Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 9

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 9

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
##~##

புன்னகைக்க மறந்த கதை 

''கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- பி.சி.ஸ்ரீராம்

‘ஒளி உண்டாகக் கடவதாக’ என்றார் ஆண்டவர். ஒளி உண்டானது. ஒளி உண்டாகி லட்சக்கணக்கான வருடங்கள் கழித்து, ஒளியின் விரல் பிடித்து அதைச் சட்டகத்துக்குள் அடைக்கும் கேமரா உண்டானது. கேமரா உண்டாகி பல வருடங்களுக்குப் பிறகு, இவன் ஊரில் 'ஜானகிராம் ஸ்டுடியோ’ உண்டானது. அந்த ஸ்டுடியோ உண்டாகி வருடங்களுக்கும் பிறகே இவன் அங்கு புகைப்படம் எடுக்கச் சென்றான்.

திருவிழா பார்ப்பதுபோல, தேர் பார்ப்பதுபோல, கரிய முதுகில் பட்டாடை அணிந்து வெண்கொற்றக் குடை சுமந்தபடி அசைந்து வரும் யானையைப் பார்ப்பதுபோல, இவன் அந்த ஸ்டுடியோவையே ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஜானகிராம் ஸ்டுடியோ, காஞ்சிபுரத்தில் தேரடி வீதியில் இருந்தது. வீதி முழுக்க இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும், பட்டு ஜவுளிக் கடைகள்; பட்டு நூல் சொஸைட்டிகள். பின் பக்கம் கிளை விரித்துச் செல்லும் சாலையோரம் அகன்று விரிந்த ரங்கசாமி குளம். இவற்றுக்கு நடுவே ஸ்டுடியோ. கீழ்த் தளத்தில், புகைப்படத்துக்கு ஃபிரேம் போட்டுக் கொடுக்கும் கடை. அந்தக் கடையில் கையில் வேலுடன் முருகர், சுண்டெலி வாகனத்துடன் பிள்ளையார், 'தனம் தரும் தானம் தரும் லட்சுமி தேவி’ என எத்தனையோ புகைப்படங்கள் கண்ணாடிச் சட்டம் போடப்பட்டு விற்பனைக்கு நின்றிருக்கும். நீளவாக்கில் பாளம் பாளமாக அடுக்கப்பட்ட கண்ணாடிகளை இன்ச் டேப் வைத்து ஒருவர் அறுத்துக்கொண்டிருக்க, மறுபக்கத்தில் ஸ்கேலைவிடவும் ஒல்லியாகச் செதுக்கப்பட்ட மரச் சட்டங்கள் அடுக்கியிருக்கும்.

வேடிக்கை பார்ப்பவன் - 9

இந்தக் காட்சிகளைக் கண்டபடியே இருளும் ஒளியும் கலந்த நூற்றாண்டுத் தூசி படிந்து வளைந்து செல்லும் படிக்கட்டுகளில் ஏறி, இவன் முதல் தளத்தில் இருந்த ஸ்டுடியோவை அடைந்தான். சிறு வயதில் இவன் தவழ்ந்தபடி தலை நீட்டிப் பார்க்கும் புகைப்படமும், வலப்பக்கம் யானை பொம்மை, இடப்பக்கம் மரப்பாச்சி பொம்மை புடைசூழ ஏதோ ஒரு திசையை வெறித்தபடி அமர்ந்திருக்கும் புகைப்படமும், வயர் கூடையில் நிர்வாணமாக கால் போட்டு அமர்ந்திருக்கும் புகைப்படமும் இதே ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டு, இவன் கிராமத்து வீட்டில் இன்னமும் தொங்கிக்கொண்டிருக்கின்றன. சிரிப்பும் இல்லாமல் அழுகையும் இல்லாமல், இரண்டும் கலந்த பாவனையில் இவன் காலத்தில் உறைந்ததற்கான சாட்சிகள் அவை.

பொங்கலுக்கு எடுத்த டவுசரும் பூப்போட்ட சட்டையும் அணிந்து அப்போது இவன் சென்றது, கடைசி அத்தையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக. அந்த அத்தைக்கு அடுத்த வாரம் திருமணம். கடந்த சில நாட்களாக வெவ்வேறு வண்ணங்களில் தாவணி அணிந்து, கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துக்கொள்வதும், தனக்குத்தானே சிரித்துக்கொள்வதுமாக வளைய வந்துகொண்டிருந்தாள். அந்தத் தாவணிப் பருவத்தின் கடைசி மிச்சம்தான் இந்தப் புகைப்படம். இனி அவள் கழுத்தில் தொங்கும் புது மஞ்சள் தாலியுடன் சேலைக்கு மாறிவிடுவாள். பிறந்த வீட்டின் நாட்கள் ஒரு பழைய தாவணியைப் போல அவளிடம் இருந்து மெள்ள நழுவிச் சென்றுவிடும்.

வரவேற்பறையில் நிறையப் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. சிவாஜிக்கு யாரோ கேக் ஊட்டிவிடுகிறார்கள். அறிஞர் அண்ணா, சாவகாசமாக தரையில் அமர்ந்தபடி லுங்கி பனியனுடன் பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார். கட்சித் தொண்டர்களுடன் எம்.ஜி.ஆர். உரையாடுகிறார். ஏதோ ஒரு புதுமணத் தம்பதியில் ஆண் வேட்டி -சட்டையுடன், நாற்காலியில் அமர்ந்தபடி கேமராவைப் பார்த்து முறைத்துக்கொண்டிருக்க, பக்கத்தில் அவன் மனைவி கட்டம்போட்ட கூரைப் புடவையுடன், கைகளில் பஃப் வைத்த ஜாக்கெட் அணிந்தபடி தலைகுனிந்து நிற்கிறாள். இன்னொரு புகைப்படத்தில் கதம்ப ஜடை அணிந்து கண்ணாடியில் தெரியும் ஒரு சீமந்தப் பெண்.

இவர்கள் முறை வந்ததும், கறுப்புத் திரைச்சீலையை விலக்கி இன்னோர் அறைக்குள் நுழைந்தார்கள். தேக்குச் சட்டம் பளபளக்க முட்டை வடிவ ஆளுயர பெல்ஜியம் கண்ணாடியில் தலை சீவி, ஸ்டுடியோவில் இருந்த பாண்ட்ஸ் பவுடர் பூசி, பின்னணியில் நீல வானமும் இடப்பக்கத்தில் பிளாஸ்டிக் பூச்சாடி வைக்கப்பட்ட நீள வடிவ மர மேஜைக்கு அருகில் நின்று இவனும் அத்தையும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். தலை முழுக்க கறுப்புத் துணியைப் போத்திக்கொண்டு கேமராவுக்குள் ஒளிந்து, புகைப்படக்காரர் இவர்களைப் படம் எடுத்தபோது, இவன் வழக்கம் போலவே சிரிப்பும் அழுகையும் கலந்த ஒரு பாவனையில் இருந்தான்.

அந்தப் புகைப்படக்காரருக்கு இருந்த மரியாதையும், அடிக்கடி சிரிக்கச் சொல்லி இவர்களை அடக்கிய ஆளுமையும் இவனை வசீகரித்தன. வளர்ந்து பெரியவன் ஆனதும் நிச்சயம் ஒரு புகைப்படக் கலைஞனாக வேண்டும் என்று 10,011-வது முறையாக இவன் தன் தொழிலை மாற்றினான்.

ன்று விழுந்த விதை உள்ளுக்குள் உறங்கிக்கிடந்து, 10-ம் வகுப்பு படிக்கையில், தூர்தர்ஷனில் கேமராக் கவிஞர் பாலு மகேந்திராவின் நேர்காணல் ஒன்றைப் பார்த்தபோது, மீண்டும் வளர்ந்து எழுந்தது.

''எனக்கு ஒரு கேமரா வேணும். நான் போட்டோகிராபர் ஆகப்போறேன்'' என்று வீட்டில் இவன் நச்சரிக்கத் தொடங்க, அப்பா இவனுக்கு ஒரு யாஷிகா ஆட்டோமேட்டிக் கேமரா வாங்கிக் கொடுத்தார். ஆறடிக்குள் மட்டும்தான் அது காலத்தைக் காட்சிப்படுத்தும். ஜூம் வசதியும் கிடையாது. அப்போதுதான் தொழில்நுட்பத்தின் முதல் படிக்கட்டில் இருந்த இவன், அதைப் பற்றிப் புரிந்துகொள்ளவில்லை.

சேற்றுக் குட்டையில் எருமைகள் குளிப்பது, வயல்காட்டில் தவளைகள் குதிப்பது, செடி, பூக்களை விட்டு பட்டாம்பூச்சிகள் பறப்பது, நுங்கு வண்டி ஓட்டும் சிறுவர்கள், பாக்கு இடிக்கும் கிழவிகள்... என அகப்பட்ட காட்சிகளை எல்லாம் புகைப்படங்கள் எடுத்து, ஸ்டுடியோவில் கொடுத்து நெகட்டிவ்களை டெவலப் செய்து பார்த்தபோது, அதில் இவன் படம் எடுத்ததற்கான எந்தத் தடயமும் இல்லை.

ஸ்டுடியோவில் வேலை செய்த ஓர் அண்ணன், இவனுடைய ஆர்வத்தை அறிந்து எப்படி ஃபிலிம் மாட்டுவது, எப்படி ஒளியை உள்வாங்குவது என்று ஒவ்வொன்றாகக் கற்றுக்கொடுத்தார்.

பின்னாட்களில் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றப்போகிறோம் என்பதை அறியாமலேயே, ஒரு கிராமத்து பாலு மகேந்திராவாக தன்னை நினைத்துக்கொண்டு சுற்றித் திரிந்த காலம் அது.

இயற்கையை அடுத்து இவன் இப்போது மனிதர்களைப் படம் பிடிக்கத் தொடங்கினான். 'பிரின்ட் போடுறதுக்கு ஆகிற செலவை மட்டும் குடுத்தாப் போதும்’ என்ற இவன் கோரிக்கைக்கு அமோக ஆதரவு இருந்தது. கிராமம் முழுக்க ஒன்றுகூடி வந்து இவன் கேமராவுக்குள் சிறையானார்கள்.

ஆஹா... அது ஒரு கனாக் காலம். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கோணத்தில் படம்பிடித்தான். ஆடு மேய்த்தபடி ஒருவர், வயல்காட்டில் ஏர் உழுதபடி இன்னொருவர், தறி நெய்தபடி மற்றொருவர் என அவரவர் தொழில் சார்ந்து அவர்கள் காட்சியானார்கள். பனை ஏறும் பச்சையப்பன் அண்ணன் பனை உச்சியில் அமர்ந்து பனங்குலைகளை வெட்டுவதுபோல் தன்னைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டது, இவன் தொழில்நுட்பத்துக்கு சவாலானது. பக்கத்தில் இருந்த ஆலமரத்தை கிரேனாக்கி, இவன் அவரைப் படம் எடுத்ததற்கு சாட்சியாக, அந்த உச்சிக் கிளை முறிந்து கீழே விழுந்து, வலது கால் முட்டி பெயர்ந்து ரத்தம் கொட்டி ஆறிய தழும்பு இப்போதும் இவன் உடலில் இருக்கிறது. ஆனால் என்ன? இவன் எடுத்த புகைப்படங்கள் இன்னும் அந்தக் கிராமத்து மனிதர்கள் வீட்டில் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

வேடிக்கை பார்ப்பவன் - 9

டுத்த சவால், வேறு வடிவத்தில் வந்தது. இவன் நண்பனின் அண்ணனுக்குத் திருமணம். இவன்தான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நண்பன் உறுதியாக நின்றான். அட்வான்ஸ் கொடுக்கும்போதே நண்பனின் தந்தை ஒரு கட்டளை விதித்தார்.

''தோ பாரு குமாரு... நீ உன் இஷ்டப்படி எத வேணா எடுத்துக்கோ. ஆனா, முக்கியமா சில போட்டோங்க இருக்கணும். எண்ணெய் நலங்கு வைக்கிறது, சர விளக்கு ஏத்தறது, அரசாணி கால் நடறது, காசியாத்திரை போறது, பாத பூஜை பண்றது, தாலி கட்டறது, மணவறை சுத்தி வர்றது, மெட்டி போடறது, மாலை மாத்தறது, நாத்தனார் பட்டம் கட்டறது, பந்தியில பையனும் பொண்ணும் ஊட்டிக்கிறது, மறு வூட்டு சீர் கொடுக்கிறது இதெல்லாம் முக்கியம். சரியா?'' என்றார்.

இவன் சரியென்று சொல்லிவிட்டு வந்தான். ஆனால், ஒவ்வொரு சரிக்கு பின்னாலும் ஓராயிரம் தவறுகள் இருப்பதை அப்போது இவன் அறியவில்லை. அந்தத் திருமணப் புகைப்படங்கள் பிரின்ட் ஆகி வந்தபோது இவன் தன் கலை உணர்வை மெச்சிக்கொண்டான். மணமகளின் டைட் குளோசப் கன்னத்தில் நலங்கு வைக்கும் யாரோ ஒரு பெண்ணின் ஐந்து விரல்கள், தனியாக எரியும் சரவிளக்கின் தீபச் சுடர்கள், இடப்பக்க ஃபிரேமில் காசியாத்திரை குடையும், வலப்பக்க ஃபிரேமில் இளந்தளிர் சூரியனும் விழுந்திருந்த அந்தப் புகைப்படத்தில் மணமகனும் மச்சானும் காணாமல் போயிருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேல் நண்பனின் தந்தையைக் கோபப்படுத்தியது, தாலி கட்டும் மணமகனின் கை விரல்களும் மணமகளின் கழுத்து மட்டுமே இருந்த புகைப்படம். நல்லவேளை பெண் வீட்டுக்காரர்கள் புரொஃபஷனல் கேமராமேன் ஒருவரை வைத்து புகைப்படம் எடுத்திருந்ததால், இவன் தப்பித்தான்.

தற்கு பிறகும் ஒளியின் விரல்களை இவன் விட்டபாடில்லை. அப்போதுதான் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் 'அக்னிநட்சத்திரம்’ படம் வெளிவந்திருந்தது. அதைப் பார்த்த பின் இவன் இருள் கலந்த ஒளியுடன் பயணிக்கத் தொடங்கினான். பால்ய சிநேகிதன் ஒருவனை அவன் வீட்டுக் கூடத்தில் கதவு ஜன்னல்களை அடைத்துவிட்டு இரண்டு பக்கங்களும் பித்தளைக் குத்துவிளக்குகளை ஏற்றி நடுவில் அவனை அமரவைத்து இவன் எடுத்த புகைப்படம் கலையின் உச்சம் என்பான். ஆனால், நண்பனின் அம்மாவின் பார்வை வேறுவிதமாக இருந்தது. ''ஏன்டா... அடுத்தடுத்து ஏழு பொட்டப் புள்ளங்களப் பெத்துட்டு தவமாத் தவமிருந்து ஆம்பளப் புள்ளயப் பெத்து 'ஆணாய் பிறந்தான்’னு பேரு வெச்சு ஆசை ஆசையா வளத்தா, பொட்டப் புள்ளைங்க வயசுக்கு வந்த மாதிரி போட்டோ எடுத்திருக்க? இனிமே இந்த வீட்டுப் பக்கமே வராத'' என்றதும் தனக்குள் இருந்த பாலு மகேந்திராவையும் பி.சி.ஸ்ரீராமையும் இவன் கொஞ்ச காலம் தள்ளிவைத்திருந்தான். ஆனாலும் காலம் யாரை விட்டது?

வேடிக்கை பார்ப்பவன் - 9

ருநாள் காலையில் 'அண்ணே... முத்தண்ணே... அவசரமா ஒரு போட்டோ எடுக்கணும்ணே. கையோட கூட்டிட்டு வரச் சொன்னாங்க’ என்ற குரல் கேட்டு, இவன் கண் விழித்தான். கேமராவுடன், வந்தவனின் சைக்கிளில் இவன் அமர்ந்தான். அந்த வண்டி, பக்கத்து ஊரில் இருந்த ஒரு சேரிக்குள் நுழைந்தது. அங்கு ஒரு குடிசையின் வாசலில் வைக்கோல் மூட்டி எரிந்தத் தீயில் அடிக்கடிக் காட்டி சூடு ஏற்றியபடி பறையடித்துக்கொண்டிருந்தார்கள். அதற்குப் பக்கத்தில், நிறம் மங்கிய பழைய ஓலைப் பாய் ஒன்றில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையின் பிணம் கிடந்தது. ''அய்யா, வாய்யா போட்டோ புடிச்சா ஆயுசு குறையும்னு எம் பேரனை போட்டோ புடிக்காமயே விட்டுட்டோம். பேர் தெரியாத காய்ச்சல் வந்து செத்துப்புட்டான். உயிரோட்டமா இருக்கணும்னுதான் இன்னும் கண்ணைக்கூட மூடல. எங்க குலக் கொழுந்து, ஒரே வாரிசு, எப்பவும் எங்க ஞாபகத்துல இருக்கிற மாதிரி ஒரு போட்டோ எடுத்துக் குடு ராசா'' என்று வயது முதிர்ந்தவள் சொல்ல, இவன் கேமராவைத் திறந்து கண்களை வைத்தான்.

இறந்துகிடந்த அந்தக் குழந்தையின் கண்களை சந்தித்தபோது, இவன் அதிர்ச்சியைச் சந்தித்தான்; இந்த உலகின் மீதான அவநம்பிக்கையைச் சந்தித்தான்; அதை சாத்தியப்படுத்தும் மரணத்தைச் சந்தித்தான்; இவன் கேள்வி கேட்க நினைத்த கடவுளைச் சந்தித்தான்; சுற்றிலும் சாக்கடை நீர் பெருகிக்கிடக்க, அவற்றில் எருமைகளையும் பன்றிகளையும் அவற்றின் வால்களில் மொய்த்துக்கொண் டிருக்கும் கொசுக்களையும் சந்தித்தான்; இதை ஏதும் கண்டுகொள்ளாமல், தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் சமூகத்தைச் சந்தித்தான்.

அன்றிலிருந்து இவன், கற்ற புகைப்படக் கலை இவனிடம் இருந்து விலகிப்போனது. இப்போதெல்லாம் இலக்கிய நிகழ்ச்சிகளிலோ திரைப்பட விழாக்களிலோ இவனைப் படம் எடுக்கும் புகைப்படக்காரர்கள் ''கொஞ்சம் சிரிங்க சார்'' என்று கேட்கும்போது, இவனுக்கு அந்தக் குழந்தையின் கண்கள்தான் ஞாபகம் வரும். சிரிப்பும் இல்லாமல், அழுகையும் இல்லாமல் அதிர்ச்சியுடன் எங்கோ ஒரு திசையில் பார்ப்பான்.

- வேடிக்கை பார்க்கலாம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism