##~## |
சென்னை மாரத்தானுக்காக நண்பர்கள் பலர் ஓட்டப்பயிற்சிகள் மேற்கொண்டதையும், மாரத்தான் ஓடிய அனுபவங்களையும் 10,000 மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், ஃபேஸ்புக், யூ-டியூப் உதவியால் பார்க்கவும் படிக்கவும் முடிந்தது. பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்ளும் இதுபோன்ற நிகழ்வுகள், தமிழகத்தில் சொதப்பல்கள் இன்றி, நேர்த்தியாக நடத்தப்படுவது பெருமை.
மாரத்தான் பற்றி தெரியாதவர்களுக்கு க்விக் பின்னணி விவரம்:
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'பெருஞ்சீரகம் விளையும் இடம்’ - இதுதான் 'மாரத்தான்’ என்ற கிரேக்க வார்த்தைக்கான அர்த்தம். பெருஞ்சீரகம் அதிகம் விளைந்ததால், அந்த ஊருக்கு கிரீஸ் நாட்டில் 'மாரத்தான்’ என பெயரிடப்பட்டது.
மிகப் பழமையான இந்த ஊரில் கிரேக்கர்களுக்கும் ஈரானியர்களுக்கும் நடந்த சண்டையில், எதிர்பாராத விதத்தில் கிரேக்கப் படை வெற்றி பெற்றுவிட்டது. இதை தங்களது தலைநகரமான ஏதென்ஸுக்குச் சொல்லி அனுப்ப ஆளைத் தேடினார்கள். கிடைத்த ஆசாமி ஃபீடிபைடஸ். கிட்டத்தட்ட நம் ஊர் கூரியர் ஆசாமியாக வேலை பார்த்துக்கொண்டிருந்த இவர், நிற்காமல் மாரத்தான் ஊரில் இருந்து ஏதென்ஸ் நகரம் வரை ஓடி 'நாம் வெற்றிபெற்றுவிட்டோம்’ என்பதை மட்டும் சொல்லிவிட்டு விழுந்து இறந்துபோனாராம். இது நடந்தது, கி.மு. 49-ல். இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே இருக்கும் தூரமான 42 கிலோமீட்டர்தான் இப்போதும் மாரத்தான் ஓட்டத்துக்கான தூரம்.

ஃபீடிபைடஸ் உள்ளிட்ட அந்தக் காலத் தொழில்முறை ஓட்டக்காரர்கள், வெறுங்காலுடன்தான் ஓடினார்கள் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். ஓடுவதை தங்களது உடற்பயிற்சியில் ஒன்றாக எடுத்துக்கொள்பவர்களுக்கும், சென்னை மாரத்தான் போன்ற குறிப்பிட்ட ஒரு நிகழ்வில் கலந்துகொள்ளப் பயிற்சி எடுத்துக்கொள்பவர்களுக்கும் மிக முக்கியமானது அவர்கள் அணிந்திருக்கும் ஷூ. தவறான ஷூவை அணிந்துகொண்டு ஓடினால், கணுக்கால் பிசகல், முழங்கால் வலி என பல்வேறு பிரச்னைகள் வரக்கூடும். ஜெர்மனியில் உள்ள நிறுவனம், இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம், வியர்வை ஆகியவற்றை அளக்கும் உணரிகள் கொண்ட ஷூக்களைத் தயாரிக்கிறது. ஷூக்களில் இருக்கும் உணரிகள் கொடுக்கும் தகவல்களை புளுடூத் மூலமாக உங்களது பாக்கெட்டில் இருக்கும் அலைபேசியின் மென்பொருள் பெற்றுக்கொண்டு, உங்களது ஓட்டத்தின் தரத்தை நிர்ணயித்து, பரிந்துரைகளைக் கொடுக்குமாம். அதோடு, இணையத்தில் இருக்கும் உங்களுக்கான அக்கவுன்ட்டிலும் இந்தத் தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்படும் என்பதால், உங்களது ஓட்ட விவர வரலாற்றை அலசி அதிலிருந்து பயன்பெற முடியும். அட... காலில் கணினியைக் கட்டிக்கொண்டு பறக்கும் காலம் இது!
தொழில்மயமான பல நாடுகளில் கடந்த சில வருடங்களாக ஊக்குவிக்கப்படுவது 'சைக்கிள் ஓட்டுவது’. அமெரிக்காவில் 'Bicycle to school day, Bicycle to work day’ என்றெல்லாம் குறிப்பிட்ட நாட்களைக் கொண்டாடும் முக்கியத்துவம் வருடாவருடம் அதிகரிக்கிறது. அதேசமயம், அமெரிக்காவைவிட ஐரோப்பாதான் இதில் பின்னிப் 'பெடலெடுக்கிறது’. ஐரோப்பிய யூனியனில் இருக்கும் 27 நாடுகளில் இரண்டு நாடுகள் நீங்கலாக, அனைத்து நாடுகளிலும் கார்களைவிட சைக்கிள்களே அதிகம் விற்பனை ஆகின்றன.
சைக்கிள் தொழில்நுட்பத்தில் லேட்டஸ்ட், காலால் மிதிக்கவும் மின்சாரத்தால் இயக்கவும் முடிகிற 'ஹைபிரிட் சைக்கிள்’கள். நான் பயன்படுத்தும் 'iZip’ சைக்கிளை நான்கு மணிநேரம் சார்ஜ் செய்துகொண்டால், 20 மைல் தூரம் செல்கிறது. ஆனால், இதுபோன்ற பேட்டரி கொண்ட சைக்கிள்களின் ஒரு குறை, அவற்றின் அதீத எடை. இதைக் குறைக்க பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று 'Copenhagen Wheel' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டிருக்கும் சைக்கிள் சக்கரம்.

MIT பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வெளியாகி இருக்கும் இந்தச் சக்கரத்தை, எந்த சைக்கிளில் வேண்டுமானாலும் பின் சக்கரமாகப் பொருத்திக்கொள்ளலாம். மின்சாரத்தால் இயங்கும் வலுவான சைக்கிள் ரெடி. சக்கரத்தில் இருந்து சேகரிக்கப்படும் தகவல்களை உங்களது அலைபேசி மென்பொருளைப் பயன்படுத்திப் பார்த்துக் கொள்ளவும், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும். அதைவிடவும் முக்கியமான வசதி, அலைபேசி அருகில் இருந்தால் மட்டுமே சக்கரம் இயங்கும்படியும் செய்துகொள்ள முடியும் என்பதால், சைக்கிள் திருடு போவதைக் தவிர்க்க முடியும்.
இந்தச் சக்கரம் பற்றிய தகவல்களை அறியவோ, இதை ஆர்டர் செய்யவோ இந்த வலை தளத்துக்குச் செல்லுங்கள் https://www.superpedestrian.com/
நண்பர் ஒருவர், சமீபத்தில் இ-மெயில் அனுப்பி வைத்திருந்த ஒப்பீட்டு வாசகம் மிகவும் உண்மை.
சைக்கிள், கொழுப்பில் ஓடுகிறது; பணத்தைச் சேமிக்கிறது.
கார், பணத்தில் ஓடுகிறது; கொழுப்பைச் சேர்க்கிறது.
நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், சைக்கிள் ஓட்டுவதைப் பழக்கமாக வைத்திருந்தால், உங்களது அனுபவங்களையோ, புகைப்படங்களையோ @antonprakashக்கு ட்வீட் செய்யுங்கள். அவற்றில் சிலவற்றை வரும் வாரக் கட்டுரை ஒன்றில் பகிர்கிறேன்.
- விழிப்போம்...