Published:Updated:

சிறுதானிய சமையல்

ஹா. தௌஜிதா பானு படங்கள்: பா. காளிமுத்து

சிறுதானிய சமையல்

ஹா. தௌஜிதா பானு படங்கள்: பா. காளிமுத்து

Published:Updated:
##~##

ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ... சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அரிசி சாப்பிடுவதுதான் கௌரவம் என்கிற நினைப்பில், ஏழைகள்கூட சிறுதானியங்களை மறக்க ஆரம்பித்ததுதான்... இன்றைக்கு ஏழை, பணக்காரர் என்று அனைவருக்குமே பலவித நோய்களுக்கு முக்கிய காரணியாக மாறிவிட்டிருக்கிறது. இத்தகையச் சூழலில், சிறுதானியங்களை, நவீனச் சூழலுக்கு ஏற்ப, நாவுக்கு ருசியாக சமைத்துச் சாப்பிடுவதற்கு வழிகாட்ட வருகிறது... இந்த சமையல் பகுதி! இந்த இதழில் பரிமாறுபவர், மதுரை, வேளாண்மைக் கல்லூரியின் 'ஹோம் சயின்ஸ்’ துறையைச் சேர்ந்த பேராசிரியர் பார்வதி.

 ஸ்வீட் கார்ன் குக்கீஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 தேவையானவை:

சோள மாவு - 100 கிராம்
கோதுமை மாவு - 100 கிராம்
சர்க்கரை பவுடர் - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - 0.5 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு

சிறுதானிய சமையல்

செய்முறை:

சோளமாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சலித்து, தனியாக வைத்துக் கொள்ளவும். வெண்ணெயை மிக்ஸியில் அரைத்து, அதனுடன் சர்க்கரை பவுடரைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும். சலித்த மாவுடன் இதனைச் சேர்த்து, சிறிதளவு உப்பு கலந்து, பதத்துக்கு வரும் வகையில் மிதமாகப் பிசையவும். பிசைந்த மாவை, சப்பாத்தி உருளையைக் கொண்டு மெல்லியதாகப் பரத்தவும். சிறிய டம்ளரின் வாய்ப்பகுதியைக் கொண்டு, வட்டமாக அதனை வெட்டவும். கடைசியாக, பேக்கிங் அவன் அல்லது மைக்ரோவேவ் அவனில் 160 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையில், 25 நிமிடங்கள் வேக வைத்துப் பரிமாறவும்.  

 வரகரிசி பிரியாணி!

தேவையானவை:

வரகரிசி - 100 கிராம்
கேரட் - 25 கிராம்
பீன்ஸ் - 25 கிராம்
பட்டாணி - 25 கிராம்
வெங்காயம் - 10 கிராம்
தக்காளி - 10 கிராம்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 10 கிராம்
மிளகாய் - 2 கிராம்
பட்டை, ஏலம் கிராம்பு - சிறிதளவு
கரம் மசாலா - 5 கிராம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

சிறுதானிய சமையல்

செய்முறை:

குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி... பட்டை, ஏலம், கிராம்பு ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு, வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய் மற்றும் காய்கறிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளியைச் சேர்த்து கிளறி, கரம்மசாலா சேர்க்கவும். இத்துடன் 300 மில்லி தண்ணீரைச் சேர்க்கவும். நன்கு கழுவி களைந்த வரகு அரிசியை அதில் போடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடிவிடவும். 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

உடல் வளர்ச்சியைத் தூண்டும் சிறுதானியங்கள்!

சிறுதானிய உணவு குறித்துப் பேசிய மதுரை மாவட்டம், அனுப்பானடியைச் சேர்ந்த இல்லத்தரசி ரா.ராதா, ''முத்துச்சோளம், கம்பு, கேப்பை, வரகு மாதிரியான சிறுதானியங்கள்லாம் இப்ப இருக்கற குழந்தைகளுக்கு வித்தியாசமா இருக்கறதால சாப்பிடறதுக்கு ரொம்பவே யோசிக்கிறாங்க. ஆரோக்கியமானது, நல்லதுனு சொல்லி, சாப்பிட்டதெல்லாம் அந்தக் காலம். இப்போ உள்ளவங்களுக்கு அதெல்லாம் புரியுறது இல்ல. அதான் அவங்க வழியிலயே போகலாம்னு அவங்களுக்கு பழகிய டிஷ் வடிவத்துல செஞ்சு பரிமாறுறேன். கேப்பைல களி பண்றதைவிட... அதை ஊற வெச்சு, உளுந்து, இட்லி அரிசி சேர்த்து அரைச்சு, இட்லி, தோசைனு விதம்விதமான சட்னியோட பறிமாறுவேன். கம்புல ஸ்பைஸி அடை, ஸ்வீட் அடைனு செய்வேன். முத்துச்சோளத்தை பொடி பண்ணி, ஈவ்னிங் டைம்ல கொழுக்கட்டை செய்வேன். சிறுதானியங்கள்ல பொதுவா புரதச்சத்தும், பீட்டா கரோட்டினும் அதிகமா இருக்கு. இது குழந்தைகளோட உடல் வளர்ச்சிக்கு ரொம்பவே நல்லது'' என்கிறார்.