Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 10

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 10

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
##~##

இவன், இவனான கதை!

''இப்பொழுதும்
அங்குதான்
இருக்கிறீர்களா?''
என்று கேட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்''
என்றேன்.

           - நகுலன்

('கோட் ஸ்டாண்ட்’ கவிதைகள் தொகுப்பிலிருந்து...)

போலந்து திரைப்பட இயக்குநர் கீஸ்லோவஸ்க்கியிடம் ஒரு நிருபர் ''உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்?'' என்று கேட்டதற்கு, அவர் சற்றும் தயங்காமல் ''தாஸ்தாவஸ்க்கி'' என்றார். உடனே அந்த நிருபர் ''தாஸ்தாவஸ்க்கியா? அவர் ஓர் எழுத்தாளராயிற்றே!'' என்று கேட்க, ''ஆமாம். என் சிந்தனைகளை இயக்கியவர் அவர்தான்'' என்றார் கீஸ்லோவஸ்க்கி.

இவன் ஒன்றும் சுயம்பு இல்லை. இவனையும் தட்டித் தட்டி வனைந்தது பல எழுத்தாளர்களின் கைகளே. ஒரு சரளைக்கல்லாக தன் போக்கில் கிடந்த இவனை, இவன் படித்த புத்தகங்கள் எனும் மகாநதிகள்தான் லயமாகச் செதுக்கி, ஜென் தோட்ட கூழாங்கல்லாக மாற்றின.

என்ன படிப்பது? எதைப் படிப்பது? என்று தெரியாமல் கிடைத்ததையெல்லாம் படித்துக்கொண்டிருந்த காலம் அது. காஞ்சிபுரத்தில் கம்பன் கழகம், கவிதைச்சோலை, சிந்தனையாளர் பேரவை, திருக்குறள் மன்றம் என்று பல்வேறு இலக்கிய அமைப்புகள் இயங்கிக்கொண்டிருந்தன. இவன் பள்ளி முடிந்து ஸ்கூல் யூனிஃபார்மோடு அங்கு சென்று இவன் எழுதிய கவிதைகளைப் படிப்பான். கனவுகளும் கவிதைகளுமாகத் திரிந்த பருவம்.

ரு ஞாயிற்றுக்கிழமை காலை, இவனை அப்பா 'இலக்கிய வட்டம்’ என்ற அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் இருந்த பி.டி.வி.எஸ். பள்ளியில் அந்தக் கூட்டம் நடந்தது.

வேடிக்கை பார்ப்பவன் - 10

கரும்பலகை முன்னிருக்க வகுப்பறை பெஞ்ச்களில் எல்லா வயதும் கலந்த பத்து இருபது பேர் அமர்ந்திருந்தனர். இடது பக்கத்தில் சில மேஜைகள் போடப்பட்டு, அதில் தமிழகத்தின் முக்கியமான பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன அப்போது தான் பிறந்த குழந்தைகளைப் போல அந்தப் புத்தகங்கள் இவனைப் பார்த்து, 'என்னைத் தொடு... என்னைத் தொடு!’ என்று அழைத்தன.

அப்பா, இவனுக்கு இலக்கிய வட்டத்தை நடத்தும் வெ.நாராயணன் சாரை அறிமுகப்படுத்தினார். அந்த மாதம் 'கணையாழி’ இதழில் வெளிவந்த இவன் கவிதையை வரிக்கு வரி அவர் விமர்சித்துப் பேசியது இப்போதும் இவன் நினைவில் இருக்கிறது.

அந்தக் கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் லா.ச.ரா. வந்திருந்தார். இவன் அவரது 'அபிதா’, 'பாற்கடல்’ படித்திருந்ததால், அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். வரவேற்புரை, அறிமுக உரை என்ற வெற்று சம்பிரதாயங்கள் இல்லாமல், 'நண்பர்களே... இப்போது லா.ச.ரா. பேசுவார். அதற்குப் பிறகு உங்கள் கேள்விகளைக் கேட்கலாம்’ என்று நாராயணன் சார் அறிவிக்க, லா.ச.ரா., தன் பேச்சைத் தொடங்கினார்.

சிறு வயதில் சின்னக் காஞ்சிபுரத்துக்குப் பக்கத்தில் அய்யம்பேட்டை என்ற ஊரில் தான் வளர்ந்ததாகவும், அங்கிருந்த பள்ளியில் தன் தந்தை ஆசிரியராகப் பணியாற்றியதாகவும், அந்தச் சிறு வயதில் ஒரு பெண்ணின் மீதுகொண்ட காதல்தான் 'அபிதா’ நாவல் என்றும், லா.ச.ரா. சிலாகித்துப் பேச, இவன் ஆச்சர்யப்பட்டுப் போனான்.

இவன் ஊருக்குப் பக்கத்தில்தான் அய்யம்பேட்டை இருந்தது. இவன் தந்தை படித்த பள்ளி அது. எல்லா இலக்கியக் கூட்டங்களிலும் நடப்பதைப் போலவே பார்வையாளர் வரிசையிலிருந்து லா.ச.ரா-வை நோக்கி ஒரு கலகக் குரல் எழுந்தது. 'கரெக்ட்டா சொல்லுங்க... அந்த வயசுல வந்திருக்குனா, அது காதலா? காமமா?’ என்று ஒருவர் கேட்க, 'காதல்தான்’ என்றார் லா.ச.ரா. 'காமம்னு நான் சொல்றேன்’ என்று கேள்வி கேட்டவர் மீண்டும் வம்பிழுக்க, நாராயணன் சார் எவ்வளவு சமாதானப்படுத்தியும், 'இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்’ என்றார் லா.ச.ரா.

நிகழ்ச்சி முடிந்து இவன் லா.ச.ரா-விடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ''அய்யம்பேட்டை பக்கத்துலதான் நான் இருக்கேன்'' என்றான். சட்டெனக் குழந்தையாகி ''என்னை அங்க கூட்டிட்டுப் போறியா? பழைய சிநேகிதர்கள் இன்னமும் இருக்காங்களானு பார்க்கணும்'' என்றார்.

இப்படித்தான் இவன் வியந்து படித்த லா.ச.ரா. இவன் வீட்டுக்கு வந்தார். இவன் ஆயாவிடம் மதிய உணவுக்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைக்கச் சொல்லி, கத்திரிக்காயை எப்படி நறுக்க வேண்டும். அதில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்று ரசனையோடு லா.ச.ரா. சொன்னதை, வீடே வாய்பிளந்து வேடிக்கை பார்த்தது. அவர் மனதில் இருந்த அய்யம்பேட்டை முற்றிலும் மாறியிருந்தது. அவர் சந்திக்க நினைத்த சிநேகிதர்கள் இடம் மாறியிருந்தனர், அல்லது இறந்துபோயிருந்தனர். அந்த ஊரின் மண்ணையும் நினைவுகளையும் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு லா.ச.ரா. சென்னைக்குத் திரும்பிச் சென்றார்.

'இலக்கிய வட்டம்’ நாராயணன் சாரைப் பற்றி எழுத வந்து, இவன் வேறு எங்கோ தடம் மாறிவிட்டான். ஒன்றைத் தொட்டு இன்னொன்று கிளை விரித்துச் செல்லும் ஒற்றையடிப் பாதைகள்தான் ஞாபகங்களோ? உண்மையில் கண்ணதாசன் சொன்னதுபோல் நினைவுகள்... பறவைகள்தான். அதற்குப் பிறகு 'இலக்கிய வட்டம்’ நாராயணன் சார், கிட்டத்தட்ட இவனைத் தத்தெடுத்துக்கொண்டார். இலக்கிய வட்டம் ஆரம்பித்த கதையை அவர் எத்தனை முறை சொன்னாலும் இவன் புதிதாகக் கேட்பதுபோல் விழி விரித்துக் கேட்பான்.

வேடிக்கை பார்ப்பவன் - 10

அவர் காஞ்சிபுரம் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். ''தஞ்சாவூரில் இருந்து இங்க மாற்றலாகி வந்ததும், இலக்கியம் பேச ஆளில்லாமத் தவிச்சுட்டிருந்தேன். ஜோதி புக் ஸ்டோர்ல கணையாழி, காலச்சுவடு இதழ்கள் வாங்கப் போனப்போ, ரெகுலரா அவங்க ரெண்டு இதழ்களையும் பத்து காப்பி வாங்குறாங்கனு தெரிஞ்சது. அப்ப நம்மள மாதிரியே சீரியஸாப் படிக்கிற பத்துப் பேர் இந்த ஊர்ல இருக்காங்கனு தெரிஞ்சுது. 'யார் யார் இந்த புக்ஸை வாங்குறாங்களோ, அவங்களை எல்லாம் எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க’னு தொலைபேசி நம்பர் கொடுத்துட்டு வந்தேன். ஏழெட்டுப் பேர் பேசினாங்க. வைகுண்டப் பெருமாள் கோயில் புல்வெளியில்தான் முதல் கூட்டம் நடந்துச்சு'' - இதுதான் இலக்கிய வட்டம் உருவான கதை.

அந்த ஏழெட்டுப் பேர்களில் முதன்மையானவர் கவிஞர். தரும.ரத்னகுமார். இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் அண்ணன். 'ங்’ என்ற சிறு பத்திரிகை நடத்தியவர். நவீன இலக்கியத்தை நோக்கி இவனை மடை மாற்றிவிட்டவர். 'எண்பதுகளில் கலை இலக்கியம்’ என்று 'முன்றில்’ பத்திரிகை சென்னையில் ஏற்பாடு செய்த இரண்டு நாட்கள் கருத்தரங்கில் அவருடன் இவன் கலந்துகொண்டான். கருத்தரங்கு முடிந்து இரவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி அலுவலகத்தில் தங்குவார்கள். அப்போது ஆர்.கே.செல்வமணி 'செம்பருத்தி’ படம் எடுத்துக்கொண்டிருந்தார். அடுத்த நாள் படப்பிடிப்புக்கான பாடலை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி விடிய விடியக் கேட்டுக்கொண்டிருந்ததும், நடன அசைவுகளை நடன இயக்குநருடன் விவாதித்துக்கொண்டிருந்ததும், இவன் மனதில் சினிமாவுக்கான முதல் விதைகள் விழுந்ததற்கான தருணங்கள்.

இன்னொருவர் செ.காமராசன் - 'புல்வெளி’ சிற்றிதழின் ஆசிரியர். அந்த வாரத்தில் வெளியாகிற அத்தனைத் திரைப்படங்களுக்கும் இவனை அவரது செலவில் அழைத்துச் செல்வார். கையில் எண்பது பக்க நோட்டு வைத்துக்கொண்டு படம் பார்க்கும்போதே கதாநாயகன் அறிமுகம், நண்பர்கள் அறிமுகம், கதாநாயகி அறிமுகம் என்று திரையரங்க இருட்டில் அந்தப் படத்தின் ஒன்லைனை எழுதிக்கொண்டிருப்பார். இப்போது யோசித்துப் பார்க்கையில், இவன் திரைத் துறையில் நுழைவதற்கான ஆசையை விதைத்தவர்களில் அவரும் முக்கிய காரணம். அதற்கு அப்புறம் கவிஞர். அமுதகீதன்.

'பாரத தேசத்துப் பட்டத்து ராஜனுக்கு
படுக்க ஒரு பாய் இல்லையா?
யாருனைக் காப்பது இரைக்கின்ற நாய்தானா?
ஈன்ற உன் தாய் இல்லையா? ’
- என்று அவர் மரபுக் கவிதைகளின் கணீர் குரல் இப்போதும் இவன் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

'இலக்கிய வட்டம்’ நாராயணன் சாரை பள்ளி முடிந்து தினமும் அவர் அலுவலகத்தில் இவன் சந்திப்பான். இவன் எழுதிய கவிதைகளை அவரே கைப்படப் பிரதி எடுத்து பத்திரிகைகளுக்கு அனுப்பிவைப்பார். அவர் படித்து முடித்த புத்தகங்களையெல்லாம் 'அன்புடன்’ என்று கையெழுத்திட்டு இவனுக்குக் கொடுத்துவிடுவார். தவிர, பதிப்பகங்கள் அவருக்குக் கொடுக்கும் 25 சதவிகிதம் தள்ளுபடி விலையிலேயே கூட்டத்தில் புத்தகங்கள் கிடைக்கும். கடன் வசதி வேறு. அவரது கடன் பட்டியலில், இவனால் இவன் தந்தை முதல் இடத்தில் நிற்பார்.

தமிழகம் எங்கும் நவீன இலக்கிய உலகில் வீசிய புதுப்புது அலைகளை இலக்கிய வட்டம்தான் இவனுக்கு அறிமுகப்படுத்தியது. எத்தனை எழுத்தாளர்கள்! எத்தனை விதமான இஸங்கள்! ரியலிஸம், மேஜிக் ரியலிஸம், போஸ்ட் மார்டனிஸம், ஸ்ட்ரக்சரிஸம் என எல்லா வகைகளையும் இவன் அறிந்துகொண்டது அங்குதான்.

'மண்’ சிறுகதைத் தொகுப்பு விமர்சனக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே எழுத்தாளர் கோமல்.சுவாமிநாதன் இறந்த செய்தி கிடைத்தது. ''இனி என்னால் பேச முடியாது'' என்று தழுதழுத்த ஜெயமோகனையும், டி-ஷர்ட்டும் பெர்முடாஸும் அணிந்து சினிமா ஹீரோவைப் போல் வந்து இறங்கி 'எக்சிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும்’ நாவல் குறித்து உரையாடிய சாரு நிவேதிதாவையும், ஒவ்வாத உணர்வுகள் குறித்துப் பேச வந்த கோபி கிருஷ்ணனையும் இவனால் எப்படி மறக்க முடியும்?

தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் இலக்கிய வட்டத்தில் பேசியிருக்கிறார்கள். நாராயணன் சாரிடம் ஒரு தனித் திறமை இருந்தது. அவர்கள் கூட்டத்தில் பேசிய அத்தனை விஷயங்களை மனதுக்குள் சேமித்து, அன்று இரவே ஒரு வார்த்தைவிடாமல் ஒரு பெரிய நோட்டில் எழுதிவைப்பார். அவையெல்லாம் புத்தகமாக வந்தால், மிகப் பெரிய ஆவணம்.

வேடிக்கை பார்ப்பவன் - 10

எழுத்தாளர்கள் மட்டுமல்ல... ஒரு மாதம் எண் கணித ஜோதிடர், மறுமாதம் சித்த வைத்திய ஆராய்ச்சியாளர், அடுத்த மாதம் அஷ்டாவதானி என்று எல்லாத் துறை அனுபவங்களையும் இலக்கிய வட்டம் வாசகனுக்கு நாராயணன் அறிமுகப்படுத்தினார்.

சில பார்வையாளர்கள் புத்தகங்களைப் படிப்பதைப் போல பாவனைசெய்து, திருடிச் சென்றுவிடுவார்கள். 'விடுப்பா... அந்தப் புத்தகம் அவனைப் பாதிச்சா, அடுத்த மாசம் திரும்ப வந்து காசு தருவான்’ என்பார் நாராயணன். காஞ்சிபுரம் போன்ற நகரத்தில் கிட்டத்தட்ட 15 லட்ச ரூபாய்க்கு மேல் புத்தகம் விற்றது அவரது சாதனை. அதில் கிட்டத்தட்ட ஐந்தாறு லட்சங்கள் கடன் கொடுத்துத் திரும்பிவராமல் தன் கைக்காசைப் பதிப்பகங்களுக்கு அனுப்பியிருக்கிறார்.

இலக்கிய வட்டத்தின் அழைப்பிதழ்கள் போஸ்ட்கார்டில் நாராயணின் சாய்ந்த கையெழுத்துடன் வரும். தொடர்ந்து மூன்று கூட்டங்களில் ஒருமுறையாவது வராதவர்களுக்கு அடுத்த அழைப்பிதழ் வராது.

'இலக்கியப் பயணம்’ என்று ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுற்றியுள்ள கிராமங்களுக்கு எல்லோரையும் அழைத்துச் சென்று, மக்களுக்கு நடுவே இலக்கியம் பேசவைப்பார். கடைசி வரை தன்னை முன்னிலைப்படுத்தாமல் செயல்பட்டவர். இவன் பிற்காலத்தில் திரைத் துறைக்குப் பாடல்கள் எழுதிவந்தது குறித்து நாராயணன் சாருக்கு சந்தோஷம் கலந்த ஒரு வருத்தம் இருந்தது. ''உன்கிட்ட இருந்து தமிழின் தலைசிறந்த நாவல்களையும் சிறுகதைகளையும் எதிர்பார்க்கிறேன். நீ பாட்டு எழுதப் போயிட்ட...'' என்று சந்திக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார்.

சில வருடங்களுக்கு முன்பு மாரடைப்பால் அவர் இறந்த செய்தி கேட்டு பதறியடித்து இவன் காஞ்சிபுரம் விரைந்தான். சுடுகாட்டில் அவரது பிணம் எரிந்துகொண்டிருந்தபோது பற்றிப் படர்ந்து மேல் எழுந்த தீயின் ஜுவாலைகள் புத்தக வடிவில் மடிந்து 'அன்புடன்’ என்று கையெழுத்திட்டு, இவனிடம் நீட்டிக்கொண்டிருந்தன!

- வேடிக்கை பார்க்கலாம்...