Published:Updated:

சரிகமபதநி டைரி 2013

வீயெஸ்விபடங்கள்: கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன்; ஓவியம்:ரவி

சரிகமபதநி டைரி 2013

வீயெஸ்விபடங்கள்: கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன்; ஓவியம்:ரவி

Published:Updated:
##~##

ங்கீதத்தில் இம்மி அளவுகூட இலக்கணம் மீறுவது இல்லை டி.எம்.கிருஷ்ணா. ஆனால், கச்சேரி வடிவமைப்பில் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் மரபுகளைச் சுக்குநூறாக உடைத்து வருகிறார். புதிய தேடலில் முனைகிறார்.

''இது கச்சேரி இல்லே... கச்சேரினு யோசிக்காதீங்க'' என்று மேடையில் பாடிக்கொண்டு இருக்கும்போதே அறிவித்தும் விடுகிறார். எனில், அதற்கு பெயர்தான் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தியாக பிரம்ம கான சபாவுக்காக வாணி மகாலில், தர்மபுரி சுப்பராய ஐயரின் கல்யாணி ராக ஜாவளியுடன் கச்சேரியைத் தொடங்கினார் கிருஷ்ணா. (மரபு காலி!)

அடுத்து கானடாவில் ஆலாபனை. வயலின் அக்கரை சுப்புலட்சுமியுடன் உரையாடல் நடத்தும் விதமாக, அவசரப்படாமல் நிறுத்தி நிதானமாக ராகத்தை வளர்த்தினார். தொடர்ந்தது தானம். அது பாடகரின் கணீர் குரலில் பலதானம். முடிந்ததும், அவர் பாடியது கானடாவில் வர்ணம். (மீண்டும் மரபு அம்போ!) ஸ்வரம் பாடி அதை நிறைவு செய்ததும், மனோஜ் சிவா - அனிருத் ஆத்ரே யாவின் தனி ஆவர்த்தனம். யாரும் எழுந்து வெளியே போகவில்லை.

''எத்தனை மணி வரைக்கும் பாடலாம்?'' என்று தனி முடிந்ததும் சபா நிர்வாகிகளிடம் கேட்டார் கிருஷ்ணா.

''9.15 வரை...''

''பேஷா...''

சரிகமபதநி டைரி 2013

துவஜாவந்தி கமகமக்க ஆரம்பித்தது. அடேங்கப்பா! அப்படி ஒரு துவஜாவந்தி கேட்டு ரொம்ப நாளாச்சு. நெக்குருகி, மனம் லயித்து அதை விரிவுபடுத்திவிட்டு, தீட்சிதரின் 'சேத ஸ்ரீ பாலக்ருஷ்ணம்...’ பாடலை சன்னமான குரலில், தெளிவான உச்சரிப்பில், உணர்ச்சி மேலோங்கப் பாடிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணா சிலிர்த்துப் போய் கண் கலங்கினார். 'ஆகா’ என்று ராகத்தையும் பாடலையும் ரசித்து, அனுபவித்தார். ஆக, துவஜாவந்திக்குள் ஒரேயடியாக மூழ்கி, முத்துக் குளித்தார்; நம்மையும் குளிக்கவைத்தார்.

மணி எட்டு. அடுத்த ஒண்ணே கால் மணி நேர பின்பாதி க்ளைமாக்ஸ் எதிர்பார்த்து நிரம்பிய அரங்கம் காத்திருக்க, கச்சேரியை பொசுக்கென்று முடித்துக்கொண்டுவிட்டார் கிருஷ்ணா!

''என்னை மன்னிச்சுடுங்க... இதுக்கு மேலேயும் எனக்குப் பாடறதுக்கு எதுவும் இல்லே... அப்படியே பாடினாலும் அது பொய்யாகத்தான் இருக்கும். வேணாம்... நான் மங்களம் பாடி முடிச்சுக்கறேன்...'' என்று அறிவிக்க, கூட்டம் ஏமாற்றத்துடன் கலைந்தது.

இப்படி கிருஷ்ணா ஒன்றரை மணி நேரத்தில் கச்சேரியை முடிப்பது விசித்திரமானதாகவே (Eccentric) பார்க்கப்படும். 'இன்னொரு ஃப்ளூட் மாலி உருவாகி வருகிறார்’ என்று ஏற்கெனவே இவரைப் பற்றி பேச்சு கிளம்பிவிட்டது.

'இலவசமாகத்தானே பாடறேன்’ என்ற வாதமும் எடுபடாது. அன்னதானம் என்று அறிவித்துவிட்டு, அரைக்கால் வயிறு மட்டுமே நிரப்பி அனுப்புவது சரியா?

பொதுமேடை என்று வந்துவிட்டால், சிலபல ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்கணும். அதற்கு விரும்பாவிட்டால், இருக்கவே இருக்கிறது வீட்டு வரவேற்பு அறை!

சரிகமபதநி டைரி 2013

வன்ஸ் கலை விழாவுக்காக அவன் பாரதிய வித்யா பவனுக்குள் நுழைந்தபோது, திரை விலக்கப்படாமல் இருந்தது. புதுப்பிக்கப்பட்டிருக்கும் வித்யா பவனில், 24 நிமிடங்கள் தாமதமாக, 7.09 மணிக்கு திரை விலகியது. மேடையில் டி.என்.சேஷகோபாலன், பின்பாட்டுக்கு மகன் டி.என்.எஸ்.கிருஷ்ணா.

கல்யாணி வர்ணத்தை சேஷகோபாலன் ஆரம்பித்த உடனேயே, சீஸன் தொடக்கத்தில் அவரைக் கேட்க வந்தது நல்லதாகப் போய்விட்டதாக நினைத்தான் அவன். குரலில் எந்த சேதாரமும் இருக்கவில்லை.

எந்த ராகத்தை எடுத்துக்கொண்டாலும், அதன் நீள அகலத்தை அலசி ஆராய்ந்து, போர்வெல்லுக்குக் குழி தோண்டுவது மாதிரி ஆழம் சென்று பார்த்துவிட்டுத்தான் சேஷகோபாலன் மறுவேலை பார்ப்பார் என்பது அவனுக்குத் தெரியும். ஸ்ரீ ராகத்தை நீண்ட நேரம் அவர் சஞ்சாரம் செய்ய, அது மத்யமாவதி இல்லை என்பதை பக்கத்து இருக்கைக்காரரிடம் உறுதிசெய்துகொண்டான் அவன்!

கரகரப்ரியாவை (ரா-த-ப) அடிவேர் பிடித்து ஆரம்பித்து, அதை வளர்த்தி, ராகத்தின் பல்வேறு பரிணாமங்களை சங்கதிகளால் அலங்கரித்ததையும், மங்கள்யான் மாதிரி மேலே சீறிச் சென்றும், அதே வேகத்தில் கீழ் இறங்கி வந்தும்... அந்த ரோலர் கோஸ்டர் விளையாட்டு அவனுக்குப் பிடித்தது. ஆனால், 'வெண்ணெய் தின்ன சின்னத்தனமா வேணுகோபாலா’ என்ற பல்லவி வரியிலேயே சேஷ§ கணக்கு வழக்கை ஆரம்பித்தது அவனுக்கு எரிச்சல் தந்தது. ஹாலில் இருப்பவர்கள் புலம்பெயர்ந்துகொண்டிருப்பது பற்றி கவலையேபடாமல், கணக்கில் மட்டுமே அவர் கவனமாக இருந்தது கண்டு பரிதாபப்பட்டான் அவன்!

மகன் கிருஷ்ணா, ஃப்ளாஸ்க்கிலிருந்து சுடுநீர் எடுத்து தந்தைக்குத் தருவதும், அது ஆறிப்போனால் மீதியை தான் குடித்துவிட்டு, மறுபடியும் டம்ளரை நிரப்புவதுமாக இருந்ததை, தந்தைக்கு மகன் ஆற்றும் சேவையாகப் பார்த்தான் அவன்!

(விகடனில் நா.முத்துக்குமார் தொடரின் பாதிப்பு மேலே!)

சரிகமபதநி டைரி 2013

மேடையில் கமாண்டர் இன் சீஃப் மாதிரியாக உட்கார்ந்துவிடுகிறார் பாம்பே ஜெயஸ்ரீ - லால்குடி கொடியை உயரே பறக்கவிடுவதற்குத் தயாராக! அக்கம்பக்க வாத்தியக்காரர்களுடன் அநாவசியப் பேச்சு, சிரிப்பு கிடையாது. எப்போதாவது உதட்டோரத்தில் மெல்லியப் புன்னகை மட்டுமே. ராமேஸ்வரத்துக்கு ரயிலில் பயணம் செய்வது மாதிரி ஃப்ளாஸ்க், வாட்டர் பாட்டில் எதுவும் வைத்துக்கொள்வது இல்லை.

தியாக பிரம்ம கான சபாவில் ஜெயஸ்ரீ பாடிய கீரவாணியைக் கேட்டு மகிழ, நான்கு காதுகள் இருந்தாலும் பத்தாது. வசீகரக் குரலில் கீழ் ஸ்தாயியில் சிறிது நேரம் உழன்று திரிந்து விட்டு, உத்தமியாகி அடுத்தடுத்த ஸ்தாயியிக்குள் பிரவேசித்து, ஜாருவில் வர்ணஜாலம் புரிந்து கீரவாணியின் அழகுக்கு மேலும் அழகூட்டினார். தியாகராஜரின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்றான 'கலிகியுண்டே கதா’ கீர்த்தனையில் விரும்பிய பலன் அளிக்கும் ராமனை பாவத்துடன் துதித்து, 'கலிநி இங்கித மெறுக’வில் நிரவல் செய்து, தொடர்ந்து ஸ்வரங்கள் பாடி ஜெயஸ்ரீ முடிக்கும் வரையில் அன்றாட அல்லாடல்கள் எதுவுமே நினைவில் இல்லாமல் போனது. எம்பார் கண்ணன் (வயலின்), ஜெ.வைத்தியநாதன் (மிருதங்கம்), அனிருத் ஆத்ரேயா (கஞ்சிரா) என இந்தக் கச்சேரியில் அனுசரணையான பக்கவாத்தியம். இவர்களில் கண்ணன் ஃபேஸ்புக் பிரியர். நிகழ்ச்சி முடிந்து நாம் வீட்டுக்கு வருவதற்குள் அன்றைய போட்டோ ஒன்றைப் பதிவேற்றம் செய்துவிடுவார்!

இந்த சீஸனில் யாராவது சூப்பர் சிங்கர் போட்டி அறிவித்து, வின்னருக்கு 60 லட்சம் ரூபாய் வீடும் கொடுக்க முன்வந்தால், டாப் 3-ல் ஒருவராக பாம்பே ஜெயஸ்ரீயும் நிச்சயம் இருப்பார்!

டெயில் பீஸ்: சீஸனில் மும்மூர்த்திகளைவிட அதிகமாக உச்சரிக்கப்படும் இருவரின் பெயர்: பி.விஜயகுமார் ரெட்டி, ப்ரீத்தா ரெட்டி. எந்த சபாவில் யார் விருது பெற்றாலும் அவருக்கு, ஓபுல் ரெட்டி குடும்பத்தைச் சேர்ந்த இந்த தம்பதியிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் சென்று விடுகிறது. மொத்தக் கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றுகிறது!

- டைரி புரளும்...