Published:Updated:

ஆறாம் திணை - 67

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை - 67

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
##~##

கோடைகாலம், குளிர்காலம் என்ற பிரிவுகள் தாண்டி இது காய்ச்சல் காலம்! 'அட காய்ச்சலா..? எதுக்கும் டெங்கு வந்திருக்கானு பார்த்துக்குங்க... அதோட சிக்குன்குனியா, லெப்டோஸ்பைரோசிஸ், டைஃபாய்டு, மலேரியா எதுவுமானு ஒரு பார்வை பார்த்துக்கிடுங்க...’ என மளிகைக் கடைப் பட்டியல் போல, பரிந்துரைச் சீட்டில் மருத்துவர்கள் டிக் அடிக்க, அடிக்க நோயாளியின் மனம் 'பக்... பக்...’ எனத் துடிக்கிறது. அனைத்து நகரங்களிலும், குழந்தைகள் நல மருத்துவமனைகளின் படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன!

கடந்த எட்டு ஆண்டுகளில் டெங்கு முதலான காய்ச்சல்களின் தாக்கம் நம்மிடையே கூடிக்கொண்டே செல்கின்றன என்று அரசின் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அதனால் ஏற்படும் மரணங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், மரண அவஸ்தைகள் குறைந்ததாகத் தெரியவில்லை. என்னதான் நடக்கிறது இங்கே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காய்ச்சல், ஒரு குறிகுணம்தான்; நோயல்ல! அழையா விருந்தாளியாக வைரஸோ பாக்டீரியாவோ உடலுக்குள் புகுவதில் இருந்து, மரபணு படி எடுத்தலில் பிறழ் காரணமாக உண்டாகும் புற்றுநோய் வரை காய்ச்சல் எல்லா நோயிலும் வரும் ஒரு குறிகுணம். சாதாரண வைரஸ் காய்ச்சல், மூன்று முதல் ஐந்து நாள் இருந்துவிட்டு, சத்தம், சுவடு இல்லாமல் கிளம்பிவிடும். ஆனால், தற்போது வரும் வைரஸ் அப்படியல்ல. டெங்கு வைரஸ் வகைகளில் சில, ஆரோக்கிய சமன்பாட்டுக்கு மிக முக்கியமான ரத்தத் தட்டுகளைத் தடாலடியாகக் குறைத்து, சிக்கலான நிலையை உண்டாக்கிவிடுகின்றன. சிக்குன்குனியாவோ, காய்ச்சலோ வந்துசென்ற பின்னரும் சில மாதங்கள், வருடங்களுக்கு மூட்டுகள் எல்லாம் நிரந்தர வலியைத் தருகின்றன. ஒரு சிலருக்கு 'எரித்திமா’ எனும் உடம்பெல்லாம் திட்டுத்திட்டான சிவப்பு, படை உண்டாகும். இன்னும் சிலருக்கு ஈரலின் அழற்சி என விதவிதமானக் குறிகுணங்களைக் காட்டிப் பயமுறுத்துகின்றன. தாத்தா வைரஸைக் கொல்ல நாம் அம்பு தீட்டிக்கொண்டிருக்கும்போது, பேரன் வைரஸ் ஏகே-47 உடம்போடு பிறக்கிறான். இப்படி ஒவ்வொரு கணமும் தன் தகவமைப்பை மாற்றிப் பிறக்கும் இந்த வைரஸ்களை இனம், குலம் தெரிந்துகொள்ள மேற்கொள்ளும் சோதனைகளும் தடுப்பு மருந்துகளும் மருத்துவ உலகில் மிகப் பெரும் சவால்களாகவே உள்ளன.

ஆறாம் திணை - 67

காய்ச்சல் வந்தால் அவசரமும் பதற்றமும் தேவையில்லை. அதேநேரத்தில் அலட்சிய நிதானமும் கூடாது! ஆன்ட்டிபயாட்டிக்குகள் ஒருபோதும் வைரஸை அழிக்காது. வைரஸ் உள்ளிருக்கும்போது, சந்தர்ப்பவாதிகளாக நுழையும் பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தவே அவை பயன்படும். அதனால், 'எதற்கும் இருக்கட்டும்’ என முக்குக் கடையில் உங்களுக்குத் தெரிந்த 500 மில்லி கிராம் மாத்திரைகளை வாங்கி விழுங்கக் கூடாது. அரைகுறை ஆன்ட்டிபயாட்டிக்குகள், மருந்துக்கு எதிரான பாக்டீரியாக்களை உருவாக்கிவிடும். காய்ச்சல் தணிக்கும் மருந்து இரண்டு நாட்களுக்கு மேல் வேலை செய்யாவிட்டால், நீங்கள் காட்டும் குறிகுணங்களை வைத்து மருத்துவர் சில சோதனைகளைச் செய்யச் சொல்வார். முடிவுகளைப் பொறுத்து தேவைப்பட்டால் உயர்மருந்துகள் எடுக்கவேண்டியிருக்கும்.

வீட்டில் என்ன செய்யலாம்?

மழை-பனிக்காலம் முடியும் வரை குளிர்பானங்கள், குளிரூட்டப்பட்ட உணவுகள், இனிப்புகள் வேண்டாம். எல்லா உணவுகளிலும் காரத்துக்கு மிளகு மட்டுமே பயன்படுத்தலாம். மணத்தக்காளி வற்றல், மிளகு போட்ட தூதுவளை ரசம், மிளகுத்தூள் தூவிய நாட்டுக்கோழி குழம்பு... இவற்றை அடிக்கடி ருசிக்கலாம். காலை இஞ்சி, மதியம் சுக்கு, மாலை கடுக்காய் அருந்த நோய் வராது என்பது சித்தர் வாக்கு. காலையில்       இஞ்சித் தேனூறலையும், மதியம் சுடுசாதத்தில் இரண்டு சிட்டிகை அளவு சுக்குத்தூளும், மாலை பிஞ்சு கடுக்காய்த்தூள் ஒரு தேக்கரண்டி அளவும் சாப்பிட்டு வாருங்கள். தேநீரில், அன்னாசிப் பூவும் துளசி இலையும் போட்டு அருந்தலாம். அன்னாசிப் பூவில் இருந்து எடுத்த அமிலத்தில் இருந்துதான் வைரஸ் காய்ச்சலுக்கு காப்புரிமையுடன் மருந்து விற்கப்படுகிறது.

நிலவேம்புக் குடிநீர், டெங்கு, சிக்குன்குனியாவில் இருந்து ஏராளமான தமிழர்களைக் காப்பாற்றிய சித்த மருந்து. சாதாரண சளி மருந்தான ஆடாதொடை இலைச்சாறு ரத்தத்தட்டுகளை உயர்த்துவது அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சளியுடன்கூடிய காய்ச்சலுக்கு, இதனை தினமும் 15 மில்லி முதல் 30 மில்லி வரை பயன்படுத்தலாம்.

ஒருவர் இறந்துபோன இரண்டு மணி நேரத்தில், அவர் உடலில் இருந்து ஈரலை எடுத்து முழுவதும் ஈரல் செயலிழந்துபோன ஒருவருக்கு 13 மணி நேர அறுவைசிகிச்சை செய்து காப்பாற்றும் தொழில்நுட்ப உச்சங்கள் சாத்தியமான நகரத்தில் இருந்து, 50 கிலோமீட்டர் தொலைவில் ஜுரத்துக்கும் வாந்திபேதிக்கும் மருந்து இல்லாமல் உயிர் இழக்கும் கொடுமை நடக்கிறது. சோதனைக்கும் மருந்துக்கும் குறைந்தபட்சம் 500 ரூபாய் ஆகிவிடும் என்ற பதைபதைப்பில் தன் அழுக்கு முந்தானைக்குள் முனகிக்கொண்டிருக்கும் குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு, தங்க இடம் கிடைக்காத மருத்துவமனை வாசலில் தவித்துநிற்கும் அம்மாவுக்கும், 'ஏம்ப்பா... போன மாசம்தானே வாந்தி, வயித்துவலினு காசு வாங்கிட்டுப் போன... உனக்கு இதே வேலையா போச்சு!’ என்று முதலாளியிடம் இருந்து வசவுகளை வாங்கிக் கூனிக்குறுகி நிற்கும் விளிம்பு நிலை மனிதனுக்கும் சாதாரண காய்ச்சலே உயிர்க்கொல்லி நோய்தான்!

- பரிமாறுவேன்...

நிலவேம்புக் குடிநீர் செய்வது எப்படி?

நாட்டு மருத்து கடைகள் மற்றும் சித்த மருத்துவ பார்மசிகளில் நிலவேம்புப் பொடி கிடைக்கும். லேசாக காய்ச்சல், தும்மல் வந்தால் இரண்டு குவளை தண்ணீரில் இரண்டு டீ ஸ்பூன் நிலவேம்புப் பொடி போட்டு, அது அரை குவளையாக வற்றும் வரை காய்ச்சி, வடிகட்டி இளஞ்சூட்டில் அருந்த வேண்டும். இது ஒரு நபருக்கான அளவு. அந்தக் குடிநீரே காய்ச்சலையும் வலியையும் காணாமல் போக்கடிக்கும்!