Published:Updated:

"இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!" - மழையாய் பொழிந்த விநோத உயிர்கள்

விகடன் விமர்சனக்குழு
"இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!" - மழையாய் பொழிந்த விநோத உயிர்கள்
"இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!" - மழையாய் பொழிந்த விநோத உயிர்கள்

"இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!" - மழையாய் பொழிந்த விநோத உயிர்கள்

 கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பரவலாகப் பெய்த மழையைக் கண்டு 'அப்பாடா' என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்கூறும் நல்லுலக மக்கள். ஆனால், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலுள்ள லாலாப்பேட்டை பகுதி மக்களோ, 'முந்தாநாள் இரவு பெய்த மழையின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளலை. மழை எப்போ வருமோ என்று அதிர்ச்சியாயிருக்கு' என்று மிரட்சியோடு சொல்கிறார்கள்.

 'தமிழகத்தையே குஷிப்படுத்தி இருக்கும் மழை, இவர்களை மட்டும் கிலிப்படுத்தக் காரணம் யாது?' என்று அந்தப் பகுதி மக்களைப் பேசவிட்டு, காது கொடுத்தோம். அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் 'மனு' நாகராஜனிடம் பேசினோம்.

 "கடந்த 22 ம் தேதி எங்கப் பகுதியில் கனத்த மழை பேஞ்சு, இந்த மண்ணும், எங்க மனசும் குளிர்ந்துச்சு. லேசாகக் குளம், குட்டைகளிலும் தண்ணீர் தேங்கிச்சு. மறுநாள் செவ்வாய்க்கிழமை மழை பெய்யலை. பழையபடி கடுமையா வெயில் அடிச்சுச்சு. இதனால்,பழையபடி வெக்கை அதிகமாச்சு. ஆனால், கடந்த புதன்கிழமை இரவு பத்தரை மணிபோல் வானம் கறுத்து மழை வர்ற மாதிரி ஆகுச்சு. இதனால்,வீட்டுக்குள்  உஸ்புஸ்ஸூன்னு புழுக்கத்தோடு படுத்திருந்த நாங்க, காத்தாட வெளியில வந்தோம். ஒருசில சொட்டுக்களாக மழை பெய்தது.  தூரலா பெய்த மழை எங்க உடம்புல பட்டு சிலிர்ப்பாச்சு. அஞ்சு நிமிடம் கூட நீடிக்காத அந்த மழையைத் தொடர்ந்துதான், எங்களை அதிர்ச்சியில் தள்ளிய சமாச்சாரமும் நடந்துச்சு. 

வீடுகளோட கூரை, மாடிகள், கொட்டகை, மரங்கள்மீது பொத் பொத்ன்னு ஏதோ விழுற சத்தம் கேட்டுச்சு. 'என்ன சத்தம் அது?'ன்னு பார்த்தப்பதான் வானத்தில் இருந்து மீனா இல்ல விநோத உயிரினிமா என்று தெரியாத அளவுக்கு நீளமான முடியுடன் கூடிய ஒரு விசித்திர உயிரினம் ஆயிரக்கணக்கில் கூரையிலும், தரையிலும் விழுந்துச்சு. கீழே விழுந்ததும் அது நெளிஞ்சு அங்கும் இங்கும் ஊர்ந்து ஓடுச்சு வானத்துல இருந்து விழுந்த உயிரினம்ன்றதால பக்கத்தில் போய் தொட்டுப் பார்க்க பயமா இருந்துச்சு. அதை தூரத்தில் இருந்து பார்த்தோம். ஒரு சென்டிமீட்டர் அளவு தடிமனும், எட்டு சென்டிமீட்டர் அளவு நீளமும் கொண்டதாக இருந்த அந்த உயிரினம், பின்புறம் நீண்ட முடி அமைப்போடு இருந்துச்சு. தரையில் ஊர்ந்து போச்சு. இதனால்,பயந்து போன மக்கள்ல சிலர்,'இது மீன்ல ஒரு வகைடா'ன்னும், 'இல்லை,இல்லை. வானத்துல ஏது மீன்?அதனால ஏலியன்ஸ்ன்னு சொல்றாங்களே, அதோட குஞ்சுகளா இருக்கும். உலகம் அழியப்போவுது. அதற்கான அறிகுறிதான் இப்படி ஏலியன்ஸ் குஞ்சுகள் பூமிக்கு வந்து விழுந்தது' என்று ஏகப்பட்ட கதைகளைச் சொன்னாங்க.

அதனால்,பலரும் பயந்து நடுங்கி வீட்டுக்குள் போய் பதுங்கிட்டாங்க. விடிஞ்சதும் பார்த்தா, அந்த விநோத உயிரினத்தில் ஒண்ணக் கூட காணாம். 'பூமியைத் தோண்டிகிட்டு, உள்ளார போயிட்டுங்க அந்த உயிரினம். இனி, பூமிக்குள்ள உள்ள மொத்த தண்ணியையும் குடிச்சுட்டு, நமக்கு சொட்டுத் தண்ணி கிடைக்காம செய்ய போவுதுங்க'ன்னு அதுக்கும் கதை கட்டி பேச ஆரம்பிச்சுட்டாங்க. இதனால், முன்னாடி வெயிலை மட்டும் பார்த்து பயந்துக்கிட்டு இருந்த நாங்க இப்போ, மழை லேசா தூர ஆரம்பிச்சாலே, 'இன்னைக்கு என்ன உயிரினம் தலையில் விழுமோ?'ன்னு பயந்து நடுங்க ஆரம்பிச்சுடுறோம். 'கேரளாவில் இதுபோல் அடிக்கடி விநோத உயிரினம் வானத்தில் இருந்து விழுந்து மக்களைப் பயமுறுத்தும்'ன்னு சொல்லி எங்களைச் சிலர் பயமுறுத்துறாங்க. 'அது என்ன உயிரினம்'ன்னு தெரியாத வரைக்கும் எங்க மக்கள் பயந்து நடுங்குவது குறையாது" என்றார் அச்சம் இன்னும் கண்களில் விலகாதவராக!.

 இது தொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "நானும் 'அதை' கேள்விப்பட்டேன். ஆனால், அதை இன்னும் பார்க்கவில்லை. அதனால, ஒருவேளை அது டோர்னேடோ என்கிற மீன் வகையா இருக்கலாம். குளம்,குட்டைகளிலுள்ள சகதியில் புதைந்து வாழும் இந்த மீன் வகை உயிரினம் மழை பெய்தால், நீர் பரப்புக்கு மேலே வரும். எடை கம்மியா இருக்கும் இந்த மீன்களை மழையின்போது அடிக்கும் பலமான காற்று தூக்கி வந்து தரைப்பரப்பில் வீசும். அப்படித்தான் அந்தப் பகுதியில் நடந்திருக்க வேண்டும். இருந்தாலும், அங்கே விழுந்தது என்ன உயிரினம் என்பதைத் தீர விசாரித்துவிட்டுதான் சொல்ல முடியும். ஆனால், 'ஏலியன்ஸின் குஞ்சுகள்' என்று அந்தப் பகுதி மக்கள் பயம் கொள்ளுவது அறியாமையின் வெளிப்பாடு" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு