடையலாம். 

(Credits : National Geographic )

மிக சமீபத்தில் " ஐந்தே நாள்களில் எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை ஏறி இந்தியப் பெண் அன்ஷு ஜம்சென்பா சாதனை " என்ற செய்தியை மிகச் சாதாரணமான பெட்டிச் செய்தியாகத்தான் கடந்திருப்போம். ஆனால், அந்தப் பெட்டிச் செய்தியில் இடம் பிடிக்க, அன்ஷூ தன் உயிரை அடமானம் வைத்துதான் செய்திருப்பார் என்பது நம்மில் எத்தனைப் பேர் உணர்ந்திருப்போம்?... ஆனால், நம்முடைய இந்தக் கதை அன்ஷூவைப் பற்றியதல்ல... இமயமலையின் பாதுகாவலர்களாகவும், அன்ஷூ போன்ற சாதனையாளர்களின் பாதுகாப்பு அரண்களாகவும், தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து நமக்கான சாகச அனுபவங்களை வழங்கும், அசாத்திய நாயகர்களான " ஷெர்பா " எனும் மாமனிதர்களைப் பற்றியது. 

" ஷெர்பா " ... இமயமலைப் பகுதிகளில் மலையேறுபவர்களின் போட்டோக்களைப் பார்த்தீர்கள் என்றால், மலையேறுபவர்களின் பின்னே , முதுகில் பெரும் சுமைகளோடும், முகம் முழுக்கப் பெரும் வெடிப்புகளோடும், சிறிய கண்களோடும், அழகான சின்ன சிரிப்போடும் இருப்பவர்கள் தான் ஷெர்பாக்கள். பொதுவாக, ஷெர்பாக்கள் என்றால் இமயமலையின் "சுமை தூக்கிகள்" என்று இமயமலை சென்று வந்தவர்களேக் கூட சொல்வதுண்டு. ஆனால், இதைவிட அவர்களை இழிவுபடுத்திட முடியாது. ஷெர்பாக்கள் சுமை தூக்கிகள் அல்ல... ஷெர்பாக்கள் இமயமலையின் பூர்வகுடிகள். உலகின் மிகச் சிறந்த வரலாற்றை சுமந்து நிற்கும் ஓர் இனம், இன்று உலகம் முழுக்கவே சுமை தூக்கிகளாக மட்டுமே அறியப்படுகிறது. 

சமதளங்களில் பல கிமீ தூரங்களை மிகச் சாதாரணமாக ஓடிக் கடக்கும் ஆரோக்கியமான, வலிமையான ஒருவர் இமயமலைப் பகுதிகளில் நடக்கவே சிரமப்படுவார்கள். காலை நடைப்பயிற்சிக்கூட செய்யாதவர்களால், இமயமலைப் பகுதிகளில் எழுந்து நிற்கக் கூட முடியாது. ஆனால், ஷெர்பாக்கள் அந்தக் கடுமையான சூழல்களில் மிகச் சாதாரணமாக சுற்றிச் சுழல்வார்கள். இது மிகவும் ஆச்சர்யமான விஷயம். ஷெர்பாக்களால் மட்டும் இது எப்படி சாத்தியப்படுகிறது என்பதை அறிய இதுவரை பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதில் முக்கியமாக இரண்டு ஆராய்ச்சிகளைச் சொல்லலாம். 

கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இரண்டு முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். பிரபல மொபைல் போன் தொழிலதிபர் ஜான் காடுவெல், உலகின் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்குத் தேவையான நிதியுதவியை வழங்கி ஓர் ஆராய்ச்சியை செய்யச் செய்தார். திபெத் பகுதிகளில் மக்கள் தோன்றி சராசரியாக 30 ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல், அங்கு மக்கள் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட 9 ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று சொல்லப்படும் நிலையில், ஷெர்பாக்களுக்கு இயல்பிலேயே அந்தச் சூழலுக்கு ஏற்ற உடல்வாகு இருக்கிறது. 

(Credits: Extreme Everest/ UCL)

ஆனால், ஷெர்பாக்களை ஆராய்ந்தால் " ஹைபோக்ஸியா " ( Hypoxia ) என்ற ஆக்ஸிஜன் குறைபாடு நிலையில், மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கான தீர்வை கண்டுபிடிக்க முடியும் என்று சொல்லப்பட்டது. இந்த இரண்டு ஆராய்ச்சிகளும் ஷெர்பாக்களின் உடற்கூறுகள் குறித்து சில விஷயங்களை உறுதிப்படுத்தியிருக்கின்றன. 

மனித செல்களில் எனர்ஜி உருவாக்கத்துக்கு முக்கியமாக இருப்பது " மைட்டோகாண்ட்ரியா " ( Mitochondria ). ஷெர்பாக்களின் மைட்டோகாண்ட்ரியாக்கள் , குறைந்தளவிலான ஆக்ஸிஜனைக் கொண்டே அதிக எனர்ஜியை உற்பத்தி செய்கிறது. மேலும், ஷெர்பாக்களின் நாவின் கீழ் இருக்கும் ரத்த நாளங்கள் உட்பட பல சிறிய ரத்த நாளங்களை ஆராய்ந்தபோது, சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அந்தப் பகுதிகளில் கூட அவர்களுக்கு சீரான ரத்த ஓட்டம் இருக்கிறது. அதாவது, உடலின் எல்லாப் பகுதிகளுக்கு எந்தவித தடைகளுமின்றி சீரான ரத்த ஓட்டம் இருக்கிறது. 

பொதுவாக மலையேறும்போது, அதிக ஆக்ஸிஜன் தேவைக்கு, அதிக சிவப்பணுக்கள் அவசியப்படும். அதிக சிவப்பணுக்களைச் செலுத்தும் போது ரத்தம் அடர்த்தியாக இருக்கும். ஆனால், ஷெர்பாக்களின் ரத்தமோ அடர்த்திக் குறைவாகவே இருக்கிறது. அதே சமயம், சாதாரண மனிதர்களைவிட 30 சதவீதம் கூடுதலான சக்தியை ஷெர்பாக்களால் வெளிப்படுத்த முடிகிறது. ஆராய்ச்சியின் முடிவில், ஷெர்பாக்களுக்கு உடலில் அதிக ஆக்ஸிஜன் உருவாகிறது என்பது மட்டுமல்ல, இருக்கும் ஆக்ஸிஜனை முழுமையாக உபயோகப்படுத்தும் திறனே, ஷெர்பாக்களை அந்த உயரங்களிலும் மிகச் சாதாரணமாக இயங்க வைக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும், தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, ஷெர்பாக்களைப் படித்தால், மூச்சுத் திணறலால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு, ஆக்ஸிஜன் ஓட்டத்தை சீராக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

ஷெர்பாக்கள் குறித்த இந்த ஆராய்ச்சிகள் ஒருபக்கம் பலரின் கவனத்தை ஈர்த்தாலும்... சில நிறுவனங்கள் தங்களின் தேவைகளுக்காக ஷெர்பாக்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து ஆதாயத்தைத் தேடிக் கொள்கிறார்கள். ஆனால், ஷெர்பாக்களின் வாழ்க்கை நிலையோ மிகவும் மோசமானதாக இருப்பதாக குரல் எழுப்புகின்றனர். 

ஓர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 600 பேர் வரை எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சியை மேற்கொள்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் பத்திரமாக அழைத்துச் சென்று வருவது ஷெர்பாக்கள் தான். ஆனால், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை அரசாங்கம் சரிவர செய்து கொடுப்பதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. நேபாளில் இமயமலையின் பல்வேறு பகுதிகளில் மெற்கொள்ளப்படும் மலையேற்ற பயிற்சிகளின் மூலம் மட்டும் ஆண்டுக்கு 360 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வருமானம் கிடைக்கிறது. இது நேபாளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகும். ஷெர்பாக்களுக்கு அரசாங்கம் வழங்கும் இன்ஷூரன்ஸ் தொகையும் போதவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதுவரை கிட்டத்தட்ட 120 ஷெர்பாக்கள் இந்த அபாயகரமான பயணங்களில் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.

 மிக சமீபத்திய செய்தி இது... " எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்த 'ஹிலாரி முனை' முற்றிலுமாக அழிந்துவிட்டது " .  " மலையேறுபவர்களால் இமயமலைப் பகுதிகளில் அதிக குப்பைகள் சேருகின்றன ..." என்ற செய்தியையும்  படிக்கிறோம். 
தாங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்த மலை மாசடைந்து கொண்டிருக்கிறது, தாங்கள் சாமியாக கும்பிடும் மலையின் மொத்த அதிகாரமும் அரசாங்கத்திடம் உள்ளது, இயற்கை தங்களுக்கு அளித்த ஆச்சர்ய உடற்கூறுகளை லாப நோக்கத்திற்காக பல நிறுவனங்கள் கூறு போட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள், பிழைப்புக்காக உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் பயணங்கள் ஆபத்து மிகுந்தவையாக இருக்கின்றன, சமூகத்தில் சரியான அங்கீகாரம் இல்லை... இருந்தும்... அந்தச் சின்னக் கண்களின் வழி அழகாக சிரித்தபடி, முதுகில் மூட்டைகளை சுமந்துகொண்டு, இன்றும் மலையேறத் தயாராகிறார்கள்... இந்த இமயமலைப் பிள்ளைகள். 


ஷெர்பா சில துளிகள் :

1. அபா ஷெர்பா & ஃபுபா டஷி என்ற இரு ஷெர்பாக்கள் தான் இதுவரை 21 முறை எவரெஸ்ட் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இது தான் ஷெர்பாக்கள் மத்தியில் உலக சாதனை. 

2. மூன்று மாதத்தில் தோராயமாக ஐந்து லட்சம் ரூபாய் வரை ஷெர்பாக்கள் சம்பாதிப்பார்கள். ஆனால், அதற்கு அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டும். 

3. சமீப காலங்களில், இன்றைய தலைமுறை ஷெர்பாக்கள் பலரும் புலம்பெயரத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் 2500 ஷெர்பாக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.