
##~## |
''பல நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பத்திரிகை நடத்தினால் எப்படி இருக்கும்?'' - இப்படி ஓர் எண்ணம் தோன்றியதும், நாம் அணுகிய முதல் நபர் - ஜெமினி கணேஷ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''நீங்கள்தான் ஆசிரியராக இருந்து அந்தப் பத்திரிகையை நடத்திக்கொடுக்க வேண்டும். யார் யாரை அந்தப் பத்திரிகைக்காக நியமிப்பீர்களோ, என்னென்ன செய்திகளைச் சேகரிப்பீர்களோ, உங்கள் இஷ்டம்!''
''அடி சக்கை! எனக்கு எடிட்டர் போஸ்டா? ஜமாய்த்துவிடுகிறேன்!'' என்று உற்சாகமாக ஒப்புக்கொண்டார் ஜெமினி கணேஷ்.
மறுநாள் காலை ஒன்பது நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள் மாதிரி ஒன்றுசேர்ந்து ஆனந்த விகடன் அலுவலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
ஆசிரியர் ஜெமினி கணேஷ், அனைவரையும் அறிமுகப்படுத்தினார். நடிகர் வி.கோபாலகிருஷ்ணனைக் காட்டி, ''இவர்தான் துணை ஆசிரியர்'' என்றார். ராஜஸ்ரீயை அழைத்து, ''இவர் உதவி ஆசிரியர்'' என்றார். ஜெயந்தியைப் போட்டோகிராபர் என்றும், மனோரமாவைப் பெண் நிருபர் என்றும், சைலஸ்ரீயை கார்ட்டூனிஸ்ட் என்றும் அறிமுகப்படுத்தினார்.
டைப்பிஸ்ட் கோபுவை, தலையிலிருந்து கால் வரை ஒரு பார்வை பார்த்தார். ''பாவம்! இவர் இந்த உடம்பை வைத்துக்கொண்டு அலைய வேண்டாம். பேசாமல் உட்கார்ந்து புரூஃப் திருத்தட்டும்'' என்றார். வேட்டியை மடித்துக்கட்டி நின்ற தேங்காய் சீனிவாசனைப் பார்த்து, ''கம்பாஸிடர் போஸ்ட் காலியாக இருக்கு. புகுந்து விளையாடலாமே!'' என்றார். ''சிவகுமார் ஒரிஜினல் ஆர்ட்டிஸ்ட், அவருக்குத் தெரிந்த வேலையையே அவர் செய்யட்டும்'' என்றவாறே அவரை ஓர் அறைக்குள் அனுப்பிவைத்தார்.
கடைசியாகத் தானும் தன் ஆசிரியர் நாற்காலியில் போய் உட்கார்ந்துகொண்டார். அங்கே வந்தார் கோபி.
''ஆசிரியர் ஸார்! நம்ம பத்திரிகைக்கு என்ன பேரு வைக்கலாம்?'' - கோபி கேட்டார்.
கொஞ்சம் யோசித்த கோபி சட்டென்று, ''ரெயின்போ... ரெயின்போ...'' என்று கத்துகிறார். கோபியின் கூக்குரலைக் கேட்டு எல்லா நடிகர்களும் அங்கே கூடிவிடுகிறார்கள்.
'ரெயின்போ’ தமிழில் வானவில் ஆகிறது.
''நம் பத்திரிகையின் பெயர் 'வானவில்’ என்று அறிவிக்கிறார் ஆசிரியர். அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

ஆசிரியர் மூளையைக் குழப்பிக்கொண்டு தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருக்கிறார்.
'டூ டு சிக்ஸ்; சிக்ஸ் டு நைன்’ என்று அவர் வாய் எதையோ கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது.
''இங்கேகூடவா கால்ஷீட் கணக்குப் போடணும். கம்பாஸிடர் கழுத்தை அறுக்கிறார். பிரஸ்ஸுக்குக் கொடுக்க மேட்டர் இல்லை. ஒரு கதைகூட வெளியிலிருந்து வரவில்லை. என்ன செய்வது?'' என்றவாறே உதவி ஆசிரியர் ராஜஸ்ரீ உள்ளே நுழைந்தார்.
''கதைதானே வேணும்! ஒன் மினிட் இருங்கோ... ஷீலா... லட்சுமி... இவங்க ரெண்டு பேரும் கதை எழுதுவாங்கோ. இதோ போன் செய்து வரவழைக்கிறேன்'' என்றவாறே லட்சுமியின் நம்பரைச் சுழற்றுகிறார். பிறகு ''காரில் கதை வந்துகொண்டிருக்கிறது. கவலைப்படாதே'' என்று ராஜஸ்ரீக்கு ஆறுதல் கூறுகிறார்.
*
கேமிராவும் கழுத்துமாக உள்ளே வந்த போட்டோகிராபர் ஜெயந்தியைப் பார்த்து ''அட்டைக்கு ஏதாவது படம் எடுத்துக்கொண்டு வந்தீர்களா?'' என்று கேட்டார் துணை ஆசிரியர் கோபி.
''டெய்லி கலாகேந்திரா ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கு. போட்டோ எடுக்க நேரமே இல்லை. எப்படியோ சமாளிச்சு எடுத்து வந்திருக்கேன், பாருங்கோ'' என்றவாறே தான் கொண்டுவந்த பல படங்களைக் கீழே விரிக்கிறார் ஜெயந்தி.
கோபி திகைக்கிறார். காரணம், அத்தனை படங்களும் ஜெயந்தி தன்னைத்தானே எடுத்துக்கொண்ட படங்கள்!
''வேறு யாரும் கிடைக்கலையா?'' என்றார் கோபி.
''எல்லாரும் என் கேமிராவைக் கண்டாலே ஓடி ஒளியறாங்க ஸார்! வேண்டுமானால் ஒண்ணு செய்றேன். எங்க பாட்டி ஊரிலேருந்து வந்திருக்காங்க. அவங்களைப் படம் எடுத்து...''
''அதுக்கென்ன, எல்லாம் ஒண்ணுதான். இதையே போட்டுக்கிறேன். தேங்க்யூ!'' - ஜோக் அடித்தார் கோபி.

நிருபர் மனோரமா அறைக்குள் நுழைகிறார் ஆசிரியர். குறட்டை சத்தம் கேட்கிறது. அது 'வா வாத்தியாரே...’ பாட்டைவிட கேட்க இனிமையாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, தட்டி எழுப்புகிறார்.
வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்த அவர், ''ராத்திரியெல்லாம் ஷூட்டிங், தூக்கமில்லை'' என்கிறார் அசடுவழிய!
''யாரையாவது பேட்டி காணப் போகாமல் இப்படி தூங்கிக்கொண்டிருக்கிறீர்களே! ஓடுங்கள்!'' என்று அவசரப்படுத்துகிறார் ஆசிரியர்!
''ஐந்தே நிமிடங்களில் வருகிறேன்'' என்று, அறையைவிட்டு பாட்டுப் பாடியவாறே வெளியேறுகிறார் மனோரமா.
அதற்குள் ராஜஸ்ரீ வந்து ஆசிரியரிடம், ''ஜோக்ஸ் பஞ்சம் வந்துவிட்டது. நம் கார்ட்டூனிஸ்ட் இதுவரை எதையும் சப்ளை செய்யவில்லை'' என்று புகார் செய்கிறார்.
''அப்படியா சமாசாரம்?'' என்றவாறே இருவரும் கோபமாக சைலஸ்ரீயின் அறைக்குள் நுழைகிறார்கள். சைலஸ்ரீ ஒரு படத்தை வரைந்து அதற்கு 'லிப் டச்’ செய்தவாறே இருக்கிறார்.
''மேக்கப் ரூமில் நீங்கள் டச்சப் செய்துகொள்வது போலவே படத்துக்கும் செய்துவிட வேண்டுமா? அங்கே பிளாக் மேக்கர் அவசரப்படுகிறார். கொடு... கொடு...'' என்றவாறே அதை வாங்கி ராஜஸ்ரீயிடம் கொடுத்தனுப்புகிறார்.
*
புரூஃப்ரீடர் டைப்பிஸ்ட் கோபுவின் அறைக்குள் மெள்ள தலையை நீட்டிப் பார்த்த ஆசிரியருக்குத் தூக்கிவாரிப்போட்டது. காரணம், அங்கே கோபு டான்ஸ் ஆட, கம்பாஸிட்டர் தேங்காய் அதை ரசித்துக்கொண்டிருந்தார்.
''வாட் நான்சென்ஸ்!'' என்றவாறே உள்ளே நுழைந்த ஆசிரியரிடம் கோபு விளக்கம் கொடுத்தார்.
''ஸார்! புரூஃப் படிச்சிண்டிருந்தேன். இந்தக் கதையிலே ஒரு காமெடியன் வரான் பாருங்கோ! அருமையான கேரக்டர். எனக்கு ரொம்ப ஆப்ட்டா இருக்கும். இந்தக் கதை மட்டும் கம்பாஸிடர் கையிலே கிடைக்காமல் ஒரு புரொடியூசர் கையிலே கிடைச்சிருந்தா, நிச்சயம் அந்த ரோல் எனக்குத்தான் ஸார்! அதைப் படிக்கப் படிக்க அந்தக் கேரக்டராகவே நான் மாறிட்டேன். அவன் ஆடுறான். நானும் ஆடிட்டேன்...''
''மிஸ்டர் கோபு! நீங்க ஆடலாம்... பாடலாம்! ஆனால், அது 'பணம்’ பண்றதுக்காக இருந்தா, நான் சந்தோஷப்படுவேன். இதே ஆட்டத்தை ஒரு படத்திலே நீங்க ஆடியிருந்தா நல்லாயிருக்கும். பத்திரிகை ஆபீஸில் ஆடினால் தாங்குமா? அதாவது கட்டடம் தாங்குமா?''
''தாங்காது ஸார்! நான் ஆடலே. ஆனா, ஒரு சின்ன ரிக்வெஸ்ட். எனக்கு புரூஃப்ரீடர் வேலை போரடிக்குது. கரணம் தப்பினால் மரணம் என்கிறது, இந்தத் தொழிலுக்கு ரொம்பப் பொருத்தம். கொஞ்ச நேரத்துக்கு முன்னே பாருங்கோ, திருமணம் நடைபெற்றது’ என்பதற்கு 'திரு மரணம் நடந்தது’னு இவர் கம்போஸ் செய்து கொடுத்துட்டார். நானும் அவசரத்திலே சரியாப் படிக்கலே... அப்படியே பிரின்ட் ஆயிடுச்சு!''
''ஓ மை காட்! அப்படியா! எங்கே அவர்?'' என்று திரும்பிப் பார்த்தார். தேங்காய், 'ஓடி’ப்போய் வெகு நேரமாகிவிட்டது.
அவசரமாக வரவேண்டிய மேட்டர் கம்போஸிங்கிலிருந்து வரவில்லை என்று ராஜஸ்ரீ கம்போஸிங் செக்ஷனுக்குள் நுழைகிறார். அங்கே தேங்காய், ஒரு கும்பலைக் கூட்டி வைத்து ரகளை செய்கிறார்.
மறைவில் நின்றவாறே அவர்கள் பேச்சை ஒட்டுக்கேட்கிறார் ராஜஸ்ரீ.
'' 'நீரும் நெருப்பும்’ படத்திலே ஒரு சீன்லே நான் வாத்தியாருக்கு மேக்கப் செய்து விட்டேனாக்கும்! அசல் பர்மாக்காரர் வேஷம்! வாத்தியாருக்குக் கனகச்சிதமா இருந்தது. அதனால்தான் லேட்'' என்கிறார் பெருமையாக!

''அங்கே என்ன கலாட்டா?'' என்று பிரவேசித்த ஆசிரியர், கம்பாஸிட்டரை அணுகுகிறார். ஆசிரியரைக் கண்டதும் அவசர அவசரமாக கம்போஸ் செய்கிறார்.
ஆசிரியர் தலையில் அதாவது, தன் தலையில் அடித்துக்கொண்டே தன் அறைக்குள் நுழைகிறார்.
அப்போது வேகமாக உள்ளே வந்த ராஜஸ்ரீ, ''ஆர்ட்டிஸ்ட் சிவகுமாரைக் காணோம்'' என்று அறிவிக்கிறார்.
''அவர் ரொம்ப பிஸி மேன். ஆபீஸுக்கு வந்து அட்டென்டன்ஸ் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்'' என்கிறார் கோபு.
''லட்சுமி கதைக்குப் படம்?''
''போட்டிருக்கார், முகம் போட்டிருக்கார். கண்ணு போட்டு முடிக்கலை. ஷூட்டிங்குக்குப் போயிட்டு வந்து முடிப்பாராம்!''
ஆசிரியருக்குத் தலை சுற்றுகிறது.
ஆசிரியர், அவசரமாக கோபி ரூமுக்குள் நுழைகிறார். ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருந்த கோபி, அடித்துப் புரண்டு எழுந்து, ''ஸார், இது அற்புதமான கதை, விலை மதிப்புள்ளது!'' என்று ஒரு கதையைக் காட்டுகிறார்.
''விலை மதிப்புள்ளதா?''
''ஆமா ஸார், ஒரு தூக்க மாத்திரையின் விலை பெறும் இந்தக் கதை. இதைப் படித்தால் என்னமாய்த் தூக்கம் வருகிறது!'' என்ற கோபி, ''இதை அடுத்த இதழில் போட்டுவிடலாம் ஸார்! லட்சக்கணக்கானவர்கள் பயனடைவார்கள்!'' என்கிறார்.
'அடுத்த இதழ் வந்தால் பார்ப்போம்’ என்று எட்டுக் குரல்களும் ஒன்று சேர்ந்து கோரஸ் மங்களம் பாடி முடித்தார்கள்!
- ஜி.சுப்புரத்தினம்.