Published:Updated:

“நந்திதா தாஸோடு நடிக்க ஆசை!”

விகடன் மேடை - சத்யராஜ் பதில்கள் வாசகர் கேள்விகள், படங்கள்: ஸ்டில்ஸ் ரவி

##~##

குணா, சென்னை.

''பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக்... போன்ற ஹீரோக்களுக்கு இடையில் தனக்கெனத் தனி பாணியில் நடித்து, அரசியல் அரங்கு வரை அதிர்வுகளை ஏற்படுத்திய ராமராஜன் பற்றி?''

'' 'சீறும் சிங்கங்கள்’ படத்தில் நான் சின்ன வில்லன் கேரக்டர் பண்ணினேன். அந்தப் படத்தில் 'குமரேசன்’னு ஒரு உதவி இயக்குநர். அந்த குமரேசன்தான் நம்ம ராமராஜன். நாங்க ரெண்டு பேரும் அப்ப இருந்தே தோஸ்த்! சினிமாவைப் பொறுத்தவரை, சில விஷயங்கள் சில நடிகர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். பெல்பாட்டம் ஃபேஷன் வந்தப்போ அது அமிதாப் பச்சனுக்குப் பொருந்தின மாதிரி வேற யாருக்கும் செட் ஆகலை. அந்த மாதிரிதான் குழந்தைத்தனம் கொண்ட கிராமத்து அப்பாவி இளைஞன் கேரக்டர் ராமராஜனுக்கு நச்னு பொருந்துச்சு. கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கரகாட்டக்காரன்’ல நடிச்சிருந்தார்னா, ராமராஜன் அளவுக்கு ஸ்கோர் பண்ணியிருக்க முடியுமா? ராமராஜனைவிட நல்லா டான்ஸ் ஆடுற நடிகர்கள் 'கரகாட்டக்காரன்’லயோ, 'எங்க ஊரு பாட்டுக்காரன்’லயோ நடிச்சிருந்தா, அந்தப் படங்களை இப்பவும் சிலாகிப்பாங்களா என்ன?

ஒரு நடிகருக்கு எல்லா வேஷமும் பொருந்தும்னு நான் நினைக்கலை. ஆனா, சிலருக்கு சில வேஷங்கள் கச்சிதமாப் பொருந்தும். அப்படி அந்தக் காலகட்டத்தில் ராமராஜனுக்குப் பொருந்தி னதுதான் கிராமத்து இளைஞன் வேஷம். 'நம்ம கோல்டன் பீரியட் எல்லாம் முடிஞ்சிருச்சு. இனி

“நந்திதா தாஸோடு நடிக்க ஆசை!”

அப்பா வேஷத்துல நடிக்க வேண்டியதுதான்’னு என்னை நானே எப்பவோ சமாதானப்படுத்திக் கிட்டேன். ஆனா, 'ஹீரோவா மட்டும் தான் நடிப்பேன்’னு இன்னும் பிடிவாதமா இருக்கிறது ராமராஜனோட தன்னம்பிக்கை!''

வாஞ்சிநாதன், திருமுல்லைவாயல்.

''மணிவண்ணன்... ஈரமான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''

''சத்யராஜுக்கே சத்யராஜை அறிமுகம் செய்தவர் மணிவண்ணன். நான் ஒரு விநோதமான லாஜிக்ல வாழ்ந்துட்டு இருந்தவன். எந்தக் காரியத்தையும் அவநம்பிக்கையோடதான் ஆரம்பிப் பேன். நடிக்கிற ஆசையோட சென்னைக்குப் புறப்படுறப்ப, 'என்னடா, எம்.ஜி.ஆர்., சிவாஜி மாதிரி வந்துடுவியா’னு நண்பர்கள் கேட்டாங்க. 'என்னமோ போறமப்பா... போய்ப் பார்ப்போம்’னு சொல்லிட்டுத்தான் வந்தேன். இப்படி எதைப் பேச ஆரம்பிச்சாலும், 'என்னமோ...’னுதான் ஆரம்பிப்பேன். இயக்குநர் ஷக்தி சிதம்பரம்கூட, 'என்னத்த கன்னையாவைவிட 'என்னத்த சத்யராஜ்’னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். எஸ்.எஸ்.ஆரை 'லட்சிய நடிகர்’னு சொல்றோம். உங்களை, 'அலட்சிய நடிகர்’னு சொல்லலாம்’னு சொல்வார்.

இப்படி எதையும் சீரியஸா எடுத்துக்காத என்னை, இந்த நிலைமைக்கு உசத்தி விட்டது மணிவண்ணன்தான். நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் 'தலைவரே’னுதான் கூப்பிட்டுக்குவோம். அவரோட 'முதல் வசந்தம்’லதான் நான் முதல்ல டான்ஸ் ஆடினேன். 'தலைவரே... நமக்கும் டான்ஸுக்கும் செட் ஆகாது’னு மணிவண்ணன்கிட்ட சொன்னேன். 'என்ன தலைவரே புரியாத ஆளா இருக்கீங்க. நாம நடிக்கிறதுதான் நடிப்பு, நாம ஆடுறதுதான் டான்ஸ். ஆடத் தெரியாம ஆடுனா, அது ஒரு ஸ்டைலாகிட்டுப் போகுது’னு அப்போ அவர் சொன்ன வார்த்தைகள்தான் இன்னமும் என்னை சினிமாவில் ஓடவெச்சுட்டு இருக்கு.

இன்னைக்கு பெரியாரியம், மார்க்சியத்தை சீரியஸாவும் காமெடியாவும் தனித்தனியாப் பேச ஆட்கள் இருக்காங்க. ஆனா, மணிவண்ணன் பேச்சுல மட்டும்தான் பெரியாரியம், மார்க்சியக் கருத்துகளோட லொள்ளு, தில்லு எல்லாம் கலந்திருக்கும். 'அமைதிப்படை’யில், 'சாமி இல்லைனு சொன்னவன் கோயிலை இடிச்சதா சரித்திரமே இல்லைப்பா. ஆனா, சாமி இருக்குனு சொல்றவன் கோயிலை இடிச்சிட்டான்ல’னு பாபர் மசூதி இடிப்பை ஊசி குத்துற மாதிரி ஒரு வரியில் சொல்லியிருப்பார். இன்னைக்கு இப்படிப் பேசுறதுக்கெல்லாம் இங்கே ஆளே இல்லை. 'அவரின் இழப்பு ஈடு செய்யமுடியாதது’னு வழக்கமா இரங்கல் செய்தி வாசகத்துல சொல்வாங்களே... அதுக்கு 100 சதவிகிதம்  உண்மையாப் பொருந்துருவங்கள்ல மணிவண்ணனும் ஒருத்தர்!''

“நந்திதா தாஸோடு நடிக்க ஆசை!”

ராமானுஜன், ஸ்ரீரங்கம்.

''சிவாஜி, ரஜினி, கமல்... என பலருக்கும் வில்லனாக நடித்தபோது நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்கள் கூறுங்களேன்?''

''எம்.ஜி.ஆர். தவிர்த்து, 'இவர் ரசிகர்’னு சொல்றதா இருந்தா, நடிகர் திலகம் சிவாஜியைத்தான் சொல்வேன். அவர்கூட நான் நடிச்ச அனுபவங்களைத் தனிப் புத்தகமாவே போடலாம். 'சிரஞ்சீவி’ படத்தில்தான் முதல் முறையா அவர்கூட நடிச்சேன். சிங்கப்பூர் போற கப்பல்ல நடக்கும் கதை. அப்போ ஷூட்டிங் ப்ரேக்ல நான் அவரை மாதிரியே மிமிக்ரி பண்ணினதை ரசிச்சவர், தான் பயன்படுத்துற ஒரு சென்ட் பாட்டிலை எனக்குப் பரிசாக் கொடுத்தார். அதை இன்னமும் பத்திரமா வெச்சிருக்கேன்.

'புதிய வானம்’ படத்துல எனக்கு ரஃப் அண்ட் டஃப் கேரக்டர். அவருக்கு ரொம்ப சாஃப்ட் கேரக்டர். நாங்க ரெண்டு பேரும் ஜீப்ல பாடிட்டு போற மாதிரி ஒரு காட்சி. அவர் பாடுறதுல, 'எளிமையும் மனப்பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை’னு ஒரு வரி வரும். அப்ப புரட்சித்தலைவர் இறந்த சமயம். 'டேய்... இதுல அண்ணனைப் பத்தி வரி வருது. அந்தக் காட்சியில அண்ணன் மாதிரியே நடிக்கலாம்னு இருக்கேன். நீதான் அண்ணன் மாதிரி நடிப்பியே... இந்தக் காட்சியில அண்ணன் நடிச்சிருந்தா எப்படி நடிச்சிருப்பார்னு கொஞ்சம் நடிச்சுக் காட்டுடா’ னார். 'என்னங்கப்பா நீங்க, உங்களுக்குப் போய் நான் எப்படி நடிச்சுக் காட்டுவேன்’னு சொல்லிப் பதறிட்டேன். ஆனா, என்னைக் கட்டாயப்படுத்தி நடிக்க வெச்சார். புரட்சித்தலைவர் மாதிரியே ஸ்டைலா ஓடி வர்றது, கையத் தூக்குறதுனு நடிச்சுக் காமிச்சேன். அவரும் அதே போல நடிச்சார். அவர்கூட வில்லனா, ஹீரோவா நடிச்ச நான், அவருக்கு ஒரு நடன உதவியாளராகவும் இருந் திருக்கேன் என்பது எனக்கான பெருமை. சிவாஜி சார், பிரபுவைத் தொடர்ந்து அன்னை இல்ல மூன்றாவது தலைமுறையான விக்ரம் பிரபுகூடவும் இப்ப நடிக்கிறேன் என்பது கூடுதல் தகவல்.

சினிமாவுல நடிக்க வந்த புதுசுல ராஜ்மதன்னு ஒரு நண்பர் அறிமுகமானார். ராஜ்மதன்கூட அவரோட நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். அந்த வீட்டு மொட்டைமாடியியில் நாலைஞ்சு பிரம்புச் சேர் இருந்தன. அதுல ஒரு சேர்ல மொத்தப் பிரம்பும் பிஞ்சி, நடுவுல பள்ளமாக் கிடந்துச்சு. அதுல உட்காரப்போன என்னைத் தடுத்து, 'அதுல உட்கார்ற டெக்னிக் எனக்கு மட்டும்தான் தெரியும். நீங்க அந்த நல்ல சேர்ல உட்காருங்க’னு சொன்ன அந்த நண்பர் ரஜினி. அப்போதான் ரஜினி எனக்கு அறிமுகம்.

அப்புறம் 'மூன்று முகம்’ படத்துல ரஜினி சார்கூட முதன்முதலாச் சேர்ந்து நடிச்சேன். அப்போ, 'உங்களுக்கு ரொம்ப வித்தியாசமான முக அமைப்பு. ஆனா, எழுதிக்கொடுத்த வசனத்தை அப்படியே பேசாம புதுசா ஏதாச்சும் பண்ணுங்க’னு சொன்னார். 'நான் அடியாள் வேஷம் நடிச்சிட்டு இருக்கேன். இப்போ அப்படி ஏதாவது புதுசாப் பண்ணா, டைரக்டர்ஸ் கோவிச்சுக்குவாங்களே’னு சொன் னேன். 'இல்லல்ல... நீங்க ஸ்பாட்ல பேசி அது எல்லாருக்கும் பிடிச்சுட்டா, அவங்களே அதை வெச்சுக்குவாங்க’னு சொன்னார்.

அப்புறம் 'தம்பிக்கு எந்த ஊரு’ல நடிக்கும்போது, 'நீங்க ஏன் ஹீரோவா நடிக்கக் கூடாது’னு திடீர்னு ஒருநாள் கேட்டார். அந்தக் கேள்வியை முதல் தடவை என்கிட்ட கேட்ட முதல் ஆள், ரஜினி சார்தான். 'என்ன சார் நீங்க... ஏதோ பொழப்பு ஓடிட்டு இருக்கு. அது கெட்டுப்போயிடும்’னு சொன்னேன். 'இல்லல்ல... நீங்க சீக்கிரமே ஹீரோ ஆகிடுவீங்க... பாருங்க’னு சொன்னார்.

'மிஸ்டர் பாரத்’ல ஒரு சீன்ல ரகுவரன்கிட்ட 'கெட் அவுட்’னு சத்தம் போடுவேன். அவர் நின்னுட்டே இருப்பார். உடனே, 'தமிழ்ல சொன்னாத்தான் புரியுமா..? டேய்... வெளியே போடா’னு அலட்சியமா சொல்லுவேன். அதே மாதிரி சிச்சுவேஷன்ல அதே வசனத்தை ரஜினி நடிக்கிறப்பவும் சொன்னேன். 'ரகுவரனுக்கு ஓ.கே. ரஜினிக்கு வேண்டாம்’னு சொன்னாங்க. 'ஏன் சார் வேணாம்னு சொல்றீங்க’னு பேசிட்டு இருக்கும்போது, 'என்னன்ன...’னு ரஜினி சார் வந்தார். விஷயத்தைச் சொன்னேன். 'ஏன்... ஏன்... சொல்லுங்களேன். நல்லாத்தானே இருக்கும்’னார். அதுதான் ரஜினி. தான் ஸ்க்ரீன்ல இருக்கிறப்ப, மத்தவங்க ஸ்கோர் பண்ணவும் ஸ்பேஸ் கொடுப்பார்!

என் சினிமா வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான காலகட்டமும் கமல் சார் முன்னாலதான் நடந்திருக்கு. அவர்கூட என் முதல் படமான 'சட்டம் என் கையில்’ ஷூட்டிங் ஏ.வி.எம்-ல நடக்குது. ஒரு சண்டைக் காட்சியில பல்டி அடிக்கும்போது, கைல கட்டியிருந்த 650 ரூபாய் மதிப்புள்ள வாட்ச் உடைஞ்சிடுச்சு. அப்ப 650 ரூபாய் பெரிய தொகை. அந்தப் படத்துல நடிக்கிறதுக்கு எனக்கு சம்பளமே 500 ரூபாய்தான். முதல் படத்துலயே 150 ரூபாய் நஷ்டம். இதை கமல் சார்கிட்ட சொன்னேன். 'சத்யராஜ்... சினிமாவுல ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். ஜட்டியைத் தவிர நாம எதுவும் சொந்தமா யூஸ் பண்ணக் கூடாது’னு டிப்ஸ் கொடுக்கிற மாதிரி கலாய்ச்சார்.

எனக்கு பெரிய திருப்புமுனை கொடுத்த 'காக்கிச்சட்டை’ பட 'தகிடு தகிடு’ வசனத்தின் முதல் ரசிகர் கமல் சார்தான். அந்தக் காட்சியின் படப்பிடிப்பு, ராத்திரி 12 மணிக்கு நடந்தது. ஸ்க்ரிப்ட்ல இல்லாம நடிக்கும்போது 'தகிடு தகிடு’னு நான் சொன்ன வசனம் தூரத்துல நின்னவங்களுக்குக் கேக்கலை. ஆனா, பக்கத்துல நின்ன கமல் சார் கேட்டுட்டு பெருசா சத்தம்போட்டுச் சிரிச்சிட்டார். 'இது சிரிக்கிற சீனே கிடையாதே’னு டைரக்டருக்கு அதிர்ச்சி. 'சத்யராஜ் சொன்ன மாடுலேஷனைக் கேட்டுச் சிரிச்சிட்டேன். இன்னொரு தடவை சொல்லிக்காட்டுங்க’னு கமல் சார் சொல்ல, நான் சொல்ல, யூனிட்டே சிரிச்சது.

நான் லொள்ளு, ஜொள்ளா நடிச்சிட்டு இருந்தப்ப, என்னை வேற கலர்ல காமிச்ச 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தைத் தயாரித்தார் கமல் சார். அதோட 150-வது நாள் விழாவில் சிவாஜி சார் தலைமையில் ஆர்.சி.சக்தி, மணிவண்ணன் ரெண்டு பேரையும் கௌரவிச்சார். 'இது என்ன கூட்டணி’னு கேட்டதுக்கு, 'என்னை இனம் கண்டு கொண்டவர் ஆர்.சி.சக்தி, உங்களை இனம் கண்டுகொண்டவர் மணிவண்ணன்’னு சொன்னார். அந்த மனசு... அதான் கமல் சார்!''

“நந்திதா தாஸோடு நடிக்க ஆசை!”

நித்யா, திருச்சி.

''இலியானாவுக்கு அப்பாவாக, அமலா பாலுக்கு மாமனாராக நடிக்கத் தொடங்கிவிட்டீர்கள். ஒருவேளை இப்போது ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வந்தால், உங்கள் ஹீரோயின் சாய்ஸ் யார்?''

''நந்திதா தாஸ்! 'அழகி’ல ஆரம்பிச்சு 'நீர்ப் பறவை’ வரை அட்டகாசமா நடிச்சிருப்பாங்க. ரொம்ப அற்புதமான நடிகை. இனி டூயட் ஆடிப் பாடுற ஹீரோவா எனக்கு வாய்ப்பு வரப்போறது இல்லை. ஆனா, 'பிளாக்’, 'சீனி கம்’ பட அமிதாப் பச்சன், 'ஒன்பது ரூபாய் நோட்டு’ சத்யராஜ், 'தவமாய் தவமிருந்து’ ராஜ்கிரண் மாதிரியான கேரக்டர் கிடைச்சா, நந்திதா தாஸ்கூட நடிக்க ஆசை. நடிகைங்கிறதைத் தாண்டி முற்போக்குச் சிந்தனையாளர் என்ற அம்சத்திலும் அவங்களை எனக்குப் பிடிக்கும்!''

- அடுத்த வாரம்...

• ''விஜய்க்கு நீங்கள் ஓவரா ஜால்ரா அடிக்கிறீங்க. அதுக்கு என்ன காரணம்?''

• '' 'புரட்சித்தமிழன்’ என்ற பட்டத் துக்குத் தாங்கள் தகுதியானவரா?''

• ''உங்களைப் பற்றிய ரகசியம் ஒன்றைச் சொல்லுங்களேன்?''

- கேரக்டரை இன்னும் புரிஞ்சுக்கலாம்...