Published:Updated:

அறிவிழி - 50

அண்டன் பிரகாஷ்

அறிவிழி - 50

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி - 50

'Gadget’-ஐ தமிழில் எப்படி அழைப்பது?

'குறிப்பிட்ட பணியைச் செய்து முடிக்கப் பயன்படும் அழகிய வடிவில் இருக்கும் உபகரணம்’ என நீட்டி முழக்கிச் சொல்லலாம். (இதை சுருக்கமாக எப்படி அழைக்கலாம் என்பதை antonprakash-க்கு ட்விட்டுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் பதம், தமிழ் வாழும் காலமெல்லாம் நீடிக்கும். காரணம், கேட்ஜெட்களால் நிறைந்து வழியப்போகிறது நமது வாழ்வு!)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் தொடரில் இனி அறிமுகப்படுத்தும் சில கேட்ஜெட்கள் நீங்கள் இருக்கும் சந்தையில் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட வலைதளத்தில் நீங்கள் தெரிவிக்கும் ஆர்வம், மேற்கொள்ளும் விசாரணைகள் மூலம் அவை இந்தியச் சந்தைகளிலும் விரைவில் தடம் பதிக்கலாம்!

1. அலைபேசிகளால் பூமிப்பந்து நிறைந்து வருகிறது. உலகின் மக்கள்தொகையான 7 பில்லியனை விட அதிகமான அலைபேசிகள், 2014 முடியும் முன் இருக்கும். அலைபேசியைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும் உறை (case), சார்ஜ் செய்யத் தேவையான ஒயர்கள் என அலைபேசி சார்ந்த கூடுதல் உபகரணச் சந்தை பரபரப்பாக இயங்குகிறது. குறிப்பாக, அலைபேசி உறைகள்.

##~##

கிரெடிட் கார்டு மற்றும் பணத்தைச் செருகிவைத்து உங்கள் அலைபேசியையே மினி பர்ஸாக மாற்றிக்கொள்ள உதவும் உறை, பகாசுரனாக பேட்டரி வாழ்வைக் கபளீகரம் செய்யும் அலைபேசிக்குத் துணையாக கூடுதல் பேட்டரி வசதிகொண்ட உறை, தண்ணீரில் ஊறப்போட்டாலும் எந்தப் பாதிப்பையும் அலைபேசிக்கு ஏற்படுத்தாத உறை போன்ற பல்வேறு வகையான உறைகள் பல்லாயிரக்கணக்கில் சந்தையில் கிடைக்கின்றன.

Yellow Jacket என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் அலைபேசி உறை, உங்கள் பாதுகாப்புக்குப் பயன்படும் உபகரணம். முழுமையாக சார்ஜ் செய்துகொண்டதும் இந்த உறையை 'Stun Gun' ஆகப் பயன்படுத்தலாம். 20 ஆயிரம் வோல்ட்களுக்கு மேல் இருக்கும் மின்சாரத்தை உங்களைத் தாக்க வருபவர் மீது செலுத்தி, அவரைத் தற்காலிகமாகச் செயலிழக்கவைப்பது 'ஸ்டன் கன்’னின் இயக்கம். மேற்படி உறை சாதாரண ஸ்டன் கன் போல தோற்றம் அளிக்காதது, இதன் மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட். இந்தியாவில் பெண்கள் தங்கள் பாதுகாப்புக்கு இதுபோன்ற உபகரணங்களை துணைக்கு வைத்துக்கொள்ளலாம். ஆனால், இந்தியாவில் ஸ்டன் கன் பயன்பாடு பற்றிய விதிமுறைகளைத் தெளிவாகக் கண்டறிய முடியவில்லை. மேற்கண்ட சாதனம் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு, www.yellowjacketcase.com/

2. இரு சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு ஹெல்மெட் என்பது மிக முக்கியமானது என்பது தெரியும்தான். ஆனால், பலரும் ஹெல்மெட் அணிவதை விரும்புவது இல்லை. தலையை மறைத்து வியர்க்கவைக்கிறது, சிகையலங்காரத்தைக் குலைத்துவிடுகிறது... என்றெல்லாம் பல காரணங்கள். ஆனால், விபத்தின்போது ஹெல்மெட் அணியாததால் உண்டாகும் தலைக்காயம்தான் உயிரிழப்புக்கோ அல்லது உடல் இயக்க இழப்புக்கோ பெரும்பாலும் காரணமாகிறது.

அறிவிழி - 50

பார்ப்பதற்கு ஹெல்மெட் போல அல்லாமல், மஃப்ளர் போல சுற்றிக்கொண்டு, கீழே விழுவது தெரிந்ததும் கவசமாக எழுந்து நிற்கும் ஹெல்மெட் ஒன்று சந்தைக்கு வந்திருக்கிறது. இதற்கு 'ஹவ்டிங்’ என்று பெயர். இதன் இயக்கம் குறித்த விவரங்களுக்கு... www.hovding.com/

நிற்க... இனி கொஞ்சம் கதை பேசலாம்!

நாடு/ஊர் விட்டு நாடு/ஊர் செல்லும் புலம்பெயர்வு ஒருபுறம் இருக்க, சத்தமே இல்லாமல் மற்றொரு வகையான புலம்பெயர்வு நடந்தபடி இருக்கிறது. எந்தவிதக் குறிப்பிட்ட திட்டமும் இல்லாமல், மில்லியன் கணக்கில் மக்கள் மேகத்துக்குள் புலம்பெயர்ந்தபடி இருக்கிறார்கள். மேகம் என்றதும் மேகக் கணினியத்தில் கட்டப்பட்டிருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ் போன்ற நேரடியான சமூக ஊடகத்தளங்கள் மட்டுமல்ல. உடல்/மன நலம், பொழுதுபோக்கு, சேமிப்பு என வாழ்வின் பல்வேறு அம்சங்களுக்கு மேகக் கணினியத்தில் கட்டப்பட்டிருக்கும் தீர்வுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.\

அறிவிழி - 50

சமீபமாக, மேகத்தின் உதவியுடன் நேரடி மனித வாழ்வும் தொடர்ந்து மாறிக்கொண்டே வருவதைப் பார்க்க முடிகிறது. மிக முக்கியமாக, பகிர்ந்துகொள்ளும் பொருளாதாரம் சென்ற சில வருடங்களில் விரிவடைந்தபடியே வருகிறது.

பகிர்ந்துகொள்ளும் பொருளாதாரம்

Sharing Economy' எனப்படும் பகிர்ந்து கொள்ளும் பொருளாதாரம், இந்திய கலாசா ரத்துக்கு மிகவும் பரிச்சயமானதே. இதன் மிக அழகிய உதாரணம், கூட்டுக் குடும்பம். நகரமயமாக்கலும் புலம்பெயர்வும் அதிகரித்துவிட்ட இந்த நாட்களில் கூட்டுக் குடும்பம் என்பது ஏட்டளவில் மட்டுமே இருப்பதாக மாறிவிட்டாலும், மேகத்தின் உதவியால் பல்வேறு விதங்களில் பகிர்ந்துகொள்ளும் அமைப்புகள் வந்தபடி இருக்கின்றன.

சில உதாரணங்கள் இங்கே...

வளர்ந்துவிட்ட நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், கார்களின் எண்ணிக்கை 2005-ம் ஆண்டுக்குப் பின்னர் குறைந்தபடியே இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கென கார் வைத்திருக்கவேண்டும் என்ற எண்ணம் பழமையாகிவிட்டது. அலை மென்பொருளான Uber-ஐப் பயன்படுத்தி, நீங்கள் இருக்கும் இடத்துக்கு டாக்ஸியை அழைத்துக் கொள்ளலாம். Zipcar மென்பொருளைப் பயன்படுத்தி, மணிக்கணக்கில் கார்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயணம் செய்யும்போது ஹோட்டல்களில் தங்குவதற்குப் பதிலாக மற்றொருவரின் வீட்டில் தங்கிக்கொள்ளும் வசதி மக்களால் விரும்பப்படும் என்பதை www.airbnb.com தளம் அழுத்தமாக நிரூபித்திருக்கிறது. அட, அமெரிக்காவில் மட்டுமல்ல, மதுரையில்கூட 'Gated apartment with security’ என்ற அடைமொழியுடன் வீட்டில் ஓர் அறையை மட்டும் வாடகைக்கு விடுகிறார்கள்.

இதுபோக, மக்கள் கூட்டாக வாழும் co-housing அமைப்பும் மிகவும் பிரபலமாகி வருகிறது. வீடு ஒன்றை எடுத்து அதில் தங்கிக்கொண்டு, கூட்டாகத் தேவைப்படும் வேலைகளைப் பகிர்ந்துகொண்டு, வாழும் அமைப்பு இளம் தொழில்முனைவர்களிடம் பிரபலமாகி வருகிறது.

சமீபத்தில் 15 பேர் வாழும் வீடு ஒன்றுக்குச் சென்று இருந்தேன். பிரத்யேக ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் வீட்டைப் பற்றிய முடிவுகளை அலசுகிறார்கள்; http://splitwise.com// தளத்தைப் பயன்படுத்தி செலவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். https://groupme.com/ மென்பொருள் மூலம் ஒருவருடன் ஒருவர் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள். வீட்டின் வாடகை https://www.dwolla.com/ மூலம் செலுத்தப்படுகிறது.

மேகத்தின் உதவியுடன் மாறியபடி இருக்கும் சமூக வாழ்வின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்? நகரங்களும் நாடுகளும் மேகத்தில் கட்டப்படுமா?

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism