என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

எங்கள் குடும்பம் ரொம்ப பெரிசு!

##~##

''தாயின் நினைவுகள் எப்போதும் ஒரு மகனின் இதயத்தின் ஆழத்தில் உறைந்திருப்பதுபோல மண்ணின் நினைவுகளும். அதுவும் என் ஊரின் பெயரிலேயே 'அம்மா’ அமைந்திருக்கிறது!'' என்று பெருமிதப்படுகிறார் அணைக்கட்டு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கலையரசன்.

 ''பெரும்பாலானோருக்கு விரும்பிய வாழ்க்கை அமையாது. ஆனால், எனக்கு மட்டும் இரண்டு வெவ்வேறான வாழ்க்கையும் விரும்பியபடியே அமைந்தன. வாழ்வின் முதல் பாதி...  விவசாயம், பின்

என் ஊர்!

பாதி... அரசியல். அம்மாபாளையம்...  வேலூரில் இருந்து 23 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஊரில் எங்களது தோட்டங்கள் மட்டும் 25 ஏக்கருக்கு நீளும். பரம்பரை பரம்பரையாக விவசாயம்தான் எங்கள் தொழில்.

எங்கள் வீட்டு உறுப்பினர்களில், கால்நடைகளுக்கும் இடம் உண்டு. ஆடு, மாடு, சேவல், கோழி என எங்கள் குடும்பம் பெரியது. எனக்கு என் தாய், தந்தையை விட தாய் மாமன் மீதுதான் பற்று அதிகம். பள்ளியில் என்னை விட்டுவிட்டு 'அழக் கூடாது’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார் மாமா. ஆனால், எனக்கோ அவர் சென்ற அடுத்த நிமிடமே கண்ணீர் முட்டிக்கொண்டது. புதிய இடம், பழக்க வழக்கம் இல்லாத நபர்கள், புதிய சூழ்நிலை என்று மயக்கம் வராத குறைதான். சரியாக ஒரு மணி நேரம் கழித்து என் தாய்மாமன் வந்து, வகுப்பு ஆசிரியரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அந்த அளவுக்குத் தாய் மாமனுக்கும் வீட்டுக்கும் செல்லப் பிள்ளை நான்.

எங்கள் விவசாய நிலத்தில் மூன்று கிணறுகள் உள்ளன. எப்போதும் தண்ணீர்  நிரம்பி வழியும். அதில் எனக்கு ஐந்து வயதில் நீச்சல் கற்றுக்கொடுத்தார் மாமா. அப்போது எல்லாம் தென்னை மரங்கள், வயல்வெளி, கன்றுக் குட்டிகள்... அத்தோடு மாமா... இதுதான் என் நண்பர்கள் வட்டம்.

காலையில் வயல்வெளியில் இரண்டு மணி நேரம் வேலை செய்துவிட்டுத்தான் பள்ளிக்குக் கிளம்புவோம். கல்லக்காய் பிடுங்குவதற்கு எனக்கும் என் அக்கா, அண்ணன்மார்களுக்கும் அடிதடி சண்டையே வரும். அதில் மூன்று பருப்புகளைக் கொண்ட கல்லக்காயைத் தேடித் தேடி எடுப்போம்.

என் ஊர்!

அமிர்தி நதி எங்களது விவசாய நிலத்தின் அருகில்தான் ஓடுகிறது. ஆற்றின் மறுகரையிலும் விவசாய நிலம் இருக்கிறது. அதனால், அங்கு செல்லும்போதெல்லாம் ஆற்றில் நீந்தியபடிதான் செல்வோம். ஆனால், இப்போது முழங்கால் அளவுகூட தண்ணீர் இல்லாத வறட்சி. இப்படி எனது இளமைக் காலங்கள் எனது கிராமத்திலேயே கழிந்தன.

பிறகு மேல்விசாரத்தில் உள்ள ஹக்கிம் கல்லூரியில் படித்தேன். மாணவர் தலைவராகத் தேர்வு பெற்று பல போராட்டங்களை நடத்தினேன். எல்லாம் நியாயமான போராட்டங்கள்தான். எங்களது கல்லூரி முதல்வர் எனது தலைமையில் போராட்டங்கள் நடந்தால் அது உண்மையான கோரிக்கையாகத்தான் இருக்கும் என்று நம்பும் அளவுக்கு எங்கள் போராட்டங்களில் நியாயம் இருக்கும். கல்லூரி படிக்கும் காலங்களில் நாட்கள், வாரங்கள், மாதங்கள் என எனக்கும் என் கிராமத்துக்கும் இருந்த இறுக்கத்தில் விரிசல் விழுந்தது.

என் ஊர்!

பாட்டாளி மக்கள் கட்சியின் மீதும் மருத்துவர் ராமதாஸ் ஐயாவின் செயல்பாடுகள் மீதும் ஈர்ப்பு வர... முழுநேர அரசியலில் இறங்கி, இப்போது சட்டமன்ற உறுப்பினராகவும் ஆகிவிட்டேன். அரசியலுக்கு வந்தாலும் விவசாயம் பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் குடியிருந்த வீட்டை இடிக்க எனக்கு மனம் இல்லை. ஏனென்றால் அந்த வீட்டில் நாங்கள் மட்டும் வாழவில்லை. பரம்பரை பரம்பரையாக நாங்கள் வளர்த்த செல்லப் பூனைகளும், நாய்க் குட்டிகளும் உள்ளன. இன்னும் ஒரு வருடம் கழித்து நான் அங்கு சென்றால்கூட வாழைத் தோப்புகளும், தென்னை மரங்களும் 'கலையரசு நல்லா  இருக்கியா?’ என்று கேட்கும். ஏனென்றால் அவற்றின் மொழி எனக்கு மட்டும்தான் தெரியும்!''

- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்