என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

வாங்க... உதவலாம்!

வரவேற்கும் புதுவை இளைஞர்

##~##

'சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டுகிறோம்!’ - பெரும்பாலான திருமண அழைப்பிதழ்கள் இப்படித்தான் அழைப்பு விடுக்கும். தன் திருமணத்துக்கும் இப்படித்தான் அழைப்பு விடுக்கிறார் புதுவை, நெட்டிப்பாக்கத்தைச் சேர்ந்த சமயபாலராஜா. ஆனால், இவர் அழைப்பது சுற்றங்கள் எதுவும் இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் இல்லத் துக்கு!

 ''புதுவையில் உள்ள 'சால்ட் சில்ட்ரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்’தில் உள்ள 30 குழந்தைகளுக்கு ஓர் ஆண்டுக்கான கல்விச் செலவு 1,95,000 ரூபாய். ஒரு தனி மனிதனாக என்னால் இந்தத் தொகையை முழுவதுமாக அளிக்க முடியாது. ஆனால், என் திருமணத்தின் மூலம் அதைச்

வாங்க... உதவலாம்!

சாதிக்க முடியும். என் திருமணத்தை எளிமையாகக் கோயிலில் நடத்திவிட்டு திருமண வரவேற்பை இந்தக் குழந்தைகள் இல்லத்தில் வைக்கலாம் என்பது என் எண்ணம்.

திருமண மண்டபத்துக்கு - 40,000 ரூபாய்
மேடை அலங்காரம் - 10,000 ரூபாய்
மொய்ப் பணம் - 50,000 ரூபாய்
மேளதாளம் - 10,000 ரூபாய்
தன்னார்வம் கொண்டவர்களின் தொகை - 1,00,000 ரூபாய்.

ஆக மொத்தத் தொகை - 2,05,000. இது குழந்தைகளின் ஓராண்டு கல்விச் செலவுக்குப் போதும். மேற்கண்ட பட்டியலில் மொய்ப் பணத்துக்கு என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனாலும், நிச்சயமாக என் நண்பர்களின் மூலம் வரும் தொகை ஒரு லட்சத்தைத் தாண்டும். மேலும் மணமேடை, மங்கள வாத்தியங்கள் ஆகியவற்றுக்கான செலவுகளை நிறுத்தி, என் திருமணச் செலவுகளுக்கு என்று சேர்த்துவைத்தப் பணத்தை என்னால் தர முடியும்!'' என்று சமயா சொல்லும் கணக்கு, நம்மை வியக்க வைக்கிறது.

மெரைன் இன்ஜினீயராகப் பணிபுரியும் சமயபாலராஜாவின் அப்பா ஓய்வுபெற்ற ஆடிட்டர். ''என் அப்பாதான் எனக்கு ரோல் மாடல். அவர் பலருக்கும் வாழ்க்கையில் உதவியவர். அதைப் பார்த்து வளர்ந்ததால்தான் எனக்கும் இயல்பாகவே இந்தக் குணம் வளர்ந்தது.

நமது சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் மீது சிறிய வயதில் இருந்தே எனக்கு நிறைய வருத்தமும் இயலாமையுடன் கூடிய கோபமும் இருக்கிறது. பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்கும் சிறுவர்களையும், சாலை ஓரங்களில் காகிதம் பொறுக்கும் சிறுவர்களையும், காலில் செருப்புக்கூட

வாங்க... உதவலாம்!

அணியாமல் வெகு தூரம் பள்ளிக்கு நடந்துசெல்லும் மாணவர்களையும் பார்க்கும்போது அந்த வருத்தம் இன்னும் இன்னும் அதிகரிக்கிறது.

கல்வி ஒன்றினால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும் என்பதால் ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்கு உதவலாம் என்று முடிவு செய்தேன். பேருந்துப் பயணத்தில் அறிமுகமான சுகந்தி என்ற விழுப்புரம் சிறுமி, பைபாஸ் அறுவை சிகிச்சை முடித்து, மேற்கொண்டு படிக்க முடியாமல் ஆறாம் வகுப்போடு தன் படிப்பை நிறுத்தி இருந்தாள். அவள் கல்விச்செலவை நான் ஏற்றுக்கொண்டேன். இப்போது அவள் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். இப்படி அனைத்து குழந்தைகளுக்கும் என்னால் உதவ முடியாவிட்டாலும், நான் சார்ந்துஇருக்கும் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்காவது உதவலாமே என்ற எண்ணத்தில் உதித்தது இந்த எண்ணம். என் முடிவுக்கு உறவினர்களிடம் இருந்து முதலில் எதிர்ப்புதான் எழுந்தது. இதுவாவது பரவாயில்லை, 'ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் திருமண வரவேற்பு’ என்று ஆரம்பிக்கும்போதே, திருமணப் பேச்சுகள் முறிந்துபோன கதையும் உண்டு. கிட்டத்தட்ட 10 வரன்கள் தட்டிப் போய்விட்டது.  

எனது உறவுகளையோ அல்லது நாளை எனக்குப் பிறக்கப் போகும் வாரிசுகளையோ 'இப்படித்தான் திருமணம் செய்ய வேண்டும்’ என்று என்னால் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், இது என் திருமணம். இதை என் விருப்பப்படிதான் நடத்துவேன்!'' என்கிறார் சமயபாலராஜா உறுதியாக.

வாங்க... உதவலாம்!

இந்தத் திருமண வரவேற்பில் சமயபாலராஜாவுக்குப் பரிச்சயமான உறவினர்களும் பழக்கப்பட்ட நண்பர்களும் மட்டும்தான் இந்த முயற்சிக்கு உதவ வேண்டும் என்பது இல்லை. இதோ, இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டு இருக்கும் நீங்களும்கூட கைகொடுக்கலாம்.

ஏனெனில், ஆதரவற்ற குழந்தைகளின் அறிவு வாசலைத் திறக்கும் இந்த நிகழ்ச்சி, வரவேற்கப்பட வேண்டிய 'வரவேற்பு’!

- ஜெ.முருகன்