என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

பிணி தீர்க்கும் பில்லி பொங்கல்!

கோட்டை அம்மன் கொண்டாட்டம்

##~##

''ஆத்தாளுக்குக் காப்பு கட்டியாச்சு... ஊருக்குள்ள எல்லாரும் சுத்தபத்தமா இருக்கணும். எண்ணெய் சட்டிவெச்சு பலகாரம் சுடப்படாது... கடுகு வெடிக்க, தாளிக்கப்படாது. 15 நாளைக்கு இதம் பதமா இருந்துக்கணுமப்போய்!'' - ஆச்சார அறிவிப்புடன் பிணி தீர்க்கும் பில்லி பொங்கல் கொண்டாட்டத்துக்காகக் கோட்டை அம்மனுக் குக் காப்புக் கட்டினார்கள்.

 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைக் காக்கும் குலதெய்வம்தான் கோட்டை அம்மன். தேவகோட்டையைத் தழுவிச் செல்லும் விருசுழி ஆற்றங்கரை, கோட்டையம்மனுக்குப் பூர்வீகம். பல வருடங்களுக்கு முன் இங்கு நாட்டார்களுக் கும் (கள்ளர்கள்) நகரத்தார்களுக்கும் (செட்டி யார்கள்) மனஸ்தாபம் வந்து,  ஊருக்குள் ஒரு கோட்டை அம்மன் கோயிலைக் கட்டினார்கள் நகரத்தார்கள். அதில் இருந்து ஆடியில் நகரத்தார் கோயிலிலும், ஆவணியில் நாட்டார் கோயிலிலும் பில்லி பொங்கல் விழாக்கள் களை கட்ட ஆரம் பித்தன.

பிணி தீர்க்கும் பில்லி பொங்கல்!

ஆடி முதல் திங்கள் தொடங்கி மூன்றாம் திங்களில் முடிகிறது பில்லி பொங்கல் விழா. தேவகோட்டை நகரத்தார்கள், வெளிநாடுகளில் இருந்தால்கூட தவறாமல் இந்தத் திருவிழாவில் ஆஜராகிவிடுவார்கள். இந்த 15 நாட்களுக்கு மட்டுமே அம்மன் கோயில் திறந்து இருக்கும். அப்போது ஊருக்குள் ஆடு, கோழி போன்ற உயிர் பலி எதுவும் கொடுக்கமாட்டார்கள். ஊருக்குள் இருக்கும் மட்டன், மீன் கடைகளுக்கும் விடுமுறைதான்.

ஆடி இரண்டாவது செவ்வாய்க்கிழமை பில்லி பொங் கல் களைகட்டும். ''காலை 11 மணிக்கு முதல் அதிர் வேட்டு முழங்க... அம்மன் பானை பொங்கும். மற்றவர்கள் மளமளவென பொங்கல் வைப்பார்கள். அப்போது மட்டும் சுமார் 1,000 பானைகளாவது பொங்கி வழியும். அன்று ஒரு நாள் முழுக்க சுமார் 5,000 பொங்கலாவது வைக்கப்படும்!'' என்கிறார் கோயில் டிரஸ்ட்டி சுவாமிநாதன்.

பிணி தீர்க்கும் பில்லி பொங்கல்!

ஆடு, கோழி வெட்ட முடியாது என்பதால், எலுமிச்சம் பழம், பூசணிக் காய்களை அறுத் தும், இளநீர் கண் திறந்தும் பில்லி கொடுத்து அம்மனை சாந்தப்படுத்துகிறார்கள். நகரத் தார் சமூகத்தில் குடும்பத்துக்கு ஒருத்தர் கட்டாயம் பில்லி பொங்கல் வைக்க வேண் டும். முடியாதவர்கள், அம்மனுக்கு அதற்கான காணிக்கையை உண்டியலில் செலுத்தி ஆக வேண்டும். 'தங்கள் குழந்தைக்கு 16 செல்வங்களையும் அம்மன் அள்ளிக் கொடுக்க வேண்டும்’ என்பதற்காக, ஒரே தட்டில் 16 மாவிளக்குப் போட்டு பிரார்த்தனை செலுத்துபவர்களும் உண்டு. நகரத்தாருக்கான மயானம் ஊர் எல்லைக்குள் இருக் கிறது. திருவிழா தொடங்கி விட்டால், அந்த மயானத்தைப் பூட்டி சாவியைக் கொண்டுவந்து சிவன் கோயிலில் ஒப்படைத்து விடுகிறார்கள். திருவிழா சமயத்தில் நகரத்தார்களில் யாராவது இறந்து போனால், மயானத்துக்குக்கொண்டு போக முடியாது. ஊருக்கு வெளியே ஆற்றுக்குள்தான் இறுதிச் சடங்குகளை செய்யவேண்டும். இப்படி எக்கச்சக்க சடங்குகள்.

பிணி தீர்க்கும் பில்லி பொங்கல்!

வெளிநாட்டு வேலை, படிப்பில் முன்னேற, செல்வம் பெருக, உடல் உபாதைகள் நீங்க -  விமானம், கப்பல், புத்தகங்கள், ரூபாய் நோட் டுக்கள், உடல் உறுப்புக்கள் உள்ளிட்ட காணிக்கைப் பொருட்கள் திருவிழாவின்போது அம்மன் கோயில் வாசலில் அமோகமாக விற்பனை ஆகும்!

ஆடி பிறந்தாலே ஜவுளிக் கடைக்காரர்களுக்கு மட்டுமா... அம்மன்களுக்கும் கொண்டாட்டம் தான்!

- குள.சண்முகசுந்தரம், படங்கள்: சாய் தர்மராஜ்