Published:Updated:

“அட, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!”

விகடன் மேடை - சத்யராஜ் பதில்கள் வாசகர் கேள்விகள்

“அட, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!”

விகடன் மேடை - சத்யராஜ் பதில்கள் வாசகர் கேள்விகள்

Published:Updated:
##~##

சதீஷ் துளசிங்கம், தூத்துக்குடி.

''உங்களின் நெருங்கிய நண்பரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் பற்றி?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நானும் விஜியும் ஒண்ணா சினிமா வாய்ப்பு தேடி, அடிச்சுப் பிடிச்சு ஜெயிச்சவங்க. 'சத்யராஜ்... சினிமால நம்ம ரெண்டு பேர் அளவுக்கு வேற யாரும் கஷ்டப்பட்டு வந்திருக்க மாட்டாங்க’னு அவர் அடிக்கடி சொல்வார். 'மகாநடிகன்’ படத்துல பிரதமர் முதல் புதுசா நடிக்க வந்த பசங்க வரை எல்லாரையும் கிண்டல் பண்ணியிருப்பேன். அந்த வரிசையில் விஜியையும் நான் விடலை. ஆனா, அதை எல்லாம் மனசுல வெச்சுக்காம, 'பெரியார்’ படம் பார்த்ததும், எனக்கு போன் பண்ணி, ரொம்ப நேரம் பாராட்டிப் பேசினார். நடிகர் சங்கக் கடனை அடைக்க எல்லாரையும் அரவணைச்சு நிகழ்ச்சிகள் நடத்தினார்.

கார்கில் நிவாரண நிதிக்காக எல்லாரும் மதுரையில் கலைநிகழ்ச்சியை முடிச்சிட்டு, ஸ்பெஷல் டிரெய்ன் மூலம் சென்னைக்குத் திரும்பிட்டு இருந்தோம். கொடைரோடுகிட்ட வரும்போதுதான், 50 பேருக்கு ராத்திரி டிபன் இல்லைனு தெரிஞ்சுது. இதைக் கேள்விப்பட்டதும் லுங்கியை மடிச்சுக் கட்டிட்டு, நாலைஞ்சு பேரை அழைச்சுக்கிட்டு, டிரெய்ன்ல இருந்து கொடைரோடு ஸ்டேஷன்ல இறங்கி, ஏகப்பட்ட டிபன் பார்சல்களை கை நிறைய அள்ளிட்டு வந்து நின்னது நினைவில் இருக்கு.

“அட, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!”

என் நெருங்கிய நண்பர் ராமநாதன் தயாரிச்ச 'வள்ளல்’ படம் வெளிவர்றதுல சிக்கல். லேப்ல பிரின்ட் எடுக்க முடியலை. அந்தப் படத்தை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பார்த்துட்டு அவர்கிட்ட நல்லவிதமா சொல்லியிருக்காங்க. 'சத்யராஜ்... எந்தக் காரணம்கொண்டும் அந்தப் படம் நிக்கக் கூடாது. நாம ரெண்டு பேரும் இப்பவே லேபுக்குப் போவோம்’னு சொன்னார். என் படமா இருந்தாலும், நானே லேபுக்குப் போக யோசிச்சிட்டு இருந்தப்ப, அவர் ஆர்வமா வேலை செஞ்சார். 'வள்ளல்’ வெளியானதில் விஜயகாந்துக்கு முக்கியமான பங்கு உண்டு. இவ்வளவு நல்ல குணங்கள் நிரம்பிய விஜி, என் நெருங்கிய நண்பன்னு சொல்றதுல எனக்கு ரொம்பப் பெருமைத£ன்!''

சங்கர் குமார், நாசரேத்.

''இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்த உங்களுக்கு, இப்போது இந்திப் படங்களில் நடிக்கும்போது மனநிலை எப்படி இருக்கும்?''

''நண்பா சங்கர்... அப்போது இருந்து இப்போது வரை, இந்தியை யாரும் எதிர்க்கலை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். நான் தமிழன். எனக்குத் தமிழ் தெரியும். கணிப்பொறி, செல்போன்னு நவீன சாதனங்களை இயக்க நான் ஆங்கிலம் கத்துக்குவேன். ஆனா, 'ஆர்வத்தின் பேரில் நான் கத்துக்கவேண்டிய மூணாவது மொழி எது?’னு நான்தான் தீர்மானிக்கணும். ஒருவேளை நான் கேரளாவில் வாழ்க்கையை நடத்தவேண்டி இருந்தா, மலையாளம் கத்துக்குவேன். ஹைதராபாத்ல செட்டில் ஆக வேண்டியிருந்தா தெலுங்கு கத்துக்குவேன். ஆனா, காலம் முழுக்க தமிழ்நாட்ல வாழப் போறவனுக்கு எதுக்கு இந்தி? அதனால சங்கர், திணிப்புதான் தப்பு; மொழி தப்பு கிடையாது. இந்தப் புரிதல் இருந்ததால்தான், இந்திப் படத் தில் நடிக்கும்போது எனக்கு எந்த மனவருத்தமோ, கூச்சமோ இல்லை!''

தங்கவேல், கள்ளக்குறிச்சி.

''சினிமா நூற்றாண்டு விழாவில் மரியாதைக்குரிய திரைக் கலைஞர்கள் சிலர் புறக்கணிக்கப்பட்டார்களே, ஏன் உங்களைப் போன்ற சீனியர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லை? கலைஞர் முதல்வராக இருந்தபோது, அவரை வைத்துக்கொண்டே உங்களைவிட ஜூனியரான அஜித்தால் குறைசொல்ல முடிந்தபோது, இது மட்டும் ஏன் முடியவில்லை?''

''ஆகா... எந்தக் கேள்வி 'விகடன் மேடை’ல வரக் கூடாதுனு நினைச்சேனோ, அது வந்திருச்சே! அட, ஆஃப்ட்ரால் அப்பா வேஷத்துல நடிச்சுட்டு இருக்கும் இந்த அப்பாவி சத்யராஜ், தனக்குத்தானே ஆப்பு வெச்சுக்குவானா? இந்த மாதிரி சமயங்கள்ல கவுண்டமணி அண்ணன் நம்மளுக்குக் கை கொடுப்பாரே... 'அட அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’!''

மரிஷ் கண்ணன், கானாடுகாத்தான்.

''உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சிலர்? மறக்க நினைக்கும் சிலர்?''

''மறக்க முடியாத சிலரில் ஒருவர், மாதம்பட்டி சிவக்குமார் அண்ணன். அவர்தான் 5,000 ரூபாய் கொடுத்து, 'நீ தைரியமா நடிக்கப் போடா’னு சென்னைக்கு அனுப்பிவைத்தார். அப்போ நான் தங்கியிருந்த ரூம் வாடகை 85 ரூபாய். ஒரு வேளை மீல்ஸ் டிக்கெட், ஒரு ரூபாய் ஐம்பது பைசா. அந்த 5,000 ரூபாயை வெச்சு ஒரு வருஷம் சமாளிச்சேன். வருஷக் கடைசியில நடிகன் ஆகிட்டேன்.

அடுத்து, சிவகுமார் அண்ணன். சென்னையில் எனக்கு சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தியதும் 'கோடுகள் இல்லாத கோலங்கள்’ என்ற கோமல் சுவாமிநாதன் நாடகத்தில் வாய்ப்பு வாங்கித் தந்ததும் அவர்தான். சிவகுமார் அண்ணனோட மேனேஜர் 'திருப்பூர்’ மணி. அவர் 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத் தயாரிப்பாளர். அந்தப் படத்தில் என்னை புரொடக்ஷன் மேனேஜர் ஆக்கினார். இன்னைக்கும் நான் தயாரிப்புத் தரப்புக்கு இம்சை இல்லாத நடிகனா இருக்கேன்னா, அதுக்குக் காரணம் அந்த புரொடக்ஷன் மேனேஜர் வேலை அனுபவம்தான்.

அடுத்து முதல் பட சான்ஸ் தந்த டைரக்டர் டி.என்.பாலு, அந்த வாய்ப்பை வாங்கித்தந்த ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன், அப்புறம் நம்ம மணிவண்ணன்... இவங்க எல்லாருமே என் வாழ்க்கையில் மறக்க முடியாத சிலர்.

மறக்க நினைக்கும் சிலரில் நாலைஞ்சு சத்யராஜ்களே இருக்காங்க. எல்லாம், கேனத்தனமான லூஸுத்தனமான சத்யராஜ்கள். 'நாட்டாமை’ங்கிற மாபெரும் வெற்றிப்படத்தில் சரத்குமார் நடித்த கேரக்டரைத் தவறவிட்ட சத்யராஜ், 'தவமாய் தவமிருந்து’ படத்தின் அற்புதமான அப்பா கதாபாத்திரத்தை பல வியாக்யானங்கள் பேசித் தவறவிட்ட சத்யராஜ், 'செந்தூரப்பூவே’வில் விஜயகாந்த் கேரக்டரில் நடிக்கக் கேட்டபோது, 'நான் ரொம்பக் கஷ்டப்பட்டு ஹீரோ ஆகியிருக்கேன். இப்போ கொஞ்ச நாளாத்தான் நானே டூயட் பாடி, நானே சண்டை போட்டுட்டு இருக்கேன். ஆனா, இந்தப் படத்துல டூயட் பாட ராம்கி இருக்கார். சண்டை போட மட்டும்தானே என் கேரக்டர் உதவும்?’னு கேனத்தனமா கேள்வி கேட்டு அந்த வாய்ப்பை மறுத்த சத்யராஜ், கமல் சார் ஆஃபர் பண்ணின அற்புதமான சரித்திரப் படத்தை தவறவிட்ட சத்யராஜ்னு... இப்படி பல கேனத்தனமான லூஸுத்தனமான காரியங்களை செஞ்ச சத்யராஜ்களை மறக்க நினைக்கிறேன்!''

“அட, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!”

கே.சரவணகுமார், சேலம்.

'' 'வில்லாதி வில்லன்’னு ஒரு மெகா ஹிட் படத்தை இயக்கிய 'இயக்குநர்’ சத்யராஜை, அதன் பிறகு பார்க்கவே முடியலையே?''

''அட, ஏன் நைனா? 'வில்லாதி வில்லன்’ ரொம்ப டார்ச்சர் அனுபவம். கிட்டத்தட்ட 125 படங்கள் நடிச்சப் பிறகு நான் இயக்கிய படம் அது. செட்ல உட்கார்ந்திருப்பேன். ஆர்ட் டைரக்டர் வருவார்... 'சார், சோபாவும் பேக்ரவுண்டும் ஒரே கலரா இருக்கு. சோபாவை மாத்தவா, பேக்ரவுண்ட் கலரை மாத்தவா?’னு கேட்பார். அதைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கும்போதே, சிகை அலங்காரக் கலைஞர் வந்து, 'சார்... நக்மாவுக்கு சடை பின்னவா, கொண்டை போடவா, இல்லை, அப்படியே முடியை விரிச்சுவிட்றவா?’னு கேட்பார். சோபாவை மறந்து சடையைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கிறப்ப ஒளிப்பதிவாளர் வந்து, 'சார் இது நைட் எஃபெக்ட்டா, டே எஃபெக்ட்டா?’னு கேட்பார். அதுக்குப் பதில் சொல்றதுக்குள்ள ஸ்டன்ட் மாஸ்டர் வந்து, 'நான் எத்தனை ஃபைட்டர்கள் வெச்சுக்க?’னு கேட்டுட்டு இருக்கும்போதே தயாரிப்பாளர் வந்து, 'செலவு கொஞ்சம் அதிகமாப் போகுது. பார்த்துக்கங்க’ம்பார். இவ்வளவையும் சமாளிச்சு அலறிப் பதறிப் படத்தை முடிச்சு சென்சாருக்கு அனுப்பினேன். 'பெரியார்’ பட இயக்குநர் ஞானராஜசேகரன்தான் அப்ப சென்சார் ஆபீஸர்.

படம் பார்த்துட்டு வந்து, 'சார் சென்சார் கட்ஸ் சொல்றேன்... நோட் பண்ணிக்கங்க’னு சொன்னார். 'அப்படியே மனசுல வெச்சுக்குறேன்... சொல்லுங்க சார்’னு சொன்னேன் நான். அவர் என்னை மேலேயும் கீழேயும் பார்த்துட்டு, ஒரு ஃபுல்ஸ்கேப் பேப்பரையும், முழுசா இங்க் இருக்கிற பால் பாயின்ட் பேனாவையும் என்கிட்ட கொடுத்தார். 'ரீல் நம்பர் ஒன்... இந்த இடத்தில் தேவைக்கு அதிகமாக மழையில் நனைந்ததால் மிகவும் ஆபாசமாக இருக்கிறது’னு ஆரம்பிச்சு, படத்தின் மொத்த ரீலுக்கும் கட்ஸ் சொன்னார். அந்த கட்டிங் ஒட்டிங்லாம் பண்ணிப் படத்தை ரிலீஸ் பண்றதுக்குள்ள, 'போதும்டா சாமி’னு டரியல் ஆகிட்டேன்.

கொஞ்ச நாள் கழிச்சு குருதனபால் இயக்கிய 'மாமன் மகள்’ படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி போனோம். கவுண்டமணி அண்ணன், மணிவண்ணனோட உட்கார்ந்து காலேஜ் பசங்க மாதிரி அரட்டை, கிண்டல்னு சிரிச்சுட்டு இருக்கோம். அசிஸ்டென்ட் டைரக்டர் வந்து 'ஷாட் ரெடி’னு சொல்றார். போய் நிக்கிறோம்... குரு சொல்ற மாதிரி நடிச்சிட்டு வந்து மறுபடியும் உட்கார்ந்து எல்லாரையும் கலாய்க்கிறோம். அப்பதான், 'நிழலின் அருமை வெயிலில் தெரியும்’னு மனசாட்சி என்கிட்ட இருந்து பிரிஞ்சு வந்து பேசுச்சு. இப்போ சொல்லுங்க சரவணகுமார், பேசிக்கலா ரொம்பச் சோம்பேறியான நான் ஏன் தேவையில்லாம அலட்டிக்கணும்?''

“அட, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!”

த.மணிகண்டன், திருப்பூர்.

''உங்கள் 'லொள்ளு’, சினிமாவில் அடையாளம் கொடுத்திருக்கலாம். ஆனா, அதே லொள்ளு பேசி வாங்கிக் கட்டிக்கிட்ட அனுபவம் இருக்கா?''

''ஏன் இல்லாம? நம்ம வாழ்க்கையில் சீரியஸ் காட்சிகளே இல்லைனு சொல்லிடலாம். நம்மளைச் சுத்தி எப்பவும் லொள்ளு சபா கணக்கா காமெடிதான்! சுந்தர்ராஜன் அண்ணன் என் நெருங்கிய தோஸ்த். அவர் டைரக்ஷன்ல 'திருமதி பழனிச்சாமி’ நடிச்சேன். அந்தப் படத்துல சண்டை, டான்ஸ் நிறைய இருந்ததால ஷூட்டிங்கே 75 நாட்களுக்கு மேல போச்சு.

அந்தப் படத்தை முடிச்சப் பிறகு அவர் தன் நண்பரோட சேர்ந்து ஒரு படம் எடுத்தார். அதுல ஒரு குரங்குதான் மெயின் கேரக்டர். அருணாச்சலம் ஸ்டூடியோவுல நான் வேற ஷூட்டிங்ல இருந்தப்ப, சுந்தர்ராஜன் அந்தக் குரங்குப் பட ஷூட்ல இருந்தார். சந்திச்சுப் பேசிட்டு இருந்தப்ப, 'இன்னைக்குப் படத்துக்குக் கடைசி நாள் ஷூட்டிங்’னு சொன்னார். இருபதே நாள்ல மொத்தப் படத்தையும் முடிச்சுட்டார். 'இப்பத்தான் ஆரம்பிச்ச மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ளே எப்படி முடிச்சீங்க? உங்க சொந்தப் படம்னா 20 நாள்ல முடிப்பீங்க... அடுத்தவங்க படம்னா 75  நாளுக்கு மேல இழுப்பீங்களா’னு நான் நக்கலாக் கேட்டேன். அதுக்கு அவர் கொஞ்சம்கூட யோசிக்காம சட்டுனு கவுன்ட்டர் கொடுத்தாரே பார்க்கணும்... 'என்ன செய்யிறது, குரங்கு கரெக்டா நடிக்குதே!’

அதுக்கு அப்புறம் அவர்கிட்ட நான் ரொம்பப் பதவிசாத்தான் பேசிக்கிறது!''

- அடுத்த வாரம்...

• ''சச்சின், 15,000 ஓட்டங்கள் குவித்தார் என்றால், மறுமுனையில் பலர் அவருக்காக சரிபாதி ஓட்டங்கள் ஓடியிருக்கிறார்கள்தானே? அப்படி, உங்களுக்காக வியர்வை சிந்தி உழைத்த குஷ்பு, ரோஜா, நக்மா, ரஞ்சிதா, பானுபிரியா போன்றவர்களுக்கு நீங்கள் என்ன சார் கைமாறு செய்திருக்கிறீர்கள்?''

• '' 'தொலைக்காட்சியில் வரவேமாட்டேன்’ என்றீர்கள். பின்னர் வந்தீர்கள். முன்பு விக் இல்லாமலும், டை அடிக்காமலும் எதார்த்தமாக வருவீர்கள். இப்போது விக் ப்ளஸ் மேக்கப்புடன் வருகிறீர்கள். சத்யராஜின் கொள்கைகள் காற்றில் கலந்துவிட்டனவா?''

•  '' உங்கள் முதல் ரியல் காதல் பற்றி சொல்லுங்களேன்?''

- கேரக்டரை இன்னும் புரிஞ்சுக்கலாம்...