Published:Updated:

சரிகமபதநி டைரி 2013

வீயெஸ்வி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், செல்லா

சரிகமபதநி டைரி 2013

வீயெஸ்வி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், செல்லா

Published:Updated:
##~##

 சுற்றிலும் பக்கவாத்தியக்காரர்கள் இல்லை என்றால், பாடகர்களுக்குப் பிழைப்பு நடக்காது. இதை நன்றாகவே உணர்ந்தவராக, வாத்திய இசைக் கலைஞர்களுக்குத் தனியாக ஒரு விருது வழங்கும்படி பிரம்ம கான சபாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் சஞ்சய் சுப்ரமண்யன்.

சபாவும் இவரது வேண்டுகோளை ஏற்க, இந்த வருடம் முதல் விருதுகள், மூன்றில் இருந்து நான்காக உயர்ந்துவிட்டன. இதுநாள் வரை இவர்கள் கொடுத்துவந்த கான, நாட்டிய, நாடக பத்மங்களுடன், வாத்திய பத்மம் விருதும் சேர்ந்துகொண்டது. புது விருது கிடைக்கப்பெற்றவர், 85 வயது திருச்சி தாயுமானவன். மிருதங்கம், கஞ்சிரா, கொன்னக்கோல் வித்வான். இவர் உள்பட, பக்கவாத்தியக் கலைஞர்கள் அனைவரும் சஞ்சய்க்குச் சொல்வது, 'நன்றி வாத்தியாரே!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கான விருது பெற்ற சஞ்சய், அதை வாங்கிக்கொள்வதற்கு முன், வழங்கிய எம்.பாலமுரளி கிருஷ்ணாவுக்கு மேடையில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் (பார்க்க, படம்). அந்த சமயம், ராஜ்பவனில் நடக்கும் பதவி ஏற்பு நிகழ்ச்சியும், பொதுக்குழு மேடையும் நினைவுக்கு வரவில்லை. காரணம், அங்கே விழுவது நன்றிக்கடன். இங்கே, மதிப்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடு!

சரிகமபதநி டைரி 2013

வன்ஸ் கலை விழாவில் சைந்தவி கச்சேரி!

சைந்தவிக்கு இனிமையான குரல். இருந்தாலும் அது மட்டுமே வேலைக்கு ஆகாதே! தோடி ராகப் பாடலில் அந்த ராகத்தின் சங்கதிகளை வேகவேகமாக வெளிப்படுத்தினார். ஆடியன்ஸ் தரப்பில் எதிர்பார்ப்பு எகிறியது. அந்தோ பரிதாபம்... அடுத்து வந்த பூர்விகல்யாணியை வளர்த்திச் செல்லும் வழி தெரியாமல் பாவம், விழி பிதுங்கினார்.

மெயினாக சங்கராபரணம், சுகமாக ஆரம்பித்த போது, ஈ.சி.ஆரில் பளிங்கு மாளிகை எழுப்புவதற்கான அறிகுறி தெரிந்தது. ஆனால், சரியான அட்ரஸ் தெரியாமல் அலைக்கழிக்கப்படுவது மாதிரி, ஆரம்பித்த இடத்துக்கே திரும்பிவிட்டார். இந்த ராகத்தில் சைந்தவி பாடியது, 'மகாலட்சுமி ஜகன்மாதா மனமிறங்கி வரம் அருள் தா...’ தேவையான நேரத்தையும் உழைப்பையும் செலுத்தினால், மகாலட்சுமி நிச்சயம் மனம் கசிந்து வரம் அளிப்பாள்!

நிற்க, ஒரு சந்தேகம்.

கர்னாடக இசை மேடைகளில் கொடிகட்டிப் பறந்துவிட்டு, திரை இசைப் பக்கம் போனால் அதிகம் ஜொலிக்க முடியுமா அல்லது கோடம்பாக்கத்தில் காலூன்றிவிட்டு பின்னர் மயிலாப்பூர் மேடைகளில் மைக் எதிரில் உட்கார்ந்தால் வெற்றி நிச்சயமா?

மாண்புமிகு இசை ரசிகர்கள் தீர்ப்பு அளிக்கட்டும்!

சரிகமபதநி டைரி 2013

ச்சேரிகளில் தனி ஆவர்த்தனம் வாசிப்பவர்கள், தாளக்கணக்கில் கில்லாடிகளாக இருப்பினும் நேரக்கணக்கில் படு 'வீக்’. எத்தனை நேரம் 'தனி’க்கு எடுத்துக்கொள்ளலாம்? இதற்கெல்லாம் காமன்வெல்த் மாநாடு கூட்டித் தீர்மானம் வாசிக்க முடியாது. மிருதங்கம், கடம், etc., வாசிப்பவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

பாரத் கலாச்சாரில் பாலக்காடு ராம்பிரசாத் கச்சேரி, மொத்தம் 105 நிமிடங்கள். இதில் 15 நிமிடங்களுக்கு மேல் 'தனி’க்காக விழுங்கிவிட்டார்கள், நெய்வேலி நாராயணனும் (மிருதங்கம்), அனிருத் ஆத்ரேயாவும் (கஞ்சிரா). பாடுபவருக்கு இழைக்கப்படும் அநீதி இது!

பாலக்காடுக்குப் போவோம்! வீட்டில் இருந்து காரில் வரும்போதே வர்ணம் பாடி தொண்டைக்கு ஆயில் போட்டுக்கொண்டுவிட்டார் போல! மேடை ஏறியதுமே பெரிய கீர்த்தனையாக எடுத்துக்கொண்டு, விரிவாக நிரவல் செய்து, மூன்று காலங்களில் ஸ்வரங்கள் பாடி நிமிர்ந்து உட்காரச் செய்தார் ராம்பிரசாத். ஆனால், தொடர்ந்த துவஜாவந்தியிலும் கானடாவிலும் சரிந்து உட்கார வைத்துவிட்டார். அதுவும் அன்றைய மெயின் பாடல்தான் 'ஸுகி யெவரோ ராமநாம...’ என்பது, பாட்டு முடிந்து 'தனி’க்கு வழிவிட்டபோதுதான் தெரிந்தது. சுகிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ராமா!

பின்னர் வந்த வராளியில் ராம்பிரசாத் back to form. ஆலாபனையில் சங்கதிகள் துள்ளாட்டம் போட்டன. மெட்ரோ ரயில் வேகத்தில் தானம். பல்லவிக்குப் பின் தொடர்ந்து ஸ்வர ராகமாலிகையில் சாமாவிலும் சண்முகப்ரியாவிலும் ஸ்பெஷல் முத்திரைப் பதித்து கைத்தட்டல்களை வரவில் வைத்துக்கொண்டார், மேதை பாலக்காடு மணி ஐயரின் பேரன்.

கொசுறு: மியூசிக் அகாடமியில் அருணா சாய்ராம் ரத்து செய்த ஸ்லாட்டை ராம்பிரசாத்துக்குத் தர முன்வந்ததாகவும், ராம் அதை மறுத்துவிட்டதாகவும் பேசிக்கிறாங்களே... நிசமாலுமா?

'இனி மேடை அவர் வசம்.. ரசனை நம் வசம்... கிடைக்கப்போவதோ பரவசம்...’

- மேடையில் நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரை அறிமுகப்படுத்திவிட்டு கவி நடையில் முடித்தார் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் நிர்வாகிகளில் ஒருவர்!

மீண்டும் மேடைக்கு வந்துவிட்டார் நித்யஸ்ரீ. வரவழைத்த சங்கீதத்துக்கு வந்தனம்.

சரிகமபதநி டைரி 2013

வகுளாபரணம் ராகத்தில் 'ஏராமுநி நம்மிதிநோ நே...’ கீர்த்தனையில் 'வார்ம் அப்’ செய்துகொள்ள நித்யஸ்ரீ முனைந்தபோது, அவரது குரல் சற்றே சண்டித்தனம் செய்ய, அனுபவத்தைத் துணைக்கு அழைத்து ஒரு மாதிரி சமாளித்தார்.

பின்னர், ரஞ்சனியை மேடைக்கு வரவழைத்து, அந்த ராகத்தின் அழகை கீழ் காலத்தில் அறிமுகப்படுத்திவைத்தார். படிப்படியாக ரஞ்சனி வளர்ந்தாள். பருவப்பெண்ணாக வலம் வந்தாள். கூட்டம் 'ஆஹா’ போட்டு மெச்சியது. நித்யஸ்ரீயின் மேல்காலப் பயணம் தடங்கல் இல்லாத ஒரு சுகானுபவம். பலே!

வயலினில், ஹேமலதா வில்லாதி வில்லி! மெருகு குலையாமல் அவரது வயலினில் இருந்து புறப்பட்டு வந்து கொஞ்சிக் குலாவியது ரஞ்சனி. சபாஷ்!

சரிகமபதநி டைரி 2013

இந்த ராகத்தில் நித்யஸ்ரீ பாடியது 'சதா சாரங்க நயனே ஸ்ரீ சதாசிவே..’ யோக நரசிம்ஹம் இயற்றியது. ஏதோ, கோயில் விக்கிரகம் என்று நினைத்துவிட வேண்டாம். இவர், மைசூர் வாசுதேவாசார்யாவின் மாணவர். 1897 முதல் 1971 வரை வாழ்ந்தவர். சம்ஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பாடல்கள் புனைந்தவர்.

ரஞ்சனி முடியும்போது நேரம் இரவு 7 மணி, 54 நிமிடங்கள். ஹால் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் காலி. கொடுத்த காசு ஜீரணமாகிவிட்டதாக நினைத்துப் புறப்பட்டுவிட்டவர்கள், நித்யஸ்ரீ பாடிய பிலஹரியையும், 'தொரகுநா இடுவண்டி ஸேவ’ பாடலையும் கேட்கத் தவறிவிட்டார்கள்!

டெய்ல் பீஸ்: சங்கீத கலாநிதி விருதைக் கொண்டாடும் விதமாக, சுதா ரகுநாதனை மையப்படுத்தி காபி டேபிள் புக் ஒன்று தயாராகி வருகிறது. சுதாவின் வண்ணப்படங்கள், ஓவியங்கள் தவிர அவர் பிறந்த, வளர்ந்த, சாதித்த கதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்று, அவை இளம் இசைக் கலைஞர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் விதத்தில் இருக்குமாம். டிசம்பர் மூன்றாவது வாரத்தில் ரிலீஸ்.

- டைரி புரளும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism