என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

ஒரு நாள் ஜெயிப்பேன்!

ஒரு நாள் ஜெயிப்பேன்!

##~##

சினிமா என்பது விரிந்து பரந்து இருக்கும் கடல். எந்த அலை கரை சேரும் என்று தீர்மானிக்க முடியாத சினிமாவில், 'என்றாவது ஒருநாள் ஜெயிப்போம்’ என்கிற நம்பிக்கையில் இருப்பவர்கள் பலர். அவர்களில் ஒருவர் புதுவையைச் சேர்ந்த செம்பி என்கிற பாண்டி ரவி.

 அஜீத், சூர்யா, மாதவன் போன்ற முன்னணி நடிகர்களோடு 60 படங்களில் துணை நடிகராகவும் 'சாமிடா’ என்ற படத்தைத் தானே தயாரித்து, கதாநாயகனாக நடித்தும் இன்னமும் கரைசேராத நடிகர்.

ஒரு நாள் ஜெயிப்பேன்!

  ''அப்பா மேடை நாடகக் கலைஞர் என்பதால் சின்ன வயசுல இருந்தே  நடிக்க ஆசை. சட்டம் படித்தாலும் நடிப்பு மீது உள்ள ஆர்வத்தால் புதுவை பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் 'ஸ்கூல் ஆஃப் டிராமா’ பயிற்சியை முடித்தேன். அந்தச் சமயத்தில்  'லாஸ்ட் போர்ட் இன் இந்தியா’ என்ற ஃப்ரெஞ்சு படத்தின் படப்பிடிப்பு, புதுச்சேரியில் நடந்தது. 60 நாட்கள் நடந்த அந்தப் படப்பிடிப்பு,  சினிமா என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள உதவியது. பிறகு ராஜீவ் மேனன் சாருக்கு ஒரு  படத்துக்காக பாண்டிச்சேரியில் உள்ள ஒரு சர்ச் போட்டோ தேவைப்பட்டது. நான் எடுத்து அனுப்பிய சர்ச் புகைப்படத்தைப் பார்த்த ராஜீவ்மேனன் சார், 'இந்தப் பையனுக்கு நல்ல டேஸ்ட் இருக்கே. என்கிட்ட அசிஸ்டென்டா சேரச் சொல்லுங்க!’ என்று சொல்ல... நானும் 'மின்சாரக் கனவு’ படத்தில் அசிஸ்டென்ட் கேமராமேனாகப் பணியாற்றினேன். அதன் பிறகு ரவி.கே.சந்திரன் சாரிடம் 'மேஜர் சாப்’, 'கபினா கபி’ உட்பட ஐந்து படங்களிலும் ரவிவர்மாவிடம் அசோசியேட் கேமராமேனாகச் சில காலமும் பணியாற்றினேன். இந்தக் காலகட்டங்களில் புதுவை மற்றும் தமிழகப் பகுதிகளில் நடந்த சுமார் 200 படங்களுக்கும் மேல் கோ-ஆர்டினேட்டராகப் பணிபுரிந்தேன்.

ஒரு நாள் ஜெயிப்பேன்!

முதன்முதலில் ஸ்க்ரீனில் நடிக்கும் வாய்ப்பு 'அலைபாயுதே’ படத்தில் கிடைத்தது. 'ஷாலினியைக் காணவில்லை’ என்று புகார் கொடுக்க வரும் மாதவனிடம் ஷாலினி பற்றி தவறாகப் பேசும் இன்ஸ்பெக்டர் ரோல்!'' என்று சொல்பவர் 'காக்க காக்க’, 'ரமணா’, 'சிட்டிசன்’, 'தீனா’, 'மின்னலே’ என்று பல படங்களில் நடித்திருக்கிறார்.

'சாமிடா’ படம் குறித்து பேசத் தொடங்கினார்.

''அந்தப் படத் தோல்விக்கு இரண்டு காரணங்கள். ஒன்று  சரியில்லாத திரைக்கதை, இன்னொன்று  சரியான காமெடி இல்லாதது. அந்தப் படத்தின் மூலம் பொருளாதாரரீதியாக எனக்கு மிகப் பெரிய இழப்புதான் என்றாலும், விலை மதிப்பு இல்லாத பல அனுபவங்கள் கிடைத்தது. உதவியாளராக இருந்த ஒரே காரணத்துக்காக ராஜீவ் மேனன் சார் முழுப் படத்துக்கும் அவரது யூனிட்டை எனக்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் கொடுத்தார். புதுவையில் படப்பிடிப்பு நடக்கும்போது நான் செய்த சின்னச் சின்ன உதவிகளுக்காக டான்ஸ் மாஸ்டர் தினேஷ் சாரும், ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் அண்ணனும் பணமே வாங்காமல் எனக்காக வொர்க் செய்து கொடுத்தாங்க.

ஒரு நாள் ஜெயிப்பேன்!

தாணு சார் அவர் மகனுடன் விஜயா லேபுக்கு வந்து 'சாமிடா’ படத்தைப் பார்த்து  பாராட்டியதோடு, 'நீ என் வீட்டுப் பையன், சரியான நேரம் வரும்போது உனக்கு நான் வாழ்க்கை கொடுக்கிறேன்’ என்று சொன்னார். இப்போது 'புழுதி’ என்ற படத்தில் நந்தாவோடு செகண்ட் ஹீரோவாக நடித்து வருகிறேன். ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் இந்தத் திரை வாழ்க்கை என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும் சார்!'' என்கிறார் நம்பிக்கையோடு!

- ஜெ.முருகன்