Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 11

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 11

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
வேடிக்கை பார்ப்பவன் - 11

தீராத விளையாட்டு

வாழ்க்கையின் கேள்விகள் கடினமாக இருக்கலாம். ஆனால், விடைகள் எளிமையாகத்தான் இருக்கின்றன!''

- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

''நா''ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க. டாம் உங்களைக் கண்டுபுடிக்கும்.''

- மகன் சொல்ல, இவன் ஒளிந்து கொள்ள இடம் தேடினான். கதவுக்குப் பின்னால், பீரோ மறைவில், திரைச் சீலைகளுக்குப் பின்னால், பாத்ரூம் இருட்டில்... என பல இடங்களில் ஜெர்ரி ஒளிந்து, டாம் கண்டுபிடித்திருக்கிறது. ஆதலால், இவன் புதிய இடத்தை யோசிக்கத் தொடங்கினான்.

##~##

38 வயதுக்குப் பின் கூனிக் குறுகி கட்டிலுக்கு அடியில் நுழைவது இவனுக்குச் சிரமமாக இருந்தது. தூசிகளை உடலில் போர்த்திக்கொண்டு கட்டிலுக்கு அடியில் உருண்டு உள்ளே சென்றான்.

உடைந்துபோன பழைய ஏணி, இவன் திருமணத்துக்கு வந்த பரிசுப் பொருள்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள், மகன் தவழ்கை யில் வாங்கிக் கொடுத்த நடைவண்டி, என்றுமே உபயோகத்துக்கு வராமல் கோணிப்பைகளுக்குள் பாரம்பரியப் பெருமைகளுடன் முடங்கிக்கிடக்கும் முன்னோர்களின் பித்தளைப்பாத்திரங்கள்... என, கட்டிலுக்கு அடியில் வேறு ஒரு வீட்டைச் சந்தித்தான்.

பாரம்பரிய நெடி தாங்காமல் 'ஹச்’ என்று இவன் தும்மியபோது 'உஷ்! சத்தம் போடாதடா. பேரன் கண்டுபிடிச்சுவான்ல?’ என்ற குரல் கேட்டு, திடுக்கிட்டு இருட்டுக்குள் இவன் திரும்பிப் பார்த்தான். லுங்கி, பனியனுடன் 35 வயது தோற்றத்தில் இவன் அப்பா, இவன் பக்கத்தில் ஒளிந்துகொண்டிருந்தார்.

இவன் மெள்ள அவரைத் தொட்டுப் பார்த்தான். ''என்னடா?'' என்றார் மெல்லிய குரலில். ''அப்பா, நீங்க செத்துப்போயி ஆறு வருஷம் ஆச்சு. இங்க எப்பிடி வந்தீங்க?'' என்றான் ஆச்சர்யத்துடன்.

''மடையா... உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இந்த உலகத்துல மனுஷங்க யாரும் சாகறதே இல்ல. காலம்தான் செத்துப்போகுது. நீ இருக்கிற வரைக்கும் நான் உயிரோட தான் இருப்பேன். அப்புறம் நீயும் நானும் உன் பையனா, பேரனா வாழ்ந்திட்டு இருப்போம். ஜனனமும் மரணமும் முடிவே இல்லாத ஒரு தொடர்ச்சிடா... புரியுதா?''

இவன் புரிந்தும் புரியாமலும் ''அது சரிப்பா... நீங்க ஏன் இங்க ஒளிஞ்சிட்டு இருக்கீங்க?'' என்றான்.

''நாம திருடன்-போலீஸ் வெளயாட்டு வெளயாடிட்டு இருக்கோம். நான்தான் திருடன்; நீ போலீஸ். நீ என்னைத் தேடிட்டு இருக்க!''

''நான்தான் உங்க பக்கத்துலயே இருக்கிறேனே... அப்புறம் எப்படி உங்களைத் தேட முடியும்?''

''நீன்னா இப்ப இருக்கற நீ இல்லடா. பத்து வயசுல இருந்த நீ...'' என்று இவன் அப்பா சொல்லிக்கொண்டிருக்கும்போதே கட்டிலுக்கு அடியில் மகனின் முகம் தெரிந்தது.

''ஜெர்ரி மாட்டிக்கிட்டியா?'' என்று குதூகலத்துடன் மகன் சொல்ல, ''பேசாதேனு அப்பவே சொன்னேன்ல. பேரன் கண்டுபுடிச்சிட்டான் பாரு. வெளியில போயி போலீஸ்கிட்ட சொல்லாத. நானும் மாட்டிப்பேன்'' என்றார் அப்பா.

வேடிக்கை பார்ப்பவன் - 11

இவன் ஜனனச் சங்கிலியில் இருந்து வெளியே வந்தான்.

இப்போது இவனுக்குள் 10 வயது போலீஸாக மாறி அப்பாவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், மாட்டிக்கொண்ட ஜெர்ரியாக மகனைப் பின்தொடர்ந்தான்.

ல்லாப் பிள்ளைகளையும் போலவே பத்தே நிமிடங்களில் டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டு போரடித்து, மகன் இவனை செஸ் விளையாடக் கூப்பிட்டான்.

வெள்ளைக் காய்களை மகன் எடுத்துக்கொள்ள, கறுப்புக் காய்களோடு இவன் களம் இறங்கினான். கொஞ்சம் கொஞ்சமாக முன் நகர்ந்த விளையாட்டின் ஒரு கட்டத்தில், மகனின் சிப்பாயை இவன் வெட்ட முற்பட்டபோது இவனுக்கு மட்டும் கேட்கும்படி ''டேய் பேராண்டி... தாத்தாவை எந்தப் பேரனாவது வெட்டுவானாடா? இது நியாயமாடா?'' என்றது அந்தச் சிப்பாய்.

இவன் அதிர்ச்சியுடன் ''தாத்தாவா?'' என்றான்.

''ஆமாண்டா ராசா. நீ பிறக்கிறதுக்கு முன்னாடியே செத்துப்போனானே உன் தாத்தா... நான் அவனோட எள்ளுத் தாத்தாவோட எத்தனையோவாவது எள்ளுத் தாத்தா. பல்லவ ராஜாகிட்ட சிப்பாய் படையில இருந்தேன்'' என்ற மூதாதையனின் குரல் கேட்டு, இவன் வெட்டாமல் விட்டு வேறு காயை நகர்த்தினான்.

மகன், இவன் மந்திரியை ராணியால் வெட்டி, ராஜாவுக்கு செக் வைத்தான். இப்படியாக இவன் இரண்டாவது முறை மகனிடம் தோற்றான். மகனிடம் தோற்பதைவிட ஒரு தந்தைக்கு வேறு என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

டுத்து இவனை மகன் அழைத்தது அப்பா-அம்மா விளையாட்டுக்கு. ''நான்தான் அப்பாவாம். நீங்க அம்மாவாம். வாங்க விளையாடலாம்'' என்று மகன் சொல்ல, ''டேய் நாம ரெண்டு பேரும் பாய்ஸ்டா. கொஞ்ச நேரம் அம்மாகூட போய் விளையாடு'' என்று இவன் ஓய்வெடுக்க விரும்பினான்.

''அதெல்லாம் முடியாது. அம்மா எனக்கு பூரி செஞ்சிக்கிட்டு இருக்காங்க. அப்புறம் ஹோம்வொர்க் சொல்லித்தருவாங்க. அதனால நீங்கதான் என்கூட விளையாடணும்'' என்று மகன் விரித்த வலையில், இவன் விரும்பிப்போய் விழுந்தான்.

''அது சரிடா. நான் எப்பிடி அம்மாவா நடிக்க முடியும்?'' என்று இவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இவன் தோளில் யாரோ தொடும் உணர்வு ஏற்பட்டு திரும்பிப் பார்க்க, எப்போதோ இறந்துபோன இவன் அம்மா நின்றுகொண்டிருந்தாள். ''உன் உடம்புல உங்க அப்பா மட்டுமில்ல, நானும் இருக்கேன். பேரன் கூப்புடுறான்ல. போய் வெளயாடுடா'' என்று சொல்லிவிட்டுக் காணாமல்போனாள்.

பிள்ளைக்காகத் தாயாகி, இவன் பாவனையாகச் சமைத்து, பாவனையாக துணி துவைத்து, பாவனையாகக் கண்ணீரும் சிந்தினான்.

வேடிக்கை பார்ப்பவன் - 11

பின்பும் ஒரு பரமபத விளையாட்டு தொடங்கியது. அடுத்தடுத்த பகடை உருட்டல்களில் இவன் நண்பர்கள் ஏணிகளாக, எதிரிகள் பாம்புகளாக, ஏறியும் வழுக்கியும் இவன் பயணம் சென்றுகொண்டிருந்தான். அப்போதும்கூட 'என் பிள்ளைக்கு, ஏணிகளாகும் நண்பர்களை மட்டும் கொடு’ என்று இவன் மனம் வேண்டிக்கொண்டிருந்தது.

டுத்தடுத்து வீட்டுக்குள்ளேயே டென்னிஸ் பால், பிளாஸ்டிக் பேட் கிரிக்கெட், ரப்பர் பலூனில் ஃபுட்பால், கண்ணாமூச்சி ஆட்டம்... என விளையாட்டுகள் தொடர்ந்து, இரவு உணவு முடித்து உறங்கப்போகும்போது வழக்கம் போல் மகன் கேட்டான். ''அப்பா, 'உங்கள் கையில் ஒரு கோடி’ விளையாடலாமா?''

இவன் அன்றைய தினத்தின் அந்த இறுதி விளையாட்டுக்கு ஆயத்தமானான்.

''வெல்கம் பேக் டு உங்கள் கையில் ஒரு கோடி. இன்னிக்கு நம்மகூட ரெண்டு பேரு விளையாட வந்திருக்காங்க. ஒருத்தர் மிஸ்டர் ஆதவன் நாகராஜன். இன்னொருத்தங்க, மிஸஸ்.ஜீவலட்சுமி முத்துக்குமார். வணக்கம் மிஸ்டர் ஆதவன் நாகராஜன்!''

மகன் முன்பு செய்தி வாசித்த நிர்மலா பெரியசாமி போல் 'வ...ண...க்...க...ம்...’ என்றான்.

''நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?''

''தூங்கிட்டு இருக்கேன்.''

''அது இல்லடா... என்ன படிக்கிற?''

''ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் 'கே’ செக்ஷன்.''

''உங்க அப்பா என்ன பண்றாரு?''

''எனக்கு அப்பாவா இருக்காரு.''

''டே லூஸு. வேறென்ன பண்றாரு?''

''ம்... பாட்டு எழுதறாரு. எங்கிட்ட மட்டுமே கேள்வி கேப்பீங்களா? அம்மாகிட்ட கேளுங்கப்பா'' என்று மகன் சிடுசிடுக்க, இவன் ''வணக்கம் மிஸஸ் ஜீவலட்சுமி. நீங்க என்ன பண்றீங்க?'' என்று கேட்க,

'' 'ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் 'கே’ செக்ஷன்’னு சொல்லும்மா'' என்று மகன் சொல்ல, இவன் மனைவி ''ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் 'கே’ செக்ஷன்'' என்றாள்.

''பாருங்கப்பா, சின்னப் பசங்கதான ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிப்பாங்க? அம்மாவும் என் கிளாஸ்ல படிக்கிறாங்களாம்'' என்று மகன் இவன் மனைவிக்கும் வலை விரித்து உள்ளே இழுத்தான்.

''சரி விடுடா. அது ஃபெயிலாகி ஃபெயிலாகி படிக்குதுபோல. உங்களுக்கான முதல் கேள்வி. விமானத்தைக் கண்டுபிடித்தது யார்?

A.ரைட் சகோதரர்கள் B.ராங் சகோதரர்கள்'' மகன், இவன் காதுக்குள் கிசுகிசுப்பாக, ''யாருப்பா?'' என்றான்.

இவன் அவன் காதுக்குள், ''ரைட் சகோதரர்கள்'' என்றான்.

மகன் ரகசியமாகப் பேசுவதாக நினைத்து, இவன் மனைவியிடம், ''அம்மா, ராங் சகோதரர்கள் தான் கரெக்டான ஆன்சராம்மா. நீ 'ராங் சகோதரர்கள்’னு சொல்லும்மா...'' என்று சொல்ல, இவன் மனைவி அப்பாவியைப் போல் நடித்து ''ராங் சகோதரர்கள்'' என்றாள்.

மகன் பெருமிதத்துடன் ''ரைட் சகோதரர்கள்'' என்று சொல்லி இவனைப் பார்த்து கண்ணடிக்க, இவன் ''ரைட் சகோதரர்கள் is the right answer. மிஸ்டர் ஆதவன் நாகராஜன், நீங்க ஆயிரம் ரூபாய் வின் பண்ணிட்டீங்க. சொல்லுங்க இந்தக் காசை வெச்சு என்ன பண்ணப் போறீங்க?'' என்று மகனைப் பார்த்து கண்ணடித்தான்.

''சாக்லேட் வாங்கிச் சாப்பிடுவேன்.''

''வெரிகுட். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் குடுப்பியா?''

''செகண்ட் கொஸ்டினைக் கேளுங்கப்பா. அத விட்டுட்டு சாக்லேட்டைக் கேக்குறீங்க?''

''ஓகே.டா... உலகம் அழிஞ்சாலும் அழியாத உயிரினம் எது? (A) கரப்பான் பூச்சி. (B) பட்டாம் பூச்சி''

திருட்டுத்தனமாக இவனே மகனின் காதுக்குள் ''கரப்பான் பூச்சி'' என்று கிசுகிசுத்தான். இவன் மனைவி மீண்டும் அப்பாவியாகி ''பட்டாம் பூச்சி'' என்று தவறான விடையை அளித்து, விளை யாட்டுக்கு உற்சாகம் ஊட்டினாள்.

வேடிக்கை பார்ப்பவன் - 11

மகன், 5,000 ரூபாய் வென்று, ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டான். அதில் பங்கு கேட்டால், ஏடாகூடமான பதில் வரும் என்பதால் இவன் கேட்காமல் விட்டுவிட்டான்.

''உங்களுக்கான மூன்றாவது கேள்வி'' என்று கேட்கத் தொடங்கும்போதே ''ஏம்ப்பா, கேள்வியே கேட்டுட்டு இருப்பீங்களா? விளம்பர இடைவேளை விடுங்கப்பா. டி.வி-ல அப்படித்தான காட்றாங்க'' என்று மகன் செல்லமாகக் கண்டிக்க, இவன் விளம்பர இடைவேளை விடத் தொடங்கினான்.

''ராஜா... கையைக் கழுவிட்டுத்தான சாப்பிடுற?''

''ஆமாம்மா! அல்டாப்பு சோப்லதான் கை கழுவினேன். அல்டாப்பு சோப்பு... ஆரோக்கியத்தின் டாப்பு.''

''எம் பொண்ணு சரியாவே சாப்பிட மாட்டேங்கிறா. என்ன பண்ணலாம்? குரங்கு மார்க்கு சேமியா வாங்கிக் குடு. குதூகலமாச் சாப்பிடுவா!''

''நம்ம பையன் நம்மகிட்ட பேசியே பல மாசம் ஆச்சு. என்னங்க பண்ணலாம்?''

''துலாலினோ செல்போன் உபயோகியுங்கள். உங்கள் தலைமுறையே உங்களிடம் பேசும்!''

விளம்பரம் முடிந்து இவன் தொடர்ந்தான். ''வெல்கம் பேக் டு உங்கள் கையில் ஒரு கோடி. இந்தக் கேள்விக்கு ஆப்ஷனே இல்ல. நீங்க Phone-a friend லைஃப் லைனை யூஸ் பண்ணலாம். இதோ உங்களுக்கான கேள்வி. நா.முத்துக்குமாரின் தாத்தா பெயர் என்ன?

மகன் உடனே, ''Phone-a friend'' என்றான்.

''வெரிகுட். யாருக்கு Phone பண்ணப் போறீங்க?''

''உங்களுக்குத்தாம்ப்பா!''

''சரி. யுவர் கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் நவ்'' என்று சொல்ல,

''அப்பா, உங்க தாத்தா பேரு என்னப்பா?'' என்று மகன் ஆர்வமாகக் கேட்க, இவன் தூக்கக் கலக்கத்துடன் ''எத்திராஜுடா'' என்றான்.

'எத்திராஜுடா’ என்ற மகன் பதிலுக்கு 50,000 கிடைத்து, அவன் எத்திராஜ் தாத்தாவுடன் கம்ப்யூட்டர் வாங்கி வீடியோ கேம்ஸ் விளையாடப் போனான்.

டுத்தடுத்த கேள்விகளின் நாடகம் முடிந்து, மகனுக்கான ஒரு கோடியை கையில் கொடுத்துவிட்டு இவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, கன்னத்தில் ஓர் ஈர முத்தம். திடுக்கிட்டு இவன் விழித்தெழுந்தபோது இவன் எதிரே ஓர் உருவம் தெரிந்தது.

''யார் சார் நீங்க!'' என்றான்.

''என்னைத் தெரியலையா? ஏற்கெனவே நாம டிரெயின்ல மீட் பண்ணிருக்கோமே. நான்தான் கடவுள்'' என்றார்.

இவன் பதற்றத்துடன் ''அய்யா... சாமி, எதுக்கு வந்திருக்கீங்க?'' என்றான்.

''வாழ்க்கைங்கிறது என்ன?'' என்று கேட்டார் கடவுள்.

இவன் மீண்டும் பதற்றத்துடன் விழித்துக்கொண்டிருக்க, கடவுள் சொன்னார்: ''வாழ்க்கைங்கிறது இந்த மாதிரி அப்பனும் புள்ளையும் விளையாடற தீராத விளையாட்டு!''

- வேடிக்கை பார்க்கலாம்...