Published:Updated:

விகடன் விருதுகள் 2013 - 3

விகடன் விருதுகள் 2013 - 3

விகடன் விருதுகள் 2013 - 3
விகடன் விருதுகள் 2013 - 3

சிறந்த சிறுகதைத் தொகுப்பு - செள்ளு - செல்வராஜ் - பாரதி புத்தகாலயம்

மிழ்ச்சூழலில் அதிகம் அறியப்படாத கடலோர மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்வை, அதன் அசலான மொழியில் முன்வைக்கிறார் செல்வராஜ். கன்னியாகுமரி மாவட்டக் கடலோரக் கிராமமான சைமன் காலனியில் பிறந்த இவர், பாரம்பரிய மீன்பிடிச் சமூகமான முக்குவர்களின் வாழ்வையும், அவர்களின் பாடுகளையும் மிகவும் நெருக்கமாக, உள்ளிருந்து பேசுகிறார். தமிழ் இலக்கியப் பரப்புக்குப் புத்தம் புதியதான இந்த மொழி, உள்ளே நுழையும்போது சற்றே மிரளவைக்கலாம். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி, 1990-களில் வீச்சுடன் வெளிப்பட்ட தலித் இலக்கிய எழுத்துகளை உள்வாங்க, அப்போது வாசக மனம் திணறியதைப் போலவே... 'செள்ளு’வை ஏற்றுக்கொள்வதிலும் சிரமம் இருக்கலாம். ஆனால், அந்த மொழிதான் இந்தத் தொகுப்பின் சிறப்பே. இது, தமிழ் இலக்கியத்தை, கடலை நோக்கி அழைக்கிறது!

சிறந்த நாவல் - குன்னிமுத்து - குமாரசெல்வா  - காலச்சுவடு பதிப்பகம்

தென்பகுதித் தமிழக மக்களின் அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்திருக்கும் மதம், நடைமுறையில் எப்படி செல்வாக்குச் செலுத்துகிறது என்பதையும், மதத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் அரசியல் ஆட்டங்களையும், விளவங்கோடு மக்களின் கலாசார வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் வட்டார வாசத்துடன் முன்வைக்கும் நாவல். 'குன்னிமுத்து’ என்பதை 'குண்டுமணி’ என்று சொல்வது உண்டு. 'பெண்மையின் தகுதி’ என்று சொல்லப்படும் அம்சத்தைப் பூர்த்திசெய்ய இயலாத 'இருளி’ என்கிற பெண்ணின் குறியீடாக இந்தச் சொல் கையாளப்பட்டுள்ளது. இருளியின் கதையாகத் தொடங்கும் நாவல், திராவிட, தேசிய, கம்யூனிஸக் கட்சிகளின் அரசியல் சதுரங்கத்தை சாதாரண மக்களின் குரல் வழியே பேசுகிறது. எளிய மக்களின் கலாசாரத்தை வெகு இயல்பாக முன்வைக்கும் படைப்பு!

விகடன் விருதுகள் 2013 - 3

சிறந்த கவிதைத் தொகுப்பு - உபரி வடைகளின் நகரம் - லிபி ஆரண்யா - சந்தியா பதிப்பகம்

ரசியலும் அழகியலும் கவிதையில் ஒன்றையன்று தொட்டுக்கொள்ளாத இணைகோடுகள் என்ற விமர்சனத்தை வீறுகொண்டு உடைக்கிறது லிபி ஆரண்யாவின் கவிதைகள். விஞ்ஞானத்தால் நிலத்தின் மீது நிகழும் வன்முறையை, குழந்தைகளின் திறமைகளைக் கொன்றுவிட்டு அவர்களை மனப்பாட பொம்மைகளாக்கும் கல்விமுறையை, நமது தேசிய வியாதியாகிவிட்ட நீரிழிவு நோய்க்கும் அந்நிய மோகத்துக்கும் குறிப்பாக, அமெரிக்க மோகத்துக்கும் இடையிலான அரசியலை, அகவிலைப்படி உயர்வுக்கும் மதுரை வடக்கு மாசி வீதி டாஸ்மாக் வாசலில் ஒருவன் எடுக்கும் வாந்திக்கும் இடையிலான காரணங்களையும் உரத்துப் பேசுகின்றன லிபியின் வரிகள்!

விகடன் விருதுகள் 2013 - 3

சிறந்த கட்டுரைத் தொகுப்பு -
தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் - காரணமும் தீர்வும் -
சா.காந்தி - முகம் வெளியீடு 

மிழக மின்வெட்டின் 50 ஆண்டு வரலாற்றைத் துல்லியமான தரவுகளுடன், சரியான அரசியல் நிலைப்பாட்டில் இருந்து தொகுத்து வழங்குகிறது இந்த நூல். மின்மிகை மாநிலமாக விளங்கிய தமிழகத்தில், 28.11.2008-ம் தேதிக்குப் பின்னர்தான் அசுர மின்வெட்டு தொடங்கியது என்று துல்லியமான தரவுகளுடன் விவரிக்கிறார்

சா.காந்தி. மின்சார அரசியலின் பன்முகங்களை, அரசு மின்வாரியத்தை அழித்து தனியார் துறையினர் ஆக்கிரமிப்பதையும், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரத்தை சகாய விலையில் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும் நெஞ்சம் பதைபதைக்க விவரிக்கிறார்! 

 சிறந்த சிறுவர் இலக்கியம் - மாகடிகாரம் - விழியன் - பாரதி புத்தகாலயம்

'நாம் எல்லோரும் கடிகாரம் பயன்படுத்துகிறோம். காலம் காட்டும் அந்தக் கருவிக்கு காலத்தைக் காட்டுவது எது? அதுதான் மாகடிகாரம்!’ என்கிறார்  ஹெர்குலிஸ் தாத்தா. யாரும் அறிந்திராத ஒரு ரகசிய இடத்தில் இயங்கிவரும் அந்தக் கடிகாரத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சாவி கொடுத்துப் பராமரிக்க வேண்டும். இல்லை என்றால், உலகமே ஸ்தம்பித்துவிடும். அடுத்த ஐந்து ஆண்டுகள் அதைப் பராமரிக்கும் பொறுப்பு தீமன் என்கிற சிறுவனுக்கு வழங்கப்படுகிறது. சிறுவன் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தானா? எதிர்பார்க்காத திருப்பத்துடன் கதையை முடிக்கிறார் ஆசிரியர். சிறுவர்களை அமானுஷ்யமான உலகுக்கு அழைத்துச் சென்று அறிவியல் உலகத்தை அறிமுகம் செய்யும் சாதுர்யமும் சுவாரஸ்யமும் விழியன் எழுத்துகளின் பலம்!

விகடன் விருதுகள் 2013 - 3

சிறந்த மொழிபெயர்ப்பு  ( புனைவு ) - ஓநாய் குலச்சின்னம் - சி.மோகன் - அதிர்வு பதிப்பகம்

மாவோ தலைமையில் சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சியைத் தொடர்ந்து அங்கு அழிந்துபோன அல்லது அழித்தொழிக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களின் தொன்மையை, நாகரிகத்தை, அவை அழித்தொழிக்கப்பட்ட வன்முறையைப் பேசும் வரலாற்று ஆவணம் 'ஓநாய் குலச்சின்னம்’. 2004-ம் ஆண்டு வெளியாகி 'Wolf Totem’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. நாவலின் ஆசிரியர் ஜியாங் ரோங், சீனாவின் ஜியாங்சூவில் பிறந்தவர். வெளியான இரண்டே ஆண்டுகளில் 40 லட்சம் பிரதிகள் சீனாவில் விற்பனையான இந்த நாவல், மங்கோலிய மேய்ச்சல் நில நாடோடி மக்களின் ஞானகுரு, போர்க் கடவுள், காவலன், குலச்சின்னம் என எல்லாமுமாக விளங்கும் ஓநாய்களைப் பற்றி பேசுகிறது. 'மனிதனே பிரதானமானவன்’ என்ற மாவோவின் சிந்தனை ஆதிக்கம், தொன்மையான மேய்ச்சல் நிலத்தைப் பாலையாக மாற்றிய துயரத்தை விவரிக்கிறது ஓநாய் குலச்சின்னம். ஆங்கிலம் வழியாக தமிழில் இந்த நாவலை மொழிபெயர்த்திருக்கிறார் கவிஞர் சி.மோகன். இவர், அடிப்படையில் கவிஞர் என்பதால், வீரியமான வார்த்தைகளில் வாக்கியங்களைக் கட்டமைத்திருக்கிறார்!

சிறந்த மொழிபெயர்ப்பு - (அபுனைவு) நீராதிபத்தியம் - சா.சுரேஷ் - எதிர் வெளியீடு 

னடாவைச் சேர்ந்த மாட் விக்டோரியா பார்லோவின் ’Blue Covenant’ நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சா.சுரேஷ். உலகம் முழுக்க வியாபித்திருக்கும் தண்ணீர் அரசியலின் பன்முகப் பரிமாணங்களை பொளேரென உணர்த்தும் நூல். ரோஜாப் பூ வணிகத்துக்காக ஓர் ஏரியின் நீராதாரத்தை யானைகளுக்கு மறுப்பது முதல், சாமானியனுக்கு குடிநீர் வழங்க வேண்டிய அரசாங்கத்தின் கடமையைச் செயலாக்குவது வரை புத்தகத்தின் ஒவ்வொரு வரியும், நீர் அருந்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள். 'இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, நீங்கள் குடிநீர் குழாயை இறுக மூடாமல் இருக்க மாட்டீர்கள்’ என்ற வரிகள் அத்தனை உண்மை. மூலநூலிலேயே இல்லாத குறிப்புகளையும் சேர்த்துக்கொண்டு, பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரத்தை, தரமாக தமிழுக்குக் கொண்டுவந்திருக்கும் சுரேஷின் உழைப்பு, தலைமுறைகள் கடந்தும் நிற்கும்! 

விகடன் விருதுகள் 2013 - 3

சிறந்த வெளியீடு - தத்துவவிவேசினி - சென்னை இலௌகிக சங்கம் - வீ.அரசு - என்.சி.பி.ஹெச்.

றியப்படாத தமிழகத்தின் மிக முக்கியமான வரலாற்றை அகழ்ந்து ஆவணமாக்கி இருக்கிறார் பேராசிரியர் வீ.அரசு. 1878-ல் உருவான 'இந்து சுயக்கியானிகள் சங்கம்’தான் தமிழகத்தின் முதல் பகுத்தறிவுச் சங்கம். பெரியாருக்கு முன்பே இப்படி ஒரு பகுத்தறிவு இயக்க மரபு நம்மிடையே இருந்துள்ளது. முதலில் சுயக்கியானிகள் என்ற பெயரில் இயங்கிய இவர்கள், பின்னர் தங்கள் அமைப்பை 'சென்னை இலௌகிக சங்கம்’ என பெயர் மாற்றிக்கொண்டு தத்துவவிவேசினி, தி திங்கர் ( The Thinker) ஆகிய தமிழ், ஆங்கில வார இதழ்களை நடத்தியுள்ளனர். சென்னையில் நாத்திகர்கள் உருவாகத் தொடங்கிய மரபு முதல் ஆத்திகர்-நாத்திகர் இடையிலான உரசல் விவாதங்கள் வரை தொகுக்கப்பட்டுள்ளன. 1878 முதல் 1888 வரை வெளிவந்த இந்த

விகடன் விருதுகள் 2013 - 3

இதழ்கள் தொடர்பான செய்திகள் அப்படியே வரலாற்றில் இருந்து விடுபட்டுவிட்ட நிலையில், தனது 10 ஆண்டுகாலக் கடும் உழைப்பின் மூலம் அவற்றை ஆவணமாக்கி இருக்கிறார் பேராசிரியர் வீ.அரசு. ஆங்கிலத்தில் இரண்டு, தமிழில் நான்கு என மொத்தம் ஆறு தொகுதிகளாக வெளியாகியுள்ள 'தத்துவவிவேசினி’ இதழ் தொகுப்பு, சுமார் 3,500 பக்கங்களைக் கொண்ட அரிய ஆவணம்!

சிறந்த சிறுபத்திரிகை - காலம்

லங்கை அரசியல் சூழலால், புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் பண்பாட்டுப் படைப்பிலக்கிய சூழலுக்கு வழிவகுத்த இதழ்களில் 'காலம்’ முக்கியமானது. சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், அசோகமித்திரன், வெங்கட்சாமிநாதன் போன்ற தமிழகத்தின் முக்கிய எழுத்து ஆளுமைகளுக்கும் அ.முத்துலிங்கம், எஸ்.பொ., தெளிவத்தை ஜோசப் போன்ற இலங்கையின் மூத்த எழுத்தாளர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் இதழ் இது. ஜி.நாகராஜனின் புகழ்பெற்ற படைப்பான 'குறத்தி முடுக்கு’ குறுநாவல் இந்த இதழில்தான் வெளியானது. அரசியல் பாகுபாடுகள், இலக்கியப் பாகுபாடுகள் கடந்த இலக்கிய ஏடாக தன்னை இன்றும் நிலை நிறுத்தி இருக்கிறது 'காலம்’. பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் என ஒட்டுமொத்த உலகத் தமிழர்களையும் இணைப்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது 'காலம்’. இதன் ஆசிரியர் செல்வம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இப்போது கனடாவில் வசிக்கிறார்.

சிறந்த விளையாட்டு வீரர் - பாபா அபராஜித் - கிரிக்கெட்

மிழக கிரிக்கெட் அணியின் வலது கை பேட்ஸ்மேன், ஆஃப்-ப்ரேக் பவுலர், பவர்ஃபுல் ஃபீல்டர் என 19 வயது இளம் புயல் ஆல் ரவுண்டர்! சென்ற ஆண்டு இந்திய ஜூனியர் அணியில் இடம் பிடித்து தன்னை நிரூபித்தவர், இப்போது தமிழக ரஞ்சி அணிக்காக விளையாடுகிறார். இந்த ஆண்டு துலீப் டிராபியில் இரட்டைச் சதம், ரஞ்சி டிராபியில் இரட்டைச் சதம் ப்ளஸ் ஒரு சதம் குவித்து தமிழக அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றவர். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளைச் சாய்த்திருக்கிறார். 2014-ல் அபராஜித் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்!

விகடன் விருதுகள் 2013 - 3

சிறந்த விளையாட்டு வீராங்கனை - தீபிகா - தடகளம்

மிழகத்தின் நம்பிக்கைப் பெண். சென்னை எம்.ஓ.பி. கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு மாணவி. 15 வயதுக்குப் பிறகே தடகளப் பயிற்சிகளை ஆரம்பித்த தீபிகா, கடந்த நான்கு வருடங்களாக பதக்க வேட்டையில் முன்னணி வீராங்கனை. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜூனியர் அளவில் தேசிய சாம்பியன். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், 400 மீட்டர் ரிலே ரேஸ் என மூன்று போட்டிகளிலும் வெள்ளி வென்றவர். வரும் வருடங்களில் தீபிகாவின் பாய்ச்சல், இன்னும் பல உச்சங்களை எட்டும்!