Published:Updated:

சரிகமபதநி டைரி 2013

வீயெஸ்விபடங்கள்: கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன், ப.சரவணகுமார்

##~##

நாரதகான சபாவில் சுதா ரகுநாதன்

பத்தரை மாற்றுப் பொன்னாலான நகைகள் அணிந்துகொண்டு, சரிகை ஆடைகளை அழகு ததும்ப உடுத்தி, கருணையுடன் அனைவரையும் நோக்கி... என்றெல்லாம் சிலாகித்து தியாகராஜர் தன் வீட்டுக்கு அழைக்கும் 'ஸ்ரீதுலசம்மா’வை (தேவகாந்தாரி) பாடுவதற்கு முன் சுதாம்மா விரிவுபடுத்தி வெளுத்துக்கட்டியது கரகரப்ரியாவை!

ஒரு பக்கம் கனமான சங்கதிகள்... இன்னொரு பக்கம் ஜி.என்.பி., எம்.எல்.வி. காலத்துப் பிடிகள்... நடுநடுவே அரங்கம் முழுவதும் கோலிக்குண்டுகளாக உருண்டோடிய பிருகாக்கள்... ஆர்ப்பாட்ட மான ஆலாபனை! வயலினில் ராகவேந்திர ராவ் தன் பங்குக்கு கரகரப்ரியாவில் கோட்டை எழுப்பி விளையாட... பாபநாசம் சிவனின் 'ஸ்ரீனிவாச தவ சரணம்’ பாடலை நிரவல், ஸ்வரங்களுடன் சுதா தோரணம் கட்டி முடித்து 'தனி’க்கு விட்டபோது (திருவாரூர் வைத்தியநாதன்- என்.குருபிரசாத்) ஆடியன்ஸுடன் சேர்ந்து கணவர் ரகுவும் கைதட்டி மகிழ்ந்தார்!

அடுத்து, அந்திசாயும் வேளையில் ஹம்சானந்தி. இந்த ராகத்தில் பாடகி கொடுத்த அசைவுகளும்,

சரிகமபதநி டைரி 2013

வல்லின மெல்லினங்களுடன் மாடுலேஷனும் சும்மா ஜில். 'தேவி ஸ்ரீ உமா மகேஸ்வரி பால திரிபுர சுந்தரி நீ தயை புரி’ என்பது பல்லவிக்கான வரி. ஸ்வர ராகமாலிகையில் அடாணாவும் ஆனந்தபைரவியும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வந்தன.

தேவி தயை புரிந்திருக்காவிட்டால் சுதா இத்தனை உயரம் தொட்டிருக்க முடியுமா என்ன!

'சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சியில் சாருலதா மணி!

மற்ற சபா சூழலில் இருந்து மாறுபட்டு இசை விழா நடத்துகிறது லஷ்மன் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு. மாநகரச் சுவர்களை போஸ்டர்களால் மறைத்துவிடுகிறார்கள். ஸ்பெஷல் மசால் தோசை நீளத்துக்கு நுழைவு டிக்கெட். காமராஜர் அரங்கில் நுழையும்போதே எக்ஸிபிஷன் உணர்வு. லாபி முழுக்க ஸ்டால்கள். பிட் நோட்டீஸ்களை கைகளில் திணித்துவிடுகிறார்கள். மிளகாய்த் தூள் தூவிய பெரிய சைஸ் அப்பளம்தான் மிஸ்ஸிங்!

முதல் கச்சேரிக்கான பரிசுக் கூப்பன்களில் இருந்து பரிசுக்கானவற்றை தேர்வு செய்த பின், 'உங்கள் அபிமான பாடகி சாருலதா மணி அவர்களின் இசை நிகழ்ச்சி சில நிமிடங்களில் தொடங்கும்’ என்று அறிவிப்பு.

மேடை ஏறினோம், பாடினோம், அடுத்த வேலை பார்க்கப் போனோம் என்ற ரகம் அல்ல சாருலதா. தான் பாடுவது பாமரர்களுக்கும் புரிய வேண்டும் என்பதில் ரொம்பவே மெனக்கெடுகிறார். உதாரணமாக, பிருந்தாவனசாரங்காவில் 'ரங்கபுரவிஹார’வை ஆரம்பிப்பதற்கு முன், அந்த ராகத்தைப் பற்றி, சினிமாவில் அந்த ராகத்தில் மெட்டமைக்கப்பட்ட பாடல் பற்றி (பொன் ஒன்று கண்டேன்) எல்லாம் விரிவாக வகுப்பு எடுக்கிறார். அதே மாதிரி பந்துவராளி, சலநாட்டை, காம்போதி ராகப் பாடல்களுக்கும்.

நாம் பாடுவது ஏதோ ஒருவகையில் பயன்பட வேண்டும் இல்லீங்களா?

சரிகமபதநி டைரி 2013

கலாரசனாவில் சஞ்சய் சுப்ரமணியன்

பேகடா வர்ணத்தில் வார்ம்-அப் செய்துகொண்டு, 'கீசுகீசென்றெங்கும்’ திருப்பாவையில் 'ஓசைப்படுத்தத் தாயரவம் கேட்டிலையோ’ வரியில் ஓசையைப் பல்வேறு பைரவி சங்கதிகள் மூலம் வித்தியாசப்படுத்திக் காட்டுவிட்டு, நாட்டக்குறிஞ்சி. நீலாம்பரியில்தான் என்று இல்லை, நாட்டக்குறிஞ்சியிலும் சொக்கவைக்கிறார் சஞ்சய்!

நாகஸ்வரக் குழைவுகளும் அசைவுகளும் இவர் குரலில் இருந்து அசால்ட்டாக வந்து விழுகின்றன. மேல் பஞ்சமத்தைத் தொட்டுத்தான் ஆக வேண்டும் என்பதைக் கட்டாயமாக வைத்துக்கொள்ளாமல், தனக்கு சௌகரியமான 'பிட்ச்’சில் சரளமாகப் புகுந்து விளையாடுகிறார்.

மெயினாக மத்யமாவதி. ஆலாபனையில் மண்டியிட வைத்துவிட்டு, 'வேங்கடே நிநு ஸேவிம்பநு பதி’ பாடலில் தியாகராஜருடன் சேர்ந்து ஏழுமலையானைத் தொழுதார் சஞ்சய். இவர் ஸ்வரங்கள் பாடும்போது, 'வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் சிவாஜி வசனம் பேசுவதுபோல் ஓர் ஆவேச ஆக்ரோஷம்!

ராகம் - தானம் - பல்லவிக்கு பொற்கொல்லர் சஞ்சய் எடுத்துக்கொண்டது சங்கராபரணம். சூப்பரான இந்த ராகத்தை வளர்த்திச் செல்லும்போது, அளவோடு கார்வைகள் கொடுத்து, ஆபரண கமகங்களால் மெருகேற்றி ஆடியன்ஸை மெய்மறக்கச் செய்துவிட்டார். ஆலாபனை முடிந்தவுடன் எழுந்த கைதட்டல்கள் அடங்க நீண்ட நேரமாயிற்று!

சஞ்சய் தானம் பாடியபோது, டோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களைப் பார்க்க முடிந்தது. அதேபோல், ஸ்வரங்களில் குறைப்பு செய்து, பின்னர் வேகம் எடுத்து நீண்ட ஸ்வரங்களை வயலின் - மிருதங்கம் - கஞ்சிராவுடன் இணைந்து பாடும்போது ஆயிரம் தாமரை மொட்டுக்கள் ஆனந்தக் கும்மி அடித்தன!

இங்கே, வயலின் நாகை ஸ்ரீராம் பற்றி சொல்லாவிட்டால், அந்தப் பாவம் சும்மா விடாது. சஞ்சய் பாடும் சங்கதிகளை எல்லாம் அச்சு அசலாகத் திருப்பி வாசிப்பதில் கில்லாடி இவர்.

குறிப்பாக, ஸ்வர ராகமாலிகையில் தர்பாரி கானடாவை மதுரை சோமு ஸ்டைலில் சஞ்சய் பாடி குஷாலாக்க, ஸ்ரீராம், 'இங்கே பார், நானும் வாசிக்கிறேன்...’ என்று புருவம் உயர்த்தவைத்தார். பல்லடம் ரவியும் (மிருதங்கம்), கே.வி.கோ பாலகிருஷ்ணனும் (கஞ்சிரா) இந்தக் கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு தந்தார்கள்.

முடிவில், 'ராம நாமமே துதி மனமே’ என்று தேஷ் ராகத்தில் வேண்டிக்கொண்டார் சஞ்சய். பேஷ் - முழுக் கச்சேரியும்!

மியூசிக் அகாடமியில் மேண்டோலின் ஸ்ரீனிவாஸ்

விரல்கள் நிரம்ப வித்தைகள் உண்டு. ஆனால், வித்யா கர்வம் கடுகளவும் இல்லாதவர் ஸ்ரீனிவாஸ். இரண்டு கச்சேரிகள் பாடி நான்கு ரவுண்ட் அப்ளாஸ் கிடைத்துவிட்டாலே ஆகாயத்தைப் பார்த்து 'மமதை வாக்’ செய்யும் இந்த நாளில், இப்படியும் பணிவான ஓர் இளம் மேதை!

தியாகராஜரின் 'மாறுபல்க..’ (ஸ்ரீரஞ்சனி) உள்பட அகாடமியில் தான் வாசித்த ஒவ்வொரு பாடலையும் முன்கூட்டியே சமத்துக் குரலில் அறிவித்துவிட்டு மேண்டோலினில் செதுக்கினார் ஸ்ரீனிவாஸ். சண்முகப்ரியாவுக்கு அன்று முக்கிய அந்தஸ்து. இனிமை ததும்பும் இந்த ராகத்தை தேனில் குழைத்துத் தந்தார் ஸ்ரீனிவாஸ். சண்முகப்ரியா வளர வளர, அதை வாசிப்பவர் மீது நமக்கு இருக்கும் பிரியம் அதிகமானது. ராகத்தை மிக்ஸியில் போட்டுக் குழைத்து, அதில் 'எசன்ஸ்’ கலந்து மயக்கும் மாலைப்பொழுது ஆக்கினார். தானம் முடித்து, பல்லவி வரிகளையும் ஸ்வரங்களையும் பக்கவாத்தியக் குழுவுடன் இணைந்து ஸ்ரீனிவாஸ் இசைத்தபோது அரங்கம் சிலிர்த்துக் கைதட்டியது.

சீஸனில் வீணை, சாக்ஸபோன், சித்தார், சாரங்கி கச்சேரிகளைக் கேட்கவில்லை என்ற வருத்தம், ஸ்ரீனிவாஸைக் கேட்பவர்களுக்கு இருக்காது. காரணம், அவரது மேண்டோலின் மற்ற எல்லா இசைக் கருவிகளுக்கும் ஏகபோக பிரதிநிதி!

கிருஷ்ண கான சபாவில் மகாராஜபுரம் ராமசந்திரன்

இங்கே மகாராஜ குமாரருக்கு வயலின் வாசித்த நாகை முரளீதரன், சீஸனில் எல்லா கச்சேரிகளிலும் வயலினுடன் மைக்கை இணைத்து வைத்து (Contact Mike) கொள்கிறார். சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின்போது வாங்கி வந்திருப்பார் போல. வாசிப்பவருக்கு இதில் அனுகூலம். தேவைக்கேற்ப வால்யூமை கூட்டி, குறைத்துக்கொள்ள முடியும். பாடுபவருக்கு குரல் உயர்த்திப் பாட வேண்டிய கட்டாயம். கேட்பவர்களுக்கு வயலினின் ஒரிஜினல் நாதத்தை இழக்க வேண்டிய பரிதாபம். போகட்டும். கிருஷ்ண கான சபாவில் முரளியின் வேட்டியின் மீது கான்டாக்ட் மைக்கின் ஒயர் தவழ்ந்துகொண்டிருந்தது. அப்படி இருக்க, வழக்கமான இன்னொரு மைக்கை தன் முன் டம்மியாக நிற்க வைத்துக்கொண்டது எதற்காக?

சரிகமபதநி டைரி 2013

ராமசந்திரனின் பாட்டு வழக்கம்போல் சோடை போகவில்லை. வஸந்தாவும் முகாரியும் அவரது கணீர் குரலில் தனித்து நின்றன. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அந்தந்த ராகத்தின்

சரிகமபதநி டைரி 2013

சங்கதிகளை சில விநாடிகளுக்கு இழுத்துப் பாடி நிறைவு செய்தது, அப்பா சந்தானத்தை நினைவூட்டியது.

நாரத கான சபாவில் ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்

மினி ஹாலில் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு அலைமோதியது கூட்டம். ஹாலில் நடக்கும் இடத்தில் உட்கார்ந்தும், கதவு ஓரங்களில் நின்றும் கேட்டு மகிழ்ந்த ரசிகர்கள். ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி தாலுகா ஆபீஸில் பதிவுசெய்து வைத்துக்கொள்ளுங்கள், இன்னும் சில வருடங்களில் தனது சம வயதுப் பாடகர் களை எல்லாம் உசேன் போல்ட் கணக்கில் முந்திக்கொண்டு முதல் இடம் பிடிக்கப் போகிறார் ஸ்ரீரஞ்சனி!

சஹானா வர்ணம். பூர்விகல்யாணியில் ஞானமுஸகராதா. பரமாத்டு ஜீவாத்முடுவில் நிரவல். அதன் பிறகு வந்தது நளினகாந்தி.

அடேங்கப்பா! நளினகாந்தியில் இத்தனை விவகாரமா? முதலில் சங்கதிகள் கொஞ்சம் ரிப்பீட் ஆவது போல் தெரிந்தாலும், நளினகாந்தி வளரும்போது பின்னிப் பெடல் எடுத்துவிட்டார் ஸ்ரீரஞ்சனி. நளினகாந்தி ராகப்பிரியர்களுக்கு அவர் பரிமாறியது ஃபுல் மீல்ஸ், வடை பாயசத்துடன்!

ரொம்ப நாட்களுக்கு மறக்க முடியாத ஆ(ச்சர்ய)லாபனை!

டெய்ல் பீஸ்: கிருதி பட். அமெரிக்க வாழ் கன்னட தேசத்து டீன் ஏஜ் பெண். வயலின் விட்டல் ராமமூர்த்தியின் சகோதரி மகள். அண்மையில் சிகாகோவில் நடந்த ஜெயா டி.வி. பாட்டுப் போட்டியில் அமோகமாக வென்று கர்னாட்டிக் ஐடில் ஆக தேர்வான பாவாடை சட்டைக்காரி. நெய்வேலி சந்தானகோபாலனிடமும் சௌம்யா விடமும் ஸ்கைப் மூலம் கோச்சிங் பெற்றுவருகிறார்.

சரிகமபதநி டைரி 2013

வாணிமகால் மினி ஹாலில் கிருதி பட் பாடிய லதாங்கியும் தோடியும் இவருடைய பிரைட்டான எதிர்காலத்துக்குக் கட்டியம் கூறின. கச்சேரியில் தம்புரா போட்ட குட்டியூண்டு பையன் ச்சோ ஸ்வீட். ஈஃபில் டவரைத் தூக்கி யாரோ இந்தப் பொடியன் மடியில் வைத்துவிட்டது போல் உயரமான தம்புரா!

- டைரி புரளும்...